304 புனித செபஸ்தியார் ஆலயம், சடையம்பாளையம்

  
புனித செபஸ்தியார் ஆலயம்.

இடம் : சடையம்பாளையம், சேலம் - 638183

மாவட்டம் : சேலம்

மறைமாவட்டம் : சேலம்

மறைவட்டம் : திருச்செங்கோடு

நிலை : பங்குத்தளம்

பங்குத்தந்தை : அருட்பணி. S. இருதயசெல்வம்

குடும்பங்கள் : 444

அன்பியங்கள் : 15

திருவழிபாட்டு நேரங்கள் : 

ஞாயிறு : காலை 08.00 மணிக்கு திருப்பலி

திங்கள், புதன், வெள்ளி : காலை 06.30 மணிக்கு திருப்பலி

செவ்வாய், வியாழன், சனி : மாலை 06.30 மணிக்கு திருப்பலி

பௌர்ணமி : மாலை 06.30 மணிக்கு திருப்பலி

ஞாயிறு : காலை 06.00 மணிக்கு புனித வனத்து சின்னப்பர் சிற்றாலயத்தில் திருப்பலி

அமாவாசை : மாலை 05.30 மணிக்கு புனித வனத்து சின்னப்பர் சிற்றாலயத்தில் திருப்பலி

திருவிழா : ஜனவரி 20-ஆம் தேதி

மண்ணின் இறையழைத்தல்கள்:

1. அருட்தந்தை. சாலமன் 

2. அருட்தந்தை. பிரசன்னா 

மற்றும் பத்துக்கும் மேற்பட்ட அருட்சகோதரிகள்.

வழித்தடம் :

சேலம் - சங்ககிரி - குமாரபாளையம். குமாரப்பாளையத்திலிருந்து 4கி.மீ தொலைவில் சடையம்பாளையத்தில் புனித செபஸ்தியார் ஆலயம் அமைந்துள்ளது.

சடையம்பாளையம் திருஅவையின் வரலாறு :

சடையம்பாளையம் திருஅவை ஏறக்குறைய 225 ஆண்டு கால வரலாறு கொண்டது. கி.பி.1665 ஆம் ஆண்டு அருட்பணி. மனுவேல் தே பிரிட்டோ அடிகள் கொங்குப்பட்டி, அணைக்கரைப்பாளையம் (தற்போது எடப்பாடி) ஆகிய பகுதிகளைக் கண்காணித்து வந்தார். அப்போது சங்ககிரி துர்க்கம் பகுதியில் கிறிஸ்துவர்கள் இருந்தனர். கி.பி.1679 ஆம் ஆண்டு அணைக்கரைப்பாளையத்திற்கு ஏழு கிளைப்பங்குகள் இருந்தன. அவற்றில் ஒன்று சங்ககிரி துர்க்கம். கி.பி.1679 ஆம் ஆண்டு அருட்பணி. அமாதியோ அடிகள் வெள்ளாண்டிவலசைக்கு வருகை புரிந்தார். அங்கிருந்து கொங்கு மூப்பர்கள் இருந்த ஒரு கிராமத்திற்கு சென்று நோயில்பூசுதல் என்ற அருட்சாதனம் வழங்கினார். கொங்கு மூப்பர்கள் "கொங்கு சாணார்" என்றும் அழைக்கப்பட்டனர். 

கி.பி.1794 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மேதகு. ஷம்பனுவா சங்ககிரி துர்க்கத்தை விசாரணை செய்தார். (சங்ககிரி துர்க்கம் என்பது சங்ககிரி, காட்டேரி (சடையம்பாளையம்) மற்றும் அருகில் இருந்த ஊர்களை உள்ளடக்கியது.)

கி.பி.1795 ஆம் ஆண்டு அருட்பணி. அந்தோணிசாமி அவர்கள் சேலம் மாவட்டம் முழுவதிலும் இருந்த திருஅவையை கண்காணித்து வந்தார். அவர் நற்செய்தி பணியோடு பல சமூகப் பணிகளையும் செய்து வந்தார். எனவே, சங்ககிரி துர்க்கம் பகுதியில் அம்மை நோயால் பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் நோய் தடுப்பு முயற்சிகளை மேற்கொண்டார். இந்தியாவில் அம்மை நோய்க்கு தடுப்பூசி போடும் முறையை முதன்முதலாக ஆரம்பித்தவர் இவரே. எனவே, அம்மை நோய்க்கு தடுப்பூசி போடும் அதிகாரத்தை அப்போதைய ஆங்கில அரசிடம் இருந்து பெற்றிருந்தார். அவர் சங்ககிரி பகுதியில் பணியாற்றிய பொழுதுதான் பல பகுதிகளிலிருந்து (திருநெல்வேலி நாடு, பருத்திப்பள்ளி நாடு, வேம்ப நாடு, வெள்ளோடு, குமரை நாடு) பஞ்சம் பிழைக்க வந்த பனை தொழில் செய்யும் கொங்கு மூப்பர்களுக்கு சடையம்பாளையம் (காட்டேரி) பகுதியில் குடியேற்றங்களை ஏற்படுத்தினர். 

கி.பி.1845 ஆம் ஆண்டு பவானி அருகே காவிரி ஆற்றின் மேல் பாலம் கட்டியபொழுது சாரம் கட்டுவதற்காக அதிகமாக பனைமரங்கள் வெட்டப்பட்டன. எனவே, தொழில் வாய்ப்பு குறைந்ததால் மூப்பர்கள் பலர் நகலூர் பகுதிக்கு சென்றுவிட்டனர்.

அருட்பணி. மகிமைநாதர் அவர்கள் கி.பி.1846 ஆம் ஆண்டு முதன்முதலில் சடையம்பாளையத்தில் (காட்டேரி) கிறிஸ்துவர்களுக்கான ஒரு நிர்வாக மையத்தை ஏற்படுத்தினார். சடையம்பாளையத்தில் இருந்த கொங்கு மூப்பர்கள் தங்கள் எளிய மிகச்சிறிய செபக்கூடத்தை மறைபரப்பு சபையின் பொறுப்பில் ஒப்படைத்தனர்.

கிறிஸ்துவ மணமகன்களுக்கு போதுமான மணமகள்கள் தங்களிடையே இல்லாத காரணத்தால் தங்கள் இனத்தைச் (மூப்பர்கள்) சார்ந்த இந்து பெண்களுக்கு திருமுழுக்கு கொடுத்து தங்கள் மகன்களுக்கு திருமணம் செய்து வைத்தனர். கி.பி.1856 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் சடையம்பாளையத்தில் (காட்டேரி) திருமுழுக்கு கொடுத்ததற்கான பதிவு எடப்பாடியில் உள்ள பதிவேட்டில் உள்ளது.

கி.பி.1872 ஆம் ஆண்டு ஏப்ரல் - ஜூலை மாதங்களில் பாண்டிச்சேரி ஆயர் மேதகு லவுனோன் அவர்கள் இப்பகுதியில் விசாரணை மேற்கொண்டார். அப்போது சடையம்பாளையத்தில் மிகச்சிறிய ஒரு செபக்கூடம் (கோவில்) இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. அருட்பணி. தானியேல் (1889-1896) அவர்கள் பணியாற்றிய காலத்தில் சடையம்பாளையத்திலிருந்த பழைய செபக்கூடம் (கோவில்) தீயில் எறிந்துவிட்டதால் ஒரு நிலத்தை வாங்கி புதிய கோவிலுக்கு அடித்தளமிட்டார். ஆனால், கோவிலை முழுமையாக கட்டிமுடிக்கவில்லை. அவருக்கு பிறகு பொறுப்பேற்ற அருட்பணி. ஓவே (1896-1898) அவர்கள் நாகமரை என்ற கிராமத்தில் புதிய கிறிஸ்துவர்களால் நிராகரிக்கப்பட்ட கோவிலின் கூரையை எடுத்து வந்து சடையம்பாளையம் கோவிலுக்கு கூரை வேய்ந்தனர். 

அருட்பணி. அந்தோணிநாதர் அவர்கள் 02.10.1926ல் கத்தேரி கிராமம் சடையம்பாளையத்தில் 62 1/2 × 62 1/2 முழம் அளவுள்ள ஒரு நிலம் வாங்கினார் (கிரையம் செய்யப்பட்டது). இங்கு ஒரு கூரை (கீத்து) கோவிலைக் கட்டினார். இந்த கோவிலின் வெளி அளவு 38 1/2 அடி நீளம் 15 அடி அகலம் என்றும் வராண்டா 15 அடி நீளம் 8 1/2 அடி அகலம் என்றும் திரு.லூர்துசாமி பிள்ளை ஆசிரியர் 19.11.1933ல் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இதுவே கோவிலாகவும் பள்ளிக்கூடமாகவும் பயன்படுத்தப்பட்டது. இந்த பள்ளியில் திரு. லூர்துசாமி பிள்ளை என்பவர் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இந்த கோவில் 27.08.1940ல் சமூக விரோதிகளால் தீயிட்டு எறிக்கப்பட்டது. எனவே, அருகிலேயே வேறு ஒரு ஓலைக்குடிசை கோவில் கட்டப்பட்டது. இதுவும் கோவிலாகவும் பள்ளிக்கூடமாகவும் பயன்படுத்தப்பட்டது.

21.02.1938 ஆம் ஆண்டு பல்லக்காப்பாளையம் என்ற கிராமத்தில் மேதகு ஆயர் ஹென்றி புரூனியர் பெயரில் 35 × 35 முழம் அளவுள்ள நிலம் வாங்கப்பட்டது. அங்கு ஒரு சிறிய கோவிலும் அருட்பணியாளர் தங்குமிடமும் கட்டப்பட்டது. 27.01.1946ல் அருட்பணி. ரிகோட்டியர் அவர்கள் சடையம்பாளையத்தில் தங்கி பணியாற்றியதை பற்றி அறிக்கை ஒன்று கொடுத்திருக்கிறார். 27.02.1947ல் கிறிஸ்துவ நெசவு தொழிலாளர்கள் சங்கத்தின் President Mr. K. S. Sebastian என்பவர் சடையம்பாளையத்தில் நிரந்தரமாக ஒரு குருவானவரை நியமிக்க வேண்டுமென்று சங்கத்தின் சார்பாக மேதகு ஆயருக்கு விண்ணப்பம் அனுப்பியுள்ளார். இக்காலகட்டத்தில் பனைத்தொழில் நலிவுற்றதால் மக்கள் தங்கள் முன்னோர் செய்த தொழிலை விட்டுவிட்டு நெசவு தொழிலை கற்றுக் கொண்டனர். தறிக்குழி அமைத்து கை நெசவு செய்து பிழைத்து வந்தனர். ஒரு சிலர் முடிந்த அளவு நிலம் வாங்கி விவசாயம் செய்யவும் ஆரம்பித்தனர். 

29.07.1954ல் அருட்பணி. P. A. சக்கரையாஸ் அடிகள் எழுதியுள்ள கடிதத்தில் தனது இருப்பிடத்தை சடையம்பாளையத்திலிருந்து பல்லக்காப்பாளையத்திற்கு மாற்றிக் கொள்வதாகக் குறிப்பிட்டிருக்கிறார். காரணம், "சடையம்பாளையத்தில் காலை 05.00 மணிக்கு திருப்பலியை முடித்துவிட்டு 15 மைல் சைக்கிளில் சங்ககிரி சென்று திருப்பலி நிறைவேற்ற வேண்டும். ஆனால், சடையம்பாளையத்தில் மிக சிலர் மட்டுமே திருப்பலிக்கு வருகின்றனர். எனவே, பல்லக்காப்பாளையத்தில் தங்கி திருப்பலி முடித்துக்கொண்டு சங்ககிரி செல்வது சுலபமாக இருக்கும்" என்பதாகும். 

பெருந்தலைவர் காமராசர் முதலமைச்சராக இருந்தபோது 1953 ஆம் ஆண்டு விவசாயிகளின் பாசன வசதிக்காக மேட்டூர் தண்ணீரைக் கொண்டு வர வாய்க்கால் கட்டப்பட்டது. ஆனால் வாய்க்காலில் தண்ணீர் வந்தபொழுதெல்லாம் தறி குழியில் தண்ணீர் கசிந்து நெசவு தொழில் பாதிப்படைந்தது. எனவே, தொழில் பாதிப்படையாமல் இருக்க மக்கள் மேடான பகுதிக்குக் குடியேறினர். 

இப்பொழுது கோவிலும் பள்ளிக்கூடமும் இருக்கும் இடம் (1.15 சென்ட்) 06.05.1957 ஆம் ஆண்டு வாங்கப்பட்டது. அருட்பணி. அந்தோனி களத்தில் (1956-1962) பணிக்காலத்தில் அந்த இடத்தில் 1959 ஆம் ஆண்டு ஒரு ஓட்டுக்கட்டிடம் கட்டப்பட்டது. அதுவே ஏறக்குறைய பத்து ஆண்டுகள் கோவிலாகவும் பள்ளிக்கூடமாகவும் பயன்படுத்தப்பட்டது. சில ஆண்டுகள் அருட்பணியாளர்கள் தங்கும் இல்லமாகவும் இருந்தது. 

1968 ஆம் ஆண்டு எடப்பாடி பங்குத்தந்தை அருட்பணி. K. P. சுவக்கின் அவர்களின் மேற்பார்வையில் அருட்பணி. கோலாஸ் அடிகள் புதியதாக கோவிலைக் கட்டினார். அது முழுவதும் கருங்கல்லால் கட்டப்பட்டதாகும். மேற்கூரை சிமெண்ட் அட்டையால் வேயப்பட்டது. இந்த கோவில் கட்டும் வரையிலும் சடையம்பாளையம் எடப்பாடி பங்கின் கிளைப்பங்காகவே இருந்தது. கோவில் கட்டிய பிறகு அருட்பணி. கோலாஸ் அடிகள் இங்கேயே தங்கியிருந்து 1969 ஆம் ஆண்டு மார்ச் முதல் 1972 ஆம் ஆண்டு ஏப்ரல் வரை பொறுப்பு பங்குத்தந்தையாக பணியாற்றினார். 

1968 ஆம் ஆண்டு கட்டப்பட்ட ஆலயம் ஏறக்குறைய 50 ஆண்டுகள் மக்கள் பயன்பாட்டில் இருந்தது. இது ஒழுங்கற்ற கருங்கல்லைக் கொண்டு சுண்ணாம்பு காரையால் கட்டப்பட்டது. எனவே, காலப்போக்கில் இந்த ஆலயத்தின் சுவர்கள் வலுவிழந்துவிட்டன. மேற்கூரையும் (சிமெண்ட் அட்டை) மழை, வெயில் ஆகியவற்றால் பழுதுபட்டது. மக்களின் எண்ணிக்கை அதிகமானதால் இடப்பற்றாக்குறை ஏற்பட்டது. எனவே, ஒரு புதிய கோவில் கட்ட முடிவு செய்யப்பட்டது. 

ஆகவே, அருட்பணி. குருசடி சகாயராஜ் (2014-2018) அவர்களின் பணிக்காலத்தில் 02.08.2017 அன்று பழைய கோவில் முழுமையாக இடிக்கப்பட்டது. 21.08.2017 அன்று புதிய கோவிலுக்கு அடித்தளமிடப்பட்டு பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தது. கட்டிட வேலைகள் முழுமை பெறுவதற்கு முன்பாகவே அருட்பணி. குருசடி சகாயராஜ் அவர்கள் பணியிட மாற்றம் பெற்றார். அடுத்து வந்த அருட்பணி. S. இருதயசெல்வம் அவர்களின் மேற்பார்வையில் பணிகள் தொடர்ந்து நடைபெற்றன. ஓர் அழகிய ஆலயம் கட்டிமுடிக்கப்பட்டு 14.11.2018 அன்று இவ்வாலயம் சேலம் மறைமாவட்ட ஆயர் மேதகு செ. சிங்கராயன் அவர்களால் புனிதப்படுத்தி திறந்து வைக்கப்பட்டது. 

மேலும், அருட்பணி. குருசடி சகாயராஜ் அவர்களின் பணிக்காலத்தில் பழைய / பூர்வீக சடையம்பாளையத்தில் புனித வேளாங்கண்ணி அன்னைக்கு சிற்றாலயம் எழுப்பி முதல் சனிக்கிழமை தோறும் சிறுதேர்பவனியும் திருப்பலியும் தொடங்கி வழிவகுத்தார். இச்சிற்றாலயத்தில் செப்டம்பர் மாதம் அன்னை வேளாங்கண்ணி திருவிழா கொண்டாடப்படுகிறது. சிறப்பாக, பங்கின் 50 ஆண்டுகள் பழைமையான பழைய ஆலயத்தின் கோபுரத்தில் இருந்த சிலுவையானது புனித வேளாங்கண்ணி அன்னை சிற்றாலயத்தின் கோபுரத்தில் வைக்கப்பட்டது.

சடையம்பாளையம் அதிகாரப்பூர்வமாக 1970 ஆம் ஆண்டு மே மாதம் தனிப்பங்காக நிறுவப்பட்டது. அப்போதிலிருந்து பல அருட்பணியாளர்கள் பங்கில் பணியாற்றி மக்களை இறைவிசுவாசத்தில் வளரச் செய்து, பங்கின் வளர்ச்சிக்காக பல வகையில் உழைத்துள்ளனர். இவர்களின் கடின உழைப்பால் பங்கில் பல வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.

ஆலயத்தில் உள்ள புனித செபஸ்தியார் திருச்சுரூபம்: 

அருட்பணி. அருள்சாமி‌ அவர்கள் முதல் பங்குத்தந்தையாக பணிப்பொறுப்பேற்று ஆலயத்தின் திருத்தூயகத்தை அழகுற புதுப்பித்தார். ஆலயத்தில் வைக்க புனித செபஸ்தியாரின் திருச்சுரூபமானது ஆத்தூரைச் சேர்ந்த திரு. குழந்தை சிற்பி அவர்களால் வடிவமைக்கப்பட்டு திருத்தூயகத்தில் நிறுவப்பட்டது. பழைய ஆலயம் இடிக்கப்பட்டபோது அந்த சுரூபமானது தனியாக அறுத்து எடுக்கப்பட்டு புதிய ஆலயத்தின் திருத்தூயகத்தில் புனிதரின் சுரூபம் நிறுவப்பட்டது.

R. C நிதியுதவி துவக்கப்பள்ளி : 

அருட்பணி. பொனிபண்ட் அவர்கள் 02.10.1926ல் தற்போதைய பழைய சடையம்பாளையத்தில் நிலம் வாங்கினார். அதில் ஒரு கீத்தாலான கோவில் கட்டினார். அதுவே, கோவிலாகவும் பள்ளிக்கூடமாகவும் பயன்படுத்தப்பட்டது. அது ஓராசிரியர் பள்ளியாக செயல்பட்டது. திரு. லூர்துசாமி அவர்கள் ஆசிரியராகப் பணியாற்றினார்.

கோவிலாகவும் பள்ளிக்கூடமாகவும் செயல்பட்டு வந்த கீத்து கூரை கட்டிடம் 27.08.1940 அன்று சமூக விரோதிகளால் தீயிட்டு எறிக்கப்பட்டது. ஆனாலும் கல்விப்பணி தொடர்ந்து செயல்பட்டது.

1950 வரை இப்பள்ளி ஏறக்குறைய 20 ஆண்டுகள் அரசு அங்கீகாரம் இல்லாமல் ஓராசிரியர் பள்ளியாகவே செயல்பட்டு வந்தது. 19.06.1950 அன்று திரு. சாமிநாதன் மற்றும் திரு. சுப்புராயபிள்ளை ஆகிய இருவருடன் அரசு உதவிபெறும் பள்ளி ஆரம்பிக்கப்பட்டது. (அப்போது பள்ளியில் மாணவர் எண்ணிக்கை 40 பேர்). 28.10.1952ல் தமிழக அரசு பள்ளிக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்கியது. 1979 வரை இரண்டு ஆசிரியர்கள் மட்டுமே கல்வி பணியாற்றி வந்தனர். பிறகு மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப ஆசிரியர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. 1950 ஆம் ஆண்டிலிருந்து பழைய சடையம்பாளையத்தில் செயல்பட்டு வந்த பள்ளி, 1959 ஆம் ஆண்டு இப்போது இருக்கும் வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது. 

புதுவை மாதா இருதய சபையைச் சார்ந்த அருட்சகோதரிகள் ஜூன் 1974 ஆம் ஆண்டு முதல் ‌ மே 2012 வரை பள்ளியில் தலைமை ஆசிரியராகவும் உதவி ஆசிரியராகவும் பணியாற்றினார். 06.06.2012 முதல் திரு. அலெக்சாண்டர் அவர்கள் பள்ளியின் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இப்பொழுது பள்ளியின் மாணவர் எண்ணிக்கை 410. 

1982ஆம்‌ ஆண்டு அருட்பணி. M. S. ஜோசப் அவர்களால் இரண்டு வகுப்பறைகளும், 2000ஆம் ஆண்டு அருட்பணி. கிரகோரி ராஜன் அவர்களால் நான்கு வகுப்பறைகளும், 2002 மற்றும் 2005ஆம் ஆண்டுகளில் அருட்பணி. சார்லஸ் அவர்களால் ஆறு வகுப்பறைகளும், 2012ஆம் ஆண்டு அருட்பணி. ஆனந்தராஜ் அவர்களால் சத்துணவு கூடம் (தன்னிறைவுத்திட்டம்) கட்டப்பட்டது. 

கன்னியர் இல்லம் - மருத்துவமனை : 

அருட்பணி. அருள்சாமி அவர்களின் முயற்சியால் பங்கில் நற்செய்தி பணியாற்றவும், மக்களுக்கு மருத்துவப்பணியாற்றவும் பள்ளியில் கல்விப்பணி செய்யவும் அருட்சகோதரிகள் தேவை என்பதை உணர்ந்த அருட்தந்தை அவர்கள், 13.07.1973ல் சின்னப்ப நாடார் குமாரர் இன்னாசிமுத்து, சின்னப்ப நாடார் குமாரர் செபஸ்தியான், பெரியாக் கவுண்டர் குமாரர் செங்கோட கவுண்டர், பெருமாள் கவுண்டர் மனைவி பெருமாயி என்பவர்களிடமிருந்து சட்ட எண் 202/2Aல் 0.74 சென்ட் நிலத்தை தான சாசனமாக பெற்றார். இந்த நிலம் "RC கிறிஸ்துவர் சர்ச்சின் பொது காரியங்களுக்காக, ஒரு நல்ல காரியத்திற்காக, RC கிறிஸ்துவ சர்ச்சின் பொது ஸ்தாபனத்தில் செய்து வரும் நல்ல காரியங்களுக்காக" தான சாசனம் செய்யப்பட்டுள்ளது.

அருட்பணியாளர் புதுவை மாதா இருதய சபை தலைவியை அணுகியபோது அவர்கள் சடையம்பாளையத்தில் ஒரு கன்னியர் இல்லத்தை ஏற்படுத்த முன்வந்தார்.

கன்னியர்கள் 1974ஆம் ஆண்டு ஜூன் மாதமே வந்து பங்கிலும், பள்ளியிலும் தங்கள் பணியைத் தொடங்கினர். கன்னியர் இல்ல கட்டிடம் முழுமை பெறாத காரணத்தால் கன்னியர்கள் ஆலய வளாகத்தில் இருந்த பள்ளியின் ஓர் அறையிலேயே தங்கி இருந்தனர். கன்னியர் இல்லம் 10.07.1975 ஆம் ஆண்டு மேதகு ஆயர் மைக்கேல் போஸ்கோ துரைசாமி அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது. 

அதன் பிறகு மருத்துவப் பணிக்காக தனிக்கட்டிடம் இல்லாத காரணத்தால் பள்ளியில் உள்ள ஒரு அறையிலேயே முதலில் தங்கள் மருத்துவ சேவையை தொடங்கினர். அதன்பிறகு அருட்பணி. மத்தேயு கடவில் பங்குத்தந்தையாக இருந்தபோது புனித லூக்கா மருத்துவமனைக்காக  12.03.1976ல் அருட்பணி. மத்தேயு தெக்கடம் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது. கட்டிடம் முழுவதுமாக கட்டி முடிக்கப்பட்டு 06.03.1978 ல் அருட்பணி. மரியோ ரோடேசினி அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது. மக்கள் மத்தியில் மருத்துவ சேவை மிகவும் பாராட்டப்பட்டது.

காலப்போக்கில் போதுமான மருத்துவர்கள் இல்லாத காரணத்தால் நோயாளர்கள் வருகை குறைந்தது. நோயாளர்கள் வருகை குறைந்ததால் மருத்துவருக்கு போதிய ஊதியம் கொடுக்க இயலவில்லை. எனவே, படிப்படியாக மருத்துவ சேவை குறைந்து மருத்துவமனை மூடவேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆகவே, புதுவை மாதா இருதய சபையைச் சார்ந்த அருட்சகோதரிகள் 2012 ஆம் ஆண்டு மே மாதம் தங்கள் பணியை நிறைவு செய்து தங்கள் தலைமையகத்திற்கே திரும்பி சென்றனர். 

ஏற்கனவே இருந்த வசதிகளை பயன்படுத்திக் கொண்டு இறைஇரக்க சபையைச் சார்ந்த அருட்சகோதரிகள் 30.03.2013ல் புதுவை மாதா இருதய சபை அருட்சகோதரிகள் விட்டுச்சென்ற சேவையை, குறிப்பாக மருத்துவ சேவையை தொடர்ந்து செய்து வருகிறார்கள். 

பங்கு மன்றம் : 

14.05.1969 ஆம் ஆண்டு சடையம்பாளையம் திரு. சின்னப்பன் அவர்களின் மனைவி திருமதி. பிச்சை மரியம்மாள் என்பவர் 0.77 சென்ட் நிலத்தை புனித செபஸ்தியார் கோவிலுக்கு தானக்கிரயம் செய்து கொடுத்தார். இந்த நிலத்தை "கோவிலின் உபயோகத்திற்காகவும், மற்ற நல்ல காரியங்களுக்காகவும் பயன்படுத்தி கொள்ளலாம்" என்று குறிப்பிட்டுள்ளார். இந்த நிலம் தானமாகக் கொடுக்கப்பட்ட போது ஊருக்கு ஒதுங்குபுறமாக முட்காடாக இருந்தது. தற்போது ஏறக்குறைய ஊர் மையமாகிவிட்டது. 

பல ஆண்டுகள் கவனிப்பார் இன்றி இருந்த இடத்தில் அருட்பணி. S. லூர்துசாமி அவர்களின் பணிக்காலத்தில் பங்குமக்களின் பொது பயன்பாட்டிற்காக ஒரு மண்டபம் கட்ட திட்டமிடப்பட்டது. 14.07.2007 அன்று கட்டிட வேலை ஆரம்பிக்கப்பட்டது. 21.01.2009 அன்று மேதகு ஆயர் செ. சிங்கராயன் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது. 

மேலும், பங்கில் பணியாற்றும் பயிற்சி பெற்ற வேதியர்கள் தங்குவதற்கு வீடு இல்லாமல் தவித்து‌ வந்தனர். இந்த குறையை போக்க பங்கு மன்ற வளாகத்திலேயே வேதியருக்காக ஒரு வீடு கட்டப்பட்டது. 

மண்டபம் அவ்வப்போது பயன்படுத்தப்பட்டு வந்தாலும் தண்ணீர் வசதி இல்லை மற்றும் சுற்றுச்சுவர் இல்லை. திறந்த வெளியாக இருந்ததால் மண்டப வளாகம் தவறாகப் பயன்படுத்தப்பட்டது. எனவே, அருட்பணி. S. இருதயசெல்வம் அவர்களின் பணிக்காலத்தில் தண்ணீர் வசதிக்காக 26.11.2018 அன்று ஆழ்துளை கிணறு அமைத்து, மின் மோட்டார் பொருத்தி தண்ணீர் வசதி ஏற்பாடு செய்யப்பட்டது. அடுத்ததாக 10.12.2018 அன்று மண்டபத்தை சுற்றி சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டது. மண்டபத்திற்கு முன் இருந்த புனித லூர்து அன்னையின் திருச்சுரூபம் இடமாற்றம் பெற்றது. மண்டபத்தின் முன்புறம் சாலையின் ஓரம் சுற்றுச்சுவரில் அமைக்கப்பட்ட கெபியில் அன்னையின் சுரூபம் 11.02.2019 அன்று வைக்கப்பட்டது. 

மேலும், மண்டபத்தில் அமர்ந்து சாப்பிட போதுமான இடவசதி இல்லாததால் மழை காலத்தில் மிகவும் சிரமப்பட வேண்டியிருந்தது. எனவே மண்டபத்தை ஒட்டி தென்புறத்தில் 21.10.2019 அன்று செட் போடப்பட்டு சாப்பிடும் அறைக்கு இடம் ஏற்பாடு செய்யப்பட்டது. 

மாதா கெபி : 

ஆரம்பத்தில் நமது பங்கு இளைஞர்கள் "புனித வின்சென்ட் தே பவுல் இளைஞர் குழு" என்ற பெயரில் வருடத்திற்கு இருமுறை (புனித செபஸ்தியார் திருவிழா மற்றும் புனித வணக்கமாதா திருவிழா) நாடகம் நடத்தி வந்தார்கள். அதற்காக ஒரு திறந்த வெளி மேடை அமைத்தார்கள். அருட்பணி. M. S. ஜோசப் அவர்களின் பணிக்காலத்தில் ஒவ்வொரு மாதத்தின் முதல் சனிக்கிழமை பக்தி முயற்சியை ஆரம்பித்தார். எனவே, மாதத்தின் முதல் சனிக்கிழமைகளில் மாதாவின் சுரூபத்தை எடுத்து மேடையில் வைத்து செபமாலை சொல்லும் வழக்கம் நடைமுறையில் வந்தது. பிறகு கோவிலை சுற்றி சுரூபம் பவனியாக எடுத்து வரப்பட்டது. ஒரு சனிக்கிழமை மாதாவின் சுரூபத்தை மேடையில் வைத்து செபிக்கும் போது வித்தியாசமான ஒளி கீற்று தென்பட்டது. இது அன்னை மரியாவின் அதிசய ஒளி என்றும் அற்புத ஒளி என்றும் கருதப்பட்டது. எனவே, அப்போது இருந்த அந்த மேடையில் நாடகம் நடத்துவதை நிறுத்தப்பட்டு பக்தி முயற்சிக்கு மட்டும் பயன்படுத்தப்படுகிறது. 

அருட்பணி. A. L. இருதயம் அவர்களின் பணிக்காலத்தில் மேடையின் அருகே லூர்து நகர் கெபியை போன்றதொரு கெபி அமைக்கப்பட்டது. அருட்பணி. S. லூர்துசாமி அவர்களின் பணிக்காலத்தில் முதல் சனிக்கிழமை பக்திக்கு பதிலாக பௌர்ணமி மாதா பக்தி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அருட்பணி. D. ஆனந்தராஜ் அவர்களின் பணிக்காலத்தில் மேடை விரிவுபடுத்தப்பட்டது. இருபுறமும் படிகள் கட்டப்பட்டு, சிமெண்ட் தரை அமைத்து பௌர்ணமி மாதா வழிபாடுகள் தொடர்ந்து நடைமுறையில் உள்ளது. அருட்பணி. குருசடி சகாயராஜ் அவர்களின் பணிக்காலத்தில் திறந்த வெளி மேடையின் மீது ஒரு செட் போடப்பட்டது.

*புனித வனத்து சின்னப்பர் சிற்றாலயம்* :

"சடையம்பாளையம் பகுதியில் வசிக்கும் ரோமன் கத்தோலிக்க மக்கள் ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ சாமியான புனித வனத்து சின்னப்பர் சாமிக்கு கோயில் கட்டி கும்பிட வேண்டி" திரு. சாமிநாதன் ஆசிரியரின் வாரிசுகள் அனைவரும் ஒன்றிணைந்து 16.06.2006 அன்று சேலம் மறைமாவட்டத்திற்காக 0.10 சென்ட் நிலத்தை தான செட்டில்மென்ட் செய்து கொடுத்தனர். இதற்கு ஒரு நீண்ட வரலாறு உண்டு. 

ஏறக்குறைய நாற்பது வருடங்களுக்கு முன்பு திரு. சாமிநாதன் ஆசிரியரின் வாரிசுகள் தங்கள் சொத்தை பாகபிரிவினை செய்வதற்கு முன்பு ஒரு முறை நிலத்தில் இருந்த மரம் மட்டைகளை எல்லாம் விறகுகளாக விற்றனர். கத்தேரியை சார்ந்த ஒருவர் விறகு வெட்ட வந்து ஒரு பக்கமாக இருந்து விறகுகளை வெட்டினார். தற்போது வனத்து சின்னப்பர் கெபி இருக்கும் இடத்தில் இருந்த ஒரு வேப்பம் கன்றை வெட்ட முயன்றபோது அவரால் வெட்ட முடியவில்லை. கைகள் வலித்தன. ஆகவே, அந்த வேப்பங்கன்றை வெட்டாமல் சென்று விட்டார். அன்றிரவு அவருக்கு தூக்கம் வரவில்லை. அவரது மனதுக்குள் ஒரு குரல் கேட்டுக்கொண்டே இருந்தது. "நீ வெட்ட நினைத்த வேப்பமரத்தின் அடியில் புனித வனத்து சின்னப்பர் இருக்கிறார். எனவே, அந்த மரத்தை வெட்டாதே". எனவே, அவர் அந்த இரவிலேயே வந்து திரு. சாமிநாதன் ஆசிரியரின் வாரிசுகளிடம் இந்த செய்தியை சொன்னார். 

அதன் பிறகு அந்த வேப்பமரத்தின் அடியில் ஒரு மண் மேடை அமைத்து அங்கே ஒரு சிலுவையும் நடப்பட்டது. சில காலம் கழித்து அங்கு புனித வனத்து சின்னப்பர் சுரூபம் வைக்கப்பட்டது. ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினத்தன்று பொங்கல் வைத்து செபம் செய்து வந்தார்கள். நாளடைவில் பலர் அங்கு பொங்கல் வைத்து வழிபட ஆரம்பித்தனர். 

எனவே, திரு. சாமிநாதன் ஆசிரியரின் வாரிசுகள் அந்த இடத்தையும் அதை சுற்றியுள்ள இடத்தையும் (0.10 சென்ட்) கோவிலுக்கு என்று ஒதுக்கிவிட்டு மீதமுள்ள நிலத்தை தங்களுக்குள் பாகப்பிரிவினை செய்து கொண்டனர். 16.06.2006ல் 0.10 சென்ட் நிலத்தை கோவிலுக்கு தானக்கிரயம் செய்து கொடுத்தனர்.

அருட்பணி. S. லூர்துசாமி அவர்களின் பணிக்காலத்தில் 17.10.2010ல் புனித வனத்து சின்னப்பருக்கு ஒரு சிறிய கெபி கட்டப்பட்டது. அந்த நிலத்திற்கு சுற்றுச்சுவர் கட்டப்பட்டது. பொருட்கள் வைக்கும் சிறிய அறையும் கட்டப்பட்டது. மேடை அமைத்து மேற்கூரையும் போடப்பட்டது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலையில் திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. 

சில பக்தர்கள் ஒன்றிணைந்து "திருக்குடும்ப செபக்குழு" என்ற அமைப்பை ஏற்படுத்தினர். அவர்கள் ஒவ்வொரு மாதமும் அமாவாசை அன்று செபக்கூட்டம் நடத்தி பக்தர்களுக்கு அன்னதானம் கொடுக்க ஆரம்பித்தனர். 

அருட்பணி. D. ஆனந்தராஜ் அவர்களின் பணிக்காலத்தில் புனித வனத்து சின்னப்பருக்கு கிழக்கு பார்த்து ஒன்றும் மேற்கு பார்த்து ஒன்றுமாக இரண்டு கெபிகள் அழகுற கட்டப்பட்டன. அவரே அமாவாசை அன்று ஒரு சில மாதங்களுக்கு திருப்பலி நிறைவேற்றி வந்தார். பிறகு, செபக்கூட்டம் மட்டுமே நடைபெற்று வருகிறது. திருப்பலி நடைபெறவில்லை. 

அருட்பணி. S. இருதயசெல்வம் அவர்களின் முயற்சியால் அமாவாசை அன்று மதியம் நடைபெற்று வந்த செபக்கூட்டம் மாலையில் நடைபெற ஆரம்பித்தது. செபக்கூட்டம் தொடர்ந்து திருப்பலியும் நிறைவேற்றப்படுகிறது. இந்த முறை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஞாயிறு காலை 06.30 மணிக்கும் திருப்பலி நடைபெற்று வருகிறது. 

பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள்: 

அருட்பணி. கோலாஸ் (1969-1972) - பொறுப்பு தந்தை

1. அருட்பணி. M. அருள்சாமி (1972-1974)

2. அருட்பணி. மத்தேயு கடவில் (1974-1979)

3. அருட்பணி. M. S. ஜோசப் (1979-1984)

4. அருட்பணி. M. செல்வம் (1984 ஜனவரி - 1984 மே)

5. அருட்பணி. A. L. இருதயம் (1984-1987)

6. அருட்பணி. K. S. பயஸ் (1987-1990)

7. அருட்பணி. A. எட்வர்ட் ராஜன் (1990-1993)

8. அருட்பணி. S. சவரிமுத்து (1993-1996)

9. அருட்பணி. I. கிரகோரி ராஜன் (1996-2000)

10. அருட்பணி. A. சார்லஸ் (2000-2006)

11. அருட்பணி. S. லூர்துசாமி (2006-2011)

12. அருட்பணி. D. ஆனந்தராஜ் (2011-2013)

அருட்பணி. R. சேவியர் (2013 செப்டம்பர் - 2014 மே) பொறுப்பு தந்தை

13. அருட்பணி. D. குருசடி சகாயராஜ் (2014-2018)

14. அருட்பணி. S. இருதயசெல்வம் (2018- தற்போது வரை...)

பங்கில் உள்ள கல்வி நிறுவனங்கள் மற்றும் இல்லங்கள்: 

1. RC Primary School (Aided)

2. Mercedarian Sisters Of Charity Province Home 

3. St. Lucas Hospital 

கெபிகள் மற்றும் சிற்றாலயங்கள் : 

1. புனித வனத்து சின்னப்பர் சிற்றாலயம்

2. அன்னை வேளாங்கண்ணி சிற்றாலயம்

3. புனித லூர்து மாதா கெபி 

4. பங்கு மன்றம்

தகவல்கள் : பங்கு பொன்விழா ஆண்டு மலர்