புனித அந்தோனியார் ஆலயம்
இடம்: ஆற்காடு
மாவட்டம்: இராணிப்பேட்டை
மறைமாவட்டம்: வேலூர்
மறைவட்டம்: அரக்கோணம்
நிலை: பங்குத்தளம்
பங்குத்தந்தை அருள்பணி. S. இருதயராஜ், OFM Cap
குடும்பங்கள்: 220
அன்பியங்கள்: 10
திருவழிபாட்டு நேரங்கள்:
ஞாயிறு திருப்பலி காலை 08:15 மணி
நாள்தோறும் திருப்பலி மாலை 06:45 மணி
செவ்வாய் காலை 11:15 மணி புனித அந்தோனியார் நவநாள் திருப்பலி மற்றும் மாலை 06:45 மணி திருப்பலி
திருவிழா: ஜூன் மாதம் 13-ம் தேதி.
மண்ணின் இறையழைத்தல்:
அருட்சகோதரி. சுகந்தி
வழித்தடம்: வேலூர் -சென்னை நெடுஞ்சாலையில் ஆற்காடு அமைந்துள்ளது.
Location map: St Antony's Church
https://maps.google.com/?cid=5682539086203902650&entry=gps
ஆலய வரலாறு:
ஆற்காடு புனித அந்தோனியார் பங்கு, இராணிப்பேட்டை புனித ஆரோக்கிய அன்னை பங்கின் கிளைப்பங்காக இருந்து தனிப்பங்காக 14.04.1998 அன்று உதயமானது. ஆற்காடு பங்கு ஆலயமானது தனக்கென தனிப்பெரும் பாரம்பரியத்தையும், பழம்பெருமையையும் கொண்டுள்ளது. சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பே ஆற்காட்டில் முழு வளர்ச்சியடைந்த பங்கு ஆலயம் இருந்துள்ளதற்கான சான்றுகள் உள்ளன. ஆற்காட்டில் மறைப்பரப்பு பணிகள் நடந்து, பங்கும் பள்ளியும் உருவாக்கப்பட்டு செயல்பட்டுள்ளது. அப்போதைய அரசியல் காரணங்களினால் ஆற்காட்டில் திருச்சபையின் வளர்ச்சி தடைப்பட்டு, மக்கள் குருக்கள் இன்றி விடப்பட்டனர். இச்சமயம் மறைப்பணிகள் இராணிப்பேட்டையை மையமாக வைத்து செயல்படலாயிற்று. இராணிப்பேட்டை திருச்சபை 18ஆம் நூற்றாண்டிலேயே வளர்ச்சியடைந்த திருச்சபையாக இருந்திருக்க வேண்டும். 1801ஆம் ஆண்டிலுள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் கல்லறைக் கல்வெட்டுகள் இதற்கு சான்றாக உள்ளது.
ஆற்காடு பேருந்து நிலையத்திற்கு மிக அருகிலுள்ள மேட்டுத்தெரு, டாக்டர் அம்பேத்கர் தெரு, சிவராஜ் தெரு, லேபர் தெரு என்ற பெயருடைய புனித அந்தோனியார் கோவில் தெருவில் உள்ள உழைக்கும் மக்கள், கத்தோலிக்கத் திருச்சபைக்கு மதம் மாறி கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டார்கள். 1917 ஆம் ஆண்டுக்கு முந்தைய கால கட்டத்தில் இருந்தே கிறிஸ்தவர்கள் புனித அந்தோனியார் கோவில் தெருவில் மண் சுவற்றினால் சிற்றாலயம் அமைத்து வழிபாடு நடத்தி வந்தனர். அச்சிற்றாலயத்தின் மண்சுவர் 1980 ஆம் ஆண்டு இடிக்கப்பட்டு செங்கல் சுவர் கட்டி, சீமை ஓட்டு கூரை போடப்பட்டது. மேதகு ஆயர் அந்தோனி முத்து அவர்களால் சிற்றாலயம் புனிதப்படுத்தப்பட்டுத் திறந்து வைக்கப்பட்டது.
இராணிப்பேட்டை பங்கிலிருந்து பங்குத்தந்தையர்கள் மாதமிருமுறை அச்சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றி வந்தனர். ஆற்காடு கிளைப்பங்கு மக்களுக்கு மறைக்கல்வி வகுப்புகள் அங்கு நடத்தப்பட்டு ஞான ஒழுங்குகள் கடைப்பிடிக்கப்பட்டன.
இலங்கை அகதிகள் முகாம் ஆற்காட்டின் மேற்கு பகுதியில் ஆற்காட்டிற்கும் வேப்பூருக்க்கும் இடையே அமைந்திருந்தது. முகாமிலிருந்த கிறிஸ்தவர்கள்; இராணிப்பேட்டை பங்கு ஆலயத்திற்கும், ஆற்காட்டில் இருக்கின்ற சிற்றாலயங்களுக்கும் சென்று வந்தனர். பின்னாட்களில் முகாம் நாமக்கல் மற்றும் வெவ்வேறு இடத்திற்கு மாற்றப்பட்டதால் அவர்கள் குடிபெயர்ந்து வெவ்வேறு முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள்.
பேருந்து நிலையத்திலிருந்து ஆரணி செல்லும் சாலையில் சுமார் 500 மீட்டார் தூரத்தில் புனித அந்தோனியார் சிற்றாலயமும் அதளைச் சுற்றி கிறிஸ்தவர்களின் கல்லறைகளும் இருந்தது. கிறிஸ்தவ இறைமக்கள் எண்ணிக்கை அதிகரித்ததால் ஆற்காட்டில் 1917ஆம் ஆண்டிற்கும் முன்னரே கிறிஸ்தவர்களுக்கான கல்லறை இருந்த இடத்தில் தற்போது பங்குக்கோவில் உள்ள இடத்தில் சிற்றாலயம் கட்டப்பட்டது. 30.01.1988 அன்று அப்போதைய பங்குத்தந்தை அருள்தந்தை D.F. சவரி சே.ச. அவர்களால் ஆரணி சாலையில் உள்ள புனித அந்தோனியார் சிற்றாலயம் சீர் செய்து சற்று பெரிய அளவில், சிமெண்ட் ஓடு கொண்டு கட்டப்பட்டது. இராணிப்பேட்டையிலிருந்து பங்குத்தந்தையர்கள் வந்து இச்சிற்றாலயத்திலும் திருப்பலி நிறைவேற்றி வந்துள்ளனர். ஆற்காட்டில் இறைமக்கள் எண்ணிக்கை அதிகமானதால் புனித அந்தோனியார் தெருவிலும் மற்றும் ஆரணி சாலையில் உள்ள சிற்றாலயத்திலும் மக்களின் வசதிக்காக திருப்பலி நிறைவேற்றப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டு வந்தது.
கல்லறை இருந்த இடத்தில் கோவில் கட்டப்பட்டதால், இறந்தவர்களை அடக்கம் செய்ய இடம் இல்லாத நிலை ஏற்பட்டது. ஆகவே மாற்று இடத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. புனித அந்தோனியார் தெருவில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவ பெண்கள் ஒன்றிணைந்து உழைக்கும் மகளிர் சங்கம் அமைத்து செயல்பட்டு வந்தனர். மகளிர் சங்கத்தவரின் பெரு முயற்சியால் 1992ல் பாலாற்றங்கரையில் கத்தோலிக்க கிறிஸ்தவர்களுக்கென்று கல்லறைக்காக இடம் கேட்டு பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இறுதியாக பாலாற்றங்கரையில் தற்போது கல்லறை உள்ள இடத்தை அரசாங்கம் கத்தோலிக்க கிறிஸ்தவர்களுக்கென்று ஒதுக்கிக் கொடுத்தது. அந்த இடத்தைச் சுற்றி கல் நடப்பட்டு முள் வேலி அமைக்கப்பட்டது. அன்று முதல் இறந்துபோன கிறிஸ்தவர்களின் சடலங்கள் இந்த கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டு வருகின்றன.
இராணிப்பேட்டை பங்கில் பணியாற்றிய அருள்தந்தை Y. ஆபிரகாம் அடிகளார் (1956-1964) 1963 ஆம் ஆண்டு மறைமாவட்டத்தின் பயன்பாட்டிற்காக ஆற்காடு இராபர்ட் கிளைவ் பஜாரில் 4.51 ஏக்கரில் நெல் வயல் வாங்கினார். அவ்விடம் 1998 ஆம் ஆண்டு வேலூர் மறைமாவட்டத்தின் பெயரில் “தி டயோசிஸ் ஆப் வேலூர் சொசையிட்டி தற்கால செயலாளர்” என்று அரசு பதிவேடுகளில் பதிவாகியுள்ளது. ஆற்காடு கிளைப்பங்கின் வளர்ச்சிக்காகவும், பங்கின் பயன்பாட்டிற்காகவும் அவ்விடம் பங்குத்தந்தையின் கண்காணிப்பில் விடப்பட்டு பங்கின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இராணிப்பேட்டையில் அருள்தந்தை ஜெயசீலன் அவர்கள் பங்குத்தந்தையாக இருந்தபோது, 1998 ஆம் ஆண்டு பிரான்சிஸ்கன் கப்புச்சின் சபை துறவிகளின் வருகையால், ஆற்காடு கிளைப் பங்கானது, இராணிப்பேட்டையிலிருந்து பிரிக்கப்பட்டு 14.04.1998 அன்று புதிய பங்காக உருவானது. அருள்தந்தை முனைவர் மெத்தியாஸ், L.S.T. D.C.L., அவர்களின் பெரும் முயற்சியாலும், முன்னாள் பங்குத்தந்தை அருள்தந்தை மார்டின், பங்குத்தந்தை ஜெயசீலன் அவர்களின் முன்னேற்பாட்டாலும், மேதகு ஆயர் முனைவர் A.M.சின்னப்பா, S.D.B.DD., M.A., M.Ed., Ph.D., அவர்களின் ஆசியோடும் புனித அந்தோனியார் கோவில் கிளைப் பங்கானது, தனிப் பங்காக உயர்த்தப்பட்டது. அருள்தந்தை சகாயராஜ் க.ச. பங்கின் முதல் பங்குத்தந்தையாக பொறுப்பேற்றார். ஆற்காடு பகுதியை சுற்றியுள்ள கிளைக் கிராமங்கள் ஆற்காடு பங்கோடு இணைக்கப்பட்டன.
பங்கு வளர்ச்சியின் முதல் படியாக 2001 ஆண்டு பழைய சிமெண்ட ஓடு ஆலயம் இடிக்கப்பட்டு தற்போதுள்ள புதிய கான்கிரீட் ஆலயம் கட்டப்பட்டது. வேலூர் மறைமாவட்டத்தின் உதவியுடன், தமிழக அமல அன்னை கப்புச்சின் மறை மாநிலத்தின் உதவியோடு பிரான்சிஸ்கன் கப்புச்சின் துறவிகளால் தற்போதுள்ள பங்கு ஆலயம் கட்டப்பட்டது. அப்போதைய மறைமாநில அதிபர் அருள்தந்தை முனைவர். ஜான் அந்தோனி OFM.Cp. அவர்கள் தலைமையில், பிரான்சிஸ்கன் கப்புச்சின் சபையின் ஜெனரல் மினிஸ்டர் ஜான் கொரிவ் OFM.Cap. ரோம் அவர்கள் அருள்தந்தை முன்னிலையில் அப்போதைய வேலூர் மறைமாவட்ட ஆயர் A.M.சின்னப்பா, S.D.B.DD., M.A., M.Ed., Ph.D., மற்றும் அருள்தந்தை முனைவர் மத்தியாஸ், I.S.T., D.C.L ஆகியோரால் தற்போதைய பங்கு ஆலயமும், பங்குத்தந்தை அலுவலகமும் 11.06.2001 அன்று புனிதப்படுத்தப்பட்டுத் திறந்து வைக்கப்பட்டது. பங்கு ஆலய பீடத்தில் புனித மரிய கொரட்டியின் புனித பண்டம் வைத்து மேதகு ஆயர் சின்னப்பா அவர்களால் புனிதப்படுத்தப்பட்டுள்ளது. பங்குத்தந்தை அருள்தந்தை K.A. செல்வராஜ், உதவிப் பங்குத்தந்தை R. வில்சன் மற்றும் அருள்தந்தை தாமஸ் அக்வினாஸ் V.G. மற்றும் அருள்தந்தை நம்பிக்கைராஜ் மறைமாவட்ட வேந்தர், இராணிப்பேட்டை பங்குத்தந்தை அருள்தந்தை ஜெயசீலன் ஆகியோர் மற்றும் அருள்தந்தையர்கள் அருள்சகோதரிகள் உடனிருந்தனர்.
பிரான்சிஸ்கன் கப்புச்சின் சபை துறவிகளால் சபையின் வளர்ச்சிக்காக பெரிய உப்புப்பேட்டையில் சுமார் பத்து ஏக்கர் அளவுள்ள இடம் வாங்கி அருள்தந்தையர்கள் இல்லம் புனித தந்தை பியோ இல்லம் 2000ம் ஆண்டு கட்டப்பட்டது. தந்தையர்களின் இல்ல வளாகத்தில் புனித தந்தை பியோ மெட்ரிகுலேசன் பள்ளி 2001ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. 2006ஆம் ஆண்டு அருள்தந்தை அண்ணா கிறிஸ்டோபர் பங்குத்தந்தையாகவும் இல்ல அதிபராகவும் இருந்த போது புனித தந்தை பியோ மெட்ரிகுலேசன் பள்ளிக்கான கட்டடம் எழுப்பப்பட்டது. பங்குக் கோவிலைச் சுற்றி மதிற்சுவர் எழுப்பி, காங்கிரீட் தளம் அமைத்து முன்பகுதியில் இரண்டு கெபிகள் மற்றும் கேட் (Gil Gate) ஆகியவை அமைக்கப்பட்டன.
2012ஆம் ஆண்டு அருள்தந்தை ஜான்பிரிட்டோ பங்குத்தந்தையாக இருந்தபோது, பங்குத்தந்தை அலுவலகத்திற்கு முன் உள்ள ஓட்டுனர் பயிற்சி அலுவலகம் கட்டப்பட்டது. 2015 ஆம் ஆண்டு அருள்தந்தை R. வில்சன் பங்குத்தந்தையாக இருந்தபோது புனித அந்தோனியார் கோவில் தெருவின் நுழைவுவாயிலில் ஆரோக்கிய மாதா கெபி கட்டப்பட்டது. அருள்தந்தை நித்தியசகாயம் அவர்களின் பெரும்முயற்சியினால் பங்கு ஆலய மேற்பகுதியில் வணக்கத்திற்குரிய அருளாளர் ஆல்பெர்தோ மார்வெல்லி நினைவாக தகர கூடாரம் அமைக்கப்பட்டது. 2017 ஆம் ஆண்டு அருள்தந்தை அகஸ்டின் பங்குத்தந்தையாக இருந்தபோது ஆலய பீடம் டைல்ஸ் போடப்பட்டு புதிய நற்கருணைப் பேழை வைக்கப்பட்டது. மக்கள் அமர்வதற்கு மர இருக்கைகள் போடப்பட்டன.
அருள்தந்தை ஜான் எழிலரசன் பங்குத்தந்தையாக இருந்தபோது 2019ஜூன் மாதம் 13 அன்று டவுன் தெருவில் கெபி கட்டப்பட்டு முன்னாள் பேராயர். A.M. சின்னப்பா அவர்களால் புனிதப்படுத்தப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. ஆலயப் பயன்பாட்டிற்காக புதிய ஜெனரேட்டர் வாங்கப்பட்டது. 2018ஆம் ஆண்டு பங்குத்தந்தை அலுவலகம் சீரமைக்கப்பட்டு, ஆலயத்தில் கேமிராக்கள் பொறுத்தப்பட்டன. கொரோனாப் பெருந்தொற்றினால் மக்கள் ஆலயத்தில் வழிபாடு நடத்தமுடியாத நிலை ஏற்பட்டது. கொரோனாப் பெருந்தோற்று முடிவுக்கு வந்து 18.10.2021 அன்று மக்கள் ஆலயத்தில் வழிபாடு நடத்த அரசாங்கம் அனுமதி தந்தது.
அருள்தந்தை இருதயராஜ் பங்குத்தந்தையாக 30.10.21 அன்று பொறுப்பேற்றார். 23 டிசம்பர் 2021 ஆம் ஆண்டு ஆலயத்தில் LCD Projector பொறுத்தப்பட்டது. ஆலயப் பயன்பாட்டிற்கு 50 பிளாஸ்டிக் இருக்கைகள் வாங்கப்பட்டுள்ளன. வெள்ளிவிழா துவக்க நாளை முன்னிட்டு புனித தேவசகாயம் நினைவு கெபி ஆலயத்திற்குள் நிறுவப்பட்டு, வேலூர் மறைமாவட்ட பரிபாலகர் பேரருட்தந்தை ஜான்ராபர்ட் அவர்கள் புனிதப்படுத்தி திறந்து வைத்தார்.
2022 செப்டம்பர் மாதம் புனித அந்தோனியார் கோவில் தெருவில் உள்ள ஆரோக்கிய மாதா கெபியில் அன்னை மரியாவின் பிறந்தநாள் விழா, அனைத்துப் பங்கு மக்களாலும் பங்குத்தந்தை இருதயராஜ் க.ச. அவர்களின் தலைமையில் திருவிழா வெகுசிறப்பாக நடத்தப்பட்டது.
தற்போது ஆற்காடு பங்கு மக்களின் இறைநம்பிக்கை எழுச்சிக்கண்டுள்ளது. திருச்சபை வளர்ச்சியின் பாதையை நோக்கி பயணிக்கிறது. 2023 ஆம் ஆண்டு தனிப்பங்காக உருவான 25ஆம் ஆண்டு வெள்ளிவிழா கொண்டாடப் பட்டது. வெள்ளிவிழா ஆண்டை முன்னிட்டு ஆலய கோபுரம் சீரமைப்பு, ஆலய நுழைவுவாயில், புனித அந்தோனியார் கோவில் தெருவில் உள்ள சிற்றாலயம் சீரமைப்பு மற்றும் பாலாற்றங்கரையில் உள்ள கல்லறை மதிற்சுவர் கட்டும்பணி ஆகியவை நடைபெற்று வருகிறது.
22.05.2022 அன்று வெள்ளி விழா ஆண்டு துவங்கப்பட்டது. வேலூர் மறைமாவட்ட பரிபாலகர் பேரருள்தந்தை முனைவர் ஜான்ராபர்ட் தலைமை தாங்கினார். அமல அன்னை கப்புச்சின் சபை மறை மாநிலத்தின் உதவி அதிபர் அருள்தந்தை அகஸ்டின் நியூட்டன் க.ச. முன்னிலை வகித்தார். மற்றும் அருள்தந்தையர்கள், அருள்சகோதரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
வெள்ளிவிழாவை முன்னிட்டு 06.09.2023 அன்று, ஆலயத்திற்கு புதிய கோபுரம் கட்டுவதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. நகர்மன்ற தலைவர், சட்டமன்ற உறுப்பினர், மறைவட்ட முதல்வர் ஆனந்தராஜ், கப்புச்சின் சபை மறைமாநில ஆலோசகர் அருட்பணி. தைனிஸ் க.ச ஆகியோர் கலந்து கொண்டனர். தற்போது கோபுர கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மேலும் பங்குதந்தை அருட்பணி. இருதயராஜ் க.ச அவர்களின் வழிகாட்டலில், மக்களின் ஒத்துழைப்புடன் கல்லறை சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
புனித தந்தை பியோ மெட்ரிகுலேசன் பள்ளி:
அனைத்து அடித்தட்டு மக்களின் கல்வி வளர்ச்சிக்காக உப்புப்பேட்டையில் மிககுறைந்த கட்டணத்தில் சேவையாற்றி வருகின்றது. புனித தந்தை பியோ சமூக சேவை மையம் மக்களின் தேவையறிந்து காலத்திற்கு ஏற்றார்போல் செயல்பட்டு வருகிறது. புனித பியோ ஓட்டுநர் பயிற்சி, தையல் பயிற்சி மாலை நேர டியூசன் வகுப்புகள் ஆகியவை பங்கின் வளர்ச்சிக்காகவும் சமூக சேவைக்காகவும் செயல்பட்டு வருகின்றன.
அன்பிய மண்டலங்கள்:
1. புனித மத்தேயு அன்பிய மண்டலம்: புனித ஆரோக்கியமாதா அன்பியம், புனித அந்தோனியார் அன்பியம், புனித தேவசகாயம் அன்பியம் ஆகிய அன்பியங்களை கொண்டுள்ளது. டாக்டர் அம்பேத்கர் தெரு, சிவராஜ் தெரு, (லேபர் தெரு-மேட்டுத்தெரு) என்று அழைக்கப்படுகின்ற புனித அந்தோனியார் கோவில் தெருவில் உள்ள இறைமக்கள், புனித ஆரோக்கிய மாதா, புனித அந்தோனியார் அன்பியங்களின் உறுப்பினர் ஆவர். தேவி நகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள வெவ்வேறு தெருக்களில், பகுதிகளில் வசிக்கும் இறைமக்கள் புனித தேவசகாயம் அன்பிய உறுப்பினர் ஆவார்கள்.
2. புனித மாற்கு அன்பிய மண்டலம்: புனித லூர்து மாதா அன்பியம், புனித தோமையார் அன்பியம் மற்றும் புனித சவேரியார் அன்பியம் ஆகிய அன்பியங்களைக் கொண்டுள்ளது. டவுன் தெருவில் வசிக்கும் இறைமக்கள் புனித லூர்து மாதா அன்பியம் மற்றும் புனித தோமையார் அன்பியங்களின் உறுப்பினர் ஆவர். டவுன்தெருவில் வசிக்கும் சில குடும்பங்கள் மற்றும் போலிஸ்லையன், சாய்பாபா நகர், தோப்புக்கானா, கோனாந்தெரு, ஆகிய பகுதிகளில் வசிக்கும் இறைமக்கள் புனித சவேரியார் அன்பியத்தை சேர்ந்த குடும்பங்கள் ஆவர்.
3. புனித லூக்கா அன்பிய மண்டலம்: புனித பிரான்சிஸ் அசிசியார் அன்பியம், புனித சூசையப்பர் அன்பியம் ஆகிய அன்பியங்களைக் கொண்டுள்ளது. கஸ்பா, கோட்டைமேட்டுத் தெரு. முப்பதுவெட்டி, கொள்ளபாளையம் ஆகிய பகுதிகளில் வசிக்கும் இறைமக்கள் புனித பிரான்சிஸ் அசிசியார் அன்பியத்தை சேர்ந்த உறுப்பினர் ஆவர். திமிரி, கனியனூர், அத்தித்தாங்கல், மேல்நாயக்கன் பாளையம், புங்கனூர், காவனூர், சாம்பசிவபுரம், பூட்டுத்தாக்கு ஆகிய பகுதிகளில் வசிக்கும் இறைமக்கள் புனித சூசையப்பர் அன்பியத்தைச் சேர்ந்த உறுப்பினர் ஆவர்.
4. புனித யோவான் அன்பிய மண்டலம்: புனித சகாயமாதா அன்பியம் மற்றும் புனித தந்தை பியோ அன்பியம் ஆகிய அன்பியங்களைக் கொண்டுள்ளது. இந்திரா நகர், கிருஷ்ணாபுரம் பகுதிகளில் உள்ள இறைமக்கள் புனித சகாயமாதா அன்பியத்தை சேர்ந்த உறுப்பினர் ஆவர். ஹவுசிங்போர்டு ஃபேஸ்-1 மற்றும் ஹவுசிங் போர்டு ஃபேஸ்-2 மற்றும் தண்டுகாரத் தெரு, கண்ணமங்கலம் இணைப்பு சாலை, அப்பாயி தெரு, அண்ணா சிலை பின்புறம் ஆகிய பகுதிகளில் வாழும் கிறிஸ்தவ குடும்பங்கள் புனித தந்தை பியோ அன்பிய உறுப்பினர் ஆவர்.
பங்கின் பங்கேற்பு அமைப்புகள்:
1. புனித கிளாரா -பங்கு நிர்வாக ஆலோசனைக்குழு
2. புனித செசிலியா -பாடகற்குழு
3. புனித கார்லோ அக்திஸ் -பீடச்சிறுவர்கள் மற்றும் மறைக்கல்வி மாணாக்கர்
4. புனித ஜான் போஸ்கோ -பிரான்சிஸ்கன் இளைஞர் இயக்கம்
5. மரியாயின் சேனை
6. பிரான்சிஸ்கன் பொதுநிலையினர் இயக்கம் (மூன்றாம் சபை)
பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள் பட்டியல்:
1. அருள்தந்தை A. சகாயராஜ், OFM Cap. (1998-1999)
2. அருள்தந்தை K.A. செல்வராஜ், OFM. Cap (1999-2003)
3. அருள்தந்தை A. சகாயராஜ், OFM Cap (2-ம் முறை) (2003-2004)
4. அருள்தந்தை R. அண்ணா கிறிஸ்டோபர், OFM Cap. (2004-2007)
5. அருள்தந்தை V. ஜான் பிரிட்டோ, OFM. Cap.(2007-2012)
6. அருள்தந்தை R. வில்சன், OFM Cap. (2012-2015)
7. அருள்தந்தை L. அகஸ்டின், OFM. Cap (2015-2018)
8. அருள்தந்தை C. ஜான் எழிலரசன், OFM. Cap (2018-2021)
9. அருள்தந்தை S. இருதயராஜ், OFM. Cap. (31.10.2021----)
தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பங்குதந்தை S. இருதயராஜ், OFM Cap அவர்கள்.