243 மறைசாட்சி தேவசகாயம் பிள்ளை திருத்தலம், நட்டாலம்


மறைசாட்சி தேவசகாயம் பிள்ளை திருத்தலம்

இடம் : நட்டாலம்

மாவட்டம் : கன்னியாகுமரி
மறை மாவட்டம் : குழித்துறை

நிலை : திருத்தலம்

திருத்தல அதிபர் : அருட்தந்தை ப. ரஸல் ராஜ்

இணை அதிபர் : அருட்தந்தை ஜஸ்டின் பிரபு

திருவிழா : ஜனவரி மாதத்தில் ஐந்து நாட்கள்.

திருவழிபாட்டு நேரங்கள் :

தினமும் மாலை 06.00 மணிக்கு திருப்பலி (ஞாயிறு, வெள்ளி தவிர்த்து)

ஞாயிறு மாலை 04.00 மணிக்கு திருப்பலி (மறை மாவட்டத்தின் ஒவ்வொரு பங்குதளங்களின் பங்கு மக்கள், பங்குத்தந்தையுடன் வந்து இத் திருப்பலியை சிறப்பிப்பார்கள்)

வெள்ளி காலை 10.00 க்கு ஜெபமாலை புகழ்மாலை, நவநாள், நற்கருணை ஆசீர் தொடர்ந்து திருப்பலி நடைபெறும்.

நட்டாலம் திருத்தல வரலாறு :

05-05-1976 : முதன் முதலாக மறைசாட்சி தேவசகாயம் பிள்ளையின் குடும்பத்தாரிடமிருந்து 14 சென்ட் இடம் அருட்தந்தை ஜோசப் அடிகளாரால் விலைக்கு வாங்கப்பட்டது.

30-12-1976 : இயேசுவின் திரு இருதயத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு சிற்றாலயம் மேதகு ஆயர் மரியானூஸ் ஆரோக்கியசாமி அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது. அதே நாளில் தேவசகாயம் பிள்ளையின் உறைவாள், கண்டக் கோடரி ஆகியவை சிற்றாலயத்தில் பராமரிப்பதற்காக அவரது குடும்பத்தினர் வழங்கினர்.

20-01-1977 : முள்ளங்கினாவிளை, நட்டாலம் பகுதியில் வாழ்ந்த பொதுநிலையினரை உள்ளடக்கி வளர்ச்சிக்குழு ஏற்படுத்தப் பட்டது.

12-04-1979 : 24 சென்ட் நிலம் விலைக்கு வாங்கப்பட்டது.

24-04-1980 : 12 சென்ட் நிலம் விலைக்கு வாங்கப்பட்டது.

05-03-1994 : மறைசாட்சி செபித்து வந்த இடத்தில் கல் குருசு நிறுவப்பட்டது.

26-12-2000 : 101 சென்ட் நிலம் விலைக்கு வாங்கப்பட்டது.

02-11-2001 : ஒன்றரை சென்ட் நிலம் விலைக்கு வாங்கப்பட்டது.

12-01-2002 : இரண்டரை சென்ட் நிலம் விலைக்கு வாங்கப்பட்டது.

05-06-2003 : ஏழரை சென்ட் நிலம் விலைக்கு வாங்கப்பட்டது.

20-01-2006 : தியான மையம் நிறுவப்பட்டது.

2007 ம் ஆண்டு : 15 சென்ட் நிலம் விலைக்கு வாங்கப்பட்டது.

09-05-2008 : புதிய தியான மையம் எழுப்பப்பட்டு, கோட்டாறு ஆயர் மேதகு பீட்டர் ரெமிஜியுஸ் அவர்களால் திறக்கப்பட்டது.

2009 ம் ஆண்டு : பதினேழரை சென்ட் நிலம் விலைக்கு வாங்கப்பட்டது.

2010 ம் ஆண்டு : ஏழரை சென்ட் நிலம் விலைக்கு வாங்கப்பட்டது.

2014 ம் ஆண்டு : ஏழரை சென்ட் நிலம் விலைக்கு வாங்கப்பட்டது.

30-10-2014 : திருத்தல முதல் அதிபராக (ஆன்மீக வழிகாட்டி) அருட்தந்தை S. மரியதாசன் நியமனம். அதிபர் இல்லக் கட்டுமானப் பணிகள் நடைபெற்றது.

10-06-2015 : இரண்டாம் அதிபராக அருட்தந்தை ஜெகன் போஸ் நியமனம்.

03-07-2015 : அதிபர் இல்லம் திறக்கப்பட்டது.

2015 ம் ஆண்டு : 35 சென்ட் நிலம் விலைக்கு வாங்கப்பட்டது.

மறைசாட்சி நினைவு இல்லம் மற்றும் செபத்தோட்டத்துக்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

23-05-2016 : மூன்றாம் அதிபராக அருட்தந்தை ப. ரஸல் ராஜ் நியமனம்.

2016 டிசம்பர் :

1.மேதகு ஆயர் ஜெறோம் தாஸ் அவர்களால் செபத்தோட்டம் அர்ச்சிக்கப்பட்டது.

2. மறை மாவட்ட நிதியுதவியுடன் புதிய கிணறு.

3. திருத்தல காணிக்கைகளைக் கொண்டு அதிபர் இல்லம் விரிவாக்கம் செய்யப்பட்டது.

4. ஆலய வளாகம் இன்டர்லாக் போடப்பட்டது.

08-01-2017 :

1. நன்கொடைகள், மறை மாவட்ட நிதியுதவியுடன் கட்டி முடிக்கப்பட்ட நினைவு இல்லமும், அருங்காட்சியகமும் ஆயர் மேதகு ஜெறோம் தாஸ் அவர்களால் திறந்து வைக்கப் பட்டது.

2. பெரிய கலையரங்கம், உணவுத் தயாரிப்புக் கூடம் மற்றும் உணவருந்தும் கூடம் பணிகள் நிறைவடைந்து திறக்கப்பட்டது.

3. ஒரு தனிநபர் நன்கொடையால் திருச்செபமாலைக் கொடிமரம் நிறுவப்பட்டு அர்ச்சிக்கப்பட்டது.

4. மறைசாட்சி தேவசகாயம் பிள்ளையின் குடும்பத்தார் பயன்படுத்திய கிணறு புனரமைக்கப் பட்டது.

23-04-2017 : திருப்பொருள் விற்பனை நிலையம் கட்டப்பட்டு அருட்தந்தை ஆன்றனி சேவியர் அவர்களால் மந்திரிக்கப் பட்டது.

17-06-2017 இத்தாலி நாட்டில் தோற்றுவிக்கப்பட்ட Congregation of the Sisters of Saint Antony of Padua அருட்சகோதரிகள் திருத்தலத்தில் திருப்பணி புரிவதற்காக வரவழைக்கப்பட்டனர். மேதகு ஆயர் ஜெறோம் தாஸ் அவர்கள் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்து.

14-01-2018 : பல தனிநபர், நிறுவனங்கள் மற்றும் குடும்பங்களின் நிதியுதவியுடன் திருச்சிலுவைப் பாதையின் 14 நிலைகள் நிறுவப்பட்டு, மேதகு ஆயர் ஜெறோம் தாஸ் தலைமையில் அருட்தந்தையர் ஜேசுதாஸ் தாமஸ், அனி சேவியர், அகஸ்டின், ஆன்றனி சேவியர், ப.ரஸல் ராஜ், கிறிஸ்டோபர், டோமி லிலில் ராஜா, ஆல்பின் ஜோஸ் ஆகியோர் திருச்சிலுவைப் பாதை நிலைகளை அர்ச்சித்தனர்.

23-04-2018 :

1.நன்கொடைகள் மற்றும் திருத்தல காணிக்கைகளைக் கொண்டு ஆலயத்தின் திருப்பீடம் புதுப்பிக்கப்பட்டு மேதகு ஆயர் ஜெறோம் தாஸ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.

2. மறை மாவட்ட நிதியுதவியுடன் நினைவு இல்ல வளாகம் சமப்படுத்தப்பட்டு, சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டு, நவீன கழிப்பறைகள் கட்டப்பட்டு திறக்கப்பட்டது.

3. தனி நிறுவனங்கள் நன்கொடையால் இரு நுழைவு வாயில்கள் வைக்கப்பட்டு திறக்கப்பட்டது.

4. அபுதாபி நாட்டின் முசபா பங்கைச் சார்ந்த தமிழ் மக்களின் நன்கொடையால் நிரந்தரக் குடில் அமைக்கப்பட்டு அர்ச்சிக்கப்பட்டது.

14-01-2019 :

1. இறைமக்கள் நன்கொடை மற்றும் திருத்தல காணிக்கையைக் கொண்டு திருச்செபமாலைத் தோட்டம் அமைக்கப்பட்டு மேதகு ஆயர் ஜெறோம் தாஸ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.

2. திருத்தல வரலாற்று குறிப்புகள் நிறுவப்பட்டன.

3. அதிபர் இல்லத்தை, அருட்சகோதரிகள் இல்லமாய் மாற்றும் திட்டத்துடன் புதிய அதிபர் இல்லத்துக்கான அடிக்கல் போடப் பட்டது.

இவ்வாறு நட்டாலம் திருத்தலமானது பல்வேறு நிலைகளில் வளர்ச்சி பெற்று காணப்படுகிறது.

தேவசகாயம் பிள்ளை வாழ்கை வரலாறு

பிறப்பு :

மறை சாட்சி தேவசகாயம் பிள்ளை இன்றைய குமரி மாவட்டத்திலுள்ள நட்டாலம் என்னும் கிராமத்தில் 1712ஆம் ஆண்டு, ஏப்ரல் 23 ஆம் நாளன்று நாயர் குலத்தில் பிறந்தார். இவரின் இயற்பெயர் நீலகண்ட பிள்ளை என்பதாகும்.

சிறுவயதிலேயே சமசுகிருதம், கலை ஆகியவற்றை படித்து அறிந்தார். பெரியவர் ஆனதும் வில் வித்தை, வர்ம கலைகள், போரிற்கான ஆயுதங்களைப் பயன்படுத்தும் முறைகளையும் படித்து அறிந்தார்.

அதன் பின்னர் இவர் மார்த்தாண்ட வர்மாவின் அரண்மனையான பத்மநாபபுரம் கோட்டையில் பணியில் அமர்த்தப்பட்டார். அதன் பின்பு இவருக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தில் திங்கள்சந்தைக்கு அருகே உள்ள மேக்கோடு என்னும் ஊரைச் சேர்ந்த பர்கவியம்மாளுக்கும் திருமணம் நடைபெற்றது.

மனமாற்றம் :

1741இல் குளச்சல் துறைமுகத்தைப் பிடிக்க வந்த டச்சு படைகள் மார்த்தாண்ட வர்மாவின் படைகளால் தோற்கடிக்கப்பட்டன. டச்சு படைத்தலைவரான கத்தோலிக்க மதத்தைச் சார்ந்த பெனடிக்டுஸ் தே டிலனாய் அவருடைய படைகளுடன் சிறைப்பிடிக்கப்பட்டார். இந்த வெற்றியின் நினைவாக நாட்டப்பட்ட தூண் இன்றும் குளச்சல் பகுதியில் இருக்கிறது.

நாளடைவில் இந்த டிலனாய், நீலகண்ட பிள்ளையின் நண்பரானார். ஒருநாள் நீலகண்ட பிள்ளை மிகுந்த சோகமாய் இருப்பதைக் கண்ட அவர் நலம் விசாரித்தார் . அப்போது நீலகண்ட பிள்ளை குடும்பத்தில் நிறைய துக்க காரியங்கள் நிகழ்ந்து கொண்டிருப்பதாகவும், தங்கள் கால் நடைகள் இறந்து போவதாகவும். பயிர்கள் நாசம் அடைந்து போவதாகவும், பொருளாதார ரீதியாகப் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அப்போது திருவிவிலியத்தில் உள்ள யோபுவின் கதையை சொல்லிக் கிறித்தவத்தை டிலனாய் அவருக்கு அறிமுகப்படுத்தினார். நாளடைவில் கிறித்தவத்தின் மீது நல்ல நம்பிக்கை வந்ததும் திருமுழுக்குப் பெற்று கிறித்தவராக நீலகண்ட பிள்ளை விருப்பம் கொண்டார்.

திருநெல்வேலி மாவட்டத்தின் வடக்கன்குளம் கத்தோலிக்க தேவாலயத்தின் பங்குத்தந்தையாகப் பணிபுரிந்த ஜோவான்னி பத்தீஸ்தா புத்தாரி நீலகண்ட பிள்ளைக்குத் திருமுழுக்கு வழங்கி, "தேவசகாயம்" என்னும் பொருள்தருகின்ற "இலாசர்" என்னும் பெயரைச் சூட்டினார்.

கத்தோலிக்க மதத்திற்கு மாறியதும் தேவசகாயம் பிள்ளை பலரிடமும் இயேசு கிறித்துவைப் பற்றி போதித்து, பலரை கிறிஸ்தவ மதத்திற்கு மனம் மாற்றினார். அவரின் மனைவியும் ஞானப்பூ எனும் பெயருடன் திருமுழுக்கு பெற்று கத்தோலிக்க கிறித்தவர் ஆனார்.

இறப்பு :

இவர் இந்து பாரம்பரிய நாயர் குடும்பங்களில் இருந்த மூட நம்பிக்கைகளை எதிர்த்தார். எனவே இவருக்கெதிராகப் பல பொய் குற்றச்சாட்டுகள் அரசாங்க அதிகாரிகளால் சுமத்தப்பட்டன. பலரும் அவரை மீண்டும் இந்து மதத்திற்கு மதம் மாறும்படி நிர்ப்பந்தித்தார்கள். மேலும் மிகக் கடுமையாக எச்சரிக்கப்பட்டார். கிறித்துவுக்காகத் தனது உயிரையும் கொடுக்க அணியமான தேவசகாயம் தம் கிறித்தவ விசுவாசத்தில் உறுதியாக இருந்தார்.

இதனால் கோபம்கொண்ட ராஜா மார்த்தாண்ட வர்மா அவரை மரண தண்டனைக்காகச் சிறையில் அடைத்தார். அவருடைய உடம்பில் கரும்புள்ளியும், செம்புள்ளியும் குத்தப்பட்டன. கைகள் பின்புறமாகக் கட்டப்பட்டு கழுத்தில் எருக்கம் பூ மாலை அணிவிக்கப்பட்டு எருமை மாட்டின் மீது பின்னோக்கி அமரவைத்து அவரைக் கேவலப்படுத்தும் படியாகவும் கிறிஸ்தவத்திற்கு மாறினால் இப்படித்தான் மற்றவருக்கும் இருக்கும் என்பதற்கு பாடமாகவும் அவரை ஊர்ஊராக அழைத்துச் சென்றார்கள்.

14, சனவரி, 1752-ஆம் ஆண்டு தென் திருவாங்கூர் மன்னராக ஆட்சி செய்த மார்த்தாண்ட வர்மா காலத்தில், குமரி மாவட்டத்தில், ஆரல்வாய்மொழியில் உள்ள காற்றாடி மலை என்னும் இடத்தில் தேவசகாயம் சுட்டுக் கொல்லப்பட்டார். தான் இறப்பதற்கு முன்பாகத் தன்னை சந்தித்த குருவிடமிருந்து நற்கருணை பெற்றுகொண்டார். தேவசகாயம் பிள்ளையின் உடல் காட்டிலேயே எறியப்பட்டது. குமரி மாவட்ட கத்தோலிக்க மக்கள் அவரது உடல் பகுதிகளை எடுத்து, நாகர்கோவிலில் உள்ள கோட்டாறு புனித சவேரியார் கோவிலில் அடக்கம் செய்தனர்.

புனிதர் பட்ட நடவடிக்கைகள்

தேவசகாயம் பிள்ளை கிறித்தவ மத நம்பிக்கையின் பொருட்டு கொல்லப்பட்டார் என்னும் செய்தி அடங்கிய அறிக்கையை அப்போது கொச்சி ஆயராக இருந்த கிளெமென்சு யோசப் என்பவர் 1756இல் உரோமையில் திருத்தந்தையிடம் கையளித்தார். இலத்தீன் மொழியில் எழுதப்பட்ட அந்த அறிக்கையும் அதன் ஆங்கில, தமிழ் மொழிபெயர்ப்புகளும் உள்ளன.

பின்னர் 1993இல் தேவசகாயம் பிள்ளைக்குப் புனிதர் பட்டம் அளிக்க முயற்சி மேற்கொள்வது பொருத்தம் என்று கருதி அதற்கான நடவடிக்கைகளைக் கோட்டாறு மறைமாவட்ட ஆயர் தொடங்கினார். அவரின் வேண்டுகோள்படி, 2004ஆம் ஆண்டு தமிழ் நாடு கத்தோலிக்க ஆயர் பேரவை, அகில இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையுடன் இணைந்து, தேவசகாயம் பிள்ளைக்குப் புனிதர் பட்டம் அளிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு, உரோமைத் தலைமைப் பீடத்துக்கு வேண்டுகோள் விடுத்தது.

இதன் முதல் படியாக இவர் இறை ஊழியர் என அறிவிக்கப்பட்டார்.

ஜூன் 2012இல் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட், தேவசகாயம் பிள்ளை உறுதியான விசுவாச வாழ்வு (heroic virtues) வாழ்ந்தார் என அறிக்கையிடும் புனிதர் பட்ட நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் பேராயத்தின் (Congregation for the Causes of Saints) ஆவணத்தில் கையொப்பம் இட்டு இவரைவணக்கத்திற்குரியவர் நிலைக்கு உயர்த்தினார்.

கேரளத்தைச் சார்ந்த புத்தன்பரம்பில் தொம்மச்சன் என்பவரும், குமரி மாவட்டத்தைச் சேர்ந்த தேவசகாயம் பிள்ளையும் துறவறத்தைத் தழுவியவர்கள் அல்ல, மாறாகப் பொதுநிலையினர் என்பது குறிப்பிடத்தக்கது.

மறைசாட்சி பட்டம் அளிக்கும் விழா

2012ஆம் ஆண்டு, திசம்பர் மாதம் 02 ஆம் நாள், தேவசகாயம் பிள்ளை அடக்கம் செய்யப்பட்டுள்ள கோட்டாறு மறைமாவட்ட சவேரியார் முதன்மைக் கோவிலை அடுத்துள்ள கார்மேல் மேனிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியின்போது தேவசகாயம் பிள்ளை "மறைச்சாட்சி" (martyr) என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். அப்போது அவருக்கு "முத்திப்பேறு பெற்றவர்" (Blessed) என்னும் பட்டமும் அளிக்கப்பட்டது. இது தொடர்பாகத் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் வெளியிட்ட அறிக்கையைத் திருத்தந்தை பதிலாளாகச் செயல்பட்ட கர்தினால் ஆஞ்செலோ அமாத்தோ வாசித்தளித்தார்.

இச்சிறப்பு நிகழ்ச்சிக்குத் தலைமைதாங்கிய கர்தினால் ஆஞ்செலோ அமாத்தோ என்பவர் உரோமையிலிருந்து கோட்டாற்றுக்கு வருகை தந்தார். அந்நிகழ்ச்சியில் தமிழகத்திலிருந்தும் இந்தியாவின் பிற பகுதிகளிலிருந்தும் பிற நாடுகளிலிருந்தும் பல கத்தோலிக்க சமயத் தலைவர்களும் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களும் கலந்துகொண்டனர்.

நட்டாலம் தேவசகாயம் பிள்ளை திருத்தலத்திற்கு ஏராளமான மக்கள் நாள்தோறும் வந்து தங்கள் தேவைகளை சொல்லி ஜெபித்து இறைவனின் ஆசீர்வாதங்களை பெற்றுச் செல்கின்றனர்.

இத் திருத்தலமானது மார்த்தாண்டம் - கருங்கல் சாலையில் நட்டாலம் பகுதியில் அமைந்துள்ளது.

மார்த்தாண்டத்திலிருந்து நட்டாலம், கருங்கல் வழியாகச் செல்லும் அனைத்துப் பேருந்துகளும் குறிப்பாக குளச்சல், திங்கள் நகர் (திங்கள்சந்தை), கடியப்பட்டினம், மேல்மிடாலம், குறும்பனை வழித்தட பேருந்துகளில் பயணித்து நட்டாலம் தேவசகாயம் பிள்ளை திருத்தலம் இருக்கும் இடத்தில் இறங்க வேண்டும்.