470 புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம், கேத்தி, ஊட்டி

     

புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம்

இடம் : கேத்தி, ஊட்டி.

நிலை : பங்குத்தளம்

பங்குத்தந்தை : அருட்பணி. S. C. ஆரோக்கிய ராஜன்

குடும்பங்கள் : 298
அன்பியங்கள் : 5

வழிபாட்டு நேரங்கள் :

ஞாயிறு காலை 07.00 மணி மற்றும் காலை 09.00 மணிக்கும் திருப்பலி.

திங்கள் காலை 06.45 மணிக்கு புனித மிக்கேல் அதிதூதர் நவநாள் திருப்பலி.

செவ்வாய் காலை 06.45 மணிக்கு புனித அந்தோணியார் நவநாள் திருப்பலி.

புதன் காலை 06.45 மணிக்கு புனித சூசையப்பர் நவநாள் திருப்பலி.

வியாழன் காலை 06.45 மணிக்கு குழந்தை இயேசுவின் நவநாள் திருப்பலி.

வெள்ளி காலை 06.45 மணிக்கு இறைஇரக்கத்தின் நவநாள் திருப்பலி.

சனி காலை 06.45 மணிக்கு சகாயமாதா நவநாள் திருப்பலி.

திருவிழா : செப்டம்பர் மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை.

மண்ணின் மைந்தர்கள் :
1. அருட்பணி. ஆர்தர்
2. அருட்பணி. வினோபா
3. அருட்பணி. லாரன்ஸ்
4. அருட்பணி. செல்வராஜ்
5. அருட்சகோ. நிக்கோலஸ்

1. அருட்சகோதரி. இருதயமேரி FMM
2. அருட்சகோதரி. அமலா FSJ
3. அருட்சகோதரி. ஸ்டெல்லா FMM
4. அருட்சகோதரி. அருணா FMM
5. அருட்சகோதரி. கமலா St. Anne's
6. அருட்சகோதரி. கேதரின் FMM.

வழித்தடம் : குன்னூரிலிருந்து -ஊட்டி செல்லும் சாலையில், 10கி.மீ தொலைவில் எல்லநல்லி. இங்கிருந்து 3கிமீ தூரத்தில் சாந்தூர். சாந்தூரிலிருந்து சற்று தூரம் நடந்து வந்தால் இவ்வாலயத்தை அடையலாம்.

ஊட்டி -சாந்தூர் பேருந்து. இறங்குமிடம் சாந்தூர்.

Location map : https://maps.google.com/?cid=2822446156414332331

வரலாறு :

வானளாவிய பல்வேறு வகையான மரங்களும், செடிகளும், இவற்றுடன் நீரூற்றுகளும், சிற்றருவிகளும் ஆங்காங்கே அமையப்பெற்று, இந்த மரங்களில் பலவித பறவைக்கூட்டங்கள் ஆர்ப்பரிக்க, வான்முட்டும் கிழக்குத் தொடர்ச்சி மலையும் மேற்குத் தொடர்ச்சி மலையும் கூடுமிடத்தில் அமைந்துள்ளது பெருமைமிகு நீலமலை.

மூடுபனியும், மேகமும் சூழ்ந்து காண்பவர் கண்களுக்கு நீலநிறமாக தோற்றமளித்து, இந்த கிரி(மலை)யை கொண்ட நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ளது தான் எழில்களின் ராணி எனப்படும் குறிஞ்சி நிலத்திற்கே அணிகலனாகத் திகழும் உதகமண்டலம் (ஊட்டி).

வான்முட்டும் மலையிலிருந்து அழகிய பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது கேத்தி என்னும் ஊர். இவ்வூரில் அமைந்துள்ள புனித மிக்கேல் அதிதூதர் ஆலய வரலாற்றைக் காண்போம்.

வடக்கே கர்நாடகா மாநிலத்தை எல்லையாகக் கொண்டுள்ள நீலகிரி மாவட்டத்தில், கால ஏட்டில் ஏற்பட்ட மைசூர் போரில் உடையார் அரசர்களுக்கு பயந்து, இவ்விடத்தை இழந்து படகர் இன மக்கள் மலைப்பகுதிகளில் தங்கள் வாழ்க்கையைத் தொடங்கினர். வசிக்கத் தொடங்கிய இடங்கள் ஹட்டிகள் என வழங்கலாயிற்று. கர்நாடகத்தின் மொழியை கற்றறிந்த மக்கள், கால வழக்கில் மருவி, விரவி மொழிச் சிதறல் ஏற்பட்டு எழுத்தற்ற படக மொழியை பேசலாயினர். இவர்களே படகர்கள் ஆவர். இவர்கள் நிறைந்துள்ள இடம் தான் நீலகிரி.

நற்செய்தி பறைசாற்ற வந்த பிரெஞ்சு வேதபோதக சபையினர் கேத்தி என்னும் இந்த சிற்றூருக்கு வருகைதரத் தொடங்கினர். கி.பி 1888 ஆம் ஆண்டில் Rev. Fr. Foubert, Rev. Fr. Marie Louis Rabin MEP ஆகியோர் கொரையாடா கிராமத்தில் சிறு குடிசை ஒன்றை அமைத்து தங்கி, படக மொழியைக் கற்று நற்செய்தியை போதித்தனர். இவர்களின் அரிய முயற்சி 07.09.1890 ல் பலன்தர ஆரம்பித்தது. நான்கு நபர்கள் முதலில் திருமுழுக்குப் பெற்று கத்தோலிக்க திருச்சபையில் இணைந்தனர். Rev. Fr. Foubert அவர்கள் நேர்க்கம்பை கிராமத்தில் சிற்றாலயம் இணைந்த பள்ளியை நிறுவினார். பல்வேறு காரணங்களால் இங்கு அவர்களின் முயற்சி மேலும் பலன்தர இயலாமல் போனது.

இறைவனின் கரம் படக இன மக்களை கரம் பிடித்து நடத்த 1914 ஆம் ஆண்டு பிரகாசமான வழியைத் தந்தது. ஆயர் அகஸ்டின்ராய் அவர்களால் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி படுக இனத்தார் மத்தியில் கத்தோலிக்க திருச்சபையை பரப்ப "Great Baptizer of Tribals" ஏற்படுத்தி, Rev. Fr. Jules Gudin இவ்விடம் வந்தார். நேர்க்கம்பை சிற்றாலயத்தின் அருகே சிறு அறையை நிறுவி தன்னந்தனியே சோகத்துரை, உலிக்கல், காட்டேரி போன்ற குக்கிராமங்களுக்குச் சென்று நற்செய்தியை போதிக்க தொடங்கினார். இவரது போதனையில் ஈர்க்கப்பட்டு 18 பேர் திருச்சபையில் இணைந்தனர்.

முதல் திருமுழுக்கு 15.02.1914 அன்று சவுரியப்பன் என்பவருக்கு சானிட்டோரியத்திலும், 13.06.1915 அன்று இருதயமேரி என்பவருக்கு கேத்தியிலும் கொடுக்கப்பட்டது.

1915 ஆம் ஆண்டு தற்போது பங்குத்தந்தை வசிக்கும் இல்லம் ஆலயமாக கட்டப்பட்டது. கொம்புக்கரை பகுதியில் இரண்டு ஏக்கர் நிலம் வாங்கப்பட்டது. 1915 ல் மேலும் 29 பேர் திருச்சபையில் இணைந்தனர். Fr. Jules Gudin அவர்கள் நிம்மோனியா நோயினால் பாதிக்கப்பட்டு 1916 மே மாதத்தில் இறைவனடி சேர்ந்தார்.

இதனைத் தொடர்ந்து மீண்டும் Rev. Fr. Foubert அவர்கள் தமது முதிர்ந்த வயதினிலே (70வயது) கூடுதல் பொறுப்பை ஏற்றுக் கொண்டு படுக இன மக்களுக்கு பணி செய்தார். 1917 ல் பிரகாசபுரம் பகுதியில் புதிய ஆலயமும், குருக்கள் தங்குமிடமும் கட்டப்பட்டது. 1916 முதல் 1919 அக்டோபர் மாதம் வரை 63 படுக இனத்தார் கத்தோலிக்க மறையில் இணைந்தனர்.

Rev. Fr. Henry Tignous (1919-1928):

1922 ஆம் ஆண்டு கேத்தி தனிப் பங்காக உயர்த்தப் பட்டது. 1924 இல் சாந்தூர் பகுதியில் ரூ. 5 மாத வாடகையில் ஒரு கட்டிடத்தில் முதல் கத்தோலிக்க பள்ளிக்கூடத்தை அருட்தந்தை அவர்கள் துவங்கினார். தொடர்ந்து தாம்பட்டி, மஞ்சனக்கொரை, அரைஹட்டி, கம்மந்து, உல்லாடா, அச்சனக்கல், தொரையாடா, ஆகிய இடங்களில் பள்ளிகளை துவக்கி, FMM சபை கன்னியர்களிடமும், கத்தோலிக்க பொது நிலையினர் சிலரிடமும் ஒப்படைத்தார்.

FMM சபை அருட்சகோதரிகள் 1911 ஆம் ஆண்டு முதலே மறை போதகர்களுடன் இணைந்து இப்பகுதியில் மறை போதனையில் ஈடுபட்டு வந்தாலும், 30.10.1926 ல் அருட்சகோதரி. லூசியா, அருட்சகோதரி. ஜூலியன் ஆகியோர், திரு. இங்கிரம் என்ற ஆங்கிலேயருக்கு சொந்தமான இவ்விடத்தை இல்லிடமாகக் கொண்டு மருந்தகம் ஒன்றைத் தொடங்கி பங்கின் வளர்ச்சிக்கு அடித்தளமிட்டனர்.

1928 ஆம் ஆண்டின் இறுதியில் கேத்தி பங்கில் 300 கத்தோலிக்கர்கள் இருந்தனர்.

தொடர்ந்து அருட்தந்தை. பிரான்சிஸ் சவரிமுத்து (1929) அவர்கள் ஓராண்டு காலம் சிறப்பாக பணியாற்றினார்.

அருட்தந்தை. எட்மண்ட் பெர்ரி (1930-1934) :

அருட்தந்தை அவர்களை Saint of Ketti Valley என்று மக்கள் அழைத்தனர்.

புதிய ஆலயம் கட்டப்பட்டு, 1933 ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதத்தில் புனித மிக்கேல் அதிதூதர் திருவிழாவன்று மேதகு ஆயர் துர்னியர் அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது. இந்த இடத்தில் தான் தற்போது நூற்றாண்டின் நினைவாக ஆலயம் எழுப்பப் பட்டுள்ளது.

21.01.1960 இல் அருட்தந்தை. எட்மண்ட் அவர்கள் மரணமடைந்த போது, அவரது உடல் ஆலயத்திற்கருகே அடக்கம் செய்யப்பட்டது. இந்த கல்லறையருகே தினமும் மக்கள் வந்து தங்கள் கருத்துக்களுக்காக செபித்து வருகின்றனர்.

1934 முதல் 1952 வரை 4 வேதபோதக சபையின் 10 குருக்கள், அருட்சகோதரிகளின் வழிகாட்டுதலில் கேத்தி இறை சமூகம் ஆன்மீகப் பாதையில் சிறப்பாக பயணித்து வந்தது.

அருட்பணி. Jean Laborde (1952-1968):

சாதி மத பேதமின்றி மக்களோடு கலந்து உறவாடி, அவர்களின் தேவையறிந்து நிலம், வீடுகள், தொழுவங்கள், கிணறு என அமைத்துக் கொடுத்து, மக்களின் வாழ்க்கை தரம் உயர வழி வகுத்தார். ஆலயத்தோடு அமைந்துள்ள மணிக்கூண்டை அழகுற அமைத்தார். மேலும் கொம்புக்கொரை, தொரஜாடா பகுதிகளில் 71 வீடுகள் மற்றும் மாட்டுக் கொட்டகைகள் அமைத்துக் கொடுத்தார்.

05.07.1955 ல் உதகை மறை மாவட்டம் உதயமானது. அப்போது இதன் கீழ் இருந்த 16 பங்குகளில் கேத்தி யும் ஒன்று என்பது குறிப்பிடத் தக்கது.

அருட்பணி. குன்னத் (1968-1969): ஆன்மீகப் பாதையில் சிறப்பாக வழி நடத்தினார்கள்.

அருட்பணி. J. இம்மானுவேல் (1969-1974): ஒலிக்கல் மக்களுக்காக சிறப்புற பணியாற்றினார்.

அருட்பணி. தாமஸ் தெக்கேபெற (1974-1987):

விளைநிலங்கள் வாங்கி பங்கு தன்னிறைவு பெற வழிகாட்டினார். கேத்தி பங்கின் முதல் இறையழைத்கலாக 08.04.1974 அன்று R. C. தேவராஜ் அவர்கள் மேதகு ஆயர் அருள்தாஸ் ஜேம்ஸ் அவர்களால் திருநிலைப் படுத்தப்பட்டார்.

1978 ல் சாந்தூர் பகுதியிலிருந்த கத்தோலிக்க நடுநிலைப்பள்ளி, பெண்கள் உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப் பட்டது.

1980 ல் மறைமாவட்ட வெள்ளிவிழா நினைவாக அருட்பணி. தாமஸ் தெக்கேபர அவர்களால் பங்கு மண்டபம் கட்டப்பட்டது.

15.03.1981 ல் St. Thomas Burial fund உருவாக்கப் பட்டது.

அருட்பணி. லூயிஸ் (1987-1991):

01.12.1988 இல் பவளவிழா கொண்டாடப்பட்டு, விழா நினைவாக ஆலய முகப்பு மண்டபம் கட்டப்பட்டதுடன், பவளவிழா மலர் வெளியிடப்பட்டது.

அருட்பணி. வின்சென்ட் பால்ராஜ் (1991-1994):

சிறந்த பாடகர். உபவாச கூட்டங்கள் நடத்தப்பட்டன. தவக்கால சிலுவைப்பாதை துவக்கப்பட்டு இன்றுவரை தொடர்ந்து நடத்தப் படுகிறது.

அருட்பணி. ஜெய் அருள்ராஜ் (1994-1998):

ஜனவரி முதல் நாளன்று நற்கருணை பவனியை பங்கில் தொடங்கி, ஆன்மீகப் பாதையில் சிறப்பாக வழி நடத்தினார்கள்.

அருட்பணி. சவரிநாதன் (1998-2000):

தொரஜாடா பகுதியில் அப்பகுதி மக்களின் ஈடுபாட்டுடன் நன்கொடை திரட்டி ஜேபமாலை அன்னைக்கு கெபி கட்டினார். பங்குப்பேரவை அமைக்க அடித்தளமிட்டார்.

அருட்பணி. ஹென்றி மரிய லூயிஸ் (2000-2003):

01.10.2000 அன்று 'இறைவனுக்கும் மக்களுக்கும் உண்மையாக பணிபுரிய' என்கிற சீரிய நோக்குடன் மேதகு ஆயர் அனந்தராயர் முன்னிலையில் முதல் பங்குப்பேரவை உருவாக்கப்பட்டது. பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய குடும்பத்தில் உள்ள குழந்தைகளுக்கு உதவி புரியும் வகையில் 'Fr. Edmond Perie' கல்வி நிதி உருவாக்கப்பட்டது.

அருட்பணி. ஜெயபால் (2003-2004):

ஆலயத்தின் முன்புறம் மேடை கட்டப்பட்டது. கொம்புக்கரை பகுதியில் மறைமாவட்டத்தின் பங்களிப்புடன் கட்டப்பட்ட சமுதாயக்கூடம் 28.05.2004 அன்று மேதகு ஆயர் அனந்தராயர் அவர்களால் திறக்கப்பட்டது.

அருட்பணி. V. கிறிஸ்டோபர் லாரன்ஸ் (2004-2005):

பங்கு தொடங்கி 90 ஆண்டுகள் நிறைவுற்றதைத் தொடர்ந்து முதன்மைகுரு அந்தோணிசாமி அவர்கள் தலைமையில் சிறப்பாக கொண்டாடப் பட்டது. கிளைப் பங்காகிய மந்தாடா பகுதியில் ஆலயம் கட்ட நிலம் வாங்கப்பட்டது.

அருட்பணி. T. J. ஜோசப் (2005-2010):

29.10.2005ல் தொரஜாடா பகுதியில் சமுதாயக்கூடம் திறக்கப்பட்டது. கொம்புக்கரை பகுதியில் உள்ள கல்லறைத் தோட்டம் விரிவாக்கம் செய்யப் பட்டது. மந்தாடா பகுதியில் சிற்றாலயம் கட்ட மறைமாவட்ட நிதி ஒதுக்கப்பட்டது.

அருட்பணி. பால் கஸ்பார் :

2010 ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சிறப்பாக வழி நடத்தினார்.

அருட்பணி. கிறிஸ்டோபர் பால் வில்சன் (2010-2011):

எல்லா நாட்களிலும் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. நிலகுத்தகை முறைப்படுத்தப்பட்டது.

அருட்பணி. தேவராஜ் நிக்கோலஸ் (2011-2016):

29.09.2013 இல் ஆயர் தலைமையில் புதிய ஆலயத்திற்கு அடிக்கல் போடப்பட்டது.

01.01.2014 ல் ஆலய கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது.

ஆலய கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்று 14.01.2015 அன்று ஆலயம் அர்ச்சிக்கப் பட்டது.

அருட்பணி. S. C. ஆரோக்கியராஜன் (2016 முதல் தற்போது வரை):

2017 ல் குழந்தை இயேசு கெபி கட்டப் பட்டது.

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் : பங்குத்தந்தை அருட்பணி. S. C. ஆரோக்கியராஜன் அவர்கள்.