275 புனித சூசையப்பர் ஆலயம், பெரும்பண்ணையூர்


புனித சூசையப்பர் ஆலயம்

இடம் : பெரும்பண்ணையூர்

மாவட்டம் : திருவாரூர்
மறை மாவட்டம் : தஞ்சாவூர்

நிலை : பங்குதளம்

குடும்பங்கள் : 450

ஞாயிறு திருப்பலி : காலை 08.00 மணிக்கு

நாள்தோறும் திருப்பலி : காலை 06.30 மணிக்கு

திருவிழா : மே மாதத்தில் பத்து நாட்கள். (ஈஸ்டர் பண்டிகை முடிந்த பின்னர் வருகிற 2-வது வெள்ளிக்கிழமை திருவிழா ஆரம்பமாகும்)

வரலாறு :

திருவாருர் மாவட்டம், குடவாசல் அருகே பெரும்பண்ணையூரில் ஐரோப்பிய கட்டடக் கலைக்கு சான்றாக உள்ள 134 ஆண்டுகள் பழமையான தேவாலயம் அமைந்துள்ளது.

பெரும்பண்ணையூர் கிராமத்தில் கடந்த 1872-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14-ஆம் தேதி அப்பகுதியைச் சேர்ந்த சின்னுஉடையார் என்பவரால் அடிக்கல் நாட்டி தொடங்கப்பட்ட புனித சூசையப்பர் ஆலய கட்டுமானப் பணி 1885-ஆம் ஆண்டு (சுமார் 14 ஆண்டுகள்) முடிக்கப்பட்டது.

153 அடி உயரம் கொண்ட இந்த தேவாலயம் சுமார் 35 ஆயிரம் சதுர அடி நிலப்பரப்பில், ஐரோப்பிய கட்டடக் கலைக்கு சான்றாக பிரம்மாண்டமாக கட்டப்பட்டது. வெளிப் பகுதியிலிருந்து பார்த்தால் மிகப் பிரம்மாண்டமான அரண்மனைபோல் தோற்றமளிக்கும்.

இந்த தேவாலயத்தில் ஒவ்வொரு வார நாள்களிலும், பல்வேறு ஜெபம், திருப்பலியும், ஞாயிற்றுக்கிழமை திவ்விய நற்கருணை ஆராதனைகள் இன்றளவும் நடைபெற்று வருகிறது. இதுதவிர ஆண்டுதோறும் திருவிழாவும் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டு தலைநகர் பாரீஸிலிருந்து 2000 கிலோ எடையுள்ள கோயில் மணி இந்த தேவாலயத்துக்கு கொண்டுவரப்பட்டு நிறுவப்பட்டுள்ளது. இந்த மணியை அடிப்பதற்கு 3 பேராவது தேவை. மணி அடிக்கும் சத்தம் சுற்றுப் பகுதியில் 5 கி. மீட்டர் தொலைவுக்கு கேட்கும். தற்போது இந்த மணி மண்டபமும் பழுதடைந்த நிலையில் உள்ளது.

சில வருடங்களுக்கு முன்பு அப்போதைய பங்குத்தந்தை அருட்தந்தை ஜெரால்ட் அவர்கள் சுமார் எட்டு கோடி ரூபாய் மதிப்பில் இந்த ஆலயத்தை புனரமைப்பு செய்ய பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு அதற்கான திட்ட அறிக்கையை மறை மாவட்டத்திற்கு சமர்ப்பித்தார்கள். புனரமைப்பு செலவுகள் இந்த அளவிற்கு வரக் காரணம் இந்த ஆலயத்தின் சுவர்கள் பழமையான முறைப்படி சுண்ணாம்பு சேர்த்து கலை நயத்துடன் கட்டப்பட்டது ஆகும். ஆகவே இந்த பழமை நிலை மாறாமல் செய்ய வேண்டியும் 2000 கிலோ எடை கொண்ட ஆலய மணியை சரியான இடத்தில் வைப்பதற்கும் இத்தனை செலவுகள் ஆகின்றது. ஆனால் சில காரணங்களால் புனரமைப்பு பணிகள் செய்யப்படாமல் அப்படியே போடப்பட்டது.

மேலும், இந்த தேவாலயம் மிகப்பழைமையானதாக இருந்தாலும், வெளிப்புறத் தோற்றத்தில் பாழடைந்த நிலையில் உள்ளது. எனவே, இந்த தேவாலயத்தை புதுப்பிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுகுறித்து தேவாலயப் பங்குத் தந்தை ஏ.எம்.லூர்துசாமி கூறுகையில், தேவாலயத்தை புதுப்பிக்க நிதி ஆதாரத்தை உருவாக்கி, பணிகளை தொடங்க முயற்சி மேற்கொண்டு வருகிறோம் என்றார்.

புராதன கத்தோலிக்க ஆலயங்களை பார்க்கச் செல்பவர்கள் தவறாமல் செல்ல வேண்டிய ஆலயம் இது ஆகும்.

இந்த ஆலயமானது திருவாரூர் - கும்பகோணம் நெடுஞ்சாலையில் உள்ளது.

Perumpannaiyur is located about 15 Kms from Thiruvarur, 6 Kms from Manakkal Ayyampet, 3 Kms from Simizhi, 4 Kms from Engan, 13 Kms from Koradacherry, 28 Kms from Kumbakonam and 110 Kms from Trichy. Perumpannaiyur is located on Thiruvarur to Kumbakonam Route. Take a right between Manakkal Ayyampet and Simizhi to reach this temple. Nearest Railway Station is located at Thiruvarur and Koradacherry. Nearest Airport is located at Trichy.

பல மாதங்களாக முயற்சி செய்து சமீபத்தில் தான் இவ்வாலய தகவல்களை சேகரிக்க முடிந்தது. உதவி செய்த அருட்தந்தை ஜெரால்ட் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்..! வாழ்த்துகள் ..!

சிறந்த கலைநயத்துடன் பிராமாண்டமாக காணப்படும் இந்த ஆலயமானது புனரமைப்பு செய்யப்பட்டு மீண்டும் புத்துயிர் பெற இறைவனிடம் செபிக்க உங்கள் அனைவரையும் கேட்டுக் கொண்டு எமது 275 வது பதிவை இறைவன் பாதம் சமர்ப்பிக்கின்றோம்..!