309 புனித அந்தோணியார் திருத்தலம், கோகூர்


புனித அந்தோணியார் திருத்தலம்.

இடம் : கோகூர்

மாவட்டம் : நாகப்பட்டினம்
மறை மாவட்டம் : தஞ்சாவூர்

நிலை : திருத்தலம்
பங்கு : புனித வளனார் (சூசையப்பர்) ஆலயம், #கீழ்வேளூர்

பங்குத்தந்தை : அருட்தந்தை ஜான் பீட்டர்

குடும்பங்கள் : 30
அன்பியங்கள் : இல்லை

செவ்வாய்க்கிழமை : மாலை 06.30 மணிக்கு ஜெபமாலை, மன்றாட்டுமாலை, நவநாள் ஜெபம் மற்றும் திருப்பலி. (பக்தர்களின் வசதிக்கேற்ப சிறப்பு திருப்பலியும் உண்டு)

வழித்தடம் : தஞ்சாவூர் லிருந்து நாகப்பட்டினம் செல்லும் பேருந்துகள் அனைத்தும் (திருவாரூர் வழி )கீழ்வேளூர் பங்கில் நிற்கும், அங்கிருந்து ஆட்டோ மூலம் செல்லலாம்.(மினி பஸ் வசதியும் உண்டு ).

மினி பஸ் (கீழ்வேளூர்-வடகரை)
நேரம் : காலை 09.00, 11.00 மணி, மதியம் 01.00 மணி. மாலை 03.00, 05.00, 07.00 மணி

திருவிழா : ஜூன் மாதத்தில் முதல் செவ்வாய்க்கிழமை கொடியேற்றம்.

கோகூர் திருத்தல வரலாறு :

நாகப்பட்டினம் மறை வட்டத்திற்கு இரண்டு பெருமைகள் உண்டு, ஒன்று வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னையின் திருத்தலப் பேராலயம், மற்றொன்று கோகூர் புனித அந்தோனியார் திருத்தலம். ஒவ்வொரு செவ்வாய் கிழமையிலும், ஜூன் மாதம் நடைபெறும் கோகூரில் கோயில் கொண்டுள்ள கோடி அற்புதர் புனித அந்தோனியாரின் பெருவிழாவிலும் ஆயிரகணக்கான மக்கள் கூடுவதையும் ,ஜெபிப்பதையும் பார்ப்போர் பரவசம் அடைகின்றனர் .கண்டோர் சாட்சி கூறுகின்றனர்.

நாகையிலிருந்து மேற்கே திருவாரூர் நெடுஞ்சாலையில் கீழ்வேளூர்- லிருந்து வடக்கே சுமார் 4 கிலோமீட்டர் தூரத்தில் கோகூர் புனித அந்தோனியார் திருத்தலம் உள்ளது. இந்த கிராமத்தில் தான் புனித அந்தோனியார் குடிகொண்டு அற்புதங்கள், அதிசயங்கள் செய்து வருகிறார்.

கோகூர் பெயர்காரணம் :

கோகூரின் பழைய பெயர் "பனந்தோப்பு ". கோவூர் கிழார் என்னும் பெரியவர் இங்கு தங்கி இருந்ததால் காலப்போக்கில் அது மருவி அவர் பெயரிலே கோகூர் என பெயர்பெற்றது. இவருக்கு பிறகு "வெள்ளை புடவைக்கார அம்மா " என்னும் ஒருவர் இங்கு தங்கி அறப்பணிகள் செய்து வந்தார், ஆனால் காலப்போக்கில் இங்கிருந்து மறைந்துவிட்டார் என்பது செவிவழி செய்தி.

கோகூரில் ஆலயம் வந்தது எப்படி:

கி.பி 1837 ஆண்டு வளம் கொழிக்கும் வற்றா நதியான வெட்டாற்றில் முதியவர் ஒருவர் தூண்டில் போட்டுக்கொண்டு இருந்தார். அவ்வேளையில் புனித அந்தோனியார் சொரூபம் ஒன்று நீரில் மிதந்து தூண்டிலை சுற்றி சுற்றி வந்தது, அந்த முதியவர் அதை ஒதுக்கிவிட்டு தூண்டில் போட்டார், ஆனால் மீண்டும் மீண்டும் அந்த அந்தோனியார் சொரூபம் தூண்டிலை சுற்றி வர வியப்படைந்த அவர், சொரூபத்தை தன் வீட்டுக்கு கொண்டுவந்தார்.

அன்று இரவு அவர் தூங்கும் போது, கனவில் அவர் பெயரை சொல்லி கோகூரில் தனக்கு ஒரு கோவில் கட்டவும், நான் அந்தோனியார் என்றும் கூறியது .கண் விழித்த அவர் காலையில் ஊர் மக்களிடம் நடந்ததை சொல்லி, எல்லோரின் உதவியுடன் முதன்முதலில் கீற்று கோவில் கட்டி புனித அந்தோனியார் சொரூபத்தை அதில் வைத்து வழிபட்டு வந்தனர். அந்த புதுமை வழங்கும் புனித அந்தோனியார் சொரூபம் இன்று ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ளது.

கோகூர் அந்தோனியார் திருவிழாவின் சிறப்பு...

கோகூர் அந்தோனியார் திருவிழா-முதல் மூன்று நாட்கள்

1.புனித அந்தோனியார் ஆலய திருவிழாக்கள் எங்கு நடந்தாலும் நிறைவான அந்த நாளிலே சப்பர பவனி சிறப்பாக கொண்டாட படும். ஆனால் கோகூர் அந்தோனியார் திருவிழாவில், மூன்று நாட்கள்(ஜூன் இரண்டாம் வார இறுதியில் ) பெரிய சப்பர பவனி நடைபெறும்.

2.ஆற்றில் இறங்குகிறார் ..புனித கோகூர் அந்தோனியார்..ஆம், கோகூர் புனித அந்தோனியார்.. பல வருடங்களுக்கு முன்பு ..இந்த வெட்டாறு .. ஆற்றில் மிதந்து வந்து, இன்று கோகூர் கிராமத்திலே தன்னை தேடி வந்த அனைவருக்கும் புதுமைகள் செய்து கொண்டு இருக்கிறார். இந்த உண்மையை பிரதிபலிக்கவே, கோகூர் அந்தோனியார் சப்பர பவனி மூலமாக இந்த ஆற்றில் இறங்கி கரை ஏறுகிறார். மூன்று நாட்களும்.

3.இந்த மூன்று நாட்களிலும் கோகூர் கிராமம் முழுவதும் ..நறுமணம் ...தூப நறுமணம் ..காரணம் ..கோகூர் அந்தோனியாரின் பக்தர்கள் ,புனித அந்தோனியாரை போல ..கருப்பு நிற அங்கியை அணிந்து, ஒரு கையில் நெருப்பு, மற்றொரு கையில் சாம்பிராணி யை தூவிக் கொண்டு பக்தி பரவசத்துடன் கோகூர் அந்தோனியார் சப்பரத்தினை பின் தொடர்வார்கள்.

4.நான்காம் நாள் ஞாயிற்று கிழமை (ஜூன் இரண்டாம் வார இறுதியில் காலை 5.30 மணி திருப்பலி முடிந்தவுடன், "விடையாற்றி சப்பரம்" அல்லது விடைபெறுதல் சப்பரம் அல்லது "சாமியார் சப்பரம்" என்று பல பெயர்களில் அழைக்கபடுகிறது. இதன் நோக்கம் கோகூரில் கோயில் கொண்டுள்ள அந்தோணியாரும் ஒரு குருவாக (சாமியாராக )இருந்த காரணத்தினால், இந்த புனித கோகூர் அந்தோனியார் ஆலய பங்குத்தந்தையை கவுரவ படுத்தும் விதமாக இந்த சிறிய சப்பர பவனியும் நடைபெறும்..

கோகூர் புனித அந்தோனியாரின் திருவிழாவிற்கு நம்பிக்கையோடு வாருங்கள். உங்கள் வேண்டுதல்களை கோகூர் அந்தோனியார் நிச்சயம் நிறைவேற்றி தருவார்....

கோகூர் புனித அந்தோனியார் செய்த புதுமைகளில் சில:

சலவை தொழிலாளி:

சலவை தொழிலாளி ஒருவர் கோகூர் புனித அந்தோனியாருக்கு நேர்த்தி கடன் வேண்டி, நிறைவேறியதால், கோகூர் புனித அந்தோனியாருக்கு சமையல் செய்து அனைவருக்கும் பரிமாற வேண்டும் என்ற எண்ணத்தில், சமைத்துவிட்டு எல்லா மக்களையும் சாப்பிட வருமாறு அழைத்தார், ஆனால் மக்கள் அவரை தாழ்ந்தவர் என்று சொல்லி..!!! சாப்பிட வர முடியாது என்று அவமானப்படுத்தி விட்டனர்.

சலவை தொழிலாளி மனம் நொந்தவாறு சமையல் செய்த சாப்பாடு அனைத்தையும் ஒரு குழி தோண்டி புதைத்து விட்டு சென்று விட்டார். அடுத்த ஆண்டு அதே இடத்தில் சமைக்க அடுப்பு தோண்டிய போது சூடான ஆவி வெளிவர, மக்கள் பயந்து போய் குழி தோண்டி பார்த்தபோது சென்ற ஆண்டு சமைத்த சாதமும் குழம்பும் அன்று சமைத்தது போலவே இருந்தது கண்டு அனைவரும் வெட்கத்தால் வியந்தார்கள். தங்கள் தவறை உணர்ந்தார்கள், கோகூர் புனித அந்தோனியாரின் புதுமையை எண்ணி எல்லோரும் அந்த உணவை உண்டார்கள்.

அனைவரும் கடவுளின் மக்கள் என்று கோகூர் புனித அந்தோனியார் புரிய வைத்தார். இந்த புதுமைக்கு கோகூர் மக்களே சாட்சி .

புயல்வெள்ளத்திலிருந்து காப்பாற்றிய கோகூர் புனித அந்தோனியார் :

1952 ஆண்டு கோகூரில் பெரும் புயல், வெள்ளம் வந்து மக்கள் தங்க இடமில்லாமல் மிகவும் துன்பப் பட்டார்கள், மக்கள் எல்லாரும் கோகூர் புனித அந்தோனியாரை நம்பி ஆலயத்திற்குள் வந்து தங்கினார்கள், வெள்ளம் அதிகரித்தாலும் ஆலய படிக்கட்டை தாண்டி உள்ளே ஒரு சொட்டு தண்ணீர் கூட வரவில்லை, இது ஒரு பெரும் புதுமை என கோகூர் மக்கள் இன்றும் கூறுகின்றனர்.

மேலும் பலருக்கு பில்லி சூனியகட்டுகளை அவிழ்த்து அவர்களை குணமாக்கியுள்ளார். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இங்கு வந்து வேண்டி குழந்தை வரம் பெற்றுள்ளனர். காணாமல் போனவற்றை திருப்பிக் கொடுத்துள்ளார். இவ்வாறாக எண்ணற்ற புதுமைகளை நாள்தோறும் இறைவனின் வழியாக வழங்கிக் கொண்டிருக்கிறார் புனித அந்தோணியார்.

கோகூர் புனித அந்தோனியாரை நோக்கி ஜெபம் :

புதுமைகள் பல புரிய அருள்பெற்ற புனித கோகூர் அந்தோனியாரே! எங்கள் விண்ணப்பங்களை ஏற்று எங்களுக்கு இறைவனின் அருளை பெற்றுத்தாரும் புனித கோகூர் அந்தோனியாரே! குழந்தை இயேசுவை கையில் ஏந்தும் பேறு பெற்ற புனிதரே புனித கோகூர் அந்தோனியாரே! துன்பப் படுவோருக்கு துணை புரியும் வள்ளலே புனித கோகூர் அந்தோனியாரே! ஏழைகளையும் ஆதரவற்றவர்களையும் அரவணைக்கும் நேச தந்தையே புனித கோகூர் அந்தோனியாரே! அசைக்க முடியாத நம்பிக்கையுடன் உமது திருத்தலத்திற்கு வந்துள்ளோம் புனித கோகூர் அந்தோனியாரே! நீர் கையில் ஏந்தியுள்ள குழந்தை இயேசுவிடம் எங்களுக்காக பரிந்து பேசி எம் ஆன்மாவிற்கும் உடலுக்கும் வேண்டிய வரங்களைப் பெற்றுத் தாரும் புனித கோகூர்அந்தோனியாரே! துன்பப் படுவோரின் துயர் துடைப்பவரே புனித கோகூர்அந்தோனியாரே! துன்ப துயரங்கள், வியாதிகள், சோதனைகள், தீமைகள் அனைத்திலிருந்தும் எங்களை காப்பாற்றும் புனித கோகூர் அந்தோனியாரே! எங்கள் குடும்பங்களையும் வேலைகளையும் நிலங்களையும் ஆசிர்வதியும் புனித கோகூர் அந்தோனியாரே!