54 புனித அந்தோணியார் ஆலயம், நெடுங்குளம்

 

புனித அந்தோணியார் ஆலயம்

இடம் : நெடுங்குளம், நெடுங்குளம் அஞ்சல், 628704  

மாவட்டம் : தூத்துக்குடி 

மறை மாவட்டம்: தூத்துக்குடி 

மறைவட்டம்: சாத்தான்குளம்

நிலை: கிளைப்பங்கு

பங்கு: உலக மீட்பர் ஆலயம், நெடுங்குளம்

குடும்பங்கள்: 58 (வரிகள்)

அன்பியம்: 1. புனித ஆரோக்கிய அன்னை அன்பியம்

பங்குத்தந்தை : அருட்பணி. சேவியர் கிங்ஸ்டன்

செவ்வாய் மாலை 07:30 மணிக்கு திருப்பலி

திருவிழா: ஆனி மாதம் முதல் செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பித்து 13 நாட்கள் நடைபெறும். 

Location map: https://g.co/kgs/DG5tM3

வரலாறு:

1860 ஆம் ஆண்டு நெடுங்குளத்தைச் சேர்ந்த 22 பறையர் சமுதாயக் குடும்பத்தினர் கத்தோலிக்க கிறிஸ்தவர்களாயினர் என்று அருட்பணி. லியோன் பெஸ் அவர்கள், தாம் எழுதிய "New Madurai Mission IV" என்ற புத்தகத்தில் குறிப்பிடுகிறார். இவர்கள் கத்தோலிக்கம் தழுவிய போதும் தங்களது ஆன்மீகம் திருவருட்சாதனங்கள் போன்ற காரியங்களுக்காக நெடுங்குளம் உலக மீட்பர் ஆலயத்தைச் சார்ந்து இருந்துள்ளனர்.

1930 களில் ஏற்பட்ட சில ஏற்றத்தாழ்வுகள் காரணமாக, தங்களுக்கு என தனியாக ஒரு ஆலயம் வேண்டும் என்று மறைமாவட்ட ஆயர் மேதகு திபூர்சியூஸ் ரோச் ஆண்டகை மற்றும் முதன்மை குரு ஆகியோரிடம்  முறையிட்டனர்‌‌. ஆயரின் அனுமதி பெற்று அதன்பின் விரைவாக 1930களில் மண் சுவரால் ஆன ஆலயத்தைக் கட்டி முடித்து, மீண்டும் ஆயர் மற்றும் முதன்மை குருவை தொடர்பு கொண்டு, சகாய மாதா சுரூபத்தை பெற்று ஆலயத்தில் நிறுவினர்.

இவர்கள் புனித அந்தோனியார் மீது மிகுந்த பற்று கொண்டவர்களாக விளங்கி வந்தனர். ஆகவே மறைமாவட்டத்தை தொடர்பு கொண்டு புனித அந்தோனியார் சுரூபம் வேண்டும் என்று கேட்டு, அதனை எப்படியாவது பெற்று விடலாம் என்று நம்பிக்கையுடனும் இருந்தனர். 

'வலசைக்கிணறு' என்ற கிராமமானது தொற்று நோயின் காரணமாக முற்றிலும் அழிந்து போயிருந்தது. ஆனால்

இங்குள்ள ஆலயத்தில் இருந்த மரத்தினால் ஆன புனித அந்தோனியார் சுரூபமானது அழியாமல் பாதுகாப்புடன் இருப்பதை கேள்விப்பட்டு, ஆயரின் அனுமதியுடன் வலசைக்கிணறு புனித அந்தோனியார் சுரூபத்தைக் கொண்டு வந்து, நெடுங்குளம் ஆலயத்தில் வைத்து தங்களுடைய பாதுகாவலராகக் கொண்டு, இறைவனை மக்கள் வழிபட்டு வந்தனர். இந்த சுரூபம் தான் இன்றுவரை இவ்வாலயத்தில் உள்ளது.

1951 ஆம் ஆண்டு மண்சுவர் ஆலயம் அகற்றப்பட்டு, கல்லால் ஆன ஆலயம் கட்டப்பட்டு, ஓட்டுக் கூரை வேயப்பட்டது.

1989 ஆம் ஆண்டு அருட்பணி. U. அமலதாஸ் அவர்களது பணிக்காலத்தில் புனித அந்தோனியார் ஆலயம்  புதுப்பிக்கப்பட்டது.

2003 ஆம் ஆண்டு அருட்பணி. அமல்ராஜ் பணிக்காலத்தில் ஆலய ஓட்டுக் கூரை மாற்றப்பட்டு, கான்கிரீட்டால் ஆன மேற்கூரை அமைக்கப்பட்டது. மேலும் திருப்பண்ட அறை புதிதாக கட்டப்பட்டு, ஆலயத்தின் முன்புறம் உள்ள மண்டபமும் கான்கிரீட் மேற்கூரை போடப்பட்டு புதுப்பிக்கப்பட்டது.

அருட்பணி. சேவியர் கிங்ஸ்டன் பணிக்காலத்தில் மக்களின் ஒத்துழைப்புடன் புதிய பீடம் கட்டப்பட்டு, 08.08.2021 அன்று மேதகு ஆயர் ஸ்டீபன் அவர்களால் மந்திரிக்கப்பட்டது.

ஆலயத்தில் செயல்பட்டு வரும் பக்த சபைகள், இயக்கங்கள்:

1. பாலர் சபை

2. நற்கருணை வீரர் சபை

3. அமலோற்பவமாதா இளம் பெண்கள் சபை

4. புனித அந்தோனியார் இளைஞர் இயக்கம்

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பங்குத்தந்தை அருட்பணி. சேவியர் கிங்ஸ்டன்