754 புனித காணிக்கை மாதா ஆலயம், பாலார் அணைக்கட்டு

     

புனித காணிக்கை மாதா ஆலயம்

இடம்: பாலார் அணைக்கட்டு, இலங்கை அகதிகள் முகாம், வாலாஜாபேட்டை 

மாவட்டம்: இராணிப்பேட்டை

மறைமாவட்டம்: வேலூர்

மறைவட்டம்: அரக்கோணம்

நிலை: கிளைப்பங்கு

பங்கு: புனித ஆரோக்கிய மாதா ஆலயம், இராணிப்பேட்டை

பங்குத்தந்தை: அருட்பணி. லியோ மரியஜோசப்

குடும்பங்கள்: 52

அன்பியங்கள்: 5

ஞாயிறு திருப்பலி காலை 06:30 மணி

திருவிழா: ஜனவரி மாதம் 24 ஆம் தேதி கொடியேற்றம். பிப்ரவரி மாதம் 02 ஆம் தேதி திருவிழா. 03 ஆம் தேதி விருந்து

வரலாறு:

1990 ஆம் ஆண்டு இலங்கை உள்நாட்டுப் போரின் காரணமாக, இலங்கை தமிழ் மக்கள் இந்திய நாட்டிற்கு அகதிகளாக வந்தனர்.‌ அவ்வாறு வந்தவர்களில் சில குடும்பங்களை, அன்றைய வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை நகராட்சிக்கு உட்பட்ட பாலார் அணைக்கட்டு பகுதியில் அரசு குடியமர்த்தியது.

1991 ஆம் ஆண்டு ஒருவித நோய் பரவலால் மக்கள் பாதிக்கப்பட, இறையன்னையின் உதவியை நாட, ஜெபமாலை ஜெபிக்க ஆவல் கொண்டு இராணிப்பேட்டை புனித ஆரோக்கிய அன்னை ஆலய பங்குத்தந்தை அருட்பணி. மார்ட்டின் அடிகளாரை, முகாம் இறைமக்கள் அணுகினர். உடனே அவர் இராணிப்பேட்டை பங்கில் மரியாயின் சேனையினர் ஜெபிக்க பயன்படுத்தி வந்த தூய அமலோற்பவ மாதா சொரூபத்தை வழங்கி விட்டு, ஜெபதேவை நிறைவேறிய பின்னர் சொரூபத்தை தம்மிடம் ஒப்படைக்குமாறு கூறி கொடுத்து விட்டார்.

தூய அமலோற்பவ மாதா சொரூபத்தை அணைக்கட்டு முகாமில் உள்ள ஒவ்வொரு இல்லங்களுக்கும் கொண்டு செல்லப்பட்டு ஜெபமாலை ஜெபிக்கப்பட்டது. அன்னை மாமரியின் வல்லமையால் நோய் பரவலும் முற்றிலும் நின்று போனது.

தூய அமலோற்பவ மாதாவின் சொரூபத்தை இராணிப்பேட்டை பங்குத்தந்தையிடம் ஒப்படைக்க வேண்டிய நாளும் வந்தது. ஆகவே அதற்கு முன்பாக மாதாவிற்கு விழா எடுத்து கொண்டாடி நன்றி தெரிவித்து விட்டு சொரூபத்தை கொடுக்கலாம் என்று தீர்மானித்தனர். பங்குத்தந்தை அருட்பணி. மார்ட்டின் அடிகளாரும் இதற்கு ஒப்புதல் அளித்தார். 

விழா அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டது. அருட்பணி. மார்ட்டின் அடிகளார் தூய காணிக்கை அன்னை என்று விழா அழைப்பிதழில் எழுதி அச்சிட்டு வழங்கியிருந்தார். இவ்வாறு இவ்வாலயம் புனித காணிக்கை மாதா ஆலயம் என பெயர் பெற்றது.

01.11.1991 அன்று முதல் ஆண்டுப் பெருவிழா சிறப்பாக நடைபெற்றது. விழா முடிந்த பின்னர் தூய அமலோற்பவ மாதா சொரூபத்தை இராணிப்பேட்டை பங்குத்தந்தையிடம் ஒப்படைக்க இருந்த நேரத்தில் ஏற்பட்ட சில முரண்பாடுகளால், சொரூபத்தை இங்கேயே வைத்துக் கொள்ளுமாறு கூறப்படுகிறது. ஆகவே இங்கு இருக்கும் செய்தித்தாள் வாசிக்க அமைக்கப்பட்டிருந்த குடிசையில் சொரூபத்தை வைத்து மக்கள் ஜெபித்து வந்தனர்.

1994 ஆம் ஆண்டு முகாமில் தங்கியுள்ள மக்களை பார்வையிட, அப்போதைய வேலூர் மறைமாவட்ட ஆயர் மேதகு சின்னப்பா ஆண்டகை வருகை புரிந்தார். அவரிடம் குடிசையை நீக்கிவிட்டு ஆலயம் அமைக்க விருப்பம் தெரிவிக்கப் பட்டது. உடனே ஆயரும் தமது ஆசியை வழங்கி ரூபாய் ஆயிரம் நிதியுதவியும் செய்தார்.

ஆலய கட்டுமானப் பணிகளானது முகாம் மக்களின் நிதி மற்றும் உடல்உழைப்புடன் கட்டப்பட்டு,  01.11.1998 அன்று மேதகு ஆயர் A. M. சின்னப்பா அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.

அருட்பணி. மார்ட்டின் அடிகளாரை தொடர்ந்து பணியாற்றிய அருட்பணி. ஜெயசீலன் அவர்கள் ஆண்டுப் பெருவிழாவை ஏற்கனவே கொண்டாடி வந்த நாளுக்குப் பதிலாக, பிப்ரவரி மாதம் 02-ம் தேதிக்கு (புனித காணிக்கை மாதா விழா) மாற்றம் செய்தார். மேலும் ஆலயத்தில் புனித காணிக்கை மாதா சொரூபம் இல்லாதிருந்ததால் புதிய சுரூபம் வாங்கப்பட்டு ஆலய பீடத்தில் நிறுவப்பட்டது.

தொடர்ந்து பங்குத்தந்தையர்களின் வழிகாட்டலில் ஆலயம் வளர்ச்சி பெற்று வந்தது.

அருட்பணி. இராயப்பன் பணிக்காலத்தில் ஆலயம் விரிவாக்கம் செய்யப்பட்டு, மேதகு ஆயர் சௌந்தரராஜூ அவர்களால் 02.02.2013 அன்று அர்ச்சிக்கப்பட்டது.

தற்போதைய பங்குத்தந்தை அருட்பணி. லியோ மரிய ஜோசப் அவர்களின் பெரும் முயற்சியாலும், முகாம் மக்களின் நிதியுதவிகளாலும் ஆலயம் அழகுற புனரமைக்கப்பட்டு, அழகிய மணிகோபுரமும் அமைக்கப்பட்டு 01.11.2020 அன்று வேலூர் மறைமாவட்ட பரிபாலகர் பேரருட்பணி. I. ஜான் இராபர்ட் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.

ஆலய பங்கேற்பு அமைப்புக்கள்:

1. மறைக்கல்வி

2. இளையோர் குழு

3. அன்பியங்கள்

வழித்தடம்: வாலாஜாபேட்டை பேருந்து நிலையத்திலிருந்து 2கி.மீ தொலைவில் பாலார் அணைக்கட்டு, இலங்கை அகதிகள் முகாம் உள்ளது.

Location map:

Our Lady of Presentation Church - Palar Anaicut - Walajapet

https://maps.app.goo.gl/CCFZkWY6xeQ8hUGm7