05 புனித வியாகப்பர் ஆலயம், மாங்கரை வலியவிளை

   

புனித வியாகப்பர் ஆலயம்.

இடம்: மாங்கரை (வலியவிளை)  

மாவட்டம்: கன்னியாகுமரி

மறைமாவட்டம்: தக்கலை சீரோ மலபார்

மறைவட்டம்: சூசைபுரம் 

நிலை: பங்குத்தளம் 

பங்குத்தந்தை: அருட்தந்தை. பிரின்ஸ் மாலியில் 

குடும்பங்கள்: 200

உறவியங்கள்: 8

ஞாயிறு காலை 07:45 மணிக்கு காலை ஜெபம் தொடர்ந்து 08:00 மணிக்கு திருப்பலி 

திங்கள், வியாழன், சனி காலையில் திருப்பலி 

புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மாலையில் திருப்பலியும், நவநாள் ஜெபமும், மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை நற்கருணை ஆராதனை.

திருவிழா: ஜூலை 25 ஆம் தேதியை உள்ளடக்கிய பத்து  நாட்கள்

மண்ணின் இறையழைத்தல்கள் :

அருட்சகோதரி. அல்போன்ஸ், SABS

அருட்சகோதரி. ஜெயின் மேரி, SABS

வழித்தடம்: கருங்கல் -பாலூர் மாங்கரை (வலியவிளை)

Location map:

St. James Church

https://maps.app.goo.gl/sxgoT2gaHXxG4n9P7

மாங்கரை புனித வியாகப்பர் ஆலய 50 ஆண்டு பொன்விழா வரலாறு:

சீரோ மலபார் சபைக்கு உட்பட்ட, சங்கனாச்சேரி மறைமாநிலத்தின் கீழ் இயங்கி வந்த, கன்னியாகுமரி மிஷனிலுள்ள சூசைபுரம் மறைபரப்பு தளத்தில் இருந்து 1972 -ம் ஆண்டு தொடக்கத்தில் அருட்தந்தை. சக்கரியாஸ் காயத்தற, அருட்தந்தை. தோமஸ் முட்டத்துகுந்நேல் ஆகியோர்கள் திருத்தொண்டு பணிகளுக்காக மாங்கரை பகுதிக்கு வந்தார்கள். இவ்விடத்தில் ஒரு திருத்தொண்டு நிலையம் தேவை என்பதை அறிந்து கரியான்குளத்துவிளை திரு. செல்லக்கண், திரு. முத்தையன், திரு. பொன்னையன் ஆகியோரது 25 சென்ட் நிலத்தை வாடகைக்கு எடுத்து, தென்னங்கீற்று கூரை அமைத்து மறைக்கல்வி வகுப்புகள் ஆரம்பித்தார்கள். இந்த இறைத்தொண்டு நிலையத்திற்கு இயேசுவின் முக்கிய மூன்று சீடர்களுள் ஒருவரான புனித வியாகப்பர் பெயர் சூட்டப்பட்டது. அது முதல் இப்பகுதியின் இறை தொண்டு பணிகளை அருட்தந்தை. தோமஸ் முட்டத்துகுந்நேல் அவர்கள் சிறப்புற செய்து வந்தார்கள். 

கல்விப் பணிகள்:

திருத்தொண்டு பணிகள் ஆரம்பித்த அடுத்த ஆண்டில், அதாவது 1973 -ம் ஆண்டில் புனித வியாகப்பர் பாலர்பள்ளி ஆரம்பிக்கப்பட்டது. 1978 -ம் ஆண்டில் ஆரம்பப்பள்ளி ஆரம்பித்து 1982 -ல் அரசு அங்கீகாரம் கிடைக்க பெற்றது. தொடர்ந்து 1987 -ம் ஆண்டில் நடுநிலைப் பள்ளியாகவும், 1990 -ம் ஆண்டு உயர்நிலைப்பள்ளியாகவும் உயர்த்தப்பட்டது. தற்போது 15 மாணவர்களும் 2 ஆசிரியர்களும் கொண்ட பாலர் பள்ளியும், 650 மாணவர்களும் 35 ஆசிரியர்களும் கொண்ட உயர்நிலைப் பள்ளியும் சீரும் சிறப்புமாக செயல்பட்டு வருகிறது. 

சமூகப் பணிகள் :

சாதி மத பாகுபாடின்றி இந்தப் பகுதியில் உள்ள அனைத்து மக்களுக்கும், கன்னியாகுமரி சமூக சேவை சங்கத்தின் கீழ் [KKSSS] சமூக சேவை பணிகளோடு சிறப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது 260 அங்கத்தினர்களை கொண்ட 13 மகளிர் சுய உதவி குழுக்கள் சீரும் சிறப்புமுமாக நடைபெற்று வருகிறது.

குடும்ப சமூகங்கள் : 

தற்போது 220 குடும்பங்களைக் கொண்ட எமது ஆலயம் தொடக்கத்தில் எட்டு இறை சமூகங்களாக செயல்பட்டு வந்தது. பின்னர் உறவியங்களாக பெயர் மாற்றம்

செய்யப்பட்டது. 

1. புனித அல்போன்சா உறவியம்

- வாழிப்பிலாவிளை 

2. புனித குழந்தை தெரசாள் உறவியம் - கரியான்குளத்துவிளை 

3. புனித ஆரோக்கிய மாதா உறவியம்

- கோட்டவிளை 

4. புனித அந்தோணியார் உறவியம்

- பாலூர் 

5. புனித பிரான்சீஸ் சவேரியார் உறவியம்

- புல்லாரப்பள்ளி விளை 

6. புனித தோமையார் உறவியம்

- கல்லுவிளை 

7. புனித லூர்து மாதா உறவியம்

- நெல்லிவிளை 

8. புனித பெர்னதெத் உறவியம்

- வலியவிளை.

 ஒவ்வொரு உறவியங்களிலும் மூன்று உறவிய பணியாளர்களுடன், உறவிய கூட்டங்கள், தவக்காலத்தில் சிலுவைப் பாதை, புனிதர்களின் திருநாட்களின் அடிப்படையில் உறவிய ஆண்டு விழாக்கள் கொண்டாடி வருகின்றன. 

 அருட்சகோதரிகள் பணி (SABS):

1980 -ம் ஆண்டில் இருந்து  இப்பங்கில் தேவ நற்கருணை ஆராதனை (S.A.B.S.) சபையை சார்ந்த அருட்சகோதரிகள் மாக்டலின், சுமா, செலின், வில்பிரட், மரிய தையில் கிழக்கேது, வில்பிரட், ஜோஸ்லின், செர்சியூஸ், மரியா மடத்தில், லிசி பாறச்சேரி, றோஸ்லிட், அல்போன்ஸ் மரியா புத்தன்புரையில், ராணி மரியா, விமலா சோபியா, கிறிஸ்டெல்லா, (RIP) கேண்டிடா , இசபெல்லா(RIP) மேரி குயின் (RIP) தின்சா, றோஸ் கருவேலில், மொடொனா, அமலா ஜோஸ், மார்கிரட், எல்சிட் பேரணிதட்டு, அல்போன்ஸ், டோமினி, மெர்சி ஆலஞ்சேரி, எலிசபெத் பாலிக்குண்டம், எலிசபெத் ஆழப்பறம்பில், எலிசபெத் கோயில் புரையிடம், லிற்றி மரியா கண்ணாலா, செலின் வட்டதுண்டத்தில், பிரியா எல்சா, சிபியா றோஸ் ஆகியோர் சிறப்புற பணி செய்தார்கள். 

தற்போது அருட்சகோதரிகள் விமலா, அல்போன்ஸ் மரியா புத்தன்புரையில், டெசி இல்லம் பள்ளி, அல்போன்ஸ் ஆகியோர்  இந்த ஆலயத்தில் இறைப்பணியில் தன்னிகரற்று சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள்.

மறைமாவட்டம் ஓர் பார்வை:

தொடக்க நாட்களில் சங்கனாச்சேரி மறை மாநிலத்தின் கீழ் கன்னியாகுமரி மறைபரப்பு தளங்கள் செயல்பட்டு வந்தன். சங்கனாச்சேரி மறை மாநில ஆயர் மார் ஜோசப் பவ்வத்தில் அடிகளார் வழிநடத்துதலில் சிறப்பாக மறைத்தொண்டு பணிகள் நடைபெற்று வந்தது. 

இந்நிலையில் குமரி மாவட்ட மறைத்தொண்டு நிலையங்கள் இணைந்து 1996 -ம் ஆண்டு நவம்பர் 11 -ம் நாளில் தக்கலை மறைமாவட்டம் உதயமானது. தக்கலை மறைமாவட்டத்தின் முதல் ஆயராக மார் ஜார்ஜ் ஆலஞ்சேரி ஆண்டகை அவர்கள் 02.02.1997 அன்று பொறுப்பு ஏற்றார்கள். அவர்கள் தலைமையில் மறைமாவட்டம் உன்னத வளர்ச்சி கண்டது. கர்தினாலாக பதவி உயர்வு பெற்றபின் 29.12.2013 அன்று தற்போதைய ஆயர் மார் ஜாாஜ் ராஜேந்திரன், SDB அவர்கள் ஆயராக பொறுப்பு ஏற்றார்கள். அவர்கள் பணியில் மறைமாவட்டமானது பல நிலைகளில் புதிய இறைதொண்டு தளங்களை உருவாக்கி முப்பரிமாண வளர்ச்சி கண்டு வருகிறது. மறைமாவட்ட ஜுபிலியை முன்னிட்டு இவ்வாலயத்தில் பின்தங்கிய இரண்டு குடும்பங்களுக்கு வீடு கட்டி கொடுக்கப்பட்டது. 

வெள்ளி விழா தொடக்கம் - 1997:

1997 -ம் ஆண்டு பிப்ரவரி 16 -ம் தேதி பங்கின் கன்னியர் அருட்பொழிவு விழாவோடு, ஆலய வெள்ளி விழாவை அப்போதைய மேதகு ஆயர் மார். ஜார்ஜ் ஆலஞ்சேரி அவர்கள் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்கள். 28.11.1997 முதல் 7.12.1997 வரை வெள்ளிவிழா கொண்டாடப்பட்டது. 28.11.1997 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பித்த வெள்ளிவிழா நிறைவு விழாவில், நற்செய்தி கூட்டம், பங்கு தந்தையர் தினம், சிறுவர் தினம், இளைஞர் தினம், இணைபங்குகள் தினம், குடும்ப விழா ஆகியவை சிறப்பாக கொண்டாடப்பட்டது.

ஆலய வெள்ளி விழா நினைவாக, பங்கில் பணியாற்றிய அருட்தந்தை தோமஸ் முட்டத்துகுந்நேல் அடிகளார் பெயரில் நூலகமும், மறைந்த பங்குதந்தை. அருட்தந்தை மாத்தியூ வாக்கேயில் அடிகளார் பெயரில் கல்வித்தொகையும் உருவாக்கப்பட்டு இன்றளவும் செயல்பட்டு வருகிறது.

அருட்தந்தை. சிறியக்மாளியக்கல், அருட்தந்தை. லூக்காஸ் பீடியக்கல் அருள்தந்தை. அகஸ்டின் கொல்லப்பறம்பில், அருட்தந்தை. ஐசக்கொல்லாட்பள்ளி, அருட்தந்தை. ஆன்றணி போரூர்கரா அருட்தந்தை. ஜேம்ஸ் குந்தில், அருட்தந்தை. அலெக்ஸ் புத்தேட் ஆகியோர்கள் உதவி பங்கு தந்தையாக பணிபுரிந்தார்கள். அருட்தந்தை. ஜினோய் தோமஸ் பணிக்காலத்தில் அருட்தந்தை. ஜஸ்டின் செறுவேலில் அவர்கள் மூன்று மாதங்கள் பொறுப்பு பங்கு தந்தையாக பணியாற்றினார்கள்.

புனித வியாகப்பர் ஆலய பங்குதந்தையர்களும் இறைப்பணியும்:

அருட்தந்தை தோமஸ் முட்டத்துகுந்நேல் (1972-1976):

அப்போதைய சங்கனாச்சேரி மறை மாநில பேராயர். மார் ஆன்றணி படியறை ஆண்டகை அவர்கள் 1972 -ம் ஆண்டு நவம்பர் மாதம் 5-ம் தேதி இத்திருத் தொண்டு நிலையத்திற்கு வருகை தந்து முதன்முதலாக 64 நபர்களுக்கு திருமுழுக்கு வழங்கி சபையின் உறுப்பினர் ஆக்கினார்கள். தொடர்ந்து இறைப்பணியை அருட்பணி. தோமஸ் முட்டத்துகுந்நேல் அவர்கள் மிக வலுவாக அடித்தளமிட்டார்கள். அவர்களது பணிகாலத்தில் ஆலய வளர்ச்சி தொடக்க நிலையில் முன்னேறி சென்றது. 

அருட்தந்தை. மாத்தியூ வாக்கேல் (1976-1989):

அவர்களை தொடர்ந்து அருட்தந்தை. மாத்தியூ வாக்கேயில் அடிகளார் பங்கு தந்தையாக பொறுப்பு ஏற்றார்கள். அவர்களின் நேர்மையும், இறைப்பணியும் சேர்ந்து மாங்கரை வலியவிளையில் 3 ஏக்கர் 14 சென்ட் நிலம் வாங்கப்பட்டது. அதில் கட்டிடம் கட்டப்பட்டு இறைதொண்டு பணிகள் சிறப்பாக செயல்பட்டு வந்தது. அவர்கள் இறைபணியானது புனித வியாகப்பர் ஆலய வரலாற்றில் ஒரு மைல் கல்லாக அமைய பெற்றது. அருட்தந்தை. மாத்தியூ வாக்கேயில் அவர்கள் பொது போக்குவரத்தை பயன்படுத்தியும், நடந்தே வந்தும் இறைபணி செய்தவர். தொடக்க காலத்தில் ஏழை குடும்பங்களுக்கு இலவச ஆடுகளை வழங்கினார். படிக்க முடியாத மாணவர்களுக்கு கல்வியை ஊட்டியவர். பள்ளி குழந்தைகளுக்கு மதிய உணவை ருசித்து பார்த்து சத்துணவு அமைப்பாளர்களுக்கு ஆலோசனை கொடுப்பவர். நோய்பட்டவர்களுக்கு மத பாகுபாடின்றி உதவிகள் செய்தவர். மாணவர்கள் குடிநீர் தேவைக்காக கிணறு அமைத்து கொடுத்தவர். அவர்களின் கடின உழைப்பும், இறைபணியின் நேர்த்தியும், கண்டிப்பும், வழிநடத்துதலும், இறைமக்களிடையே மிகுந்த எழுச்சியையும், வரவேற்பையும் ஒருங்கே பெற்றது. பின்னர் மறை மாவட்ட குருகுல முதல்வராக உயர்த்தப்பட்டு இறைமக்களால் செல்லமாக சின்ன ஆண்டவர் என்று அழைக்கப்படலானார்கள்.

அருட்தந்தை பிலிப் கொடியந்தறா (1989-1997):

 இவரது எளிமையான இறைப்பணி இறைமக்களை அடுத்த நிலைக்கு உயர்த்தியது. இறை குடும்பங்களை பல மடங்காக திருச்சபையில் சேர்த்த பெருமைக்குரியவர். இவர்களது பணியில் பள்ளி மாணவர்களுக்கு கட்டிடம், மேற்படிப்பு படிக்க முடியாத மாணவ - மாணவியர்க்கு கல்வி உதவி தொகை வழங்கியது, ஏழை குடும்பங்களுக்கு வீடு கட்டி கொடுத்து, கழிவறை இல்லாத வீடுகளுக்கு கழிவறை அமைத்து கொடுத்தது, வின்சென்ட்-டி-பால் சங்கம் வழியாக கடனுதவி வழங்கியதுடன் ஜாதி, மதம் கடந்து சகோதரத்துவத்தை உருவாக்கியது பெருமைக்குரியவர். அருட்தந்தை. பிலிப்பு கொடியந்தறா அவர்களின் இறைப்பணியின் முக்கிய அம்சமாக கல்விப்பணி இருந்தது. மறைமாவட்ட அனைத்து தமிழ் வழி பள்ளிகளின் தாளாளராக பணியாற்றிய காலத்தில் இறைமக்களில் படித்தவர்களை பணியில் அமர்த்தி அழகு பார்த்தவர். பின்னாளில் மறைமாவட்ட குருகுல முதல்வராக உயர்வு பெற்றார் மற்றும் மறைமாவட்ட பரிபாலகராகவும் பணிபுரிந்தார். 

அருட்தந்தை. தோமஸ் தங்கராஜ் (1997-2000):

தொடர்ந்து அருட்தந்தை. தோமஸ் தங்கராஜ் அவர்கள் பங்குதந்தையாக பொறுப்பு ஏற்றார்கள். அவர்கள் பணி நாட்களில் புதிய ஆலய பணிகள் 25-7-1998 அன்று அடிக்கல் நாட்டப்பட்டு அடித்தள பணிகள் தொடங்கப்பட்டது. இவரது பணிகாலத்தில் அப்போதைய ஆயர் மார். ஜார்ஜ் ஆலஞ்சேரி அவர்கள் பங்கிலுள்ள அனைத்து குடும்பங்களுக்கும் சென்று மக்களை சந்தித்தார்.

அருட்தந்தை. ஜியோ சூழிக்குந்நேல் (2001-2006):

அருட்தந்தை ஜியோ சூழிக்குந்நேல் அவர்களின் சீரிய முயற்சியால் புதிய ஆலய பணிகள் வேகத்தோடு நடைபெற்றன. ஆலய பணிகளுக்காக பாலா மறைமாவட்ட நிதி உதவி மற்றும் MISSIONS OF ELRANGERES DE-PARIS, மற்றும் பங்கு மக்களின் நிதி உதவியோடு புதிய ஆலயத்தை கட்டி எழுப்பினார்கள். 2003 ஆகஸ்ட் 10- ம் தேதி தக்கலை மறைமாவட்ட ஆயர் மார்ஜார்ஜ் ஆலஞ்சேரி முன்னிலையில் பாலா மறைமாவட்ட ஆயர். Mar Joseph Pallikaparampil அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது. இந்நிகழ்வில் ஏராளமாக குருக்களும், கன்னியர்களும், இறைமக்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர். அருட்தந்தை ஜியோ சுழிக்குந்நேல் அவர்கள் இறைபணியில் நமது ஆலயத்தில் மிகவும் பின்தங்கிய 14 குடும்பங்களுக்கு இலவசமாக வீடுகள் கட்டி கொடுத்தார்கள். பள்ளி மாணவ மாணவியர்க்கு பள்ளி கட்டிடம், பள்ளி மற்றும் ஆலய வளாகங்களுக்கு சுற்றுசுவர் அமைத்தது. ஆலய வளாக விரிவாக்க நிலங்கள் வாங்கியது. பள்ளி முகப்பு அலங்கார வளைவு, கான்கிரீட் தளம் அமைத்தது போன்ற பணிகள் இவர்கள் இறைபணி நாட்களில் நடந்தேறின. ஆலயத்தில் முதல் பங்கு பிரதிமன்றம் அமைக்கப்பட்டது. ஆலய வளர்ச்சிக்காக பங்குமக்களை ஊக்கப்படுத்தும் பணியை திறம்பட செய்தார். அவர்களின் இறைபணி ஆலய வரலாற்றின் இன்னொரு மைல்கல் என்பது பொருத்தமானதே.

அருட்தந்தை . ஜாண் புதுமனை V.C (2006-2013):

தொடர்ந்து அருட்தந்தை. ஜாண் புதுமனை V.C. அவர்கள் பொறுப்பேற்றார்கள். அவர்களின் பணியில் பங்கு மக்களின் ஒத்துழைப்போடு குருசடி அமைக்க 10.05.2009 அன்று மேதகு ஆயர். ஜார்ஜ் ஆலஞ்சேரி அவர்கள் அடிக்கல் நாட்டினார்கள். பணிகள் முடிக்கப்பட்டு மூன்று மாடிகளை கொண்ட குருசடியை மேதகு ஆயர். அவர்கள் 18.07.2010 அன்று திறந்து வைத்தார்கள். உறவியங்களை முதன் முதலில் மறைமாவட்ட அளவில் நமது ஆலயத்தில் தொடங்கி மறைமாவட்ட உறவிய இயக்குநராக பொறுப்பேற்றார்கள். முதன்முதலில் முழுநேரமும் பங்குதளத்தில் தங்கி இறைபணி செய்தவர் இறைமக்களின் ஆன்மீக வளர்ச்சிக்காகவும் எழுச்சிக்காகவும் பாப்புலர் மிஷன் தியானம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. 

அருட்தந்தை. ஜினோய் தோமஸ் (2013-2015):

2013 -ல் பங்குதந்தையாக அருட்பணி ஜினோய் தோமஸ் பணி ஏற்றார்கள். ஆன்மீகத்தில் ஒரு எழுச்சியாக பாதுகாவலர் திருவிழாவில் முதன்முதலாக பாதுகாவலர் திருஉருவ பவனி நடத்தப்பட்டது. உறவியங்கள் வாயிலாக தவக்கால சிலுவைப்பாதை நடத்தப்பட்டது. ஆலயத்தின் முன்புறம் மற்றும் ஆலய அலங்கார வளைவு வரை அலங்கார தரை கற்கள் பதிக்கப்பட்டது. ஆலய முன்புறம் கல்குருசு அமைக்கப்பட்டது. அலங்கார வளைவு முதல் ஆலயம் வரை சாலை இருபுறமும் விளக்குகள் அமைக்கப்பட்டன. 2014 எப்ரல் 1-ல் மறைமாவட்ட ஐந்து திருத்தொண்டர்களின் பட்டமளிப்பு விழா மேதகு ஆயர். ஜார்ஜ் ராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இறைபணியோடு மறைமாவட்ட அச்சகமான புலரியின் இயக்குநராக திறம்பட பணி செய்தார்கள். இறை மக்களின் தமிழர் பண்பாட்டினை ஊக்குவிக்கும் விதமாக தமிழர் திருநாள் பொங்கல் விழாவை ஆலயத்தில் நடத்தி காட்டினார்கள். இவர்களின் இறைபணி இறைமக்களிடையே ஆன்மீகத்தில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியது எனலாம். அருட்தந்தை. ஜினோய் தோமஸ் பணிக்காலத்தில்..

அருட்தந்தை. ஜஸ்டின் செறுவேலில் அவர்கள் 3 மாதம் பொறுப்பு பங்குதந்தையாக பணிசெய்தார்கள். அவர்கள் பணிநாளில் ஆலய பயன்பாட்டிற்காக Inverter வாங்கப்பட்டது.

அலெக்ஸ் புத்தேட் (2015-2018):

அருட்தந்தை. ஜினோய் தோமஸ் உடன் இணைந்து உதவி பங்குதந்தையாக அருட்தந்தை. அலெக்ஸ் புத்தேட் அவர்கள் பணி செய்தார்கள். அவர்களின் முயற்சியால் புனித லூர்து மாதா கெபி பணிகள் தொடங்கப்பட்டு 2015 -ல் அர்ச்சிக்கப்பட்டது. உதவி பங்குத்தந்தையாக இருந்த அருட்தந்தை. அலெக்ஸ புத்தேட் அவர்கள் பங்குத்தந்தையாக பொறுப்பு ஏற்றார்கள். அவர்களின் இறைபணியில் ஆலயம் உள்பகுதி மேற்கூரை அமைக்கப்பட்டது. ஆலயத்தின் தரைதளம் வண்ணவிரிப்புகள் அமைக்கப்பட்டது. பங்கு தந்தையர் இல்லம், ஆலய அலுவலகம் அமைக்கப்பட்டது. இறைமக்களை விசுவாசத்தில் ஆழப்படுத்த Home mission தியானம் நடத்தப்பட்டது.

அருட்தந்தை. பிரின்ஸ் மாலியில்:

2018 முதல் அருட்தந்தை. பிரின்ஸ் மாலியில் பங்குதந்தையாக பணியாற்றி வருகிறார்கள். அவர்கள் பணியில் பங்குதந்தையர் இல்லம் முன்புறம் அலங்கார தரைகற்கள் பதிக்கப்பட்டது. இறைமக்கள் பயன்பாட்டிற்காக கழிவறை அமைக்கப்பட்டது. சுற்றுசுவர் இல்லாத பகுதிகளில் கம்பி வலை அமைக்கப்பட்டது. ஆலய உள்பகுதி சிறந்த முறையில் ஒலி அமைப்பு செய்யப்பட்டது. பங்கு தந்தை இல்லம் முன்புறம் வேளாங்கண்ணி மாதா சிற்றாலயம் அமைக்கப்பட்டு பங்குத்தந்தையால் அர்ச்சிக்கப்பட்டது. பொன்விழாவை முன்னிட்டு, ஆயத்த அறை, பீடம் புதுபித்தல், ஆலய வண்ணம் பூசுதல் பணிகள் நடைபெற்று 22.07.2022 அன்று மேதகு ஆயர் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது . 

Fr. பிரின்ஸ் மாலியில் அவர்களின் இறைபணியில் இறைமக்களை ஆன்மீகத்தில் வளர்ச்சி அடைய அதிக முயற்சிகள் எடுத்தார்கள் என்பது உறுதியானது. இறைமக்களை விசுவாசத்தில் ஆழப்படுத்த இறைவார்த்தை ஒளி பயணம் நிகழ்வு நடைபெற்றது.

தவக்கால நாட்களில் தினமும் காலை 5.45 மணிக்கு ஆலயத்தில் இறைமக்களுக்காக, சிலுவைபாதை, நற்கருணை ஆராதனை மற்றும் திருப்பலி ஒப்பு கொடுத்தார்கள். கிறிஸ்துபிறப்பு விழாவிற்கு ஆயத்தமாக உறவியங்கள் வாயிலாக நான்கு குடும்பங்களாக ஒப்புரவு வழங்கி அவர்களுக்காக திருப்பலி ஒப்பு கொடுத்தார்கள். 2019 -ம் ஆண்டு மறைக்கல்வியில் 5 -ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்க்கு 3 நாட்கள் ஆன்மீக கருத்தரங்கு நடத்தினார்கள்.

பொன்விழா தொடக்கம்:

28.11.2021 அன்று ஆலய திருவிழாவோடு பொன்விழா தொடக்கவிழா நடைபெற்றது. மறைமாவட்ட குருகுல முதல்வர் அருட்தந்தை. தோமஸ் பவ்வத்து பறம்பில் அவர்கள் குத்துவிளக்கேற்ற பங்குதந்தை அருட்தந்தை. பிரின்ஸ் மாலியில் முன்னிலை வகித்தார்கள். பொன்விழாவை முன்னிட்டு பாதுகாவலர் திரு உருவபடம், பொன்விழா மெழுகுவர்த்தி, ஜெப அட்டை ஒவ்வொரு குடும்பங்களுக்கும் வழங்கப்பட்டது.

மூத்த இறைமக்கள் இருவருக்கு (ஆண், பெண்) முதலில் வழங்கப்பட்டது. தொடர்ந்து எல்லா ஞாயிற்றுகிழமை திருப்பலி இறுதியில் பொன்விழா ஜெபம் ஜெபிக்கப்பட்டு வருகிறது. பொன்விழா விருது வாக்கு . 

"உங்கள் மன உறுதி நிறைவான செயல்களால் விளங்கட்டும். அப்பொழுது எக்குறையுமின்றி முற்றும் நிறையுள்ளவர்களாய் இருப்பீர்கள்.''

யாக்கோபு 1:4

பங்கின் பங்கேற்பு அமைப்புக்கள்:

1. மறைக்கல்வி 

2. புனித வின்சென்ட் தே பவுல்சங்கம் ஆண்கள் மற்றும் பெண்கள் 

3. மாதர் ஜோதிஸ்

4. சிறுபுஷ்ப மிஷன்லீக் 

5. மரியாயின் சேனை

6. இளைஞர் இயக்கம்

7. திருப்பணியாளர்கள் இயக்கம் 

8. குழந்தை ஈசோவியக்கம்

ஆலய வரலாறு: ஆலய பொன்விழா மலர்

புகைப்படங்கள்: பங்கு உறுப்பினர்