289 உலக இரட்சகர் திருத்தலம், திசையன்விளை


உலக இரட்சகர் திருத்தலம்

இடம் : திசையன்விளை

மாவட்டம் : திருநெல்வேலி
மறை மாவட்டம் : தூத்துக்குடி

நிலை : திருத்தலம்

கிளைகள் :
1. புனித சூசையப்பர் ஆலயம், காரம்பாடு
2. புனித உபகார மாதா ஆலயம், உபகாரமாதாபுரம்
3. புனித அந்தோணியார் ஆலயம், அந்தோணியார் புரம்

பங்குத்தந்தை : அருட்பணி பன்னீர்செல்வம்

குடும்பங்கள் : 380
அன்பியங்கள் : 14

ஞாயிறு திருப்பலி : காலை 08.00 மணிக்கு

நாள்தோறும் திருப்பலி : காலை 06.00 மணிக்கு

திருவிழா : செப்டம்பர் மாதத்தில் காலாண்டு தேர்வு விடுமுறையை ஓட்டிய பத்து நாட்கள்.

வழித்தடம் :

திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து எப்போதும் திசையன்விளை -க்குபேருந்துகள் இயக்கப்படுகிறது.

நாகர்கோவிலிருந்து திருச்செந்தூர் செல்லும் அனைத்து பேருந்துகளும் திசையன்விளை வழியாகச் செல்லும்.

திசையன்விளை திருத்தல வரலாறு :

அகில உலகையும் காத்து பராமரித்து வருகின்ற உலக மீட்பராம் இயேசு கிறிஸ்துவை பாதுகாவலாகக் கொண்டு திசையன்விளையில், சிறிய செபக்கூடம் (சிறு ஆலயம்) ஒன்று செம்மண்ணால் கட்டப்பட்டு பனை ஓலையால் வேயப்பட்டு நிறுவப்பட்டு 140 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டன.

திசையன்விளை அன்று கிராமமாக இருந்த போது பல்லாண்டுகளாக அணைக்கரை பங்கின் கிளை ஊராக இருந்துள்ளது. 1880 -ஆம் ஆண்டுக்கு முன்னரே அணைக்கரை மறைப் பணித்தளமாக இருந்து வந்திருக்கிறது. அன்று அதனோடு சொக்கன்குடியிருப்பு, நாசரேத்-பிரகாசபுரம், சோமநாதபேரி போன்ற இன்றைய மறைப்பணி தளங்கள் சேர்ந்திருந்தன.

1880 -ஆம் ஆண்டு சாத்தான்குளம் தனி மறைப்பணித்தளமாக பிரிக்கப்பட்டு, அணைக்கரையும் அதனைச் சார்ந்த மற்ற ஊர்களும் சாத்தான்குளத்தோடு இணைக்கப்பட்டன. சாத்தான்குளம் தனி மறைப்பணித்தளமாக செயல்பட்டவுடன் அணைக்கரைக்கும், சொக்கன்குடியிருப்புக்கும் மதுரை மிஷனில் பணிபுரிந்து வந்த அருட்தந்தை ஜான் மேஞ்சலே அவர்களிடம் இவ்விரு ஊர்களும் ஒப்படைக்கப்பட்டன. பிரான்ஸ் நாட்டைச் சார்ந்த அருட்தந்தை அவர்கள், இயேசு சபையில் குருவாகி பின்னர் மதுரை மிஷனில் இணைந்து இங்கு மறைப்பரப்புப் பணி செய்தார்.

அருட்தந்தை அவர்கள் சில நாட்கள் சொக்கன்குடியிருப்பிலும் சில நாட்கள் அணைக்கரையிலும் தங்கி பணி செய்து வந்தார். இவ்வாறு இரு ஊர்களுக்கும் பயணம் செய்து பணிசெய்து வந்த வேளையில், இவ்வூர்களுக்கு மத்தியில் உள்ள வியாபார மையமான திசையன்விளை ஊரின்பால் கவனம் கொண்டு, இந்த சிறு மந்தையை இயேசுவின் வழி நடத்த திட்டமிட்டார். எனவே அருட்தந்தை ஜான் மேஞ்சலே திசையன்விளை மண்ணில் இறைவார்த்தையை சிறப்பாக விதைத்தார்.

சில ஆண்டுகளுக்குப் பின் அணைக்கரை உவரியுடன் இணைக்கப்பட்டது. (பிறகு அணைக்கரை தனி மறைப்பணித்தளமாக செயல்பட ஆரம்பித்தது) எனவே அருட்தந்தை மேஞ்சலே சொக்கன்குடியிருப்பிலிருந்து பணியாற்றி திசையன்விளையையும் கவனித்து வந்தார்.

அருட்தந்தை மேஞ்சலே 1882 -ல் சொக்கன்குடியிருப்பில் ஆலயத்தை கட்டி அர்ச்சித்த பின்னர், திசையன்விளையிலும் ஆலயம் கட்டப்பட்டு 1884 ல் அர்ச்சித்ததாக கூறப்படுகிறது. அதுவே இப்போதைய பொலிவுமிகு ஆலயத்திற்கு முன்பிருந்த ஆலயம் ஆகும்.

அருட்தந்தை மேஞ்சலே அடிகளாருக்கு உதவிப் பங்குத்தந்தையாக இருந்து சிறிது காலம் அருட்பணி பவுல் அவர்களும், பின்னர் அருட்பணி கோசலின் அவர்களும் நியமிக்கப்பட்டார்கள். ஆகவே அருட்தந்தை மேஞ்சலே அவர்கள் திசையன்விளையில் அவ்வப்போது தங்கி இப்பங்கின் வளர்ச்சிக்கு பாடுபட்டார்கள். 14-06-1918 அன்று அருட்பணி மேஞ்சலே அவர்கள் அணைக்கரையில் இறைவனடி சேர்ந்தார்.

பல்லாண்டுகளாக அணைக்கரை மறைப்பணி தளத்தோடு சேர்ந்திருந்த திசையன்விளை, காலப்போக்கில் பல மறைப்பணி தளங்களோடு இணைக்கப்பட்டது. சில ஆண்டுகள் உவரி-யுடன் இருந்த போது அருட்பணியாளர்கள் அந்தோணி, அல்போன்சுகாகு, மரியதாஸ், லூர்துசாமி ஆகியோர் பங்குத்தந்தையர்களாக இருந்தனர்.

பின்னர் பல ஆண்டுகளாக கூட்டப்பனை மறைப்பணித் தளத்தின் இணை ஊராக இருந்த போது அருட்பணியாளர்கள் வில்வராயர், பூபால் ராணூர் ஆகியோர் பங்குத்தந்தையர்களாக இருந்தனர்.

பின்னர் பல ஆண்டுகளாக கூடுதாழை மறைப்பணித்தளத்தோடு சேர்ந்திருந்த போது அருட்பணியாளர்கள் மத்தேயு, தர்மநாதர், ஞானப்பிரகாசம் ஆகியோர் பங்குத்தந்தையர்களாக இருந்தனர்.

அருகிலுள்ள ஏராளமான கிராமங்களின் மையமாக திசையன்விளை திகழ்ந்ததால், பல வெளியூர் கத்தோலிக்க மக்கள் வேலை தேடி திசையன்விளையில் குடியேறினர். மக்கள் கூட்டம் அதிகமாக, வளர்ச்சிக்கு ஏற்றார்போல தேவைகளும் அதிகரித்து.

அறியாமை அகற்றி அறிவொளி ஏற்றிட ஆர் சி தொடக்கப்பள்ளி உதயமானது. கூடுதாழை பங்குத்தந்தை அருட்தந்தை ஞானப்பிரகாசம் அவர்கள் பள்ளியின் வளர்ச்சியில் கவனம் செலுத்தி உயர் நிலைப்பள்ளி கொண்டு வர திட்டமிட்டார். அந்நாட்களில் திசையன்விளையின் நகரத்தந்தையாகவும் ஆலய பராமரிப்பு பணிகளை சிறப்பாக கவனித்து வந்தவருமான ஆசீர்வாதம் அவர்களின் முழு ஒத்துழைப்பால் 1956 -ல் உலக இரட்சகர் ஆலய வளாகத்தில் உயர்நிலைப் பள்ளி உதயமானது.

இந்நிலையில் இந்த வட்டாரத்தில் இப்பள்ளியே முதல் உயர்நிலைப் பள்ளி ஆதலால், இதன் திறப்புவிழாவை சிறப்பாகக் கொண்டாட அன்றைய முதல்வர் பெருந்தலைவர் காமராஜர் அவர்களை அழைத்தார்கள். அழைப்பை ஏற்று மனமுவந்து வந்த முதல்வர் அவர்கள் பள்ளியை திறந்து வைக்கும்முன், கடமையுணர்வுடன் உயர்நிலைப் பள்ளியாக உயர்த்தப்பட்ட அரசு ஆணையைக் கேட்டார்கள்.

அதிகாரப்பூர்வமான அரசு ஆணையை பள்ளி பெற தவறி விட்டது. 'அரசு ஆணை இல்லாத பள்ளியை முதல்வராகிய நானே திறப்பது சரியல்ல, வருந்த வேண்டாம் நான் சென்று அவ்வாணைக்கு ஏற்பாடு செய்கிறேன் ' என்று சொல்லிவிட்டு மக்களை பாராட்டி அருட்தந்தை அவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் வாழ்த்து கூறி தலைநகர் திரும்பினார். (எப்பேர்ப்பட்ட ஒப்பற்ற தலைவர், இவரல்லவா மக்களின் முதல்வர்) பின்னர் பள்ளிக்கு அரசு அங்கீகாரம் பெறப்பட்டது.

மரியாயின் ஊழியர் சபை கன்னியர் இல்லம் வரவே, பெண்களுக்கென்று ஸ்டெல்லா மேரீஸ் உயர்நிலைப் பள்ளி 1965 ல் உருவானது.

அருட்தந்தையர்களின் முயற்சியிலும் மக்களின் ஒத்துழைப்புடன் 1970 -ம் ஆண்டு திசையன்விளை, கூடுதாழை பங்கிலிருந்து பிரிந்து தனிப்பங்காக உயர்ந்தது. இதனுடன் அந்தோணியார்புரம், உபகாரமாதாபுரம், கடகுளம் ஆகிய ஊர்கள் இணைக்கப்பட்டன.

முதல் பங்குத்தந்தையாக அருட்பணி லோபோ அவர்கள் நியமிக்கப்பட்டார்.

13-06-1984 ல் கடகுளம் பிரிந்து தனிப்பங்காக உயர்ந்தது.

1984 -ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. நூற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில் ஆலயம் முற்றிலும் புதுப்பிக்கப் பட்டது. விழா நினைவாக மேதகு ஆயர் அமலநாதன் அவர்கள் கொடுத்த நிதியுதவியுடன் மண்டபமும் கட்டப்பட்டது.

ஆலயத்தில் இடநெருக்கடி ஏற்பட்டதால் அருட்பணி சேவியர் மரியான் அவர்கள் 1992 -ல் பழைய ஆலயத்தை விரிவாக்கம் செய்தார்.

அருட்பணி பீட்டர் தலைமையில் 2009ம் ஆண்டு ஆலய நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு, அதன் நினைவாக அன்னை மரியாளுக்கு ஒரு கெபி கட்டப்பட்டது.

அருட்பணி பீட்டர் அவர்களது காலத்தில் அன்பியங்கள் உருவாக்கப்பட்டன.

2013 -ல் பொறுப்பேற்ற அருட்பணி ஜான் பிரிட்டோ அவர்கள் திசையன்விளையில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை செய்தார். ஆலயத்தின் இடநெருக்கடியை கருத்தில் கொண்டு புதிய ஆலயம் கட்டியே தீர வேண்டும் என்று உறுதி கொண்டார். பங்குமக்களின் ஒத்துழைப்புடன் தற்போதைய புதிய அழகிய ஆலயம் கட்டப்பட்டு 25-11-2017 அன்று மேதகு ஆயர் யுவான் அம்புறோஸ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.

திசையன்விளையின் மையப்பகுதியில் அமைந்துள்ளதால் ஊரின் எப்பகுதியில் இருந்து பார்த்தாலும் திருத்தலத்தை காண முடியும்.

10- ம் திருவிழாவில் திசையன்விளை ஊரைச்சுற்றி உலக இரட்சகர் சப்பரபவனி நடைபெறும். இதில் எல்லா மதத்தினரும் கலந்து கொண்டு சிறப்பு செய்வார்கள்.

பங்கில் பணியாற்றிய அருட்தந்தையர்கள் :

1. Fr லோபோ (1970-1972)
2. Fr ஜூலியன் பர்னாந்து (1972-1973)
3. Fr A. M காகு (1973-1974)
4. Fr J. ரொசாரியோ கொரையரா (1974-1975)
5. Fr J மரிய வியாகுலம் (1975-1976)
6. Fr சேவியர் இக்னேஷியஸ் (1976-1979)
7. Fr மெத்தோடியஸ் பர்னாந்து (1979-1982)
8. Fr பவுல் ராபின்சன் பர்னாந்து (1982-1984)
9. Fr T விக்டர் (1984-1988)
10. Fr S. பிரான்சிஸ் (1988-1989)
11.  சேவியர் S. மரியான் (1989-1993)
12. Fr T. M அம்புறோஸ் (1993-1998)
13. Fr சேகரன் (1998-2001)
14. Fr பிரான்சிஸ் தேவசகாயம் (2001-2006)
15. Fr M பீட்டர் (2006-2010)
16. Fr தோம்னிக் அருள் வளன் (2010-2013)
17. Fr ஜான் பிரிட்டோ (2013 -2018)
18. Fr பன்னீர்செல்வம் (2018 முதல்..)

பல்வேறு அதிசயங்களும் அற்புதங்களும் நிறைந்த ஆலயம்.

உலகை காத்து இரட்சிக்கும் உலக இரட்சகர் ஆலயம் வாருங்கள்..! இறைவனின் ஆசீரை பெற்றுச் செல்லுங்கள்..!