860 புனித குழந்தை தெரசா மறைவட்ட ஆலயம், மஞ்சாலுமூடு

      

புனித குழந்தை தெரசா மறைவட்ட ஆலயம்

இடம்: மஞ்சாலுமூடு

மாவட்டம்: கன்னியாகுமரி

மறைமாவட்டம்: தக்கலை

மறைவட்டம்: மஞ்சாலுமூடு

நிலை: பங்குத்தளம் (மறைவட்ட ஆலயம்) 

பங்குத்தந்தை பேரருட்தந்தை. அகஸ்டின் தலோடில்

உதவிப் பங்குத்தந்தை அருட்தந்தை. றோபின் ஜோஸ்

குடும்பங்கள்: 230

உறவியங்கள்: 12

வழிபாட்டு நேரங்கள்:

ஞாயிறு திருப்பலி காலை 07:00 மணி

திங்கள், புதன், வெள்ளி திருப்பலி மாலை 05:30 மணி

செவ்வாய், வியாழன், சனி திருப்பலி காலை 06:15 மணி

திருவிழா: அக்டோபர் மாதம் முதல் வாரத்தில்

மண்ணின் இறையழைத்தல்கள்:

1. அருட்தந்தை. ஜோசப் சந்தோஷ்

2. அருட்தந்தை. ஜெஸ்டின் சுதீஷ்

3. அருட்சகோதரி. பிறீதா தெரஸ், SH

4. அருட்சகோதரி. ஷீலா, SDS

5. அருட்சகோதரி. கவிதா, SDS

6. அருட்சகோதரி. ஜெயஷெர்லி, SCCG

7. அருட்சகோதரி. பெனிஷ்மா தெரஸ், FCC

வழித்தடம்:

மார்த்தாண்டம் பேருந்து நிலையத்திலிருந்து 86B, 86E, 85K

மார்த்தாண்டம் -குழித்துறை -மேல்புறம் -உத்திரம்கோடு -மஞ்சாலுமூடு 

Location map: https://g.co/kgs/QbHkJz

வரலாறு:

கத்தோலிக்க திருச்சபை என்பது 24 சபைகளை உள்ளடக்கி திருத்தந்தையின் தலைமையில் ஒரே ஆயன், ஒரே மந்தை என இயங்கும் இறை மக்களின் சங்கமம் ஆகும்.

அதில் ஒரு சபையாகிய சீறோமலபார் சபையின் மறை மாநிலங்களில் ஒன்றாகிய, சங்ஙனாசேரி அதன் மறைபரப்பு பணியை கேரளா எல்லைக்கு வெளியே, குமரி மாவட்டத்திலும் ஆரம்பித்தது…

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள விளவங்கோடு தாலுக்காவிற்கு உட்பட்ட, மஞ்சாலுமூடு கிராமத்தில் பேரருட்தந்தை. சக்கரியாஸ் காயத்தற அடிகளார் பாஞ்சிவிளையில் உள்ள தபால்காரர் எலியாஸர் அவர்களின் வழிகாட்டுதலில், 1961-ஆம் ஆண்டு மறைபரப்பு பணியாற்ற இங்கு காலடி வைத்தார்.

1962 ஏப்ரல் 23-ல் ஆதிக்காட்டுவிளையில் காலஞ்சென்ற சிவசங்கரபிள்ளையின் சானல் கரையோரம் அமைந்துள்ள இடத்தை வாடகைக்கு எடுத்தார். ஊரிலுள்ள மக்களின் ஒத்துழைப்புடன் ஒரு ஓலை குடிசை உருவாக்கினார். 

1962 மே மாதம் 31-ம் தேதி இவ்விடத்தில் மக்களை ஒன்றுகூட்டி, திருப்பலி அர்ப்பித்து 27-பேருக்கு திருமுழுக்கு கொடுத்து வெளிப்படையான கொண்டாட்டத்துடன் திருச்சமூகம் ஆரம்பமானது. மேலும் மக்களை ஒன்றுகூட்டி செபிப்பதற்கும் திருப்பலி அர்ப்பிப்பதற்கும் பழக்கப்படுத்தி, கிறிஸ்தவ மறையை கற்பித்தார். 

அவ்வாறு உருவெடுத்த பங்கின் வளர்சிக்கு நேசமணி நாடார், கொச்சுராமன் நாடார், சிவசங்கரபிள்ளை, இராமசந்திரன், கொச்சுமணி நாடார், பொன்னுமுத்தன் நாடார் போன்றோர் பெரிதும் உதவினர்.

ஒரு சில மாதங்களுக்கு பிறகு பனங்காலை இராமன்பிள்ளை அவர்களின் உதவியோடு, கொக்கோடு கிழவன்விளையில் கண்ணம்மா பிள்ளை இலங்கம் வீடு கிருஷ்ணபிள்ளை அவர்களிடமிருந்தும், கொச்சப்பி நாடார் அவர்களிடமிருந்தும், 5 சென்ட் நிலம் வாங்கப்பட்டது. 1962 ஆகஸ்ட் 5-ஆம் தேதி பலரின் உதவியோடு கூரை வேய்ந்த ஒரு தற்காலிக தேவாலயம் உருவாக்கப்பட்டது.

மக்களை வீடுகளில் சந்தித்து இயேசுவை பற்றி கற்பித்து ஜெபிக்க கற்றுக் கொடுத்து, அர்மோனியம் வாசித்து பாடல்கள் வாயிலாக உணர்வூட்ட, Br. தோமஸ் என்பவர் பேரருட்தந்தை சக்கரியாஸ் அடிகளாருக்கு பேருதவியாக இருந்தார். இவ்வாறு நெடுநாள் செய்த முயற்சிக்கு தக்கபலன் கிடைத்தது. ஏராளம் பேர் திருமுழுக்கு பெற்று திருச்சபையின் உறுப்பினர் ஆயினர். இதன்பின் இந்த இறைசமூகம் வேகமாக வளர்ச்சியை கண்டது. புனித குழந்தை தெரசா மறைவட்ட ஆலயம் தோன்ற காரணமான பேரருட்தந்தை சக்கரியாஸ் காயத்தற அடிகளார் 1963 ஆகஸ்ட் 31-ஆம் நாள் பணிமாற்றம் பெற்று பாஞ்சிவிளைக்கு சென்றார்.

புதிய உணர்வும் உற்சாகமும் அளிக்க 1963 ஏப்ரல் 10-ம் தேதி பேரருட்தந்தை ஜோசப் மடத்தில் அடிகளார் பங்குத்தந்தையாக பொறுப்பேற்றார். அப்போது சங்ஙனாசேரி மறைமாநில ஆயராக இருந்த மார் மாத்தியு காவுகாட் ஆண்டகை அவர்களை அழைத்து, புதிய ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

பேரருட்தந்தை ஜோண் தலோடில் அவர்கள் காஞ்ஞிரப்பள்ளி காப்பாடு பங்கின் பங்குதந்தையாக பணியாற்றிய போது மிஷன்லீக் உறுப்பினர்களை வைத்து சேமித்த தொகையுடன் மொத்தமாக 12,000 ரூபாய் ஆலயத்தின் கட்டுமான பணிக்கு நன்கொடையாக வழங்கினார். அத்துடன் பேரருட்தந்தை ஜோசப் மடத்தில் அவர்களின் பெரும் முயற்சியும் கட்டிட பணியின் வேகத்திற்கு காரணமாயின.

1966-ல் ஆலய வளாகத்திற்கு சுற்றுச்சுவர் (Compound Wall) கட்டப்பட்டது. அத்துடன் புனித அந்தோனியார் குருசடியும் கட்டப்பட்டது. 

1966 ஜுன் மாதம் 26-ஆம் தேதி ஆலய கட்டுமானப் பணிகள் முடிக்கப்பட்டு சங்ஙனாசேரி மறை மாநில ஆயர் மார் மாத்யூ காவுகாட் அடிகளாரால் அர்ச்சிக்கப்பட்டது. ஆலயத்திற்கு மறைபரப்பு பணியின் பாதுகாவலியும் மிஷன்லீக் இயக்கத்தின் பாதுகாவலியுமாகிய புனித குழந்தை தெரசாவின் பெயர் சூட்டப்பட்டது. 

ஆலயத்தின் அருகில் ஓடு வேய்ந்த கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு, அதில் ஒரு தையல் பயிற்சி நிலையமும், பனைவெல்ல கூட்டுறவின் அனுமதியோடு ஒரு நார் எடுக்கும் தொழிற்சாலையும் செயல்பட்டது. பின்னர் இது விரிவுபடுத்தப்பட்டு கதர் நிறுவனத்துடன் இணைந்து பஞ்சுகளை பெரிய இயந்திரத்தில் பதப்படுத்தி, சிறிய அளவிலான நூல்களாக மாற்றி, பின்னர் அவற்றை கையால் சுற்றும் ராட்டினங்களால் சுற்றி 50-க்கும் மேற்பட்ட பெண்கள் வேலை செய்யும் நூல் தயாரிக்கும் தொழில் நடைபெற்றது.

1964-ல் பேரருட்தந்தை ஜோசப் மடத்தில் தெற்றிவிளையில் புதிய பங்கு ஒன்றை, காளிவிளாகம் காலஞ்சென்ற திரு வேலாயுதன் நாடார் அவர்களின் உதவியோடு தொடங்கினார். மேலும் குடுங்கிப்பாறை காலஞ்சென்ற சங்கரன் அவர்களின் உதவியுடனும், திரு. தோமஸ் அவர்களின் உதவியுடனும் முக்கூட்டுக்கல் பகுதியில் பங்கு ஒன்றை நிறுவினார். மேலும் தந்தையுடன் இணைந்து பணியாற்றிய அருட்தந்தை சிறியக்கூட்டுமேல், அருட்தந்தை தோமஸ் நெல்லிக்குநத் ஆகியோரோடு இணைந்து முக்கூட்டுக்கல்லில் கல்விசாலையும், மாலைக்கோடு, காரோடு, மாறப்பாடி போன்ற இடங்களில் புதிய பங்குகளையும் நிறுவினார். இந்நாட்களில் அருட்தந்தை ஜேம்ஸ் ஜோசப் CMI அவர்களோடு இணைந்து களியலிலும் புதிய பங்கு நிறுவப்பட்டது.

1965 ஜூன் 6-ம் தேதி SH கன்னியர்கள் வாடகை கட்டிடத்தில் குடியேறி மக்களை சந்தித்து கற்பித்து வந்தனர். இவர்கள் 1966-ஆம் ஆண்டு அம்பலத்துவிளையில் ஓடு வேய்ந்த கட்டிடம் கட்டி அதில் குடியேறி, சிறிய மருத்துவமனை துவங்கி மக்களுக்கு சேவை புரிந்தனர். 1972-ஆம் ஆண்டு இங்கிருந்து இடம் பெயர்ந்து முக்கூட்டுக்கல்லில் இருப்பிடம் அமைத்தனர்.

மஞ்சாலுமூடு பங்கை தலைமையிடமாக கொண்டு தொடங்கப்பட்ட பங்குகள் மற்றும் நிறுவனங்கள்

1964-ஆம் ஆண்டு - தெற்றிவிளை பங்கு

1965-ஆம் ஆண்டு - முக்கூட்டுக்கல் பங்கு

1966-ஆம் ஆண்டு - மாலைக்கோடு பங்கு

1967-ஆம் ஆண்டு - காரோடு பங்கு

1967-ஆம் ஆண்டு - மாறப்பாடி பங்கு

1971-ஆம் ஆண்டு - முக்கூட்டக்கல் பள்ளிக்கூடம்

1972-ஆம் ஆண்டு - கன்னியாகுமரி சமூக சேவை சங்கம் (KKSSS) துவக்கம்

1968-ஆம் ஆண்டு - SDS கன்னியர் வருகை

1969-ஆம் ஆண்டு - SDS கன்னியர் மருத்துவமனை துவக்கம்.

1976-ஆம் ஆண்டு முதல் பேரருட்தந்தை தோமஸ் முட்டத்துகுந்நேல் அடிகளார் பங்கு தந்தையாக பொறுப்பேற்று 1977-ல் சிறுவர் இல்லம் (Boys Home) தொடங்கப்பட்டது. இதில் 25-க்கும் அதிகமான ஏழை மாணவர்களுக்கு இலவசமாக உணவு, உடை, கல்வி பயிற்சி கொடுத்து பராமரித்து வழி நடத்தப்பட்டது. 1988-ஆம் ஆண்டு Parish Hall கட்டிடம் கட்டி திறப்புவிழா நடத்தப்பட்டது. தற்போது அது ‘‘மலர் மண்டபமாக’’ செயல்பட்டு வருகின்றது. 

1993-ஆம் ஆண்டு பங்கு தந்தையாக பொறுப்பேற்ற பேரருட்தந்தை ஜேக்கப் ஐயமாத்திரா அடிகளாரால், 1996-ஆம் ஆண்டு ஆலயத்தில் ‘‘மத்பகா’’ (பலிபீடம்) புதுப்பிக்கப்பட்டது. மேலும் ஆலயத்தை ஒட்டிய 21 சென்டு நிலம் வாங்கப்பட்டது. புனித குழந்தை தெரசாவின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ‘‘நினைவு மலர்’’ வெளியிடப்பட்டது. மலர் மண்டபம் திருமண மண்டபமாக்கப்பட்டது. இவர் பணிக்காலத்தில் மஞ்சாலுமூடு, "மறைவட்ட பங்காக" உயர்த்தப்பட்டது.

2002-ஆம் ஆண்டு பங்குதந்தையாக பொறுப்பேற்ற பேரருட்தந்தை பிலிப்கொடியந்தறா அடிகளாரால், மலர் மண்டபம் திருமண நிகழ்வு நடைபெற தற்போதைய வசதிகளுடனான சமையலறையுடன் செயல்பட தொடங்கியது. மறைக்கல்விக்கு நாடக ஒப்பனைக்கான ஆடைகள் வாங்கப்பட்டது. தெற்றிவிளை பங்கின் பிரச்சனைகள் தீர்த்து இயல்பாக கொண்டுவந்து தனிப்பங்காக உயர்த்தினார். பல வருடங்களாக நீதி மன்றத்தில் இருந்த “புஷ்பசதன் பாலர்பள்ளி” -யின் வழக்கை நீதிமன்றம் வாயிலாக திறன்பட நடத்தி வெற்றிபெற செய்தார்.

2007-ல் பங்கு தந்தையாக பொறுப்பேற்ற பேரருட்தந்தை மேத்தியு தெக்கேகுற் அடிகளார், மலர் மண்டபத்தை புதுப்பித்து மண்டபத்திற்கு தேவையான பாத்திரங்கள் நாற்காலிகள் வாங்கினார். ஜெனரேட்டர் வாங்க பணம் வசூல் செய்தல், மேடை அமைக்க பணம் வசூல் செய்தல் மற்றும் ஆலய மக்கள் மாதம் தோறும் வீட்டுவரி கட்டும் திட்டத்தையும் அறிமுகப்படுத்தினார். 

01.6.2013 அன்று SDS கன்னியர்களின் புதிய கட்டிடம், சிற்றாலயம் ஆகியவை மேதகு ஆயர் மார் ஜார்ஜ் ராஜேந்திரன் ஆண்டகையால் அர்சிக்கப்பட்டது. 

2013-ஆம் ஆண்டு பங்குதந்தையாக பொறுப்பேற்ற பேரருட்தந்தை பீட்டர் கிழக்கேயில் அவர்கள் புதிய ஆலயம் கட்டுவதற்கான திட்டம், வரைபடம் ஆகியவை தயாரித்து, புதிய ஆலயத்திற்கான ஜெபம், மக்களுக்கு வரி ஆகியவற்றை நடைமுறைபடுத்தி 51 இலட்சம் பணமும் இருப்பு தொகையாக மாற்றினார். 

27-06-2013 - புதிய ஜெனரேட்டர் வாங்கப்பட்டது.

12-10-2013 - முதப்பன்கோடு குருசடி அர்ச்சிப்பு.

04-04-2015 - மாவர்தலவிளை குருசடி அர்ச்சிப்பு.

25-05-2015 திருவரம்பு பாலூட்டுவிளையை சார்ந்த திரு. குருசுமுத்து அவர்களுக்கு சொந்தமான 4 சென்டு இடத்தில் புதிய மிஷன் சென்டர் தொடங்கினார். மேலும் தெற்றிவிளை பங்கு தந்தையாகவும் பொறுப்பேற்று பணிபுரிந்தார்.  

பேரருட்தந்தை அகஸ்டின் தலோடில் அவர்களின் பணிக்காலம் பங்கின் பொற்காலம் எனலாம். பற்பல ஆக்க பூர்வமான திட்டங்களால் ஆலய வளாக அமைப்பையே மாற்றியமைத்து பெருமை சேர்த்தார். 24-5-2015 அன்று மேழக்கோடு பங்கு தந்தையாக இருந்து கொண்டு, மஞ்சாலுமூடு பங்கின் பங்குதந்தையாகவும் பொறுப்பை ஏற்றார். புதிய ஆலய கட்டுமான பணிகளுக்கு வெளியூர்களில் நன்கொடைகள், விவிலிய மேஜிக் ஷோ, குலுக்கல் கூப்பன்கள், பழைய பொருட்களை சேமித்து விற்பது, பொருட்களை ஏலம் இடுதல் போன்ற பல வித முயற்சிகளை கையாண்டார்.

புதிய ஆலயம்:

19.6.2015 அன்று புதிய ஆலயம் கட்ட இடம் தேர்வு செய்து அதில் உள்ள மரங்கள் வெட்டப்பட்டு JCB யால் மண்ணடித்து இடம் சமன் செய்யப்பட்டது

 29.5.2011 அன்று உயர்ப்பேராயராக தேர்ந்தெடுக்கப்பட்ட மார் ஜார்ஜ் ஆலஞ்சேரி ஆண்டகையால் அர்ச்சிக்கப்பட்ட கல்லை பங்குத்தந்தை இல்லத்தில் பாதுகாக்கப்பட்டது. 18.06.2015 அன்று இக்கல்லை தக்கலை மறைமாவட்ட ஆயர் மார் ஜார்ஜ் இராஜேந்திரன் ஆண்டகையால் அர்ச்சிக்கப்பட்டது. 3.7.2015 புனித தோமையார் தினத்தில் காலை திருப்பலிக்குப் பின் குருகுலமுதல்வர் பேரருட்தந்தை ஜோஸ் முத்தத்துபாடம் அவர்களால் அடிக்கால் நாட்டப்பட்டது.

10.8.2016 அன்று காலை 6:30 மணிக்கு ஆலயத்தின் மேற்கூரை கான்கிரீட் வேலைகள் தொடங்கி இரவு 8 மணி வரை நடைபெற்றது. வேலை நடைபெறும் போது காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை ஒவ்வொரு உறவியங்கள் வந்து ஜெபம் செய்து கொண்டே இருந்தனர். வார்க்கை நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், பொருட்கள் கொண்டு செல்லும் லிப்ட் உடைந்து கீழே விழுந்து பல உயிர்கள் பலியாக வேண்டிய தருணத்தில், அற்புதமாக அனைவரும் தப்பித்து, இறைவனின் உடன் இருப்பை எண்பிப்பதாக இந்நிகழ்வு அமைந்தது. 

7.5.2017 அன்று ஆலய கட்டுமான பணிகளை உயர்ப்பேராயர் ஜார்ஜ் ஆலஞ்சேரி ஆண்டகை பார்வையிட்டு ஒரு இலட்சம் ரூபாய் நன்கொடையும் வழங்கினார். 

14.11.2019 அன்று 40 அடி உயரம் கொண்ட புதிய கொடிமரம் நாட்டப்பட்டது 3,20,000 செலவில் இளைஞர் இயக்கத்தினர் அன்பளிப்பாக அளித்தனர். 20.12.2020 அன்று பழைய ஆலயத்தின் கடைசி திருப்பலியை குருகுலமுதல்வர் பேரருட்தந்தை தாமஸ் பவ்வத்துபறம்பில் நிறைவேற்றினார்.

2018 ஆம் ஆண்டு மே மாதம் 1-ஆம் நாள் மேதகு ஆயர் மார் ஜார்ஜ் இராஜேந்திரன், அருட்தந்தை ஜோசப் சந்தோஷ், பேரருட்தந்தை அகஸ்டின் தலோடில் ஆகியோர் ஒன்றிணைந்து திருப்பலி அர்ப்பித்த பின் புதிய குருசடி அர்ச்சிக்கப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை செபமாலையும், மேய் மாதத்தில் மாதா வணக்கமும் சிறப்புடன் நடைபெற்று வருகிறது.

21.12.2021 அன்று மாலை கோலாகலமாக மேதகு ஆயர் மார் ஜார்ஜ் ராஜேந்திரன் SDB , குருகுலமுதல்வர் பேரருட்தந்தை தாமஸ் பவ்வத்துபறம்பில், முன்னாள் குருகுலமுதல்வர் பேரருட்தந்தை ஜோஸ் முட்டத்துப்பாடம், பங்குத்தந்தை பேரருட்தந்தை அகஸ்டின் தலோடில், முன்னாள் பங்குதந்தை பீட்டர் கிழக்கேயில், பேரருட்தந்தை டினு கோட்டக்காபறம்பில் ஆகியோர் தலைமையில் கொடிமரம், கல்குருசு, புதிய ஆலயம் அர்ச்சிப்பு நடைபெற்றது. 

பேரருட்தந்தை அகஸ்டின் தலோடில் அவர்களின் முயற்சியால் பல பணிகளை செய்துள்ளார்.. அவை

19-6-2015 - புதிய ஆலய அடிக்கல் நாட்டுதல்.

9-7-2015 - 450 அடி ஆழ்குழாய் கிணறு தோண்டியது, புதிய 2 கழிப்பறைகள் உருவாக்கியது.

23-1-2016 - மாதம் தோறும் ஒரு நாள் நற்செய்தி தியானம் தொடங்கப்பட்டது.

6-11-2016 - ஆலய வளாக கல்லறைத் தோட்டம் நிறுவியது.

14-5-2017 - சிறுமலர் மளிகை கடை திறப்பு

25-10-2017 - புதிய குருசடி அடிக்கல் நாட்டுதல்

1-5-2018 - புதிய குருசடி அர்ச்சிப்பு.

7-7-2018 - புதிய கலையரங்கம் அர்ச்சிப்பு.

16-12-2018 - பழைய குருசடி புதுப்பிக்கபட்டது.

3-3-2019 - பழைய ஆலயம் மேற்கூரை மாற்றியமைக்கப்பட்டது.

27-10-2019 - புதிய மேடை அர்ச்சிப்பு.

29-11-2020 - மேடையின் 2 வது மாடி புனித தோமையார் அரங்கு மற்றும் கல்லறை தோட்ட குருசடி அர்ச்சிப்பு.

21-12-2020 - புதிய ஆலயம் அர்ச்சிப்பு.

14-2-2021 - பழைய ஆலயம் உள்கட்டமைப்பு மாற்றி பாரீஸ்ஹால் ஆக செயல்பட்டது. ஆலய வரலாற்று கல்வெட்டு பொறிக்கப்பட்டது.

25-7-2021 - பங்கு மக்களால் எழுதப்பட்ட 3668 பக்கங்கள் கொண்ட திருவிவிலியம் வெளியிடப்பட்டது.

10-7-2021 - குந்நுவிளை, புனித சூசைப்பர் ஆலய பங்கு தந்தையாக பொறுப்பேற்று புதிய ஆலயம் கட்டி 20-2-2022 அன்று அர்ச்சிப்பு.

14-11-2021 - தக்கலை மறைமாவட்ட வெள்ளி விழாவின் நிறைவுவிழாவானது, கர்தினால் மார் ஜார்ஜ் ஆலஞ்சேரி தலைமையில் பிரமாண்ட முறையில் அனைவரும் பாரட்டும் விதமாக மஞ்சாலுமூடு ஆலயத்தில் நடத்தி முடித்தார்.

5-1-2022 - சிறுமலர் திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் துவங்கப்பட்டது.

9-1-2022  - தெற்றிவிளை புனித மிக்கேல் ஆலயத்தின் பங்குதந்தையாகவும் கூடுதல் பொறுப்பேற்று செயல்படத் தொடங்கினார்.

8-3-2022  - சிறுமலர் சிறு சேமிப்பு திட்டம் துவங்குதல்.

பணியாற்றிய அருட்தந்தையர்கள்

1. அருட்தந்தை. சக்கரியாஸ் காயத்தறா (23.4.1962 to 31.8.63) 

2. அருட்தந்தை.ஜோசப் மடத்தில் (20.12.1963 to 17.5.73)

3. அருட்தந்தை. தோமஸ் நெல்லிகுந்நத் (2.6.1967 to 8.11.68)    

4. அருட்தந்தை. சிறியக் கூட்டுமேல்‌ (9.1.1968 to 1974)

5. அருட்தந்தை. மாத்தியு வயலுங்கல் (17.5.1973 to 6.5.74)

6. அருட்தந்தை. ஜேக்கப் கடத்துக்களம் (6.5.1974 to17.4.75) 

7. அருட்தந்தை. தோமஸ் குரியாளசேரி (17.4.1975 to 27.4.76) 

8. அருட்தந்தை. தோமஸ் முட்டத்துகுந்நேல் (27.4.1976 to 15.2.89) 

9. அருட்தந்தை. பிலிப் வைக்கத்துகாரன் வீட்டில் (28.1.1980 to 5.3.81)

10. அருட்தந்தை. மேத்தியு சூறவடி  (5.3.1981 to 10.5.84)     

11. அருட்தந்தை. ஜோசப் பதாலில் (15.2.1989 to 8.2.90)

12. அருட்தந்தை. ஜோண் தடத்தில் (8.2.1990 to 20.6.90)

13. அருட்தந்தை. வர்கீஸ் கலாயில் (26.6.1990 to 16.6.93)

14. அருட்தந்தை. ஜேக்கப் ஐயமாத்திரா (16.6.1993 to 19.2.2002) 

15. அருட்தந்தை. பிலிப் கொடியந்தறா  (19.2.2002 to 19.2.2007) 

16. அருட்தந்தை. வர்கீஸ் தளியத்தில் (2.2.2006 to 31.12.2006) 

17. அருட்தந்தை. மேத்தியு தெக்கேகூற்று  (3.3.2007 to 24.5.2013)  

18. அருட்தந்தை. பீட்டர் கிழக்கேயில்  (29.5.2013 to 24.5.2015)  

19. அருட்தந்தை. அகஸ்டின் தலோடில்  (24.5.2015 to..........)

20. அருட்தந்தை. ரிட்டோ தூம்புங்கல்  (1.2.2016 to 15.5.2016)  

21. அருட்தந்தை. றோபின் ஜோஸ்  (17.1.2022 to...........)

செயல்படும் பக்த இயக்கங்கள்:

1. குழந்தை ஈசோ, 

2. மிஷன் லீக், 

3. இளைஞர் இயக்கம், 

4. மாதர் ஜோதிஸ்,

5. புனித வின்சென் தே பவுல் இயக்கம் - ஆண்கள் மற்றும் பெண்கள்

6. மரியாயின் சேனை - ஆண்கள் & பெண்கள்.

பங்கில் SDS சபை சகோதரிகள் இல்லம் அமைத்து பணியாற்றி வருகின்றனர்.

வரலாறு: ஆலய வைரவிழா மலர்

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பங்குத்தந்தை பேரருட்பணி. அகஸ்டின் தலோடில் அவர்களின் வழிகாட்டலில், பங்கு உறுப்பினர் திரு. செல்வன் ஆசிரியர் அவர்கள்.