712 முகையூர் மகிமை மாதா திருத்தலம்

           

மகிமை மாதா திருத்தலம்

இடம்: முகையூர்

மாவட்டம்: விழுப்புரம்

மறைமாவட்டம்: புதுவை -கடலூர் உயர் மறைமாவட்டம்

மறைவட்டம்: திருக்கோவிலூர்

நிலை: திருத்தலம்

பங்கு: புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயம், முகையூர்

பங்குத்தந்தை: அருட்பணி. A. எட்வர்ட் பிரான்சிஸ்

தொடர்பு எண்: +91 90474 59858

உதவிப் பங்குத்தந்தை அருட்பணி. S. ஜான்சன்

வழிபாட்டு நேரங்கள்:

சனிக்கிழமை காலை 05:45 மணிக்கு முகையூர் மகிமை மாதா நவநாள், திருப்பலி. 

மாலை 06:00 மணிக்கு திருப்பலி, மகிமை மாதா தேர்பவனி, மகிமை மாதா நவநாள், நற்கருணை ஆசீர்வாதம், நேர்ச்சை உணவு

திருவிழா:

மே மாதம் 09-ம் தேதி முகையூர் மகிமை மாதா அணையா விளக்கு ஏற்றப்பட்டு, 17-ம் தேதி திருவிழா

40 - நாட்கள் நோன்பு (விரதம்): ஏப்ரல் 07-ம் தேதி

09 - நாட்கள் நோன்பு : மே 08-ம் தேதி

03 - நாட்கள் நோன்பு : மே 14-ம் தேதி

அணையா விளக்கு : மே 09-ம் தேதி

திருவிழா : மே 17-ம் தேதி

ஒவ்வொரு வருடமும் நடைபெறும் முகையூர் மகிமை மாதாவின் 6 திருவிழாக்கள்:

1. பிப்ரவரி 11-ம் தேதி தூய லூர்து மாதா திருவிழா

2. மார்ச் 21-ம் தேதி மங்கள வார்த்தை திருவிழா 

3. மே 17-ம் தேதி முகையூர் மகிமை மாதா திருவிழா

4. ஆகஸ்ட் 15-ம் தேதி மாதாவின் விண்ணேற்பு பெருவிழா

5. செப்டம்பர் 08-ம் தேதி அன்னை மாமரியின் பிறப்பு பெருவிழா

6. டிசம்பர் 08-ம் தேதி தூய அமலோற்பவ அன்னை திருவிழா

வழித்தடம்: விழுப்புரம் -திருக்கோவிலூர் வழித்தடத்தில், முகையூர் அமைந்துள்ளது.‌

விழுப்புரத்தில் இருந்து 24கி.மீ தொலைவிலும், திருக்கோவிலூரில் இருந்து 15கி.மீ தொலைவிலும் முகையூர் அமைந்துள்ளது.

Location map: https://maps.app.goo.gl/FQUQMBEJkm5a46aZ7

முகையூர் பங்கு:

முகையூர் பங்கு புதுவை -கடலூர் உயர் மறைமாவட்டத்தின் ஆளுகைக்கு உட்பட்டு, 20 க்கும் மேற்பட்ட கிளை கிராமங்களை உள்ளடக்கி, 1884 ஆம் ஆண்டுமுதல் கத்தோலிக்க விசுவாசத்தை வளர்த்து வரும் ஒரு மிகப் பழைமையான பங்கு. முகையூர் புனித சவேரியார் பங்கு ஆற்காடு, கொடுங்கால், ஆயந்தூர் போன்ற பங்குகளுக்கு தாய்ப்பங்கு. இன்று முகையூர்  பங்குத்தளமானது இருதயபுரம், ஒடுவான்குப்பம், சத்தியகண்டானூர், ஆலம்பாடி, காடகனூர், செங்கமேடு - சித்தாத்தூர், பில்ராம்பட்டு, மேல்வாலை, அடுக்கம், மற்றும் ஒட்டம்பட்டு - அருணாபுரம் ஆகிய கிளைப்பங்குகளை உள்ளடக்கி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இப்பங்கிலிருந்து இதுவரை 64 குருக்களும், 100 -க்கும் மேற்பட்ட கன்னியர்களும் இறை அழைத்தலை ஏற்று உலகின் பல்வேறு மறைமாவட்டங்களில் சிறப்பாக பணிபுரிந்து கொண்டு வருகிறார்கள். இன்று முகையூரில் மட்டும் 12 அன்பியங்களும் பல்வேறு பக்த சபைகளும், பங்கின் வளர்ச்சிக்காக பங்குத்தந்தையோடு இணைந்து பணிபுரிந்து வருகிறார்கள். இத்தகைய சிறப்பு வாய்ந்த முகையூர் பங்கு ஆலய வளாகத்திலேயே முகையூர் மகிமை மாதா திருத்தலம் அமைந்துள்ளது தனிச் சிறப்பு.

முகையூர் மகிமை மாதா அருள்தலம்:

1982 ஆம் ஆண்டு அருள்தந்தை. பிச்சைமுத்து அடிகளார் பங்குத்தந்தையாக பொறுப்பேற்ற காலத்தில், முகையூர் பங்கு மக்களின் விசுவாசம் இன்னும் அதிகமாக வளர்ச்சி அடைந்தது. குறிப்பாக அன்னை மரியாள் மீதான பக்தி ஆழமாக வேரூன்றத் துவங்கியது.

1982 ஆம் ஆண்டு முகையூர் புனித சவேரியார் ஆலய வளாகத்தில், மாதா காட்சி கொடுப்பதாக சிலர் அப்போதைய பங்குத்தந்தையிடம் சொன்னார்கள். அதனைத் தொடர்ந்து முகையூரில் ஒரு பெண் கையில் நற்கருணை அவ்வப்போது அவள் செபிக்கும் போதும், திருப்பலியின் போதும் வந்தது ஒரு மிகப்பெரிய புதுமை. அதனைக் குறித்து விரிவாகக் காண்போம்...

1982 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15 ம் தேதி அதிகாலை 03:00 மணி, அப்போதைய முகையூர் பங்குத்தந்தை அருட்பணி. பிச்சைமுத்து அவர்களின் அறைவீட்டு கதவை, முதியவர் திரு. அந்தோனிசாமி ஆசிரியர் தட்டியதைக் கேட்டு, பங்குத்தந்தை திறந்து பார்த்த போது, வயதானவர் ஒருவர் வாயிற்படியிலே  முழந்தாளிட்டிருந்தார். 

என்ன வேண்டும் என பங்குத்தந்தை கேட்க..

"சுவாமி என் மகள் கையில் நற்கருணை வந்துள்ளது." என்றார்.

சரிசரி, இந்த நேரத்தில் தொந்தரவு கொடுக்க வேண்டாம். உம் மகள் கையில் வந்துள்ள நற்கருணையை, அவள் வாயிலிட்டு விழுங்கச் சொல்லுங்கள் எனக் கூறி, முதியவரை அனுப்பி வைத்தார் பங்குத்தந்தை. அன்று காலை 05:30 மணி திருப்பலி முடிந்த உடன், பங்குத்தந்தை, முதியவரை அழைத்து இன்று மாலை 03:30 மணிக்கு அவளை பங்குத்தந்தை இல்லத்திற்கு அழைத்து வருமாறு கூறினார்.

முதியவரின் மகள் சகாயமரி, பலநாட்களாக வியாதியால் படுக்கையிலே இருப்பவள்.

அன்று மாலையில் முதியவரும், மகளும் பங்குத்தந்தையிடம் சென்றனர். இரவு நடந்ததை சகாயமரி இவ்வாறு கூறினார்..

"சுவாமி..! நான் இரவு நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தேன். திடீரென்று மின்னல் ஒளி என் கண்ணில் பளிச்சிட்டது. எழுந்து முழந்தாள் படியிட்டேன். இருதய ஆண்டவரின் உருவம் காணப்பட்டது. இயேசுவே.. என்று இரண்டு கைகளையும் சேர்த்து ஏந்தினேன். நற்கருணை என் கையில் வந்து நின்றது" என்றாள்.

பின்னர் சகாயமரி, அறைவீட்டின் வாயிற்படியில் இருந்த இயேசுவின் படத்தை பார்த்தவுடன் முழந்தாளிட்டு, இயேசுவே.. என்று உரக்க கூறி கைகளை ஏந்த.. அவளது கையில் சிறிய நற்கருணை காணப்பட்டது. பங்குத்தந்தை பிரமிப்புடன் எழுந்து, இது என்னவாக இருக்கும் என்று ஆலோசித்துக் கொண்டிருந்தார். இதற்கிடையில் செய்தி எங்கும் பரவ ஒருசில மக்கள் இவ்வதியசயத்தைக் காண வந்தனர். பங்குத்தந்தை, சகாயமரியின் கையில் இருந்த நற்கருணையை அவளது நாவில் வைத்தார். சகாயமரி மயக்கமானாள். மயக்கம் தெளிந்து எழுந்த பிறகு, நீ வெள்ளிக்கிழமை மாலை இருதயபுரத்து மலையில் உள்ள மலைக்கோயிலுக்கு மறவாமல் வர வேண்டும் என்று கூறி அனுப்பி வைத்தார்.

வெள்ளிக்கிழமை மாலை உதவி பங்குத்தந்தை அருட்பணி. A. S. இருதய நாதன் அவர்கள் இருதயபுரம் ஆலயத்தில் திருப்பலி நிறைவேற்ற ஆயத்தம் ஆனார். சகாயமரி திருப்பலியில் பங்கேற்கவே, உதவிப் பங்குத்தந்தை "இன்று நாம் ஒரு அதிசயத்தை காணப்போகிறோம்" என்று மக்களிடம் தெரிவித்து, திருப்பலி நிறைவேற்றத் தொடங்கினார். ஆனால் அருட்பணியாளர் எதிர்பார்த்தபடி அதிசயம் எதுவும் நிகழவில்லை. 

திருப்பலியின் இறுதி நன்றி மன்றாட்டு முடியும் போது, சகாயமரி இயேசுவே.. என்று கத்தினாள்... கைகளை ஏந்தினாள்.. அவள் கையில் சிறிய நற்கருணை காணப்பட்டது. உடனே உதவிப் பங்குத்தந்தை, சகாயமரியின் கரங்களை உயர்த்திப் பிடித்து "இன்று நாம் அதிசயம் காண்போம் எனக் கூறினேன் அல்லவா.. அது இதுவே" என்றார். பின்னர் நற்கருணையை சகாயமரியின் நாவில் வைக்க, அவளது நாக்கு உள்ளே இழுத்துக் கொண்டது. ஒரு கை, கால் இழுத்துக் கொண்டது.

உடனே பங்குத்தந்தை இல்லத்திற்கு அழைத்து செல்லப்பட்டாள். மேலே பார்த்துக் கொண்டே, ஒரு வெள்ளை பேப்பரில் எதையோ எழுதி பங்குத்தந்தையிடம் கொடுத்தாள்..

சகாயமரி வீட்டிற்கு கொண்டு போகப்பட்டாள். அவளது நாக்கு உள்ளே இழுத்துக் கொண்டதால் பேச முடியாமலும், உணவு உண்ண முடியாமலும், கை கால் துவண்டு நடமாட முடியாமலும் மிகுந்த துன்பம் அனுபவித்தார். 

மறுதினம் மாலையில் சகாயமரியின் தந்தை, பங்குத்தந்தையை பார்த்து அழுது கொண்டே, சுவாமி என் மகள் சாகக் கிடக்கிறாள் அவளுக்கு அவஸ்தை (நோயிற்பூசுதல்) வழங்க வேண்டும் என்று கூறியபோது. கவலை வேண்டாம் உமது மகள் "மூன்று நாட்களில் எழுந்து நடப்பேன், பேசுவேன்" என்று அவள் எழுதி தந்துள்ளாள் என, அவள் எழுதிய காகிதத்தைக் காண்பித்தார்.

மூன்றாவது நாளாகிய ஞாயிற்றுக்கிழமை உதவிப் பங்குத்தந்தை அருட்பணி. இருதய நாதன் அவர்கள், சகாய மரியின் அருகில் சென்று ஜெபித்து தீர்த்தம் தெளித்த போதும், எவ்வித மாற்றமும் இல்லாமல் அசைவற்றுக் கிடந்தாள். இறுதியாக இது "கிறிஸ்துவின் சரீரம்" என்று சொல்லி நற்கருணையை அவளது வாய்க்கு அருகில் கொண்டு சென்ற போது.., சகாயமரி படுத்துக் கொண்டே "ஆமென்" என்றாள். உள்ளிழுக்கப்பட்ட நாக்கு வெளியே தெரிந்தது. பின்னர் படுக்கையிலிருந்து எழுந்து கைகளை விரித்து இறைவனுக்கு நன்றி கூறினாள். தொடர்ந்து நடமாட ஆரம்பித்தாள்.

சகாயமரி கையில் வந்த ஒரு நற்கருணை, அப்போது பேராயர் இல்லத்தில் பங்கு குருக்களால் கொண்டுவந்து கொடுக்கப்பட்டது. அந்த நற்கருணை அப்பத்தை தொட்ட கொன்சாகா சபையை சார்ந்த லில்லி என்ற அருட்சகோதரியின் பக்கவாதம் குணமானதும் மிகப்பெரிய புதுமை. 

மூன்று சிறுவர்களுக்கு அன்னையின் காட்சி:

இந்த புதுமைகளைத் தொடர்ந்து, இயேசுவின் தாய் அன்னை மரியாள் முகையூர் கிராமத்தில் வசித்த சகாயமேரி, ஸ்டெல்லா என்ற இரண்டு சிறுமிகளுக்கும், போஸ்கோ என்ற ஒரு சிறுவனுக்கும் 1983 ஆம் ஆண்டு காட்சி கொடுத்தார்கள். இந்த காட்சியை நேரடியாக கண்ட அப்போதைய பங்குதந்தை அருட்தந்தை. பிச்சைமுத்து அவர்கள் அன்னைக்கு கெபி ஒன்றை கட்ட முடிவு செய்தார்கள். அப்போதைய பேராயர் மேதகு செல்வநாதர் ஆண்டகை அவர்கள் 1984 ஆம் ஆண்டு, முகையூர் பங்கின் நூற்றாண்டு விழா  நினைவாக அன்னையின் கெபிக்கான அடிக்கல் நாட்டினார்கள். 

முகையூர் மகிமை மாதா கெபி:

11.02.1985 அன்று அன்னைக்கு அழகான கெபி கட்டி முடிக்கப்பட்டு, முதல் ஆண்டு விழாவும் சிறப்புற நடைபெற்றது. இந்த விழாவில் அன்னைக்கு "முகையூர் மகிமை மாதா" என்று பெயர் சூட்டி முடிசூட்டு விழாவும் நடந்தது. 

நாச்சிக்குப்பம் ஊரைச் சேர்ந்த நான்கு வயது பாலமுருகன் என்ற சிறுவன் ஒரு மாத காலமாக கண்களை திறக்க இயலாமல், பல்வேறு மருத்துவமனைக்கும் சென்றும் பார்வை கிடைக்காததால், முகையூர் அழைத்து வரப்பட்டு, மகிமை மாதா கெபியிலிருந்து வரும் தண்ணீரை கண்ணில் ஊற்றி துடைத்தவுடன், கண்களைத் திறந்து மீண்டும் பார்வை பெற்றான். ஊருக்கு சென்று இரவில் உறங்கிவிட்டு காலையில் எழும்போது   இரண்டு கண்களும் மீண்டும் திறக்க முடியாமல் ஒட்டிக் கொண்டது. மீண்டும் முகையூர் வந்து கெபி தண்ணீரால் கழுவிய போது பார்வை கிடைத்தது. இவ்வாறு இரண்டு தடவைகளுக்கு மேலும் நடந்ததால், இவர்கள் ஏதோ தவறு செய்கிறார்கள் என்பதை உணர்ந்த பங்குத்தந்தை, அவர்களிடம் விசாரிக்க.. தாங்கள் பிறரின் பேச்சைக் கேட்டு பிற சமய ஆலயத்தில் சென்று சுற்றியதாக கூறினர். உண்மை நிலையை புரிந்து கொண்ட பங்குத்தந்தை, இனிமேல் இப்படி செய்யாதீர்கள், என்று கூறி அனுப்பி வைக்க சிறுவன் கண்பார்வையுடன் நலமாக வாழ்கிறார்.

மகிமை சேவியர் குமார் என்பவர் குடும்ப சூழ்நிலையால் மனநலம் பாதிக்கப்பட்டு, வீட்டை விட்டு வெளியேறி, காஷ்மீர், ஆக்ரா, கேரளா என எங்கெங்கோ சுற்றித் திரிந்து, அழுக்கு கந்தல்உடை, சடையேறிய முடியுடன் பிச்சைக்காரன் போன்று 1986 ஆம் ஆண்டு முகையூர் மகிமை மாதாவிடம் வந்து, கெபிக்கு அருகிலேயே வாழ்ந்து புதிய மனிதனாக மாற்றம் பெற்று, திரும்பவும் தனது குடும்பத்துடன் சேர்த்து வைத்த மகிமை மாதாவின் புகழ் பாரெங்கும் பரவியது.

ஒருநாள் பங்குத்தந்தை மகிமை மாதா கெபியில் திருப்பலி நிறைவேற்றிய பின்னர், கள்ளக்குறிச்சி யில் இருந்து புற்றுநோய் பாதித்த ரெங்கநாயகி என்ற பெண் ஒருவர் கண்ணீருடன் வந்திருந்ததைக் கண்டார். அவரது நோயின் தன்மையைக் கூற கலங்க வேண்டாம் அம்மா.. ஒன்பது வாரங்கள் சனிக்கிழமை விரதம் இருந்து மாதாவிடம் வேண்டிக்கொள். நோய் உன்னை விட்டு அகலும் என்றார். ஏழு வாரங்கள் கடந்தன... கண்ணீருடன் அந்தப் பெண் பங்குத்தந்தை யிடம், சுவாமி எனது மற்றொரு மார்பகத்திலும் புற்றுநோய் பரவி விட்டது என்றார். அம்மா... பயப்படாதே... ஏழு வாரங்கள் தானே ஆகிவிட்டது.. இன்னும் இரண்டு வாரங்கள் உள்ளனவே, அப்போது உன் நோய் முற்றிலும் நீங்கி விடும் என்று கூறி அனுப்பி வைத்தார்... ஒன்பது வாரங்கள் கழித்து, புற்றுநோய் நீங்கியதால் முகம் மலர, பூமாலையுடன் வந்து நன்றி செலுத்தி சென்றார் ரங்கநாயகி..

ஏழு மாதகாலமாக உள்ள உடல் முழுவதும் எரிச்சல் ஏற்பட்டு உறங்க முடியாமல் வேதனைப்பட்ட மரகதபுரத்தைச் சேர்ந்த லோகநாதன் என்பர் முகையூர் மகிமை மாதாவிடம் வந்து ஜெபித்து முழுசுகம் பெற்றார்....

இவ்வாறாக முகையூர் மகிமை மாதாவின் கெபியில் நூற்றுக்கணக்கான அற்புதங்கள் நடந்ததை எல்லோரும் அறிவர். அன்றைய பங்குதந்தை அருட்தந்தை பிச்சைமுத்து அவர்கள், சுமார் 150 அதிசயங்களை பதிவேற்றம் செய்திருந்தார். அன்றிலிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பல்வேறு மறைமாவட்டங்களில் இருந்தும், பல்வேறு நாடுகளில் இருந்தும் முகையூர் மகிமை மாதாவை தேடி வந்தவண்ணம் உள்ளார்கள். அதிசயங்களும் அற்புதங்களும் தொடர்ந்து நடைபெறுவதால் முகையூர் மகிமை மாதாவின் பக்தியும் புகழும் உலகளாவ பரவி ஒவ்வொரு நாளும் பக்தர்களின் வருகை அதிகமானது என்பது குறிப்பிடத்தக்கது. மாதத்தின் முதல் சனிக்கிழமைகளிலும் மற்ற சனிக்கிழமைகளிலும் திரளான பக்தர்கள் அன்னையின் கெபியில் நடைபெறுகிற அனைத்து திருவழிபாடுகளிலும் தேர் பவனியிலும் கலந்துகொண்டு முகையூர் மகிமை மாதாவின் வழியாய் இறையாசீர் பெற்று வருகிறார்கள். அன்று தொடங்கிய இந்த பக்தி இன்றும் குறைவுபடாமல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. 

ஆண்டுப் பெருவிழா:

அதிசயங்கள் பல புரியும் முகையூர் மகிமை மாதாவை மகிமைபடுத்தும் விதமாக பல்வேறு பக்தி முயற்சிகள் கடந்த 36 ஆண்டுகளாக பங்குதந்தையர்களின் வழிகாட்டுதலில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 9 ஆம் தேதி அணையா விளக்கோடு  ஆண்டு பெருவிழா துவங்கி, மே மாதம் 17 ஆம் தேதி பெருவிழா திருப்பலி மற்றும் ஆடம்பர தேர் பவனியோடு விழா நிறைவு பெறுகிறது. இதற்காக பக்தர்கள் 40 நாட்கள், 9 நாட்கள், 3 நாட்கள் கடும் தவமும் நோன்பும் இருந்து தவ ஆடை தரித்து தங்களையே தயாரித்துக் கொள்கிறார்கள். முகையூர் மகிமை மாதாவின் பெருவிழா ஆடம்பர தேர்பவனி தனிச்சிறப்பு வாய்ந்தது. இந்த தேர் பவனி செபத்தொடும், தமிழர் கலாச்சார முறைப்படி மாதா பங்குத்தந்தை அருட்பணி. பிச்சைமுத்து வழியாக கூறிய ஒன்பது வகையான ஆட்டங்களோடும், அதாவது மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், மாடு ஆட்டம், குரங்கு ஆட்டம், சிலம்பு ஆட்டம், கோலாட்டம், கும்மியாட்டம் ஆகியவற்றோடு இன்றுவரை எல்லா மத, இன மக்களையும் ஒன்று சேர்க்கும் விழாவாக நடந்தேறி வருகிறது. 

அணையா விளக்கு:

முகையூர் மகிமை மாதாவின் திருவிழாவிற்கு கொடியேற்றப் படுவதில்லை. மே 08-ம் தேதி மாலையில் பக்தர்கள் கொண்டுவரும் தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், கடலை எண்ணெய், பனங்கொட்டை எண்ணெய் இவற்றை ஊற்றி, மூன்று மிகப் பெரிய வெள்ளை திரிகளில் அணைவிளக்கு ஏற்றப்பட்டு, 9 நாட்களும் விளக்கு அணையாமல் பார்த்துக் கொள்கின்றனர். 

மாதாவின் தங்கக்கிரீடம்:

17.05.1986 அன்று பங்குத்தந்தை அருட்பணி. பிச்சைமுத்து அவர்களால் மாதாவுக்கு தங்ககிரீடம் சூட்டப்பட்டது. இந்த கிரீடமானது "முகையூர் மகிமை மாதா" (Mugaiyur Magimai Matha) என்பதை குறிக்கும் வகையில் மூன்று எம் வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.

முகையூர் மகிமை மாதாவின் புதுமைகள் பல, அவற்றில் சிலவற்றைக் காண்போம்:

1. என் பெயர் சகாய மரி, கோவில் முதல் தெரு. சர்க்கரை வியாதியால் எனது கால்  சரியில்லாமல் போனது. மகிமை மாதாவிடம் உருக்கமாக மன்றாடி ஜெபித்தேன். இப்போது எனது கால் குணமடைந்து நன்றாக உள்ளேன். முகையூர் மகிமை மாதாவுக்கு நன்றி.. மரியே வாழ்க.....

2. என் பெயர் ஜெயராஜ். எங்கள் குடும்பத்தில் எட்டு பிள்ளைகள்,  எங்களை வளர்ப்பதற்கு எங்கள் அப்பா மிகவும் கஷ்டப்பட்டார். நாங்கள் சிறிய கூரை வீட்டில் இருந்தோம். அந்த கூரை வீட்டில் மழை வந்தால், தண்ணீர் உள்ளே வரும். 8 பிள்ளைகளை  வைச்சுக்கிட்டு அப்பா ரொம்ப கஷ்டப்பட்டார். எங்களுக்கு ஒரு வீடு ஒன்று வேண்டும் என்று மாதாவிடம் அழுது உருக்கமாக ஜெபித்தோம். ஒருசிலரின்  உதவியால் நாங்கள் இப்போது ஒரு பெரிய வீடு கட்டி இருக்கின்றோம். இது முகையூர் மகிமை மாதாவின் அருளால் நடந்தது. கடன் வாங்கி வீடு கட்டினாலும், ஒரு குறை இல்லாமல் கடன் அடைத்து இப்போது சந்தோஷமாக இருக்கிறோம். முகையூர் மகிமை மாதாவுக்கு நன்றி. மரியே வாழ்க..

3. என் பெயர் ரெஜினா மேரி. 2011ஆம் ஆண்டு எனக்கு உயிர் போகும் அளவிற்கு அதிகமாக வயிற்று வலி ஏற்பட்டது. சிறுநீர் கழிக்க முடியாமல் ரொம்ப கஷ்டப்பட்டேன். முண்டியம்பாக்கம் மருத்துவமனைக்கு சென்றேன். அங்கு ஒரு சில மருந்து, மாத்திரைகளை கொடுத்தார்கள். மகிமையை மாதாவிடம் ஜெபித்து சாப்பிட்டேன்.  காலையில் எழுந்து பார்த்த பிறகு வயிற்றுவலி இல்லை. நேராக முகையூர் மகிமை மாதாவின் கெபியில் வந்தடைந்தேன். நான் வருவதற்கு முன்பு இரு பெண்கள் அமர்ந்திருந்தார்கள். நான் உருக்கமாக ஜெபித்துக் கொண்டிருக்கும் போது, அந்த இரு பெண்களில் ஒருவர் என்னை கூப்பிட்டு, என்னைப் பார்த்து சிரிக்க, நான் எழுந்து அவளைத்தேட அந்தப் பெண் அங்கு இல்லை. பக்கத்தில் இருந்த பெண்ணிடம், என்னைத் தொட்டது யார்? என்று கேட்டேன்! யாரும் இல்லை என்று சொன்னார்கள். சிரித்து, என்னைத் தொட்டது மாதாவென்று புரிந்து ஆனந்தம் கொண்டேன். முகையூர் மகிமை மாதாவிற்கு நன்றி.. மரியே வாழ்க...

4. என் பெயர் சனவரி மாதிரி. எனக்கு மூன்று பெண்ணும் ஒரு ஆணும் உள்ளனர். என் மகனுக்கு திருமணமாகி இரண்டாவது ஆண்டில், ஒரு வருட காலமாக உடல்நிலை சரியில்லாமல் படுத்த படுக்கையாக இருந்தான். எங்கள் குடும்பத்தில் எதுவும் செய்ய முடியவில்லை. ஏனென்றால் திருமணமான இரு ஆண்டுகளில் மிகவும் அதிக கஷ்டப்பட்டான். நாங்கள் மாதா மீது நம்பிக்கை வைத்தோம். எல்லோரும் மகன் இறந்துவிடுவான் என்று நினைத்தார்கள். நாங்கள் மிகவும் மன அழுத்தத்திற்கு ஆளானோம். நடக்க முடியாமலும், சாப்பிட முடியாமலும், சிறுநீர் கழிக்க முடியாமலும் இருந்தான். ஒரு வருடம் ஒரு குழந்தையை போல அவனைப் பார்த்துக் கொண்டோம். மாதா மீது மிகுந்த மிகுந்த நம்பிக்கையோடு இருந்தோம். மகிமை மாதா இப்பொழுது என்னுடைய மகனை குணமாக்கி உள்ளார். இப்பொழுது நன்றாக இருக்கிறான். நன்றாக நடக்கின்றான். அவனால்  வேலை செய்ய முடிகிறது. என் மகனுக்கு உயிர்ப்பிச்சை கொடுத்த முகையூர் மகிமை மாதாவுக்கு நன்றி. மரியே வாழ்க...

5. என் பெயர் பிரகாசம். எனக்கு கை, கால் விளங்காமல் (செயல்படாமல்) நடக்க முடியாமலும் கஷ்டத்தோடு இருந்தேன். 2 வருடமும் மனைவி, பிள்ளைகளின் துணை கொண்டுதான் நான் நடப்பேன். தினமும் முகையூர் மகிமை  மாதாவின் கெபியில் காலையில் 9 முறை சுற்றியும் மாலையில் ஒன்பது முறை சுற்றியும் வந்தேன். மற்றவரின் துணை கொண்டு நடந்தேன். அன்னையின் அருளால் இப்பொழுது நன்றாக நடக்கிறேன். மிகுந்த நம்பிக்கையோடு மன்றாடி கேட்டதால்  நன்றாக இருக்கின்றேன்.. முகையூர் மகிமை மாதாவுக்கு நன்றி.  மரியே வாழ்க....

6. என் பெயர் ஆரோக்கியதாஸ். நான் மகிமை மாதாவுக்கு 40 நாள் நோன்பு எடுத்த போது நடந்த புதுமை. கோவிலில் ஜெபிக்க சென்றபோது கோவிலில் 6 மாத காலமாக பிச்சை எடுத்துக் கொண்டிருந்த ஒரு பெண்மணி, கோவிலின் வளாகத்தில் மனநலம் பாதிக்கப்பட்டதால், அங்கும் இங்குமாக ஓடிக் கொண்டு இருந்தார். நான் அந்தப் பெண்மணியைப் பார்த்து மிகவும் வருந்தினேன். அவருக்காக தொடர்ந்து ஜெபித்தேன். வீட்டிற்கு வரும்பொழுது நம்பிக்கையோடு அந்த பெண்ணைப் பார்த்து, வாயினால் அவர் மேல் ஊதி கோவிலை விட்டு வெளியே வரும் பொழுது அந்தப் பெண் நலமடைந்து வீட்டிற்கு திரும்புவதை பார்த்தேன். அடுத்த நாள் கோயிலுக்கு வரும் பொழுது அந்தப் பெண் அங்கு இல்லை. நலமாக உள்ளார் என்று செய்தி வந்தது. இது மகிமை மாதா அவருக்கு செய்த புதுமை மற்றும் எனது மன்றாடுக்கு மாதா செய்த புதுமையாகவும்  இன்று வரையிலும் நம்புகிறேன். முகையூர் மகிமை மாதாவுக்கு நன்றி.....

7. என் பெயர் அம்புரோஸ். எனக்கு 1984 இல் திருமணம் நடந்தது. திருமணமாகி ஐந்து ஆண்டுகளாகியும் குழந்தை பாக்கியம் இல்லை. பல மருத்துமனைக்கும் சென்றோம். ஆனால் குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை. முகையூர் மகிமை மாதாவிடம் உருக்கமாக  ஜெபித்தோம். ஐந்து வருடம் கழித்து, அன்னையின் அருளால் குழந்தை பாக்கியம் கிடைத்தது. முகையூர் மகிமை மாதாவுக்கு நன்றி. மரியே வாழ்க...

8. என் பெயர் தெரசா. கடந்த 2010ல் என் கணவர் குடிப்பழக்கத்துக்கு அடிமையானார். குடும்பமே மிகவும் வறுமையின் காரணமாக கஷ்டப்பட்டோம். அடிக்கடி சண்டை, சச்சரவு இருந்ததால் குடும்பத்தில் நிம்மதி இல்லை. முகையூர் மகிமை மாதாவிடம் நம்பிக்கையோடு ஜெபித்தேன். அதன்பிறகு இன்றுவரை எனது கணவர் மது அருந்துவது இல்லை. நன்றாக உள்ளார். முகையூர் மகிமை மாதாவுக்கு நன்றி. மரியே வாழ்க....

9. என் பெயர் ஏழுமலை, விக்கிரவாண்டி ஊரைச் சேர்ந்தவன். நான் பிற மதத்தை சார்ந்தவன். திருமணமாகி மூன்றாண்டுகள் குழந்தை பாக்கியம் இல்லாமல் மிகுந்த கஷ்டப்பட்டேன். நிறைய மருத்துவமனைக்கு சென்றோம், பலனில்லை. முகையூர் மகிமை மாதா பற்றி கேள்விப்பட்டு இங்கு வந்து கண்ணீரோடு ஜெபித்தோம். முகையூர் மகிமை மாதாவின் அருளால் இப்பொழுது எங்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. முகையூர் மகிமை  மாதாவுக்கு நன்றி. மரியே வாழ்க...

10. என் பெயர் சூசை அம்மாள். மாடு இடித்து தள்ளியதால் கீழே விழுந்தது நடக்க முடியாமல் மிகவும் கஷ்டப்பட்டேன். மகிமை மாதாவிடம் உருக்கமாக ஜெபித்தேன். மாதாவின் அருளால் குணமடைந்து இப்பொழுது நன்றாக இருக்கின்றேன். முகையூர் மகிமை மாதாவுக்கு நன்றி. மரியே வாழ்க...

11. என் பெயர் செபஸ்டின் ராபர்ட்.  என்னுடைய கிட்னியில் கல் இருந்தது. சிறுநீர் கழிக்க முடியாமலும், சாப்பிட முடியாமலும் மிகவும் வேதனைக்கு உள்ளானேன். ஒரு மாத காலமாக மகிமை மாதாவிடம் நம்பிக்கையோடு ஜெபித்தேன். எனது குடும்பத்தில் இருப்பவர்களும் ஜெபிப்பார்கள். இப்பொழுது குணமடைந்து நன்றாக உள்ளேன். எங்கள் குடும்பத்தில் இருக்கும் அனைவரும் நன்றாக இருக்கின்றோம். முகையூர் மகிமை மாதாவுக்கு நன்றி. மரியே வாழ்க......

12. என் பெயர் சபா, விழுப்புரம் பெரிய காலனியை சேர்ந்தவர். எனக்கு நல்ல முறையில் திருமணம் நடைபெற்றது. ஆனால் குழந்தை பிறப்பு கடினமாக இருந்தது எனது மனைவி மிகவும் கஷ்டப்பட்டார். மகிமை மாதாவிடம் உருக்கமாக ஜெபித்தேன். முகையூர் மகிமை மாதா அருளால், என் மனைவி முதல் குழந்தையை  சுகப்பிரசவமாக பெற்றெடுத்தாள். இப்போது நன்றாக உள்ளார். நாங்கள் அனைவரும் மகிழ்ச்சியாக உள்ளோம். முகையூர் மகிமை மாதாவுக்கு நன்றி. மரியே வாழ்க..

13. பெரியநாயகி, முகையூர். 2018-ஆம் ஆண்டில் இரண்டு முறைகள் இதய அடைப்பு நோயால் அவதிப்பட்டு, முகையூர் மகிமை மாதாவின் மகிமையால் அற்புத சுகம் பெற்றார்.

14. மேரி, முகையூர். கடந்த 2017இல் இதய அடைப்பு இருந்ததால் 15 நாட்களுக்குள்ளேயே இதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். அவ்வாறு இதய அறுவை சிகிச்சை செய்யவில்லை என்றால், உயிருக்கு ஆபத்து நேரும் என்றும் கூறியுள்ளனர். ஆனால் முகையூர் மகிமை மாதாவிடம் முழு நம்பிக்கை வைத்து ஒன்பது நாட்கள் விரதம் இருந்து, விளக்கேற்றி ஜெபித்து அற்புத சுகம் பெற்றார்.

15. அந்தோணி சுவாதி, முகையூர். கடந்த 2016 இல் சுவாதி பிரசவ வலியால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு மருத்துவர், உங்கள் வயிற்றில் இருக்கும் குழந்தை இறந்து விட்டது என்று கூறினார். மிகுந்த மன உளைச்சல் அடைந்த அவர், இடைவிடாது கண்ணீர் சிந்தி..! மாதாவிடம் வேண்டினார். பின்பு அறுவை சிகிச்சை செய்தபோது, வயிற்றில் இருந்த அக்குழந்தை உயிருடன் இருந்தது.

16. மேலும் அதே ஆண்டில் ஜூலை மாதத்தில் இவர் கணவருக்கு BP அதிகமாகிவிட்டதால் மூக்கில் இரத்தம் வந்தது. அந்நேரத்தில் மூளைக்கு செல்லும் நரம்பு பிடித்திருந்தால் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கும். ஆனால் இவரின் மனைவி, தனது முழு நம்பிக்கையும் மாதாவின் மேல் வைத்து ஜெபிக்க அற்புத சுகம் பெற்றார்.

17. சவரியம்மாள், முகையூர். கடந்த 1985 இல் இவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் அக்குழந்தை பார்வையின்றி பிறந்தது.  தன் மகனுக்கு பார்வை கிடைக்கவேண்டும் என்று மாதாவிடம்  வேண்டினார். அக்குழந்தைக்கு அவர் வேண்டியவாறே பார்வை கிடைத்தது. மேலும் அவர் பெரியவர் ஆனதும் ஒரு நல்ல வேலையும் (காவல்துறை) கிடைத்தது. 

18. பிலோமினாள், முகையூர்: கடந்த 2017 ஆம் ஆண்டு இவருக்கு பூச்சி என்னும் கடும்விஷம் வாய்ந்த பூரான் கடித்தது. அவரின் உடல் பெரும்  பாதிப்பிற்குள்ளாயிற்று. மருத்துவமனைக்கு சென்றார். ஆனால் மருத்துவர்கள், இதை எங்களால் குணமாக்க முடியாது என்று கூறினார்கள். அவர் தனது நம்பிக்கையை இழக்காமல் மாதாவிடம் வேண்டினார். அவரது வேண்டலின் பொருட்டு குணம் அடைந்தார்.

19. குளோரி, முகையூர்: கடந்த 2005 ஆம் ஆண்டு இவருக்கு மஞ்சள்காமாலை என்னும் நோய் தாக்கியது. எங்கு சிகிச்சை பெற்றும் பயனில்லை. இறுதியாக இவர் மாதாவை நாடி வந்தார். மாதாவிடம்  மஞ்சள்காமாலை நோய் நீங்குமாறு வேண்டினார். அவர் வேண்டியவாறே அது நீங்கிற்று. 

20. லீமா றோஸ், முகையூர்: கடந்த 2017-ம் ஆண்டு தன் மகளுக்கு உட்கார முடியாத அளவுக்கு வயிற்றில் ஒரு கட்டி இருந்தது. நோய் குணமாக மகிமை மாதாவிடம் வேண்டினார். அவர் மகளும் குணமடைந்தார். மாதாவிற்கு நன்றி செலுத்தும் விதமாக, தொடர்ந்து மூன்று ஆண்டுகள் மொட்டையடித்து நேர்த்திக் கடன் செலுத்தினார்.

21. அன்னம்மாள், முகையூர்: 1988 பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி நேரம் நண்பகல் 12:45 மணி, புதன்கிழமை. அன்று சிமெண்ட் லாரி ஒன்று தறிகெட்டு விரைந்து அவர் மேல் ஏறி செல்லும் அளவிற்கு வந்தது. உடனே அன்னம்மாள், அன்னையின் பெயரை உச்சரித்துக் கொண்டே லாரி அடியில் அப்படியே படுத்துக் கொண்டார்கள். எந்தவித சேதமுமின்றி, லாரி அவர்களை கடந்து சென்றுவிட்டது. அன்னையின் அருளால் உயிர் பிழைத்தார். அவருக்கு தற்போது 86 வயது நடக்கிறது, இன்றும் நலமுடன் வாழ்கின்றார். புதுமை மிக்க நம் மகிமை அன்னையின் புகழ் வாழ்க!!!!!

22. செந்தில்குமார் எலிசபெத் ராணி. எங்கள் திருமணத்தில் தடைகள் ஏற்பட்டு மாதாவின் புதுமையால் திருமணம் செய்து கொண்டோம். எங்களுடைய  முதல் குழந்தை இறந்துவிட்டது. நாங்கள் மிகுந்த வேதனையில் இருந்தோம். மருத்துவர்கள் எங்களை பரிசோதித்து, இனிமேல் குழந்தை பெறுவது கடினம் எனக் கூறினார்கள். முகையூர் மகிமை அன்னையிடம் சென்றோம். அப்போது அன்னையின் புதிய சுரூபம் புதுப்பிக்கப்பட்டு, அன்று இரவு முழுவதும் மெழுகுவர்த்திகளாலும், விளக்குகளாலும் ஜொலிக்க, ஜெபம் நடந்தது. அதில் நாங்கள் கலந்து கொண்டு அன்னையிடம் வேண்டிக் கொண்டோம். அடுத்தநாள் அணையா விளக்கு ஏற்றப்பட்டு, அன்னையும் புதுப்பிக்கப்பட்ட திருஉருவம் மேலே ஏற்றப்பட்ட போது, கண்ணீரோடு ஜெபித்தேன். அடுத்த மாதம் நான் கருவுற்று, ஒரு குழந்தையை பெற்றெடுத்தேன். அவள் பெயர் Vergin. இன்னமும் அன்னையின் உதவியால்தான் ஒவ்வொரு செயலும் நடந்துகொண்டு வருகிறது. மகிமையை மாதாவுக்கு கோடான கோடி நன்றிகள் மரியே வாழ்க !!!!!

23. சேவியர், முகையூர் செவிட்டு வாத்தியார் குடும்பம் ஆரோக்கிய தாஸ் என்பவரின் மகன். கடந்த 2014 ஆம் ஆண்டு  இரு சக்கர வாகன விபத்தில் சிக்கி பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, எட்டு மாதங்கள் சுயநினைவு இல்லாமல் கோமாவில் இருந்தேன். பிறகு சுயநினைவு பெற்று உயிர் பிழைத்தேன். உயிர் பிழைக்க வாய்ப்பு மிகமிகக் குறைவான அந்த தருணத்தில், என் குடும்பத்தினர் முகையூர் மகிமை மாதாவிடம் அழுது புலம்பி ஜெபித்தார்கள். அதுவே நான் உயிர் பிழைக்க காரணமாக இருந்தது. முகையூர் மகிமை மாதாவிற்கு கோடான கோடி நன்றிகள். மரியே வாழ்க...

24. அமலோற்பவம், முகையூர். 2005 ஆம் ஆண்டு எனக்கு கிட்னியில் கல் இருந்தது. மிகவும் கஷ்டப்பட்ட வேளையில், முகையூர் மகிமை மாதாவிடம் உருக்கமாக எப்படியாவது ஆபரேஷன் இல்லாமல் கரைய வேண்டும் என்று ஜெபித்தேன். அதன்படி எந்த ஒரு ஆபரேஷன் இல்லாமல் கிட்னி கல் கரைந்தது. முகையூர் மகிமை மாதாவுக்கு  நன்றி. மரியே வாழ்க.

25. முத்து சவரி, முகையூர்: எனக்கு 71 வயது. கடந்த 1984ம் ஆண்டு எனது மனைவி அந்தோணியம்மாள் தீராத உடல் எரிச்சலால் அவதிப்பட்டு வந்தார்.  ஆகவே முகையூர் மகிமை மாதா திருக்கோவிலில் வந்து படுத்துக் கொள்வாள். அப்போது உடல் எரிச்சல் தீர்ந்தது. கோவிலை விட்டு வெளியே வந்தால் மீண்டும் கை, கால் எரிச்சல் ஏற்பட்டு அவதியுறுவாள். பின்னர் அப்போதைய பங்கு குரு, அருட்பணி. பிச்சைமுத்து அடிகளார் அவர்கள் அன்னையிடம் ஜெபித்து புனிதநீர் தெளித்து ஜெபித்தார் ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுகாலம் இருந்த உடல் எரிச்சல், முகையூர் மகிமை மாதா பரிந்துரையால் சுகமானது. எனக்கு இருந்த தீராத ரத்தப்போக்கும் நீங்கிற்று முகையூர் மகிமை மாதாவிற்கு கோடான கோடி நன்றிகள். மரியே வாழ்க..

26. என் பெயர் ஜான் பிரான்சிஸ். என் மகன் ஜோசப் குமாருக்கும் சோபியா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணம் நடைபெற்று 8 ஆண்டுகளாய் குழந்தைப்பேறு இல்லை. முகையூர் மகிமை மாதாவிடம் ஜெபித்தேன். அவர்களும் உருக்கமாக ஜெபித்தார்கள். 8 ஆண்டுகளுக்கு பிறகு ஆண்மகன் பிறந்தான். பிறகு அடுத்த 10 ஆண்டுகளுக்கு பிறகு பெண் குழந்தை ஒன்று பிறந்தது. முகையூர் மகிமை மாதாவின் பரிந்துரையால் இந்த புதுமை நடந்தது. மகிமை மாதாவிற்கு கோடான கோடி நன்றி. மரியே வாழ்க..

27. சோபியா உஷாராணி கணவர் பெயர் லூயிஸ். நான் கருவுற்று இருந்தேன்.  பரிசோதனைக்கு சென்றபோது எனது வயிற்றில் கட்டி இருப்பதாகவும்,  ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறினார்கள். 17‌.05. 2009 அன்று வலி ஏற்பட்டது. மகிமை மாதா திருவிழா என்பதால், தேர் பார்த்துவிட்டு மாதாவிடம் வேண்டிக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றேன். 18.05.2009 அன்று காலை 10 மணி அளவில் நல்ல முறையில் சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது. மாதாவிற்கு  நன்றி மரியே வாழ்க...

28. ‌ஆக்னஸ் இசபெல்லா கணவர் பெயர்: வினோத் குமார். எனக்கு பிரசவ வலி ஏற்பட்டு மருத்துவமனைக்கு சென்றேன். அங்கு டாக்டர்கள் உங்கள் கர்ப்பப்பை உடைந்து தண்ணீர் இல்லாமல், குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஆகிவிட்டது, எனவே குழந்தையை காப்பாற்ற முடியாது என்று சொல்லி விட்டார்கள். அப்போது நான் முகையூர் மகிமை மாதாவிடம் அழுது..! அம்மா தாயே நல்ல முறையில் குழந்தை பிறந்தால் என் குழந்தைக்கு உன் பெயரை வைக்கிறேன் என்று வேண்டினேன். நான் வேண்டியது போல எனக்கு நல்ல முறையில் ஆண் குழந்தை பிறந்தது குழந்தைக்கு மகிமை ஜோவின் என்று பெயர் வைத்தேன். மாதாவிற்கு கோடான கோடி நன்றி மரியே வாழ்க..

29. மேரி, முகையூர்: எனக்கு திருமணம் நடந்து ஏழு ஆண்டுகளாக  குழந்தை வரம் இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டேன். முகையூர் மகிமை மாதாவிடம் உருக்கமாக மன்றாடினேன். குழந்தை பாக்கியம் கிடைத்தது. முகையூர் மகிமை மாதாவுக்கு நன்றி. மரியே வாழ்க.

30. அமலோற்பவ மேரி,  கணவர் வின்சென்ட் பவுல். திருமணமாகி 23 ஆண்டுகளுக்குப் பிறகு முகையூர் மகிமை மாதாவின் அருளால் எனக்கு குழந்தை பாக்கியம் கிடைத்தது. மாதாவிற்கு கோடான கோடி நன்றி.. மரியே வாழ்க.. மரியே வாழ்க..

31. எனது பெயர் லூக்காஸ். தகப்பனார் பெயர் சூசை எனது சொந்த ஊர் இருப்புகுறிச்சி. பங்கு நறுமணம். ஆசிரியப் பணியின் நிமித்தம் முகவரியில் தங்கி பணி செய்து வந்தேன். யாருடைய ஆதரவும் இன்றி  தன்னந்தனியாக வந்த எனது குடும்பத்திற்கு முகையூர் மகிமை மாதா செய்த புதுமைகள் எடுத்துக் கூறினால் எண்ணிலடங்காது. இன்று எனது குடும்பம் பிள்ளைகளின் வளர்ச்சி அனைத்தும் முகையூர் மகிமை மாதா புதுமையினால் கிடைத்தவையே. அவற்றில் சில.. 1987 ஆம் ஆண்டு நான் எனது நிறைமாத கர்ப்பிணியாக மனைவி ரோஸ்மேரி, ஒரு வயது மகன் அந்தோணி பிரவீன்குமார் மூவரும் விழுப்புரம் மருத்துவமனையில் சென்று திரும்பும் போது, நாங்கள் பயணித்த பேருந்து திடீரென்று முன்பக்க சக்கரம் கழண்டு ஓடி சாலையின் பக்கத்தில் இருந்த பள்ளத்தில் விழுந்து புரண்டு விபத்துக்குள்ளானது. அப்போது, முகையூர் மகிமை மாதா எங்களை காப்பாற்றும் சத்தமிட்டு கத்தினேன். அன்னையின் புதுமையினால் எவ்வித ஆபத்தும், சிறிய காயமும் இன்றி பெரும் விபத்திலிருந்து தப்பித்தோம். 

1987 ஆம் ஆண்டு ஜூன் மாதம் எனது இரண்டாவது மகன் மகிமை உபகார வளன் ஊட்டச்சத்து குறைவு காரணமாக, தொடர் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு, பல மருத்துவமனைகளுக்கு சென்று மருத்துவம் பார்த்தும் எந்த பயனும் இல்லை. அனைத்து மருத்துவர்களும் எங்களால் முடிந்ததை செய்து விட்டோம் இனி  நீங்க சாமி கிட்ட போய் முறையிடுங்கள் எனக் கூறிவிட்டனர். அக்கம் பக்கத்தினரின் அறிவுறுத்தலில் மசூதிக்குச் சென்று மந்திரித்தும் எந்த பலனுமில்லை. பின்னர் ஒரு நாள் சனிக்கிழமை முகையூர் மகிமை மாதாவிற்கு திருப்பலி ஒப்புக் கொடுத்து மனதுருகி வேண்டினேன். முகையூர் மகிமை மாதாவின் பாதத்தில் குழந்தையை வைத்து ஜெபித்தோம். அற்புதமாக அன்றைய  நாளே எனது பிள்ளைக்கு பூரண சுகம் கிடைத்தது. 

2004 ஆம் ஆண்டு எனது இரண்டாவது மகன் மகிமை உபகார வளன், பிரைமரி காம்ப்ளக்ஸ் என்ற நோயினால் பாதிக்கப்பட்டு, வேதனையில் இருந்த போது, முகையூர் மகிமை மாதாவிடம் முறையிட்டு வேண்டிக்கொண்டோம். முகையூர் மகிமை மாதா மிகவும் அற்புதமான வகையில் சுகம் தந்தார். 

2005 ஆம் ஆண்டு எனது மூத்த மகன் அந்தோணி பிரவீன் குமார், காய்ச்சல் ஏற்பட்டு இரத்த அணுக்கள் மிகவும் குறைந்து மருத்துவர்களால் கைவிடப்பட்ட பிறகு, அன்னை ஒருவரே கதி என்று முகையூர் மகிமை மாதாவிடம் அழுது புலம்பிக் கொண்டு ஜெபிக்க, அதிசயத்தக்க வகையில் முகையூர் மகிமை மாதா முழு சுகம் தந்தார். 

32. மேலும் 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் எனது மனைவிக்கு உணவு நச்சுத்தன்மை அதாவது  (food poision) ஏற்பட்டு, தொடர்ந்து உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாகவும், உணவு ஏதும் அருந்த இயலாமலும் மிகவும் மோசமான நிலைக்கு சென்று விட்டார். corana நோய்த் தொற்று காலம் என்பதால் எந்த மருத்துவமனையிலும் அட்மிஷன் கிடைக்க வில்லை. நானும் எனது பிள்ளைகளும் மிகவும் அழுது புலம்பி, முகையூர் மகிமை மாதாவிடம் முறையிட்டு ஜெபிப்போம். மிக மிக அதிசயத்தக்க வகையில் மறுநாளே அற்புதமாக முகையூர் மகிமை மாதா, என் மனைவியை தொட்டு சுகம் தந்தார் மாபெரும் புதுமையையும் நிகழ்த்தினார். இதற்கு எங்கள் (லூக்காஸ்) குடும்பமே முழு சாட்சிகள் ஆகும். முகையூர் மகிமை மாதாவுக்கு கோடானு கோடி நன்றிகள்...

33. சூசை மேரி என்பவர் வயலில் புல் அறுக்கச் சென்றிருந்தார். அப்பொழுது அடர்த்தியான புல் இருந்த இடத்தில் சென்று அவர் புல் அறுத்த போது, அதற்குள் இருந்த கண்ணாடி விரியன் பாம்பு கையிலும் காலிலும் கடித்திடவே, வலியால் துடித்து அம்மா மகிமை மாதாவே என்னை காப்பாற்றும் என்று கதறி அழுதுகொண்டே, முகையூர் மகிமை மாதா வழங்கிய மிகவும் சக்தியுள்ள ஜெபமாலை என்ற குணமளிக்கும் ஜெபத்தை சொல்லிக் கொண்டே..! அருகில் இருந்த தன் தாயை அழைத்து கதறினாள். அவள் தாய் காலிலும் கையிலும் பாம்புக்கடித்த இடத்திற்கு சற்று மேலே  கயிறால் கட்டி, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல, முகம் உடல் எல்லாம் வீங்கி உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். ஜெபித்தபடி அழுது கண்ணீர் விட.. சிறிது சிறிதாக... மாதாவின் புதுமையால் குணம் பெற்றார்.

34. ஜூலியன் சவரி ராஜா  என்பவரின் குழந்தைக்கு அடிக்கடி வலிப்பு வந்து துன்பப்பட்ட நிலையில், பலரின் அறிவுரைப்படி, முகையூர் மகிமை மாதாவுக்கு மாலை போட்டு விரதமிருக்க, முகையூர் மகிமை மாதா அற்புதமாக அந்த குழந்தைக்கு வலிப்பு நோயிலிருந்து பூரண சுகம் அளித்துள்ளார். அன்றிலிருந்து இன்றுவரை தன் குழந்தைக்கு வலிப்பு வந்ததே இல்லை. மேலும்  அவன் பெரியவனாகி  திருமணம் முடிந்து இன்று வரை நலமுடன் வாழ்கின்றார். மரியே வாழ்க..

35. ஆரோக்கியதாஸ் -அற்புத மேரி இவர்களின் மகள் மூளைக்காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டு, கை கால் விளங்காமல், வாய் பேச முடியாமல், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்க, இவர்கள் முகையூர் மகிமை மாதாவிடம் கண்ணீர்விட்டு ஜெபிக்க, முகையூர் மகிமை மாதா இவர்களின் ஜெபத்தைக் கேட்டு, அவளைத் தொட்டு குணப்படுத்தினார்.  இப்போது நன்றாக கை, கால்கள் இயங்குகிறது. வாய்பேச... பூரண சுகத்துடன் உள்ளார்.

36. மேரி பிரான்சிஸ்கா -சின்னப்பன். இவர்களின் மூத்த மகன் காஷ்மீரில் ராணுவத்தில் பணியாற்றிக்கொண்டு வருகிறார். இவர் பனிச்சரிவில் சிக்கிக் கொண்டு, ஒரு நாள் முழுவதும் மூச்சு, பேச்சு இல்லாமல் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பெற்றோர்கள் முகையூர் மகிமை மாதாவை நோக்கி, தன் மகனுக்கு உயிர்ப்பிச்சை வேண்டி கண்ணீர் விட்டு கதறி அழ..! மகிமை மாதா புதுமையால் அவர் உயிர் பிழைத்தார். மேலும் தனது இரட்டை பிள்ளைகளின் தேவ அழைத்தலுக்காக மாதாவிடம் ஜெபிக்க, ஒருவர் குருவாகவும் மகள் அருட்சகோதரி -யாகவும் திருநிலைப்படுத்தப் பட்டனர். இவர்களின் இளைய மகளுக்கு ஐந்து ஆண்டுகளாக குழந்தை இல்லாமல், மகிமை மாதாவை வேண்டி குழந்தை பாக்கியம் பெற்றாள். முகையூர் மகிமை மாதா செய்துவரும் அனைத்து நன்மைகளுக்கும் நன்றி மரியே வாழ்க!

37. சூசை மேரி என்பவர் தன்னுடைய இளைய மகளுக்கு வலிப்பு நோய் ஏற்பட்டு துன்பப்பட்டு கொண்டிருந்ததால், மகிமை மாதாவின் புதுமையை அறிந்து ஹைதராபாத்திற்கு முகையூர் மகிமை மாதா படம் கொண்டு வந்து கண்ணீர் விட்டு ஜெபிக்க, அன்னையின் அருளால் பூரண சுகமடைந்து, தற்போது திருமணமாகி மகிழ்ச்சியோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார். 

38. குமரி -மாணிக்கம் இவர்கள் மூத்த மகன் 1997ஆம் ஆண்டு காணாமல் போகவே, தன் மகன் கிடைக்க வேண்டுமென்று முகையூர் மகிமை மாதாவின் பாதத்தில் தினமும் கண்ணீர் விட்டு அழுது ஜெபித்து, எல்லா இடங்களிலும் தேடினார்கள். முகையூர் மகிமை மாதாவின் புதுமையால், 3 மாதத்தில் அவர்களின் மகன் தானாகவே வீடு வந்து சேர்ந்தான். 2019 இல் உடல் சுகமில்லாமல் துன்பப்பட்ட தன் மகனுக்காக இடைவிடாது முகையூர் மகிமை மாதாவிடம் ஜெபித்து வரவே, அற்புதமாக குணமடைந்தார்.

39. 1985 ஆம் ஆண்டு விக்டோரியா என்பவருக்கு, தனது மூன்றாவது பெண் குழந்தை வயிற்றில் இருக்கும் போது இந்த குழந்தை வேண்டாம் என்று அதை அழிக்க! கருச்சிதைவு மாத்திரையை சாப்பிட்டு விட்டார். அன்றிரவு முகையூர் மகிமை மாதா அவர்களுக்கு காட்சி அளித்து" இந்தக் குழந்தையை கருவில் அழிக்காதே! அழித்தால் குடும்பம் கெட்டுவிடும்", என்று எச்சரித்துள்ளார். உடனே அவர்கள் கண் விழித்து "அம்மா !!!அம்மா!!", என்று கத்தி அழைத்துள்ளார், உடனே அன்னை முகையூர் மகிமை மாதா வானத்தில் மறைந்துவிட்டார். உடனேயே விக்டோரியா தன் மனதை மாற்றிக் கொண்டு, அன்னையிடம் மன்னிப்பு வேண்டி அந்த குழந்தையை பெற்றெடுத்தார். அவர் தற்போது சட்டப்படிப்பு படித்து, மகிமை மாதா அருளால் தன் கணவரோடும், பிள்ளைகளோடும் வாழ்கின்றார். முகையூர் மகிமை மாதா வாழ்க!

40. முகையூர் மகிமை மாதா காட்சி அளித்து புதுமைகள் நடந்து கொண்டிருந்த சமயம் அது. பிற மத சகோதரி ஒருவர்,  கண் பார்வை இல்லாத தனது மகனை முகையூர் மகிமை மாதா மேல் நம்பிக்கை கொண்டு, அங்கே தூக்கிக் கொண்டு வந்தார். அங்கு கெபியில் வந்தவுடன், "அம்மா முகையூர் மகிமை மாதாவே எனக்கு பார்வை தாரும்", என்று அந்தச் சிறுவனும், அவன் தாயும் கதறி அழுதுகொண்டே கெபியில் இருந்து வந்த தண்ணீரைத் தொட்டு தன் மகன் கண்களில் வைத்தார். உடனே கண்பார்வை கிடைத்தது. மாதாவை உற்றுப்பார்த்து நன்றி கூறி கண்ணீர் வடித்தாள். இன்று வரை அவர்கள் முகையூர் மகிமை மாதாவை நன்றியோடு வணங்கி வருகின்றனர். மேலும் மன நோயாளி பெண், அன்னை அருளால் சுகம் பெற்றார். இதை நேராக கண்ட சம்மனசு என்பவர் சாட்சியாக கூறியுள்ளார். மரியே வாழ்க!!

41. என் பெயர் விண்ணரசி. என் மகள் பிரவீனா. அவர்களுக்கு பிறந்த முதல் குழந்தை, பிறந்ததிலிருந்து 22 நாள் எந்த அசைவுமின்றி, அவசர சிகிச்சையில் வைத்திருந்தார்கள். குழந்தை இறந்து விட்டது என்று எல்லாரும் சொன்னார்கள். ஆனால், மகிமை மாதா கிட்ட வந்து நீங்க தான் என் குழந்தையை காப்பாற்ற வேண்டும் என்று அழுது மன்றாடினேன். குழந்தைக்கு கரண்ட் ஷாக் கொடுத்த உடன் குழந்தை 22 நாள் கழித்து இயல்பு நிலைக்கு திரும்பியது. மரியே வாழ்க..

42. என் பெயர் சகாய மரி. 2010 ஆம் ஆண்டு என் கணவர் மூன்று மாதம் சுய நினைவின்றி இருந்தார். ஜெபித்துக் கொண்டே இருந்தேன். மூன்று மாதத்திற்கு பிறகு கணவர் குணமடைந்ததும் கோவிலுக்கு சென்று மாதாவுக்கு நன்றி செலுத்தினேன். முகையூர் மகிமை மாதாவுக்கு நன்றி. மரியே வாழ்க.........

43. என் பெயர் வியாகுல மரி. 1991 ஆம் ஆண்டு எனது மகன் ஜெய்கர் பிறந்த பிறகும் எனக்கு கை கால் துவண்டு போனது. ஆறு மாதம் நடக்க முடியாமல் கஷ்டப்பட்டேன் மாதாவிடம் நான் அழுது ஜெபித்துக் கொண்டே இருப்பேன். ஒருநாள் மாதாவின் பாடல் மற்றும் ஜெபங்களை சொல்லி மன்றாடினேன். விடியற்காலை 05:30 மணிக்கு ஒரு கனவு, மாதா என் கைகளைப் பிடித்து கூட்டிக் கொண்டு செல்கிறார்கள். கோவில் திறந்திருக்கிறது, நடந்து போ..! என்று கூறினார்கள். கனவு கலைந்து, 06:30 மணிக்கு பக்கத்தில் இருக்கும் தூண் ஒன்றை பிடித்து எழுந்து உட்கார்ந்தேன். மருத்துவர்கள் எல்லாரும் என்னை கைவிட்டார்கள், மகிமை மாதா தான் என்னை கைவிடாமல் குணப்படுத்தினார். மரியே வாழ்க.. 

44. என் பெயர் எக்வின்ஸயா மேரி, என் மகன் கழுத்தில் கட்டி வந்து விட்டது. இரண்டு முறை மருத்துமனைக்கு அழைத்துச் சென்றேன் டாக்டர்கள் கேன்சர் கட்டி என்று சொல்லிவிட்டார்கள் எனக்கு ஒன்றுமே புரியவில்லை. முகையூர் மகிமை மாதாவிடம் அழுது ஜெபித்தேன். டாக்டர்கள் சொன்னார்கள், ஆபரேஷன் பண்ணி தான் எடுக்க முடியும் என்று. நான் மிகவும் மனமுடைந்து போய் விட்டேன்.  எந்த ஒரு ஆபரேஷன் இல்லாமல் என் மகன் குணமடைய வேண்டும் மாதாவிடம் ஜெபித்தேன். அந்தக் கட்டி தானாகவே கரைந்து விட்டது. இது எங்கள் குடும்பத்தில் செய்த மிகப்பெரிய புதுமை. முகையூர் மகிமை மாதா வாழ்க. மரியே வாழ்க......

45. என் பெயர் அமுதா. ஏதோ பெயர் தெரியாத பூச்சி எனது மூக்கில் இருந்தது ரொம்பவும் கஷ்டப்பட்டேன். மூச்சு விடவும் முடியாமல், தூங்க முடியாமல் ரொம்ப கஷ்டப்பட்டு, அப்போது முகையூர் மகிமை மாதாவிடம் வந்து ஜெபம் செய்துவிட்டு நம்பிக்கையோடு தூங்கினேன். காலை எழுந்து பார்த்த பிறகு எல்லாம் சரியாகிவிட்டது. முகையூர் மகிமை மாதாவுக்கு நன்றி. மரியே வாழ்க....

46. என் பெயர் ஜெகஜோதி. ஜூலை மாதம் ஒருநாள் இரவு நான் கடுமையான வயிற்று வலியால் துடித்துக் கொண்டிருந்தேன். அப்போது என்னால் சாப்பிட முடியவில்லை, தூங்கவும் முடியவில்லை அணையா விளக்கு எண்ணெய் கொஞ்சம் வைத்திருந்தேன். அந்த எண்ணெயை எடுத்து எனது வயிற்றில் தேய்த்துக் கொண்டு படுத்தேன் வெறும் ஐந்து நிமிடத்தில் சரியாகிவிட்டது. முகையூர் மகிமை மாதா வாழ்க.. மரியே வாழ்க..

47. என் பெயர் மேரி ஸ்டெல்லா. 1991 மே 15 ஆம் தேதி இரவு 7 மணிக்கு ரயில்வே தண்டவாளத்தில் நான் நடந்து சென்று கொண்டிருந்தேன். அப்போது என் கால் கீழே சென்ற பாம்பின் தலை மேல் தெரியாமல் கால் வைத்து விட, பாம்பு கடித்தது. மாதாவின் புதுமையால் பாம்புக்கடியிலிருந்து அற்புத சுகம் பெற்றேன்.

48. R. அந்தோணிசாமி  குடும்பத்தில் பல ஆண்டுகளாக வீடு கட்ட முடியாமல் தவித்து வந்தோம். அன்னையின் கிருபையால் 2015 நல்ல வீடு கட்டி முடிந்தது. எனது தந்தைக்கு 86 வயதாகிறது. தாய் தந்தையை அன்னை நோய் அணுகாது காத்து வருகிறார். அன்னைக்கு எங்களது கோடான கோடி நன்றிகள்..

49. எனது பெயர் :ரெஜினா மேரி கணவர் பெயர்: பிரான்சிஸ் வயது: 70. எனக்கு மலேரியா, அல்சர் போன்ற நோய்களில் இருந்தும், வயிற்றில் கட்டி ஆகியன அன்னையிடம் வேண்டினேன் சுகமானது. முக்கியமாக என் தாய் மரித்த சடங்கிற்காக நான் மார்ச் ஒன்றாம் தேதி  பெங்களூருக்கு சென்று காரியம் முடித்து விட்டு வீடு திரும்ப முடியாமல் 5 மாதங்களாக இந்த கொரோனா ஊரடங்கு  சட்டத்தினால் கவலைப்பட்டுக் கொண்டிருந்தேன். நான் முகையூர் மகிமை மாதாவிடம் வேண்டினேன் மறுநாள் என் மகன் மூலம் ஜூலை 4-ம் தேதி பத்திரமாக ஊர் வந்து சேர்ந்தேன் மாதாவிற்கு நன்றி..

50. அந்தோணி தாஸ் சோபியா. எனது மகள் திருமணம் நல்லபடியாக நடந்தது. சிறிது நாட்களில் எனக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. அன்னையின் புதுமையால் எனக்கு நல்ல உடல் சுகம் அளித்தார். அன்னையின் புதுமையாலும் உதவியாலும் நல்லபடியாக வீடு கட்டி வருகிறோம் அன்னைக்கு எங்களின் கோடான கோடி நன்றிகள்.

இன்னும் ஆயிரமாயிரம் புதுமைகள் முகையூர் மகிமை மாதாவின் வழியாக நடந்துள்ளன. அவற்றை எழுத பல பக்கங்கள் தேவைப்படும். ஆகவே 50 புதுமைகளை மட்டுமே இங்கு பதிவிட்டுள்ளோம்...

அன்னை மாமரி வழங்கும் அருள்வாக்கு:

அன்பர்களே... முகையூர் மகிமை மாதா மந்திர ஜாலங்கள் செய்து மக்களை ஏமாற்ற வந்தவளல்ல.. அவள் உலக மக்களுக்கு உண்மையை விளக்கி, மக்களையும் நல்வழிப் படுத்த வந்தவள் என்பதை அன்னை அவ்வப்போது வழங்கிய அருள்வாக்கை திரும்பத் திரும்ப படிப்பவர்களுக்கு தெரிய வரும்.

"என் அன்புக் குழந்தைகளே, நீங்கள் எல்லாரும் என் பிள்ளைகள்; ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். உங்களுக்குள் சண்டைச் சச்சரவு இருக்கக் கூடாது. என் மகன் இயேசு கிறிஸ்து சிலுவையில் சிந்திய இரத்தம் உங்கள் ஒவ்வொருவர் உடலிலும் ஓடிக்கொண்டிருப்பதை நீங்கள் உணர்கிறீர்களா...! அவர் உங்களுக்கு தந்த அன்புக் கட்டளையை மறந்து வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்.‌ எனக்கு எவ்வளவு வேதனை தெரியுமா?"

"நீங்கள் எல்லாரும் என்னிடம் ஒப்படைக்கப் -பட்டிருக்கிறீர்கள். உங்களை வளர்த்து உங்கள் ஆன்ம உடல் நலன்களைப் பேணி பாதுகாத்து ஈடேற்ற வேண்டியது என் பொறுப்பு. இதனால்தான் நான் உங்களை சுற்றிச்சுற்றி வருகிறேன்."

"உங்களுக்கு தரப்பட்டுள்ள அறிவை ஆக்க வேலைகளுக்குப் பயன்படுத்துவது தான் முறை. அதை அழிவு வேலைக்கு பயன்படுத்தாதீர்கள்."

"புதிய புதிய கருவிகளை கண்டுபிடித்து, அண்டகோளங்களை ஆராய்ச்சி செய்யும்போது, அகந்தை கொள்ள வேண்டாம். படைப்பு பொருட்களை வைத்து புதிய பொருட்களை உருவாக்கும் போது நீங்கள் படைத்தவர் ஆக முடியாது. அறிவியல் வளர வேண்டும்.‌ ஆனால் அறியாமைக்கு உங்களை அழைத்துச் செல்லக் கூடாது. சாதிகளை சொல்லி என் பிள்ளைகளான நீங்கள் ஒருவரை ஒருவர் மோதிக் கொள்ளும் போது என் மனம் கலங்குவதை நீங்கள் அறிவீர்களா..?"

"இன்னும் சில ஆண்டுகளில் செயற்கை நிலம் உருவாக்கி ஆகாயத்தில் நிலைநிறுத்தி, அங்கே வசதியாக நீங்கள் வாழ்வீர்கள். அப்பொழுதும் உங்களுக்கு திருப்தி இருக்காது. என் மகன் இயேசுவின் அன்பு மட்டுமே உங்களை திருப்தி படுத்த முடியும். அன்புள்ள உங்களோடு நானும் இருப்பேன்."

"என் மக்களே, கடவுள் இல்லை என்று சொல்லி உங்களை ஏமாற்றிக் கொள்ளாதீர்கள். நீங்கள் எதைக் கண்டுபிடித்தாலும், ஓர் ஆன்மாவை புதிதாக உங்களால் உருவாக்க முடியாது. அணுவை பிளக்க உங்களால் முடியும். ஆனால் ஆன்மாவைப் பிளக்க உங்களால் முடியாது."

"உலகில் உங்களுக்கு என்ன துன்பங்கள் வந்தாலும் என்னிடம் சொல்லுங்கள். நீங்கள் எதைப் பற்றியும் கவலைப் பட வேண்டாம். எல்லாவற்றையும் என்னிடம் விட்டு விடுங்கள். நான் பார்த்துக் கொள்கிறேன்.‌ அப்பொழுது நீங்கள் மகிழ்ச்சியாக வாழ முடியும்."

முகையூர் மகிமை மாதாவின் திருத்தலம் வாருங்கள்.. மாதாவின் மகிமையால் இறையாசீர் பெற்றுச் செல்லுங்கள்..

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்:

பங்குத்தந்தை அருட்பணி. எட்வர்ட் பிரான்சிஸ், முகையூர் மண்ணின் மைந்தர் அருட்பணி. கிறிஸ்டோபர் ஜோசப் குரூஸ், HGN மற்றும் பங்கின் உறுப்பினர் Mr. Magimai Orieal Fethics.

திருத்தல பங்குத்தந்தை அருட்பணி. எட்வர்ட் பிரான்சிஸ் அவர்கள் தொடர்பு எண்: +9190474 59858