839 புனித அந்தோனியார் ஆலயம், மருங்கூர்

      

புனித அந்தோனியார் ஆலயம்

இடம்: மருங்கூர், 629402 

மாவட்டம்: கன்னியாகுமரி

மறைமாவட்டம்: கோட்டார்

மறைவட்டம்: தேவசகாயம் மவுண்ட்

நிலை: கிளைப்பங்கு

பங்கு: புனித அந்தோனியார் ஆலயம், அமராவதிவிளை

பங்குத்தந்தை அருட்பணி. A. ஜோசப் ராஜ்

குடும்பங்கள்: 101

அன்பியங்கள்: 3

ஞாயிறு திருப்பலி காலை 06:00 மணி

செவ்வாய் மாலை 05:00 மணி நவநாள் திருப்பலி

திருவிழா: ஜனவரி மாதம் இரண்டாம் வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பித்து பத்து நாட்கள்.

வரலாறு:

திருவிதாங்கோட்டின் உள் பகுதிகளில் மறைபரப்புப் பணிக்காக, அருட்பணி. பெர்னார்ட் டி சா அடிகளாரை இயேசு சபை மாகாணத் தலைவர் அனுப்பி வைத்தார். அவர் வடக்கன்குளத்தை  தலைமையிடமாகத் தெரிந்து கொண்டார். வடக்கன்குளமானது மதுரை அரசுக்கும், திருவிதாங்கோடு அரசுக்கும் எல்லையாக இருந்தது.‌ இதனால் இருபுறங்களிலிருந்தும் துன்புறுத்தப்படுவதிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம் என அவர் கருதினார். அந்தப் பகுதியில் இருந்த சின்ன தலைவர் சிறுவல்லி பிள்ளையிடம் அனுமதி பெற்று, அந்தக் காலத்தில் பிரபலமாக இருந்த மருங்கூரில் ஓர் ஆலயமும், இல்லமும் கட்டினார். 

இந்த மையத்தில் இருந்து 1699 ஆம் ஆண்டு ஒரு சிலரை கிறிஸ்தவர்களாக்கி புதிய மலபார் மறைபரப்புத் தளத்திற்கு கொண்டு வந்தார். 

1705 ஆம் ஆண்டு அருட்பணி. பீட்டர் மார்ட்டின் அடிகளார், அருட்பணி. பெர்க்கீஸ் அடிகளாருக்குப் பதிலாக மருங்கூர் வந்தார்.‌ 1705 ஆம் ஆண்டு 'நேமம்' ஒரு தனி மறைபரப்புத் தளமாக உருவாக்கப்பட்டது. மருங்கூர் மற்றும் வடக்கன்குளம் ஆகிய இரண்டும், மதுரை மறைபரப்புத் தளத்தில் இருந்து பிரிக்கப்பட்டு, நேமம் மறைபரப்புத் தளத்தோடு இணைக்கப் பட்டன.

1708 -1709  காலகட்டத்தில் அருட்பணி. சைமன் டி கார்லோ பணியாற்றிய வேளையில் இராமனாதிச்சன்புதூர் ஆலயமும், மருங்கூர் இல்லமும் தீக்கிரையாக்கப் பட்டன. அந்த நேரத்தில் 3000 கிறிஸ்தவர்கள் இந்தப் பகுதியில் இருந்தனர்.‌ அருட்பணி. மார்ட்டின் அடிகளார் ஆலயத்தையும், இல்லத்தையும் கட்டுவதற்காக மீண்டும் அனுப்பப் பட்டார்.

மருங்கூர் புதிய ஆலயம் அருட்பணி. இரெத்தின சுவாமி,சே.ச அவர்களால் தொடங்கப்பட்டு, அருட்பணி. ஜோசப், சே.ச அவர்களால் நிறைவு செய்யப்பட்டது.

தற்போது இங்கு வாழும் கிறிஸ்தவ மக்கள், உள்நாட்டு மீனவர்கள். இவர்கள் தொழில்தேடி இங்கு வந்தவர்கள் ஆவர். 

மருங்கூர் புனித அந்தோனியார் ஆலயமானது அருட்பணி. ஜோசப் காலின்ஸ் பணிக்காலத்தில் புதுப்பிக்கப்பட்டு, மேதகு ஆயர் லியோன் அ. தர்மராஜ் அவர்களால் 20.02.2004 அன்று அர்ச்சிக்கப்பட்டது. 

இராமனாதிச்சன்புதூர் பங்கின் கிளைப்பங்காக செயல்பட்டு வந்த மருங்கூர், 15.05.2016 அன்று அமராவதிவிளை தனிப்பங்கான போது, அமராவதிவிளையின் கிளைப் பங்காக மாற்றப்பட்டது.

அருட்பணி. சேவியர் சுந்தர் பணிக்காலத்தில், புனித அந்தோனியார் புதுமை குருசடியானது புதிதாக கட்டப்பட்டு, 20.01.2012 அன்று அர்ச்சிக்கப்பட்டது.

அருட்பணி. அந்தோனியப்பன் பணிக்காலத்தில் 27.07.2018 அன்று வெண்கல கொடிமரம் நிறுவப்பட்டது.

பங்கில் உள்ள குருசடிகள்:

1. புனித அந்தோனியார் புதுமை குருசடி

2. புனித மிக்கேல் அதிதூதர் குருசடி

3. புனித ஆரோக்கிய மாதா குருசடி

பங்கேற்பு அமைப்புகள்:

1. பங்கு அருள்பணிப் பேரவை

2. அன்பியங்கள்

3. மறைக்கல்வி மன்றம்

4. மரியாயின் சேனை

5. புனித வின்சென்ட் தே பவுல் சபை

6. உள்நாட்டு மீனவர் சங்கம்

7. பாலர் சபை

8. சிறார் இயக்கம்

வழித்தடம்: நாகர்கோவில் -இராஜாவூர் வழித்தடத்தில், நாகர்கோவிலிலிருந்து 12கி.மீ தொலைவில் மருங்கூர் அமைந்துள்ளது.

Map Location: https://g.co/kgs/tu6XSC