107 தூய சூசையப்பர் ஆலயம், சூசைபுரம்


தூய சூசையப்பர் ஆலயம்

இடம் : சூசைபுரம், கண்ணனூர் அஞ்சல்

மாவட்டம் : கன்னியாகுமரி
மறை மாவட்டம் : குழித்துறை.

திருத்தந்தை : பிரான்சிஸ்
ஆயர் : மேதகு ஜெறோம் தாஸ்
பங்குத்தந்தை : அருட்பணி ஆண்ட்ரூஸ்.

நிலை : கிளைப்பங்கு
பங்கு : தூய வியாகுல மாதா ஆலயம், வெள்ளிகோடு.

குடும்பங்கள் : 140
அன்பியங்கள் : 4

ஞாயிறு திருப்பலி : காலை 09.00 மணிக்கு

திருவிழா : மே மாதம் 1 ம் தேதியை உள்ளடக்கிய நாட்கள்.

வரலாறு :

தூய சூசையப்பருக்கு அர்ப்பணிக்கப் பட்ட சூசைபுரம் தலத்திருச்சபை, தனக்கென்று ஒரு தன்னிகரற்ற வரலாற்றை சுமந்து நிற்கின்றது. பல்வேறு சூழ்நிலைகளில் போதிக்கப்பட்டு வந்த கிறிஸ்துவின் நற்செய்தி, இந்த மக்களுக்கு பலகாலமாக மறைந்தே இருந்து வந்திருக்கிறது. கிபி 1950 க்கு பிறகு முளகுமூடு பங்கு அருட்சகோதரிகள் இல்லத்தைச் சார்ந்த அருட்சகோதரிகள், இப்பகுதி மக்களை அவர்களுடைய இல்லங்களில் சந்தித்து கிறிஸ்துவின் நற்செய்தியை எடுத்துரைத்தார்கள். அவர்களின் நற்செய்தி போதனையால் ஒருசில குடும்பத்தினர் கிறிஸ்தவ மறையைத் தழுவினர். நாளடைவில் புதிதாக திருமறையில் இணைந்த இக்குடும்பங்கள், அந்த அருட்சகோதரிகளோடு இணைந்து மறைபரப்பு பணியில் ஈடுபட்டனர். அதன் பயனாக பலர் கிறிஸ்தவ மறையில் இணைந்தனர்.

தொடர்ந்து மக்களுடன் இணைந்து அருட்சகோதரியர் குழந்தைகளுக்கு மறைக்கல்வி போதித்து வந்தனர். தலத்திருச்சபை வளர வளர, மக்கள் இணைந்து வழிபாடு நடத்த ஒரு ஆலயம் தேவை என்பதை உணர்ந்தனர். அப்போதைய முளகுமூடு பங்குத்தந்தை அருட்பணி S. T மத்தியாஸ் அவர்களின் முயற்சியால் 1962 ம் ஆண்டு ஒரு ஓலைக்குடிசை ஆலயம் அமைக்கப்பட்டு, தொடர்ந்து 3 ஆண்டுகள் இந்த ஆலயத்தில் திருப்பலி நடைபெற்று வந்தது.

அருட்பணி வர்க்கீஸ் அவர்களின் முயற்சியால் ஓலைக்குடிசை மாற்றப்பட்டு புதிய ஆலய கட்டுமானப் பணிகள் தொடங்கப் பட்டது. பணிகள் நிறைவு பெற்று அப்போதைய கோட்டார் மறை மாவட்ட ஆயர் மேதகு ஆஞ்ஞிசுவாமி அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.

1968 ம் ஆண்டு முளகுமூடு பங்கிலிருந்து வெள்ளிகோடு- தூய வியாகுல மாதா ஆலயம் தனிப்பங்காக ஆனபோது, சூசைபுரமானது வெள்ளிகோடு பங்கின் கிளைப் பங்காக செயல்படத் துவங்கியது.

திருச்சபையின் பல்வேறு துறைகளில் வளர்ச்சியை நோக்கி நடைபோடும் சூசைபுரம் தலத்திருச்சபை, திருச்சபையின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு மறைக்கல்வி மன்றம், பக்த சபை இயக்கங்கள், அன்பியங்கள், அருட்பணிப்பேரவை முதலியன அமைக்கப் பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

தற்போதைய ஆலயமானது அருட்பணி M. டேவிட் மைக்கேல் பணிக்காலத்தில், கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்று, கோட்டார் மறைமாவட்ட முதன்மைப் பணியாளர் அருட்பணி S. இயேசுரெத்தினம் அவர்களால் 02-05-2004 அன்று அர்ச்சிக்கப்பட்ட இவ்வாலயம் வளர்ச்சியின் பாதையில் இறை விருப்பத்திற்கேற்ப வளர்ந்து முன்னேறிச் செல்கின்றது.