829 புனித ஸ்நாபக அருளப்பர் ஆலயம், N.பூலாம்பட்டி

     

புனித ஸ்நாபக அருளப்பர் ஆலயம் (புனித திருமுழுக்கு யோவான்)

இடம்: N.பூலாம்பட்டி

மாவட்டம்: திருச்சிராப்பள்ளி

மறைமாவட்டம்: திருச்சிராப்பள்ளி

மறைவட்டம்: மணப்பாறை

நிலை: பங்குத்தளம்

கிளைப்பங்குகள்:

1. புனித பிரான்சிஸ் சலேசியார் ஆலயம், தோப்புப்பட்டி

2. புனித சவேரியார் ஆலயம், உப்பாத்துப்பட்டி

3. புனித செபஸ்தியார் ஆலயம், மதலைப்பட்டி

4. புனித ஸ்நாபக அருளப்பர் ஆலயம், அதிகாரிப்பட்டி

5. புனித குழந்தை தெரசம்மாள் ஆலயம், வையாபுரிபட்டி

6. புனித அருளானந்தர் ஆலயம், பூவைநகர்

7. புனித ஆரோக்கிய அன்னை ஆலயம், மூங்கில் குளம்

8. புனித பெரிய அந்தோனியார் ஆலயம், அந்தோணியார்புரம்

பங்குத்தந்தை அருட்பணி.‌ A. ஜெரால்டு பிரான்சிஸ் சேவியர்

குடும்பங்கள்: 500 

அன்பியங்கள்: 12

ஞாயிறு திருப்பலி காலை 05:30 மணி மற்றும் காலை 08:30 மணி

நாள்தோறும் திருப்பலி மாலை 07:00 மணி

வெள்ளி மாலை 07:00 மணி நவநாள் திருப்பலி, நற்கருணை ஆராதனை

மாதத்தின் முதல் வெள்ளி மாலை 07:00 மணி நவநாள் திருப்பலி, திருஎண்ணெய் பூசுதல்

திருவிழா: ஆனி மாதத்தில் 8,9,10 தேதிகளில். (ஜூன் மாதம் 22,23,24)

மண்ணின் இறையழைத்தல்கள்:

அருட்பணியாளர்கள்:

1. ஆயர் மேதகு P. தாமஸ் பால்சாமி, D.D., ஆயர் திண்டுக்கல் மறை மாவட்டம்

 2. அருட்பணி. S. பத்தியநாதன், திருச்சி மறைமாவட்டம்

3. அருட்பணி. S. அந்தோணிசாமி, திருச்சி மறைமாவட்டம்

 4. அருட்பணி P. சாலமோன் ஜேம்ஸ், CR

அருட்பணி S. பிரான்சிஸ்  சலேசியா, CSC

5. அருட்பணி. P. டேனியல் ராஜ், OCD

6. அருட்பணி. பிரான்சிஸ் சலேசியார்

7. அருட்பணி. S. ஜேம்ஸ் சந்தியாகு, Piarist father's 

8. அருட்பணி. S. வேதபோதக சகாயராஜ், OFM Cap

9. அருட்பணி P. யோவான், OFM Cap.

அருட்சகோதரர்கள்:

1. அருட்சகோ. S. அந்தோணி, Donbosco

2. அருட்சகோ. A.  ஆரோக்கிய சாமி, Morist Brothers

3. அருட்சகோ. A. ஜான் பீட்டர், Morist Brothers

4. அருட்சகோ. P. ஜான்சன், Morist Brothers

அருட்சகோதரிகள்:

1. அருட்சகோதரி. மரியம், CIC

2. அருட்சகோதரி.‌ தஸ்நேவிஸ் மேரி, CIC

3. அருட்சகோதரி. Z. பாத்திமா மேரி, Sisters of Charity

4. அருட்சகோதரி. S. லாரன்ஸ், Cluny

5. அருட்சகோதரி. P. சந்தியா, FSPM

6. அருட்சகோதரி. I. ஜூலியட் ரெஜினா மேரி, St. Ann's Hyderabad

7. அருட்சகோதரி. A. கிறிஸ்டி ஜெனட், SAT

8. அருட்சகோதரி. X. அக்ஸிலிய ஆரோக்கிய தேவி, CIC

9. அருட்சகோதரி.‌ A. கரோலின் புனிதா, OSM

10. அருட்சகோதரி.‌ A. ஜெயந்தி ஸ்டெல்லா மேரி, CIC

11. அருட்சகோதரி.‌ A. மெர்ஸி பத்மா, CFMSS

12. அருட்சகோதரி.‌ A. குளோரி, Holy Family Sisters

13. அருட்சகோதரி. S. அந்தோணி மேரி, Holy Family Sisters

14. அருட்சகோதரி. A. அஜிலின் பெனில்டா, FMM

15. அருட்சகோதரி. A. அருள்குமாரி, CIC

16. அருட்சகோதரி. A. கிறிஸ்டின் ஷீபா, FIHM

வரலாறு:

ந.பூலாம்பட்டி பங்கானது திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில், மணப்பாறை வட்டத்தில், வீரமலை பெரியப்பட்டி என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது.‌ இவ்வூர் கி.பி1700 ஆம் ஆண்டுகளில் மதுரையை மையமாகவும், திருச்சியைத் தலைநகராகவும் கொண்டு ஆட்சி செய்த நாயக்க மன்னர்களின் காலத்திலே, வீரப்பூர் ஜமீன்தார் கட்டுப்பாட்டில் வரி வசூலிக்கப்பட்டு, நிர்வாகம் செய்யப்பட்டு வந்தது. 

திரு. நல்லதம்பி கவுண்டர் -திருமதி. சவரியாயி குடும்பத்தினர் கி.பி 1700 ஆம் ஆண்டுகளில், திருச்சி கல்லணை -க்கு கிழக்கே, அருகில் உள்ள கூகூர் என்ற ஊரிலிருந்து குடிபெயர்ந்து, ந.பூலாம்பட்டியில் குடியமர்ந்ததாக கூறப்படுகிறது. காரணம் இந்த தம்பதியருக்கு நீண்ட காலமாக குழந்தை பாக்கியம் இல்லாமல் வருந்தினர்.‌ பின்னாளில் சவரியாயி கருத்தரித்தவுடன் அவரை பலி கொடுக்க கூகூர் ஊர்ப் பெயர்கள் கேட்டுக் கொண்டதால், உயிருக்குப் பயந்து, தங்களது ஊரைவிட்டு திருச்சியில் குடியேறியதாக கூறப்படுகிறது. பின்னர் கூகூரை விட்டு அவரது உறவினர்களும் திருச்சியில் குடியேறினார்கள் என்பது (வாய்மொழி பாரம்பரிய) வரலாறு.  

ந.பூலாம்பட்டியில் குடியேறிய வரலாற்றுப் பின்னணி:

கி.பி 1708 ஆம் ஆண்டில் மழை பெரும் வெடிப்பாக பொழிய, காவிரி ஆற்றின் இரு மருங்கிலும் வெள்ளம் கரைபுரண்டோட, பயிர்ப்பச்சைகளெல்லாம் அழிந்து போயின. அதற்கு அடுத்த ஆண்டு 1709 -ல் மழையில்லாத காரணத்தால் கடும் பஞ்சம் ஏற்பட்டு, உணவுகள் கிடைக்காமல் பசியாலும், பலவிதமான நோய்களாலும்  பீடிக்கப்பட்டு; திருச்சி, புதுக்கோட்டை, தொண்டைமான் நாடு, அதற்குத் தெற்கே உள்ள பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் மடிந்தனர்.‌

ஊரைவிட்டு ஓடிப்போய் பல இடங்களிலும் சென்று வயிறு பிழைக்கப் போனவர்களில் உயிர் தப்பியவர்கள் மிகச் சிலரே. இக்காலத்தில் திரு. நல்லதம்பி கவுண்டர் தனது குடும்பத்தினருடன் திருச்சி புனித லூர்து மாதா ஆலயப் பங்குத்தந்தை வழங்கிய சிறிய புனித ஸ்நாபக அருளப்பர் சுரூபத்துடன் அதிகாரிப்பட்டிக்கு வந்து, அங்கு ஓர் ஆலயம் அமைக்க நினைத்தார்.‌ ஆனால் அந்தப்பகுதி கரிசல்மண் பூமியாக இருந்ததால், மேட்டுப்பகுதியான பூலாம்பட்டியில் குடியேறினார்.‌ இன்றும் இந்தப் பழைமையான சுரூபம் ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ளது.

17 ஆம் நூற்றாண்டின் இறுதியில் புனித பெரியநாயகி மாதாவின் மகிமைக்காக முதன் முதலில் தென்னிந்தியாவில் கட்டப்பட்ட தேவாலயம், ஆவூர் புனித பெரியநாயகி மாதா திருத்தலம் ஆகும். மதுரை மிஷனைச் சேர்ந்த 12 பங்குகளில் இதுவும் ஒன்று. வடக்கே சென்னைப் பட்டணம் மைலாப்பூரிலிருந்து,

தெற்கே கன்னியாகுமரி வரை மதுரை மிஷனின் 12 பங்குகளும் இருந்தது. அவை காவேரி ஆற்றிற்கு வடக்கே கல்பாளையம், வடுகர்பேட்டை, ஏலாக்குறிச்சி, கூரைப்பட்டி, அய்யம்பட்டி, கோனாங்குப்பம். காவேரி ஆற்றிற்குத் தெற்கே திருச்சிராப்பள்ளி, கூனம்பட்டி, மலையடிப்பட்டி, மதுரை, காமநாயக்கன்பட்டி, மறவ தேசம் ஆகியனவாகும். குறிப்பாக மறவன் தேசத்திற்கு வடக்கேயும், திருச்சிராப்பள்ளிக்குத் தெற்கேயும் ஆவூர் புனித பெரியநாயகி மாதா திருத்தலம் தாய்க்கோவிலாக விளங்கியது.

ஆவூரில் 1703 முதல் 1740 ஆம் ஆண்டு வரை பங்குத்தந்தையாகப் பணியாற்றியவர் அருட்பணி.‌ சார்லஸ் மைக்கேல் பெர்த்தோல்டி (Fr. Charles Michael Betroldi, SJ) என்னும் ஞானப்பிரகாசியார் சுவாமிகள் ஆவார். இவர் 38 ஆண்டுகள் இங்கு பணிபுரிந்து ஏராளமான மக்களை மனந்திருப்பினார். இவரிடம் தான் திரு. நல்லதம்பி கவுண்டர் திருமுழுக்குப் பெற்றார் என்பது நம்பிக்கை. கி.பி 1711 ஆம் ஆண்டில் அருட்பணி. ஜோசப் கான்ஸ்தாந்தின் பெஸ்கி, SJ என்னும் வீரமாமுனிவர், இவருக்கு உதவியாக பணிபுரிய இங்கு வந்தார்.

ந.பூலாம்பட்டி பெயர்க்காரணம்:

இவ்வூரில் பூலாஞ்செடிகள் அதிகமாக இருந்ததால் "பூலாம்பட்டி" எனவும், திரு.‌ நல்லதம்பி கவுண்டர் அவர்கள் பெயரால் "நல்லதம்பி கவுண்டன்பட்டி" எனவும் பெயர் வழங்கப்பட்டு, தற்போது ந.பூலாம்பட்டி என்னும் பெயரில் விளங்குகிறது.

ஆலய உதயம்:

தற்போது ஆலயம் அமைந்துள்ள இடத்தில் 1710 ஆம் ஆண்டு ஒரு சிறிய ஆலயம் அமைத்து, அதில் திருச்சி புனித லூர்து மாதா ஆலய பங்குத்தந்தையிடம் இருந்து பெற்றுக் கொண்ட புனித ஸ்நாபக அருளப்பர் சுரூபத்தை வைத்து செபித்து வந்தனர்.‌ 1710 ஆம் ஆண்டிற்குப் பிறகு ந.பூலாம்பட்டி முன்னோர்கள் கிறிஸ்துவ விசுவாசத்தில் வேரூன்றி, தழைத்து வளர்ந்த காரணத்தினால், அவர்களின் ஆன்மீக வாழ்விற்கு ஆலயம் தேவைப்பட்டது.‌

ஆகவே 1714 முதல் 1726 வரை மலையடிப்பட்டி பங்கில் பணிபுரிந்த அருட்பணி.‌ அந்தோனி ரிக்கார்டி என்னும் இயேசு சபை குருவானவர் ந.பூலாம்பட்டியில் ஆலயம் அமைக்க உதவி புரிந்தார். 1718 ஆம் ஆண்டு வீரப்பூர் ஜமீன்தாரின் உதவியோடு, புனித ஸ்நாபக அருளப்பர் ஆலயத்தைக் கட்டினார் என்பதை ஆவூர் பங்கு வரலாற்றின் வழியாக அறிய முடிகிறது. மேலும் இந்த ஆலயத்தில் சிலுவைப்பாதை ஓவியங்கள், தேவ இரகசியங்களின் ஓவியங்கள், பாவசங்கீர்த்தனம் செய்தல் ஓவியம், மோட்சம் நரகம் ஓவியங்கள், திருமுழுக்கு, குருத்துவம், ஆயர் திருநிலைப்பாட்டு விழாக்களின் ஓவியங்கள் வரையப்பட்டு மக்களின் விசுவாசத்தை வளர்த்து வந்தது. பின்னாளில் ஆலய கோபுரத்தில் மலேஷியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட ஆலயமணி அமைக்கப்பட்டது. 

பங்கு உதயம்:

தொடக்கத்தில் மலையடிப்பட்டி பங்குடன் இணைந்திருந்த ந.பூலாம்பட்டி ஊரானது, 1854 ஆம் ஆண்டு கருங்குளம் பங்கு உருவான போது அதன் கிளைப் பங்காக மாற்றப்பட்டது. 

பங்கின் வளர்ச்சியின் காரணமாக 1942 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 03 ஆம் தேதி, மேதகு ஆயர் ஜேம்ஸ் மென்டோன்சா அவர்களால் தனிப் பங்காக அறிவிக்கப்பட்டு, முதல் பங்குத்தந்தையாக அருட்பணி.‌ ஆரோக்கியம் அவர்கள் பணிப் பொறுப்பேற்று வழிநடத்தினார். இப்பங்கு 18.10.1949 அன்று சட்டமுறைப்படி தனிப்பங்கானது.

புதிய ஆலயம்:

அருட்பணி. லாசர் சுந்தர்ராஜ் பணிக்காலத்தில் பழைய ஆலயம் அகற்றப்பட்டு, 1972 ஆம் ஆண்டு புதிய ஆலயம் கட்டப்பட்டு, 22.08.1974 அன்று திருச்சி மறைமாவட்ட ஆயர் மேதகு தாமஸ் பெர்னாண்டோ அவர்களால் புனிதப்படுத்தப் பட்டது. 

அருட்பணி. சேவியர் தன்ராஜ் பணிக்காலத்தில் ஆலயத்திற்கு பின்புறத்தில் உள்ள ஆலய நிலத்தில், விவசாயம் செய்வதற்காக கிணறு தோண்டப்பட்டது. 

அருட்பணி. லாசர் சுந்தர்ராஜ் அவர்களால் அடித்தளமிடப்பட்ட மணிக்கூண்டினை, அவர்கள். ஜோசப் சார்லஸ் பணிக்காலத்தில் கட்டி முடித்தார். பங்குத்தந்தை இல்லம் புனரமைத்து கட்டப்பட்டது. மேலும் ஆலயத்தின் உட்புறத்திலுள்ள மேற்கூரையை அழகுற அமைத்து, மேதகு ஆயர் பீட்டர் பெர்னாண்டோ அவர்களால் 16.05.1999 அன்று புனிதப்படுத்தப் பட்டது. 

அருட்பணி.‌ எட்வர்ட் ராஜா பணிக்காலத்தில் 06.09.2004 அன்று ந.பூலாம்பட்டியின் கிளைப்பங்கான பெரியகுளத்துப்பட்டி தனிப்பங்கானது.

அருட்பணி. தேவராஜ் பணிக்காலத்தில் 20.02.2011 அன்று ஆலய பீடம் மாற்றி அமைக்கப்பட்டது. 

அருட்பணி. மே. லூ. அந்தோணி ரமேசு அவர்களால் 06.01.2012 முதல் புனித ஸ்நாபக அருளப்பர் நவநாள் தொடங்கப்பட்டது.

18.06.2017 அன்று பங்கின் 75 வது ஆண்டு பவளவிழா சிறப்பாக கொண்டாடப் பட்டது.

கல்வாரிநாதர் மலை:

அருட்பணி. இக்னேஷியஸ் அவர்கள் ஊரின் மேட்டுப் பகுதியில் மரத்தினால் ஆன சிலுவை வைத்தார். பின்னாளில் அருட்பணி. சின்னப்பன் அவர்கள் அதனை ஒரு சிற்றாலயமாக உருவாக்கினார். அருட்பணி. தேவராஜ் பணிக்காலத்தில் தற்போது காணப்படும் சிற்றாலயம் கலைநுட்பத்துடன் கட்டப்பட்டது. ஒவ்வொரு மாதமும் செப்டம்பர் மாதம் 14 ஆம் தேதி திருச்சிலுவை மகிமைப் பெருவிழா நாளில் இந்த கல்வாரி மலையில் திருப்பலி நடைபெறும். மேலும் புனித வெள்ளி திருச்சடங்குகளும் நடத்தப்படுகிறது.

1984 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் பங்குத்தந்தை அருட்பணி. லூர்து ராஜ் அவர்களின் ஏற்பாட்டில் பல்நோக்கு சமூக சேவை மையம், அருட்சகோதரர் ஆலிவர் தலைமையில், தொழில்பயிற்சி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அருட்சகோதரர்கள் ஒருமாத காலமாக, கல்வாரி மலையை உடைத்து மண்சாலையை அமைத்துக் கொடுத்ததன் மூலமாக, ந. பூலம்பட்டியிலிருந்து குளத்தூராம்பட்டிக்கு எளிதில் சென்றடைய வழியமைக்கப்பட்டது. 2013 ஆம் ஆண்டு இப்புனித மலைக்கு மின்சார வசதி ஏற்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தூய லூர்து மாதா -கெபி பாஸ்கா மேடை:

அருட்பணி. இக்னேஷியஸ் அவர்களால் 1954 ஆம் ஆண்டு லூர்து மாதா கெபி கட்டப்பட்டது. இந்த கெபி மேடையில் 1960 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை பாஸ்கா விழா கொண்டாடப்படுகிறது.

திருவிழாக்கள்:

பங்குத்திருவிழா:

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 24 ஆம் தேதி புனித ஸ்நாபக அருளப்பர் பிறந்த நாளில் வெகுசிறப்பாக கொண்டாடப்படுகிறது. குறிப்பாக ஜூன் 22 ஆம் தேதி நற்கருணை பவனி விழா மற்றும் சப்பர பவனியும் நடைபெறும்.

ஜூன் 23 ஆம் தேதி இரவு அலங்காரத் தேர்பவனியும், புனிதரின் சப்பர பவனியும் நடைபெறும்.

ஜூன் 24 ஆம் தேதி காலை 09:00 மணிக்கு புனிதரின் பிறப்பு விழாத் திருப்பலியும், பிற்பகல் 03:00 மணிக்கு பெரிய தேர் பவனியும் நடைபெறும். 

திருவிழாவின் சிறப்பு:

புனிதரின் அருள் வேண்டி வரும் இறைமக்கள் துடைப்பம் காணிக்கையாக கொடுப்பது வழக்கம். காரணம் துடைப்பமானது எவ்வாறு அசுத்தங்களை தூய்மைப்படுத்துகிறதோ..! அதுபோல புனித ஸ்தாபக அருளப்பரின் அருளால் தோல்நோய்களும், மலட்டுத்தன்மையும் நீங்குவதால் இதனை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். குழந்தை வரம் பெற்றவர்கள் 'அருள்' 'அருளப்பன்' மற்றும் 'ஜான்' ஆகிய பெயர்களை சூட்டி  மகிழ்வது இதற்கு மாபெரும் சான்றாகும்.

பெரிய தேரின் சிறப்பு:

திருச்சி மறைமாவட்டத்தில் கிறிஸ்தவ பங்குகளில் ஆவூர், மலையடிப்பட்டி பங்குகளுக்கு அடுத்த படியாக ஊர் கூடி பெரிய தேர் இழுக்கும் சிறப்பு ந.பூலாம்பட்டி பங்கிலும் நடைபெறுகிறது. சுமார் முந்நூறு ஆண்டுகள் பழைமையான இந்தத் தேர் ஆவூர் பங்கைச் சேர்ந்த திரு. யாகப்பன் என்பவரால் செய்யப்பட்டது ஆகும்.

ஐயா கல்லறைத் திருவிழா:

ந.பூலாம்பட்டியின் முதல் குடிமகனாகிய திரு. நல்லதம்பி ஐயா அவர்களை சிறப்பிக்கும் வகையில் ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாதம் 15 ஆம் தேதிக்கு முன் அல்லது பின்வரும் வியாழக்கிழமை அன்று ஐயா கல்லறைத் திருவிழா நடைபெறுகிறது. 

மக்கள் தங்கள் குடும்பங்களில் நிகழும் திருமணம் நிலம் வாங்குதல் வீடு கட்டுதல் போன்ற நல்ல காரியங்களைத் தொடங்கும் முன், ஐயா கல்லறைக்குச் சென்று பூ கட்டிப்போட்டு உத்தரவு பெற்றுத்தான் காரியங்களை மேற்கொள்வார்கள்.  

தொடக்கப்பள்ளி:

ந.பூலாம்பட்டி ஆலய வளாகத்தில் 1881 ஆண்டு தொடக்கப்பள்ளி ஆரம்பிக்கப்பட்டு, 1908 ஆம் ஆண்டு அரசு அங்கீகாரம் பெறப்பட்டது.

12.07.1966 அன்று உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.

பங்கின் பங்கேற்பு அமைப்புக்கள்:

1. பங்குப் பேரவை

2.மறைக்கல்வி மன்றம்

3. புனித ஸ்நாபக அருளப்பர் பீடச்சிறார் அமைப்பு

4. சர்ச் பாய்ஸ் இளையோர் அமைப்பு 

5. புனித ஆரோக்கிய மாதா பாதயாத்திரை குழு

6. பெண்கள் பணிக்குழு

7. புனித வின்சென்ட் தே பவுல் சபை

8. அன்பியங்கள்

9. பாடகர்குழு

10‌. திருஇருதய சபை

11. அமல அவை தோழிகள்

பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள் பட்டியல்:

1. அருட்பணி. K. S.  ஆரோக்கியம் (1942-1948)

2. அருட்பணி.‌ M. இக்னேஷியஸ் (இன்னாசியார்) (1948-1963)

3. அருட்பணி. M. ஆரோக்கியசாமி (1963-1965)

4. அருட்பணி. I.  ஆரோக்கியம் (1965-1966)

5. அருட்பணி.‌ T. L. சுந்தர்ராஜ் (1966-1974)

6. அருட்பணி.‌ S.  சின்னப்பன் (1974-1975)

7. அருட்பணி.‌ A. சேவியர் தனராஜ் (1975-1978)

8. அருட்பணி. S. லூர்துராஜ் (1978-1986)

9. அருட்பணி.‌ S. தேவராஜ் (1986-1988)

10. அருட்பணி.‌ M. லியோ ஆரோக்கிய ராஜ் (1988-1990)

11. அருட்பணி.‌ J. செல்வராஜ் (1990-1997)

12. அருட்பணி.‌ S. ஜோசப் சார்லஸ் (1997-2003)

13. அருட்பணி.‌ S. அம்புரோஸ் (2003-2004)

14. அருட்பணி. L. எட்வர்ட் ராஜா (2004-2005)

15. அருட்பணி. A. அந்தோணிசாமி (2005-2007)

16. அருட்பணி. J. விக்டர் இம்மானுவேல் (2007-2009)

17. அருட்பணி.‌ A. தேவராஜ் (2009-2011)

18. அருட்பணி. மே. லூ. அந்தோணி ரமேசு (2011-2015)

19. அருட்பணி. D. அருள் சகாயராஜ் (2015-2016)

20. அருட்பணி. A. சூசை ராஜ் (2016-2017)

21. அருட்பணி. ஜெயராஜ் (2017-2018)

22. அருட்பணி. தாமஸ் அற்புதராஜ் (2018-2021)

23. அருட்பணி.‌ ஜெரால்டு பிரான்சிஸ் சேவியர் (2021----)

வழித்தடம்: மணப்பாறை -அமையபுரம் -குளத்தூரான்பட்டி -N.பூலாம்பட்டி. 

மணப்பாறையில் இருந்து N.பூலாம்பட்டி 12கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

Location map: https://g.co/kgs/eot2R8

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பங்குத்தந்தை அருட்பணி. ஜெரால்டு பிரான்சிஸ் சேவியர் அவர்கள்.

தகவல்கள் உதவி: முன்னாள் பங்குத்தந்தை அருட்பணி. அந்தோணி ரமேசு அவர்கள்.