554 புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயம், திருவளர்சோலை

புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயம் 

இடம் : திருவளர்சோலை, கல்லணைசாலை, திருச்சி -05.

மாவட்டம் : திருச்சிராப்பள்ளி 

மறைமாவட்டம் : கும்பகோணம்

மறைவட்டம் : இலால்குடி

நிலை : கிளைப்பங்கு 

பங்கு : அமல ஆசிரமம், ஸ்ரீரங்கம். 

பங்குத்தந்தை : அருள்பணி. ஆ. தைனிஸ், கப்புச்சின் சபை 

இணைப் பங்குத்தந்தை : அருள்பணி. இ. டேனியல் தயாபரன், கப்புச்சின் சபை. 

குடும்பங்கள் : 26

அன்பியம் : 1 (புனித பிரான்சிஸ் சவேரியார்) 

திருப்பலி : திருவிழா நாட்களில். 

திருவிழா : மே மாதம் முதல் வாரம். 

வழித்தடம் : திருச்சி சத்திரம் -கல்லணை

நிறுத்தம் : திருவளர்சோலை. 


வரலாறு :

புனித சவேரியார் ஆலயம் :

அமல ஆசிரமம் பங்கு திருவளர்சோலை சவேரியார் அன்பியத்தில் அமைந்துள்ள புனித சவேரியார் ஆலயம் தோன்றிய வரலாறு. இங்குள்ள மக்கள் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியவர்கள். ஆனால் இறைபக்தி மற்றும் ஆலய பங்கேற்புகளில் மிகுந்த நாட்டம் கொண்டவர்களாகத் திகழ்கின்றனர். புனித சவேரியார் ஆலயம் 1930 ஆம் ஆண்டுக்கு முன்னர் கட்டப்பட்டதாகும். அப்போது வாழ்ந்து வந்த முன்னோர்களின் வசதிக்கேற்ப சுண்ணாம்பு கார சுவற்றினால் ஆலயத்தைக் கட்டினர். 1989-1990 இல் ஏற்பட்ட பெரும் புயல் வெள்ளத்தில் ஆலயத்தைச் சுற்றியுள்ள தென்னைமரம் காற்றடித்து ஆலயத்தின் மேல் விழுந்து, ஆலய கோபுரமும், மேற்கூரையும் சேதமடைந்தது. அதன் காரணமாக ஆலய சுற்றுச்சுவர் முழுவதும் சேதமடைந்தது. சவேரியார் கோவில் தெருவில் உள்ள கிராம மக்கள் அனைவரும், ஆலய இடிபாடுகளை சுத்தம் செய்து ஆலயத்தை புதுப்பிக்க முடிவு செய்தனர். ஆலய அடித்தளம் வலுவாக இருந்ததால் அதன் மேல் ஆலயம் கட்டும் பணி ஆரம்பிக்கப்பட்டது. திருவளர்சோலை கிராம மக்கள் பொருள் உதவி செய்து ஆலய ஓட்டு மட்டம் வரை எழுப்பப்பட்டது. 

புதிய ஆலயம் மற்றும் தேர்த்திருவிழா:

அதன்பின் தொடர்ந்து ஆலயப் பணிகளை மேற்கொள்வதற்கு பொருளாதார பற்றாக்குறை ஏற்பட்டது. ஆலயப்பணியை நிறைவு செய்வதற்கு என்ன செய்யலாம் என்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.  அப்போது தலைவராக இருந்த தெய்வத்திரு. சின்னையன் மற்றும் பொறுப்பாளர்கள் இணைந்து மறைமாவட்ட ஆயரிடம் உதவி கேட்கலாம் என்று முடிவெடுத்தார்கள். அப்போது பெரியவர்சீலி பங்குத்தந்தையாக இருந்த அருட்தந்தையின் உதவியால் ஆயரை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. மேதகு ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் அவர்கள் சவேரியார் தெருவுக்கு அழைத்து வரப்பட்டார். இங்குள்ள மக்களையும் ஆலய கட்டுமானப் பணிகளையும் பார்வையிட்டு, ஆலயத்தை கட்டி முடிக்க வேண்டிய தொகையை பட்டியல் தயார் செய்து கொடுக்குமாறும், வேண்டிய தொகையை பங்குத்தந்தையிடம் கொடுப்பதாகவும் உறுதி கூறிச் சென்றார். அப்போது அமலாசிரமம் இருந்த அருள்பணி A. இயேசுதாஸ், க. ச அவர்கள் தொகைபட்டியலை ஆயரிடம் சமர்ப்பித்து, உதவி பெற்று, அவரது ஒத்துழைப்புடன் ஆலயம் கட்டி முடிக்கப்பட்டது. மக்களின் மனங்கள் மகிழ்ச்சி பொங்கியது. 20.07.1996 அன்று பங்குத்தந்தை A. இயேசுதாஸ் அவர்கள் திருப்பலி நிறைவேற்றி, அர்ச்சித்து, புதிய சுரூபங்கள் மந்திரிக்கப்பட்டு ஆலயத்தில் நிறுவப்பட்டது. அன்றிரவு ஆலயத்தில் உள்ள அனைத்து சுரூபங்களும் பூந்தேரில்  ஊர்வலம் வந்து அனைவருக்கும் ஆசீர் வழங்கப்பட்டது.  இந்த ஆலயத்தில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, மூன்று ராஜாக்கள் பொங்கல் மற்றும் ஆலய திருவிழாவின் போது நன்றி திருப்பலி நிறைவேற்றப்படும். இதர வாரத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் திருவளர்சோலையில் அமைந்துள்ள புனித மங்கள மாதா ஆலயத்தில் நடைபெறும் திருப்பலியில் அனைவரும் பங்கெடுத்து வருகின்றனர்.

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் : பங்குத்தந்தை அருள்பணி. ஆ. தைனிஸ், கப்புச்சின் சபை.