863 புனித ரீத்தம்மாள் ஆலயம் ரீத்தம்மாள்புரம்

            

புனித ரீத்தம்மாள் ஆலயம்

இடம்: ரீத்தம்மாள்புரம், தூத்துக்குடி, 628003

மாவட்டம்: தூத்துக்குடி

மறைமாவட்டம்: தூத்துக்குடி

மறைவட்டம்: தூத்துக்குடி

நிலை: பங்குத்தளம்

கிளைப்பங்குகள்:

1. இயேசுவின் திரு இருதய ஆலயம், சில்வர்புரம்

2. புனித அந்தோனியார் ஆலயம், சின்னக்கண்ணுபுரம்

பங்குத்தந்தை அருட்பணி. L. ஆரோக்கியம் 

குடும்பங்கள்: 83 (கிளைப்பங்குகள் சேர்த்து 188)

அன்பியங்கள்: 6 (கிளைப்பங்குகள் சேர்த்து 12)

ஞாயிறு திருப்பலி காலை 09:30 மணி

வாரநாட்களில் திருப்பலி மாலை 07:00 மணி

திருவிழா: மே மாதம் 22 ஆம் தேதி.

Map location: https://g.co/kgs/w2fYKa

பங்கின் வரலாறு:

தூத்துக்குடி மாநகராட்சியின் புதிய பேருந்து நிலையத்திலிருந்து மேற்கு நோக்கி 4 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள கிராமம் பண்டாரம்பட்டி. இந்து சமய மக்கள் அதிகமாக வாழும் இப்பகுதியில், ஏழு தலைமுறைக்கு முன்னதாக ஒருசில குடும்பங்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு, திருமுழுக்கு பெற்று கத்தோலிக்க விசுவாசத்தை கடைப்பிடித்தார்கள். இவர்களின் விசுவாசத்தை உறுதிப்படுத்த இவர்களுக்கென ஒரு ஆலயம் தேவைப்பட்டது. 

பொருளாதார நிலையில் எளியவர்களாக இருந்த இவர்களால் தங்களுக்கென ஆலயம் கட்டி எழுப்ப முடியாத சூழ்நிலையில், 1934 ஆம் ஆண்டில் திரு. ஜே.பி. ரோச் அவர்கள் புனித ரீத்தம்மாவுக்காக இப்பகுதியில் ஒரு ஆலயம் கட்டிக்கொடுக்க முன் வந்தார். புதிய ஆலயம் கட்டி முடிக்கப்பட்டு, மேதகு ஆயர் ரோச் அவர்களால் திறக்கப்பட்டு அர்ச்சிக்கப்பட்டது. அதன் பிறகு இம்மக்களின் ஆன்மீகத் தேவைக்காக இவர்கள் தூத்துக்குடி புனித சார்லஸ் ஆலயப் பங்கோடு இணைக்கப்பட்டார்கள். 

பின்னர் பத்தினாதபுரம் புனித யூதா ததேயு ஆலயம் புதிய பங்காக உருவாக்கப்பட்டபோது, அப்பங்கின் இணையூர்களில் ஒன்றாக இவ்வூர் உருவாக்கப்பட்டது. மீண்டும் இவ்வூர் புனித சார்லஸ் ஆலயப் பங்கோடு இணைக்கப்பட்டது. 1992 ஆம் ஆண்டு அண்ணாநகர் புனித மிக்கேல் ஆலயம் புதிய பங்காக உருவானபோது, அவ்வூரோடு இணைக்கப்பட்டது.

மக்களின் வழிபாட்டிற்காகக் கட்டப்பட்ட முதல் ஆலயம் பழுதடைந்த நிலையில், அப்போதைய அண்ணாநகர் பங்குத்தந்தை அருள்தந்தை. புருனோ அவர்கள் புதிய ஆலயத்திற்கான அடிக்கல் நாட்டி, ஆலயப் பணிகளுக்கான தொடக்க வேலைகளைச் செய்தார். அவர்களுக்குப் பிறகு அருள்தந்தை மைக்கிள் ஜெகதிஸ் அவர்கள் அண்ணாநகர் பங்கின் பங்குத்தந்தையாக பொறுப்பேற்றதும், இவ்வாலயப் பணிகள் விரைவுபடுத்தப்பட்டன. மக்களின் முழுமையான உழைப்பின் காரணமாக இவ்வாலயப் பணிகள் நிறைவுபெற்று, 2006 ஆம் ஆண்டு மே மாதம் 2ஆம் தேதி, மேதகு ஆயர் இவோன் அம்புரோஸ் அவர்களால் திறக்கப்பட்டு அர்ச்சிக்கப்பட்டது. 

மறைமாவட்டத்தின் நலனுக்காக எப்பொழுதும் ஜெபிப்பதற்காக புனித செபமாலை அன்னை சபை சகோதரிகளுக்கு இப்பகுதியில் ஒரு துறவு மடம் கட்டிக்கொடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ரீத்தம்மாவை பாதுகாவலியாகக் கொண்டு இங்குள்ள கிறிஸ்தவ மக்கள் வாழ்ந்ததால், பண்டாரம்பட்டி என்று பொதுப்பெயர் கொண்ட கிராமத்தில் இருந்தாலும் தங்களை "ரீத்தம்மாள்புரம்" கிராம மக்கள் என்று அழைப்பதில் பெருமை கொண்டார்கள்.

இம்மக்களின் ஆன்மீக வாழ்வில் வளர்ச்சியைக் கொண்டு வருவதறக்கு இவ்வூர் தனிப்பங்காக இருந்தால் நன்றாக இருக்கும் என்பதனால், அருள்தந்தை பென்சன் அவர்கள் மறைமாவட்ட நிர்வாகத்திற்கு அதற்கான பரிந்துரை கடிதத்தை அளித்தார்கள். இதற்கென குழு அமைக்கப்பட்டு, விரிவாக ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அண்ணாநகர் பங்கிலிருந்து இவ்வூரை தனிப்பங்காக மாற்றுவதற்கான பரிந்துரை ஏற்றுக்கொள்ளப்பட்டது. 

4ஆம் கேட்டுக்கு மேற்கே தூத்துக்குடி, திருநெல்வேலி இரயில்வே தண்டவாளத்திற்கு வடக்குப் பகுதியில் உள்ள சின்னக்கன்னுபுரம், சில்வர்புரம், ரீத்தம்மாள்புரம் ஆகிய கிறிஸ்தவ கிராமங்களை உள்ளடக்கி 22.05.2018 அன்று புனித ரீத்தம்மாள் ஆலயத்தில் மாலையில் மேதகு ஆயர் இவோன் அம்புரோஸ் தலைமையில் நடைபெற்ற கூட்டுத்திருப்பலியில் புதிய பங்காக அறிவிக்கப்பட்டது. இதன் முதல் பங்குத்தந்தையாக அருள்தந்தை ஆரோக்கியராஜ் அவர்கள் நியமிக்கப்பட்டார்.

பங்கின் பக்த சபைகள்:

1. மறைக்கல்வி மன்றம்

2. பீடப் பூக்கள்

3. அமல உற்பவ அன்னை இளம் பெண்கள் சபை

4. டொன் போஸ்கோ இளையோர் இயக்கம்

5. திருக்குடும்ப சபை

6. மரியாயின் சேனை

7. புனித சூசையப்பர் சபை

பங்கின் அன்பியங்கள்

1. புனித சவேரியார் அன்பியம்

2. புனித ரீத்தம்மாள் அன்பியம்

3. புனித தோமையார் அன்பியம்

4. புனித அல்போன்சா அன்பியம்

5. அன்னை வேளாங்கண்ணி அன்பியம்

6. புனித அன்னை தெரசா அன்பியம்.

பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள்:

1. Rev.Fr. D. ஆரோக்கிய ராஜ் (2018-2019)

2. Rev.Fr. இருதயராஜ் பெர்னாண்டோ (2019-2020)

3. Rev.Fr. L. ஆரோக்கியம் (2020.......)

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பங்குத்தந்தை அருட்பணி. ஆரோக்கியம் அவர்கள்.