புனித சவேரியார் ஆலயம்
இடம்: சவேரியார்பாளையம், பேகம்பூர் அஞ்சல், திண்டுக்கல், 624002
மாவட்டம்: திண்டுக்கல்
மறைமாவட்டம்: திண்டுக்கல்
மறைவட்டம்: திண்டுக்கல்
நிலை: பங்குத்தளம்
கிளைப்பங்குகள்:
1. புனித அந்தோனியார் ஆலயம், அந்தோணியார் தெரு
2. புனித அந்தோனியார் ஆலயம், தோமையார்புரம்
3. புனித அந்தோனியார் ஆலயம், ஞானப்பிரகாசியார்புரம்
பங்குத்தந்தை அருட்பணி. அருள் ஜஸ்டின் திரவியம், SDB
உதவிப் பங்குத்தந்தையர்கள்:
அருட்பணி. செபாஸ்டின், SDB
அருட்பணி. ஆல்பர்ட், SDB
அருட்பணி. ரொசாரியோ, SDB
குடும்பங்கள்: 1200
அன்பியங்கள்: 37
வழிபாட்டு நேரங்கள்:
ஞாயிறு திருப்பலி காலை 06:00 மணி, காலை 08:30 மணி, மாலை 06:30 மணி
திங்கள், புதன் திருப்பலி காலை 06:00 மணி
செவ்வாய், வியாழன், வெள்ளி, சனி திருப்பலி மாலை 06:30 மணி
சிறப்பு வழிபாட்டுக் நிகழ்வுகள்:
வியாழன் குழந்தை இயேசு நவநாள், நற்கருணை ஆசீர்
முதல் வெள்ளி குணமளிக்கும் திருப்பலி, நற்கருணை ஆசீர்
ஒவ்வொரு மாதமும் 24 ஆம் தேதி சகாய மாதா நவநாள்
ஒவ்வொரு மாதமும் கடைசி தேதி தொன்போஸ்கோ நவநாள்
திருவிழா: டிசம்பர் மாதம் 03 ஆம் தேதியை மையமாகக் கொண்ட பத்து நாட்கள்.
மண்ணின் இறையழைத்தல்கள்:
1. அருட்பணி. T. ஜோசப் ராஜ், SDB
2. அருட்சகோதரி. J. ஷீலா, SCB
3. அருட்சகோதரி. J. விமலா, SAP
4. அருட்சகோதரி. A. எலிசா, SHM
5. அருட்சகோதரி. A. சாந்தா மேரி, MSI
6. அருட்சகோதரி. M. மரிய கார்மேல், அடைக்கல அன்னை கன்னியர் சபை
7. அருட்சகோதரி. ஜெயஷீலா, RMI
8. அருட்சகோதரி. அமலா அந்தோணி, RMI
9. அருட்சகோதரி. கவிதா, MSI
பங்கின் வரலாறு:
1910 ஆம் ஆண்டு; வெறும் காடாய் இருந்த இடத்தில், தோல் தொழிற்சாலைகளாக மட்டுமே காட்சியளித்த இடங்கள் தான், இன்று நாம் வெவ்வேறு பெயர்களை வைத்து அழைக்கும் சவேரியார் பாளையம், தோமையார் புரம், அந்தோணியார் தெரு மற்றும் ஞானப்பிரகாசியார் புரம் ஆகியன.
1910 களில் மேற்கூறிய நான்கு ஊர்களும் புதுத்தெரு (சவேரியார் பாளையம்), கரட்டு சாப் (தோமையர் புரம்), பொன்னபா சாப் (அந்தோனியார் தெரு), சுங்கத் தெரு (ஞானப்பிரகாசியார் புரம்) என்ற பெயர்களில் அழைக்கப்பட்டன. இவைதவிர மெத்தசாப் தெரு (பார்வதி கல்லூரி எதிரில்), தாண்டுகாலன்சாப் தெரு (சலீம் ராஜா டேனரி அருகில்) ஆகியவையும் அடங்கும். கிட்டத்தட்ட 110 தோல் தொழிற்சாலைகள் திருச்சி சாலை, நத்தம் சாலை, கரூர் சாலை மற்றும் பழனி சாலை ஆகிய பகுதிகளில் இருந்தன. அதிலும் குறிப்பாக தாழ்த்தப்பட்ட..!!! (கிறிஸ்துவில் சாதி வேறுபாடுகள் இல்லை) மக்கள் வாழும் பகுதிகளில் தான் இந்த தொழிற்சாலைகள் அனைத்தும் இருந்தன.
பெரும்பாலும் அனைத்துத் தோல் தொழிற்சாலைகளுக்கும் அருகாமையில் தொழிலாளர்கள் குடியிருப்புகள் அமைந்திருந்தன. இவையனைத்தும் அந்தந்த தொழிற்சாலைகள் முதலாளிகள் கையகப்படுத்தி வைத்திருந்த நிலப்பகுதிகளாகத் தான் இருந்தன. அப்படி நிலங்களை கையகப்படுத்தி வைத்திருந்த முதலாளிகளுள் சிலர் தற்போதைய 3-வது வீதியையும், அதற்கு பின்னால் உள்ள தெருவையும் உள்ளடக்கிய பகுதிகளை வைத்திருந்தனர். அப்போது பயன்பாட்டில் இருந்த கொத்தனார் சாப் மற்றும் மெத்தசாப் ஆகியவற்றில் வேலைசெய்யும் தொழிலாளர்களை குடியமர்த்த, ஒரு மனை ரூபாய் ஐந்துக்கு விற்றனர்.
அந்த மனைகளை வாங்கி தொழிலாளர்கள் முதலில் குடியேறிய பகுதிகளில் ஒன்று பழைய தெரு அல்லது கரட்டுசாப் தெரு (தோமையர் புரம்).
திரு. முனியன் மேஸ்திரியிடமிருந்து மனைகளை தொழிலாளர்கள் ரூபாய் ஐந்துக்கு வாங்கி, பின்னர் குடியேறிய பகுதிதான் புதுத்தெரு (சவேரியார் பாளையம்). இதனைத் தொடர்ந்து மக்கட்தொகை பெருக்கத்தினால், மக்கள் முட்டிக்குளம் மற்றும் மயானம் அமைந்திருந்த பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்து குடியேறினர். அந்தப்பகுதி தான் தற்போதைய நேருஜி நகர் ஆகும்.
1920 ஆம் ஆண்டில் சுமார் 110 க்கும் அதிகமாக இருந்த தோல் பதனிடும் தொழிற்சாலைகளில் தாழ்த்தப்பட்ட கிறிஸ்தவர்கள் அதிகமான எண்ணிக்கையில் வேலை செய்தனர். தேங்கிய கழிவு நீர் வாடையிலும், தோல் பதனிட பயன்படுத்தப்படும் அமிலங்களில் எந்த வித பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமலும், கூரிய கத்திகளைக் கொண்டு ஆபத்தான முறைகளில் கையாண்டு, இடுப்பளவு சுண்ணாம்பு குழிகளில் நின்று, சிறிய இடைவெளியில் சோளக் கஞ்சிகளை அரைவயிறு மட்டுமே குடித்துக் கொண்டு, உடம்பின் சக்திக்குமேல் உழைத்து, உழைப்பிற்கேற்ற கூலியும் இல்லாமல் பிழைப்பை நடத்திக் கொண்டிருந்தனர். பசியும் பஞ்சமும் வாட்டிய போதும்கூட அவர்கள் மதப்பற்றுதலிலும், விசுவாசத்திலும் மூழ்கிப் போயிருந்தனர்.
1923 ஆம் ஆண்டு ஊருக்குத் தென்புறமாய் ஒரு குருசடி (கூரையின்றி வெறும் திண்ணை) புனித அந்தோனியார் சுரூபம் வைக்கப்பட்டு மக்கள் ஜெபித்து வந்தனர். ஒவ்வொரு ஆண்டும் புனித சவேரியார் திருவிழாவின் போது பொதுமக்களுக்கு கஞ்சி ஊற்றி தேர் எடுத்து கொண்டாடி வந்தனர். எப்போதாவது ஊருக்குள் குருக்கள் வந்து மக்களை சந்தித்தனர். அப்படி வந்தவர்களில் அருட்பணி. ஓதிரான், SJ அவர்கள் மிகவும் முக்கியமானவர். இவரது தலைமையின் கீழ் குருக்கள் ஊருக்குள் வந்து மக்களுக்கு பாடல், செபம், பிரார்த்தனை ஆகியவற்றை சொல்லித் தந்தனர்.
1924 ஆம் ஆண்டு அருட்பணி. ஓதிரான் அடிகளாரிடம் தங்களுக்கு ஒரு ஆலயம் வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைக்க, 1924 ஆம் ஆண்டிலேயே ஆலயத்திற்கென நிலம் வாங்கி ஆலயம் கட்டும் பணியைத் துவங்கினார். ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் வீட்டுக்கு ஒரு ஆள் வீதம் வேலை செய்து 1926 ஆம் ஆண்டு ஓடுவேய்ந்த ஆலயத்தை கட்டி முடித்து, புனித சவேரியார் சுரூபம் வைத்து வழிபட்டு வந்தனர். திருப்பலியில் மக்கள் பங்கேற்று வந்தனர். இந்த ஆலயமானது பள்ளிக்கூடமாக செயல்பட்டு 1முதல் 5 ஆம் வகுப்பு வரை நடத்தப்பட்டு வந்தது. கன்னியர் மடம் ஏற்படுத்தப்பட்டு, தூய சவேரியார் பள்ளிக்கூடம் கட்டியபின் வகுப்புகளும் இங்கு மாற்றப்பட்டது.
1930 ஆம் ஆண்டு முதல் சவேரியார் பாளையம், தோமையார் புரம், அந்தோணியார் தெரு மற்றும் ஞானப்பிரகாசியார் புரம் ஆகிய நான்கு ஊர்களை உள்ளடக்கிய பகுதிகளில் வசித்த மக்கள் திண்டுக்கல் தூய வளனார் ஆலயத்திற்கு திருப்பலியில் பங்கேற்க சென்று வந்தனர். அப்போது இப்பகுதி தூய வளனார் பங்குடன் இணைந்திருந்தது.
இங்கிருந்து தூய வளனார் பங்கு மிகவும் தொலைவில் இருந்ததால், அருகில் உள்ள மேட்டுப்பட்டி பங்கிற்கு செல்ல இம்மக்கள் விரும்பியதால், அருட்பணி. தேவசகாயம் அடிகளார் தாம் பணிபுரிந்த மேட்டுப்பட்டி பங்குடன் ஆயரின் அனுமதியுடன் 1940 ஆம் ஆண்டு முதல் 4 ஊர்களையும் இணைத்துக் கொண்டார்.
1950 ஆம் ஆண்டுக்குப் பிறகு நேருஜி நகரில் மக்கள் வசிக்க ஆரம்பித்தனர். அங்கும் இடமில்லாதவர்கள் அருகில் இருந்த பகுதியான ஜீவா நகரில் குடியேறினர். அப்போதைய சவேரியார் பாளையம் பகுதியில் முதல் வீதி, 2,3 -வது வீதிகள் மற்றும் புஷ்பவனம், கிழக்குப் பகுதி முதலியன உள்ளடங்கியிருந்தன. இப்போதைய நேருஜி நகர் சகாயமாதாபுரம் ஜீவாநகர் முதலிய பகுதிகள் இல்லை, இவைகள் அனைத்தும் இப்போது உருவானவை.
ஆண்டுகள் பல கடந்ததால் ஆலயத்தின் மேற்கூரை மழைக்காலங்களில் ஒழுக ஆரம்பித்தது. இது குறித்து அப்போதைய பங்குத்தந்தை அருட்பணி. பீட்டர் ஜான் அவர்களிடம் மக்கள் மனு கொடுக்க, அவரும் ஆயரிடம் இது குறித்து தெரிவித்தார். தொடர்ந்து பணிபுரிந்த அருட்பணி. அமலதாஸ் அவர்கள், ஆயரிடம் நிதியுதவி பெற்றுக்கொண்டு பழைய ஆலயத்தை புதுப்பிக்கத் தொடங்கினார். 1992 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட புனரமைப்பு பணிகள் 1994 ஆம் ஆண்டு நிறைவு பெற்றது.
1995 ஆம் ஆண்டு ஏற்பட்ட சில அசம்பாவிதங்கள் காரணமாக மேட்டுப்பட்டி பங்கிற்கு திருப்பலியில் பங்கேற்கச் செல்வதில் தடங்கல்கள் ஏற்பட்டன. ஆகவே சவேரியார் பாளையத்தை தனிப்பங்காக மாற்றம் செய்ய வேண்டும் என்று நான்கு ஊர்ப் பெரியவர்களும் மேதகு ஆயர் கபிரியேல் லாரன்ஸ் அவர்களிடம் கோரிக்கை வைத்தனர். ஆகவே ஆயர் அவர்கள் இயேசு சபை குருக்களிடம் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை திருப்பலி நிறைவேற்றும் படி அனுமதி கடிதம் கொடுக்க, இயேசு சபை குருக்கள் சில மாதங்கள் வரை வந்து திருப்பலி நிறைவேற்றினர்.
பின்னர் மேதகு ஆயர் அவர்கள் 03.01.1996 அன்று அருட்பணி. மரிய லூயிஸ் அவர்களை அவர்களை பங்குத்தந்தையாக நியமனம் செய்தார். இவர் தூய வளனார் ஆலயத்தில் தங்கி இருந்து இங்கு பணி செய்து வந்ததால், மக்களை அடிக்கடி சந்திப்பது சிரமமாக இருந்தது. ஆகவே ஊர்ப் பெரியவர்கள் சவேரியார் பாளையத்தில் பங்குத்தந்தை இல்லம் கட்டுவது என தீர்மானம் செய்து, பங்குத்தந்தையின் மேற்பார்வையில் இல்லமும், ஆலயத்தைச் சுற்றி சுற்றுச்சுவரும் எழுப்பப்பட்டது.
அருட்பணி. அல்போன்ஸ் ராஜ் பணிக்காலத்தில் வெள்ளிக்கிழமை குழந்தை இயேசுவின் நவநாள் தொடங்கப் பட்டது.
1999 ஆம் ஆண்டு சவேரியார் பாளையம் பங்கின் பொறுப்பை, சலேசிய சபை குருக்கள் ஏற்றுக் கொண்டனர்.
அருட்பணி. சேவியர் ரோட்ரிக்ஸ் பணிக்காலத்தில் புதிய ஆலயம் கட்ட நிலம் வாங்கப்பட்டு 20.09.1999 அன்று பதிவு செய்யப்பட்டது.
24.09.1999 அன்று மேதகு ஆயர் பீட்டர் பெர்னாண்டோ அவர்களால் புதிய ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இதே நாளில் சலேசியர்கள் அதிகார பூர்வமாக சவேரியார் பாளையம் பங்கினை, ஆயர் பீட்டர் பெர்னாண்டோ அவர்களிடம் இருந்து பெற்றுக் கொண்டனர்.
2000 ஆம் ஆண்டு ஆலய மணிக்கூண்டு கட்டப் பட்டது.
2001 ஆம் ஆண்டு புதிய ஆலய கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன. பலருடைய அயராத உழைப்பாலும், செபங்களாலும், நன்கொடைகளாலும், பங்குப் பணியாளர் அருட்பணி. அடைக்கலராசா, ச.ச அவர்களின் வழிகாட்டுதலாலும் ஆலய கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்று, 16.01.2002 அன்று திருச்சி மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோனி டிவோட்டா அவர்களால் அர்ச்சிக்கப்பட்டு, திருச்சி சலேசிய மாநிலத் தலைவர் அருட்பணி. ஜேம்ஸ் தெயோபிலஸ் ச.ச அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இந்த மகிழ்வான தருணத்தில் இன்றும் உலக மக்கள் அனைவரையும், குறிப்பாக அநேகமான கிறிஸ்தவர்களையும் ஈர்த்த உலகப் புகழ் பெற்ற "நீயே நிரந்தரம்" இசைப்பேழையும், அன்பின் அதிர்வுகள் பாடல் புத்தகமும் வெளியிடப் பட்டன.
2004 ஆம் ஆண்டு ஆலய மேற்கூரையில் வர்ணகற்களானது பதிக்கப்பட்டு, வண்ணம் பூசப்பட்டது.
2005 ஆம் ஆண்டு "சமபந்தி" இசைப்பேழை வெளியிடப்பட்டது.
சலேசியர்கள் இந்தியா வந்ததன் நூற்றாண்டு நினைவாக, 2006 ஆம் ஆண்டு ஆலய வளாகத்தில் தூய தொன்போஸ்கோ கெபி கட்டப்பட்டது.
பழைய ஆலயத்தின் வெளிப்புறம் அரசின் அனுமதியுடன் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டு சவேரியார் பாளையம் தனிப்பங்கானதன் வெள்ளிவிழா சிறப்பாக கொண்டாடப் பட்டது. வெள்ளி விழா நினைவாக, வெள்ளிவிழா நினைவு நுழைவுவாயில் கட்டப்பட்டது.
பங்கின் வளாகத்தில் உள்ள கெபிகள்:
1. தூய தொன்போஸ்கோ கெபி
2. தூய ஜெபமாலை மாதா கெபி
3. மணிக்கூண்டு, தூய ஆரோக்கிய மாதா. இவ்வழியாகச் செல்லும் அனைவரும், இந்த ஆரோக்கிய மாதா கெபியில் வந்து ஜெபித்து செல்கின்றனர்.
பங்கின் பங்கேற்பு அமைப்புக்கள்:
1. பங்குப்பேரவை
2. பங்கு நிதிக்குழு
3. பங்கு செயற்குழு
4. பங்குப் பணிக்குழு
5. இளையோர் குழு
6. கல்லறை பராமரிப்பு குழு
7. ஞாயிறு மறைக்கல்வி
8. சலேசிய உடன் உழைப்பாளர்கள்
9. ஆத்மா சபை
10. மரியாயின் சேனை
11. புனித வின்சென்ட் தே பவுல் சபை
12. தொன்போஸ்கோ சேவை மையம்
13. பலிபீடச் சிறார்கள்
14. நற்செய்தி தம்பதியினர்
தொன்போஸ்கோ சேவை மையம்:
மகளிர் சுய உதவிக் குழுக்கள், தையல் பயிற்சி மையம், மாலைநேர பயிற்சி மையங்கள், பசுமை மன்றங்கள், குழந்தைகள் பாராளுமன்றம், சாரணர் இயக்கம்.
பங்கில் உள்ள துறவற சபைகள்:
1. அமலவை அவை அருட்சகோதரிகள்
2. அடைக்கல அன்னை அவை அருட்சகோதரிகள்
பங்கில் உள்ள பள்ளிக்கூடங்கள்:
1. தூய சவேரியார் நடுநிலைப் பள்ளி
2. லூர்து மாதா மெட்ரிகுலேஷன் உயர்நிலைப் பள்ளி
3. லூர்து அன்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளி
4. Bon Secours Arts and Science College
பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள் பட்டியல்:
1. அருட்பணி. மரிய லூயிஸ் (1996-1997)
2. அருட்பணி. அல்போன்ஸ் ராஜ் பிரபு (1997-1998)
3. அருட்பணி. அமலநாதன் (1998-1999)
4. அருட்பணி. சேவியர் ரோட்ரிக்ஸ், SDB (1999-2000)
5. அருட்பணி. அடைக்கல ராசா, SDB (2000-2003)
6. அருட்பணி. அகிலன் சற்பிரசாதம், SDB (2003-2006)
7. அருட்பணி. ரொசாரியோ பீரிஸ், SDB (2006-2007)
8. அருட்பணி. ஜெரால்டு பிரிட்டோ, SDB (2007-2010)
9. அருட்பணி. கே.சி. பிரான்சிஸ், SDB (2010-2011)
10. அருட்பணி. ஜோசப் டேனியல், SDB (2011-2016)
11.அருட்பணி. K. P. வின்சென்ட், SDB (2016-2018)
12. அருட்பணி. பெஞ்சமின் ஞானப்பிரகாசம், SDB (2018-2019)
13. அருட்பணி. அர்னால்டு மகேஷ், SDB (2019-2022)
14. அருட்பணி. அருள் ஜஸ்டின் திரவியம், SDB (2022---)
வழித்தடம்:
திண்டுக்கல் -மதுரை சாலையில் சவேரியார் பாளையம்.
மதுரையிலிருந்து நான்கு வழிச்சாலையில் இருந்து திண்டுக்கல் உள்ளே நுழையும் போது இவ்வாலயம் உள்ளது.
Location map: St. Xavier's Church, Saveriyarpalayam, Dindigul. 0451 240 1689
https://maps.app.goo.gl/T1RksNqzJUpmnmou7
ஆலய வரலாறு: பங்கின் வெள்ளி விழா மலர்
தகவல்கள்: உதவிப் பங்குத்தந்தை அருட்பணி. செபாஸ்டின், ச.ச அவர்கள்
தகவல்கள் சேகரிப்பில் உதவி: ஆலய உறுப்பினர் திரு. எட்வின் ராஜா
புகைப்படங்கள்: ஆலய உறுப்பினர் திரு. நிக்சன், John Prakash Prakash ஆகியோர்.