35 புனித அந்தோணியார் ஆலயம், பாலவிளை

  

புனித அந்தோணியார் ஆலயம்.

இடம் : பாலவிளை 

மாவட்டம் : கன்னியாகுமரி 

மறைமாவட்டம்: குழித்துறை. 

மறைவட்டம்: திரித்துவபுரம்

நிலை : பங்குத்தளம் 

குடும்பங்கள் : 320

அன்பியங்கள் : 10

ஞாயிறு திருப்பலி : காலை 06.30 மணிக்கு. 

பங்குத்தந்தை : அருட்பணி. புஷ்பராஜ் 

திருவிழா : ஜூன் 13ஆம் தேதியை மையமாகக் கொண்ட பத்து நாட்கள். 

மண்ணின் இறையழைத்தல்கள்:

1. அருட்பணி. S. இம்மானுவேல், SAC

2. அருட்பணி. J. ஜெரோம் ஜோசப், CSC

3. அருட்சகோதரி. A. அம்மாள் (late), SAT

4. அருட்சகோதரி. J. கிறிஸ்டேஞ்சல் மேரி, SAT

5. அருட்சகோதரி. M. அல்போன்சாள், SAT

6. அருட்சகோதரி. C. ரெஞ்சிதம் (late), திருச்சிலுவை கன்னியர் சபை

7. அருட்சகோதரி. U. கிரன் (றெக்ஸலின் மேரி), Sisters of Notre Dame

8. அருட்சகோதரி. J. லிட்டில் பிளவர், OMMI

வரலாறு:

கி.பி. 1870 ஆம் ஆண்டளவில் வேங்கோடு புனித சவேரியார் ஆலயத்தை மையமாகக் கொண்டு, பாலவிளையில் புனித அந்தோனியார் பெயரில் சிற்றாலயம் அமைக்கப்பட்டு, திருமுழுக்கு வழங்கப்பட்டு, செபமாலை, புனிதர் மன்றாட்டுக்கள் வழியாக, மக்கள் கிறித்தவ மறைநெறியில் வளர்த்தெடுக்கப்பட்டுள்ளனர்.

கி.பி.1900 ஆம் ஆண்டுவாக்கில், களியக்காவிளை பகுதியை மையமாகக் கொண்டு, திரித்துவபுரம், பாலவிளை பகுதிகளில் மறைத்தூதுபணி நடைபெற்று வந்துள்ளது. 

திரித்துவபுரம் பங்கு:

கி.பி 1910 ஆம் ஆண்டு திரித்துவபுரம் ஆலயம், அப்போதைய கொல்லம் மறைமாவட்ட ஆயர் மேதகு அலோசியஸ் மரிய பென்சிகர் அவர்களால் கட்டியெழுப்பப்பட்டு அர்ச்சிக்கப்பட்ட பின்னர், திரித்துவபுரம் பங்கின் கிளைப்பங்காக பாலவிளை மாற்றம் பெற்றது. ஆனாலும் ஞாயிறு திருப்பலிக்கு திரித்துவபுரம் ஆலயத்திற்கு தான் செல்ல வேண்டும். 1970 ஆம் ஆண்டு முதல் பாலவிளையில் ஞாயிறு திருப்பலி நிரந்தரமாக செயலாக்கம் பெற்றது.

அரசியல் அடிமைத்தன எதிர்ப்புப் போராட்டம்:

1948 மற்றும் 1954 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தாய்த் தமிழக இணைப்புப் போராட்டத்தில், விழுப்புண் பெற்ற வீர மைந்தர்கள், தியாகசீலர்கள் பலர் இத்தலத் திருச்சபையின் அங்கத்தினர்களாய் இருந்தனர். இவ்வுரிமைப் போராட்டங்களுக்கு அக்கால குருக்கள் மற்றும் துறவியர் பெரிதும் துணைநின்றார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பாலவிளை பங்கு சமூகத்தில், மறைக்கல்வி, திருவருட்சாதன பங்கேற்புகளுக்கு, பாகோடு, வட்டவிளை அசிசி துறவற சபையினரின் பங்களிப்பும் இருந்துள்ளது. 

மறைத்தூது பணியிலும், சமூகப்பணியிலும் மிகுந்த ஆர்வம் கொண்ட பல்வேறு அருள்தந்தையர்கள் குறிப்பாக அருட்பணி. மேரி எப்ரேம் கோமஸ், அருட்பணி.‌ தனிஸ்லாஸ் அடிகளார் ஆகியோரின் பணியும், தியாகமும் எக்காலமும் நினைவுகூரத் தக்கது.

புனித அந்தோனியார் கலை மன்றம்:

பாலவிளை தலத்திருச்சபையின் இளைஞர்களை ஒருங்கிணைத்து, 1970 ஆம் ஆண்டு புனித அந்தோனியார் கலை மன்றம் உருவாக்கப்பட்டது. 

பாலர் பள்ளி:

அருட்பணி. தனிஸ்லாஸ் அடிகளார் பணிக்காலத்தில் சமூகத்தின் அடித்தட்டு மக்களின் குழந்தைகளின் ஆரோக்கிய நல வாழ்வையும், கல்வி நிலையையும் கருத்தில் கொண்டு, பாலர் பள்ளி ஆலய நிர்வாகத்தின் கீழ் உருவாக்கப்பட்டு, KSSS உதவியுடன் நடை முறைப்படுத்தப்பட்டது. 

ஆலயம் மற்றும் திருமண மண்டபம்:

1976 ஆம் ஆண்டு பழைய சிற்றாலயம் அகற்றப்பட்டு, புதிதாக வாங்கப்பட்ட இடத்தில் அருட்பணி. தனிஸ்லாஸ் அடிகளார் காலத்தில் ஆலயம் கட்டப்பட்டது. 

1989 ஆம் ஆண்டு அருட்பணி. ஏசுதாசன் தாமஸ் பணிக்காலத்தில் திருமண மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டு, தற்போது உணவுக் கூடமாக பயன்படுத்தப்படும் அரங்கம் கட்டியெழுப்பப் பட்டது. 1992 ஆம் ஆண்டு பெருமழை காரணமாக பெருக்கெடுத்து ஓடிய குழித்துறை தாமிரபரணி ஆற்று நீரில் மூழ்கி, வீடுகளையும் உடைமைகளையும் இழந்தோர்க்கு, குறிப்பாக முளமூட்டுவிளை பகுதி மக்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்வதுவரை இந்த அரங்கம் புகலிடமாயிற்று. அருட்பணி. யூஜின் குழந்தை பணிக்காலத்தில் இந்த மண்டப அரங்கிற்கு  மற்றுமொரு வரவேற்பு அரங்கம் கட்டியெழுப்பப் பட்டது.

குருசடி:

1992 ஆம் ஆண்டு ஆலய வளாகத்தின் முன்பக்கச் சாலையோரமாக, தூய வேளாங்கண்ணி மாதா குருசடி கட்டப்பட்டது.

🍒ஆலய விரிவாக்கம்:

1976 ஆம் ஆண்டு கட்டப்பட்ட ஆலயத்தில் இடநெருக்கடி ஏற்பட்டதால், 2000 ஆம் ஆண்டில் விரிவாக்கம் செய்யப்பட்டு, வெள்ளிவிழாவும் கொண்டாடப் பட்டது.

1999 ஆம் ஆண்டு மறைமாவட்ட வழிகாட்டலுக்கு ஏற்ப, பாம்பன்விளை புனித கார்மல் சபையைச் சேர்ந்த 10  அருட்சகோதரிகளின் ஒருமாத வழிகாட்டலுக்குப் பின்னர், அன்பியங்கள் துவக்கப் பட்டது.

தனிப் பங்காக உதயம்:

கோட்டாறு மறைமாவட்ட ஆயர் மேதகு பீட்டர் ரெமிஜியுஸ் அவர்களால் 14.05.2010 அன்று பாலவிளை தனிப் பங்காக உயர்த்தப்பட்டது. முதல் பங்குத்தந்தையாக அருட்பணி. N. மார்ட்டின் அவர்கள் பொறுப்பேற்று வழிநடத்தினார். இவரது பணிக்காலத்தில் 2011 ஆம் ஆண்டு பங்குப் பணியாளர் இல்லம் கட்டப்பட்டது. 

அருட்பணி. ஞா. ஜெயக்குமார் பணிக்காலத்தில், பழைய ஆலயத்தை அடித்தள அரங்கமாக்கி, அதன்மீது பெரிய அளவில் புதிய ஆலயம் கட்ட தீர்மானிக்கப்பட்டு, 13.06.2014 அன்று பணிகள் ஆரம்பிக்கப்பட்டது. 31.03.2015 அன்று அடித்தள அரங்கினை குழித்துறை மறைமாவட்ட ஆயர் மேதகு ஜெறோம் தாஸ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டு, அதனையே தற்காலிக ஆலயமாக பயன்படுத்தப்பட்டு வந்தது. 

பங்கு மக்களின் நன்கொடை மற்றும் உள்ளூர், வெளியூர் நன்கொடையாளர்களின் நிதியுதவியுடன், அழகிய மேல்தள ஆலயம் கட்டிமுடிக்கப்பட்டு 28.12.2016 அன்று மேதகு ஆயர் ஜெறோம் தாஸ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.

பங்கின் பங்கேற்பு அமைப்புக்கள்:

1. பாலர்சபை

2. சிறுவழி இயக்கம்

3. இளம் கிறிஸ்தவ மாணவர் இயக்கம்

4. இளைஞர் இயக்கம் (ஆண்கள்/ பெண்கள்)

5. மரியாயின் சேனை

6. கோல்பிங் சங்கம்

7. குடும்பநலக்குழு

8. கிராம முன்னேற்றச் சங்கம்

9. பீடப் பூக்கள்

10. திருவழிபாட்டுக் குழு

11. பாடகர் குழு

12. அடித்தள முழுவளர்ச்சி சங்கம்

13. அன்பிய ஒருங்கிணையம்

14. பங்கு அருட்பணிப் பேரவை

15. தணிக்கைக் குழு

16. நிதிக்குழு

17. மறைக்கல்வி

Location map:

St. Antony's Church

https://maps.app.goo.gl/54Ch18inUo3oaQUT7

வழித்தடம்: மார்த்தாண்டம் -குழித்துறை -பாலவிளை

தகவல்கள்: பங்குத்தந்தை அருட்பணி. புஷ்பராஜ்

ஆலய வரலாறு: ஆலய அர்ச்சிப்பு விழா மலர் 2016