புனித சூசையப்பர் ஆலயம்
இடம் : மாத்தூர்.
மாவட்டம் : கன்னியாகுமரி
மறை மாவட்டம் : குழித்துறை
நிலை : பங்குதளம்
கிளை : கிறிஸ்து அரசர் ஆலயம், தச்சூர்.
திருத்தந்தை : பிரான்சிஸ்
ஆயர் : மேதகு ஜெறோம் தாஸ்
பங்குத்தந்தை : அருட்பணி ஜேம்ஸ் அமல்ராஜ்
இணை பங்குத்தந்தை : அருட்பணி ராஜேஷ் பிலிப் ஆனந்த்.
குடும்பங்கள் : 180
அன்பியங்கள் : 5
ஞாயிறு திருப்பலி : காலை 09.00 மணிக்கு
செவ்வாய்கிழமை மாலை 06.00 மணிக்கு புனித அந்தோணியார் நவநாள் திருப்பலி
வெள்ளிக்கிழமை மாலை 06.00 மணிக்கு திருப்பலி
சனிக்கிழமை புனித அந்தோணியார் குருசடியில் இரவு 07.00 மணிக்கு ஜெபமாலை, தொடர்ந்து நேர்ச்சை கஞ்சி வழங்கப்படும்.
திருவிழா : மே மாதம் கடைசி வாரத்தில் ஐந்து நாட்கள் நடைபெறும்.
மாத்தூர் ஆலய வரலாறு :
மாத்தூர் தூய யோசேப்பு ஆலயம் இயற்கை எழில் சூழ்ந்த உலக சுற்றுலா மையமான 🌉"மாத்தூர் தொட்டிப்பாலம்" செல்லும் வழியில் இருக்கிறது. இந்தியாவின் சுதந்திரத்திற்கு முன்பு இப்பகுதியில் ஒரு சில கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் இறை உறவில் வளர்ந்து வந்தனர். 1930 ம் ஆண்டு மாத்தூரை சார்ந்த திரு வியாகப்பன் என்பவருடைய நிலத்தில், திரு சிந்தாமணி என்பவரால் புனித அந்தோணியார் பெயரில் ஒரு சிறிய குருசடி அமைக்கப்பட்டது. இக்குருசடியில் ஒருசில புதுமைகள் நடக்கவே மக்கள் பலரும் விசுவாசத்தில் நிலைத்திருந்தனர். திரு சிந்தாமணி அவர்கள் காலத்திற்குப் பின் இக்குருசடி சிலகாலம் பராமரிப்பின்றி இருக்கவே, திரு வியாகப்பன் என்பவரின் பிள்ளைகள் இந்த நிலத்தை கோட்டார் மறை மாவட்டத்திற்கு விற்றனர்.
இப்பகுதி இறைமக்கள் ஞாயிறு திருப்பலி காண நடந்து திக்குறிச்சி ஆலயத்திற்கு செல்வது வழக்கமாக இருந்தது.
இவ்வேளையில் புத்தன்கடையில் அருட்பணி பெல்லார்மின் ஜியோ அவர்கள் பங்குத்தந்தையாக பொறுப்பேற்றார். அவர்கள் ஆயர் அவர்களின் அனுமதியுடனும் உதவியுடனும் தூய யோசேப்பை பாதுகாவலாக கொண்டு எளிதான முறையில் ஆலயம் ஒன்றை எழுப்பி 1962 மே மாதத்தில் கோட்டார் மறை மாவட்ட ஆயர் மேதகு ஆஞ்ஞிசுவாமி அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது. பழைய குருசடியில் இருந்த புனித அந்தோணியார் சொரூபம் ஆலய முன்புற மதிற்சுவரில் அழகுற அமைக்கப்பட்டது.
புத்தன்கடையில் இருந்த அருட்சகோதரிகளின் வழி தடத்துதலில் மக்கள் இறைவுறவில் வளர்ந்தனர்.
அருட்பணியாளர்கள் ஏசு ரத்தினம் மற்றும் சூசை அவர்களின் பணிக்கால கட்டத்தில் மக்களின் ஆலய ஈடுபாடுகள் வளரலாயிற்று. அருட்பணி ஜேம்ஸ் அவர்கள் ஆற்றூரை தனிப்பங்காக உயர்த்திய போது, மாத்தூர் அதன் கிளைப்பங்காக 1991 முதல் செயல்படத் தொடங்கியது. தனிப் பங்கான பின்னர் ஆற்றூரின் முதல் பங்குத்தந்தையாக அருட்பணி மைக்கிள் ஏஞ்சல் அவர்கள் சிறப்புற பணியாற்றினார்கள்.
ஆற்றூர் பங்கின் இரண்டாம் பங்குத்தந்தையாக அருட்பணி பிரான்சிஸ் போர்ஜியோ அவர்கள் பணியாற்றிய காலத்தில் ஆலயத்திற்கு கான்கிரீட் கூரை அமைக்கப் பட்டது. அருட்பணியாளர்கள் சேவியர் ராஜா மற்றும் ஜான் ரூபஸ், இறை ஒளியில் ஒருங்கிணைத்து, மறை மாவட்ட முதன்மைகளை உள்வாங்கி வளர்ச்சிக்கு வித்திட்டனர்.
2002 ம் ஆண்டு அருட்பணி ஜெரால்டு D. ஜஸ்டின் அவர்கள் பணிக்காலத்தில் 2004 ம் ஆண்டு ஆலய பீடம் மறுசீரமைப்பு செய்யப்பட்டு ஆயர் மேதகு லியோன் அ. தர்மராஜ் அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது.
திருத்தூது கழகங்கள் ஏற்படுத்தப் பட்டன. மக்களின் ஈடுபாட்டாலும் அயராத உழைப்பாலும் ஆலய வளாகத்தில் குருசடி ஒன்று கட்டி 2008 மே மாதத்தில் அர்ச்சிக்கப்பட்டது.
6-11-2009 ல் மாத்தூர் ஆலயம் ஆயர் மேதகு பீட்டர் ரெமிஜியூஸ் அவர்களால் பங்காக உயர்த்தப் பட்டு, அருட்பணி V. ஞானமுத்து அவர்கள் முதல் பங்குத்தந்தையாக நியமிக்கப்பட்டார்கள்.
மாத்தூர் ஆலயம் பங்காக உயர்த்தப்பட்ட குறுகிய காலத்திலே பங்கு மக்களின் கடும் முயற்சியாலும் பங்குத்தந்தையர்கள் வழிகாட்டுதல் மற்றும் ஒத்துழைப்பாலும் நல்ல வளர்ச்சியைக் கண்டுள்ளது. பங்கின் தன்னிறைவை கண்முன் கொண்டு ரப்பர் மரங்கள் கொண்ட நிலம் வாங்கப்பட்டது. பழைய அருட்பணியாளர் இல்லம் புதிதாக கட்டப்பட்டு 06-11-2011 அன்று மேதகு ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.
மறைக்கல்வி வகுப்புகள் மற்றும் பல்வேறு பயிற்சிகளை நடத்துவதற்கு வசதியாக அரங்கம் ஒன்று ஜெர்மனி நாட்டின் 'கொலோன் மறைமாவட்ட' உதவியோடு கட்டி முடிக்கப்பட்டது. இவ்வாலய 50 ம் ஆண்டு நிறைவு விழா ஆண்டான 2012 ல் மே 19 ம் நாளில் மேதகு ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்ட இவ்வரங்கம் தூய ஜோசப் ஜூபிலி அரங்கம் என அழைக்கப் படுகிறது.
மேலும் 2013 ல் விவசாய நிலங்கள் வாங்கப்பட்டன. இவ்வாறு மக்களின் ஒருமித்த வளர்ச்சியை கண்முன் கொண்டு உயர்கல்விக்கான ஊக்கம், திறமைகளை வளர்த்துக் கொள்வதற்கான வழிகாட்டுதல், தன்னம்பிக்கையோடு வாழ பயிற்சிகள், ஏழைகளுக்கான நலத்திட்டங்கள் மற்றும் பல்வேறு விழாக்களை அர்த்தமுள்ள விதத்தில் கொண்டாடி மக்களின் ஈடுபாட்டை வளர்த்து அருட்பணியாளர்களின் வழிகாட்டுதலில் சிறப்பாக வளர்ந்து வருகிறது மாத்தூர் புனித சூசையப்பர் பங்குதளம்.