730 புனித அன்னாள் ஆலயம், நரிப்பையூர்

       

புனித அன்னாள் ஆலயம்

இடம்: நரிப்பையூர்

மாவட்டம்: இராமநாதபுரம்

மறைமாவட்டம்: சிவகங்கை

மறைவட்டம்: இராமநாதபுரம்

நிலை: கிளைப்பங்கு

பங்கு: புனித சந்தியாகப்பர் ஆலயம், ரோச்மாநகர்

பங்குத்தந்தை: அருட்பணி. S. அமல்ராஜ்

குடும்பங்கள்: 70

அன்பியங்கள்: 4

1. புனித அந்தோனியார் அன்பியம்

2. குழந்தை இயேசு அன்பியம்

3. புனித மிக்கேல் அதிதூதர் அன்பியம்

4. புனித அன்னாள் அன்பியம்

ஞாயிறு திருப்பலி காலை 08:50 மணிக்கு

மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை மாலை 06:00 மணிக்கு திருப்பலி நற்கருணை ஆசீர்

திருவிழா: ஜூன் 28 -ம் தேதி கொடியேற்றம், ஜூலை 6 -ம் தேதி திருவிழா

வழித்தடம்: சாயல்குடி -நரிப்பையூர்

Location map:

St Anne Church

https://maps.app.goo.gl/epYBaxudvSoFMXwR9

வரலாறு:

நரிப்பையூர் கடற்கரை கிராமத்தில் சுமார் 250 ஆண்டுகளுக்கு முன்பு மீன்பிடித் தொழிலை ஜீவாதாரமாகக் கொண்டு வாழ்ந்த மீனவ மக்கள், அன்னை மரியாவின் தாயான புனித அன்னாள் மீது மிகுந்த விசுவாசத்தை கொண்டிருந்தனர். 

தற்போது உள்ள புதிய ஆலயத்திற்கும், சிதிலமடைந்த நிலையில் உள்ள பழைய ஆலயத்திற்கும் தெற்கே சிறுசிறு வீடுகளை அமைத்து வாழ்ந்து வந்தனர். காலப்போக்கில் கடலரிப்பின் காரணமாக வசித்து வந்த இடத்தில் இருந்து சுமார் 500 அடி வடகிழக்கில் நகர்ந்து குடியிருப்புகளை அமைத்துக் கொண்டனர்.

முதன் முதலில் கட்டப்பட்ட புனித அன்னாள் ஆலயத்தின் சுவர்கள் சுமார் இரண்டு அடிகள் அகலம் உள்ளதாகவும், மேற்கூரை கேரளா செம்மண் ஓடுகளாலும் வேயப்பட்டதாகவும் இருந்தது. மேலும் ஆலயத்தில் இருந்த கலைநயம் மிக்க மரத்தால் ஆன அழகிய பீடமானது, அப்போதைய ஊர் முக்கியஸ்தர்களால் இலங்கையில் இருந்து அமைத்து நரிப்பையூருக்கு கொண்டு வரப்பட்டதாகும்.

மேலும், சுமார் ஒன்றரை அடி உயரம் கொண்ட புனித அன்னாள் சுரூபம் இலங்கையில் இருந்து கடல் வழியாக கொண்டு வரப்பட்டதாகும். சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த ஆலயத்தில் தான் வழிபாடுகள் நடத்தப்பெற்று வந்தன. 

பின்னர் புதிய ஆலயம் அமைக்க தீர்மானிக்கப்பட்டு, கிழக்கு திசையை நோக்கி புதிய ஆலயத்திற்கு 1971 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு, அஸ்திவாரம் அமைக்கப்பட்டது. 

அப்போது தொழில்வளம் மிகவும் குறைவாக இருந்ததாலும், மறைமாவட்ட உதவி கிடைக்க தாமதம் ஏற்பட்டதாலும் பணிகள் தொய்வு ஏற்பட்டது. 

பின்னர் மூக்கையூர் பங்குத்தந்தையாக அருள்தந்தை. அல்போன்ஸ் அவர்கள் பணிபுரிந்த போது, மறைமாவட்டத்தின் உதவியோடும், ஊர் மக்களின் முயற்சியோடும் ஆலய கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்று, 07.07.1996 அன்று சிவகங்கை மறைமாவட்ட முன்னாள் ஆயர் மேதகு S. எட்வர்ட் பிரான்சிஸ் D.D., அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது. மேலும் இதே நாளிலேயே ஊரின் கிழக்குப் பகுதியில் அமைக்கப்பட்ட குழந்தை இயேசு கெபியும் மேதகு ஆயர் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.

ஆலய கட்டுமானப் பணிகள் நிறைவு பெறுவதற்கு சற்று முன்னர் ஊரின் மேற்குப் பகுதியில் கட்டப்பட்ட புனித அந்தோனியார் கெபி அர்ச்சித்து திறந்து வைக்கப்பட்டது.

2005 ஆண்டு மூக்கையூர் பங்கிலிருந்து பிரிந்து ரோச்மாநகர் தனிப் பங்காக ஆன போது, நரிப்பையூர் புனித அன்னாள் ஆலயமானது ரோச்மாநகர் பங்கின் கிளைப்பங்காக மாற்றப்பட்டது.

ஊர் பெரியவர்களின் தீர்மானத்தின்படி, மணிக்கோபுரம் அமைக்க அப்போதைய ரோச்மாநகர் பங்குத்தந்தை அருட்பணி. S. R. ஜஸ்டின் திரவியம் அவர்களால் 01.06.2015 அன்று அடிக்கல் நாட்டப்பட்டது.

பெரும்பொருட் செலவில் உயர்ந்த கோபுரம் கட்டப்பட்டு, கொல்கத்தாவில் இருந்து கொண்டு வரப்பட்ட உலக இரட்சகர் சுரூபம் கோபுர உச்சியில் நிர்மாணிக்கப்பட்டது. கீழ்தளத்தில் புனித பாத்திமா மாதாவின் சுரூபம் வைக்கப்பட்டு, 05.07.2017 அன்று பங்குத்தந்தை அருட்பணி. S. அமல்ராஜ் அவர்கள் முன்னிலையில், சிவகங்கை மறைமாவட்ட மேனாள் ஆயர் மேதகு சூசை மாணிக்கம் D.D.,STD, அவர்களால் அர்ச்சித்து திறந்து வைக்கப்பட்டது.

1911 ஆம் ஆண்டு ஓலைக்கூரை வேயப்பட்ட ஆர்.சி அன்னம்மாள் ஆரம்பப் பள்ளி தொடங்கப்பட்டு, சிறிது காலத்திற்கு பிறகு தற்போது சிதிலமடைந்து காணப்படும் பழைய புனித அன்னாள் ஆலயத்தில் பல வருடங்களாக வகுப்புகள் நடைபெற்று வந்தது.

1931 ஆம் ஆண்டு ஊர் மக்கள் அனைவரும் இணைந்து காரைக்கட்டிடம் கட்டி, அரசு அங்கீகாரம் பெற்று இன்று வரை சிறந்த முறையில் கல்விப்பணியை வழங்கி வருகிறது. 2013 ஆம் ஆண்டு சிவகங்கை மறைமாவட்ட நிர்வாகத்தால் பள்ளிக்கூடத்தின் பழுதுகள் நீக்கப் பட்டு, பள்ளிக்கு முன்பாக கூலிங் ஷீட் என்ற குளிர் தகடுகள் அமைக்கப் பட்டு புதுப் பொலிவு ஏற்படுத்தப்பட்டது.

தொடர்ந்து பங்குத்தந்தையின் வழிகாட்டலில், புனித அன்னாளின் பாதுகாப்பில் வளர்ச்சியை நோக்கி பயணிக்கிறது நரிப்பையூர் இறைசமூகம்.

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பங்குத்தந்தை அருட்பணி. S. அமல்ராஜ் அவர்கள்