புனித அன்னை மரியா பேராலயம்
இடம் : பெங்களூரு
மாநிலம் : கர்நாடகா
பெங்களூரு உயர் மறை மாவட்டம்
திருப்பலி நேரங்கள் :
ஞாயிற்றுக்கிழமை
06:00 am English
07:00 am Tamil
08:00 am Tamil
09:15 am Kannada
11:00 am Tamil
06:00 pm English
Weekdays :
06:00 am English
06:45 am Tamil
11:00 am Tamil
06:30 pm Mon, Tue & Fri Tamil
06:30 pm Wed Kannada
06:30 pm Thu English
புனித அன்னை மரியா பேராலயம் (St. Mary's Basilica) என்பது உரோமன் கத்தோலிக்க பெங்களூரு உயர் மறைமாவட்டம், பெங்களூரின் சிவாஜி நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற வழிபாட்டிடம் ஆகும். இக்கோவில் பெங்களூரிலேயே மிகப் பழமையான கத்தோலிக்க ஆலயம் ஆகும். மேலும், கர்நாடகா மாநிலத்தில் உள்ள ஒரே இணைப் பெருங்கோவில் (minor basilica) இதுவே.
ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் மாதம் இக்கோவிலில் நிகழ்கின்ற திருவிழா மிகச் சிறப்பானதாகும். அவ்விழாவில் கிறித்தவர்களும் பிற சமயத்தவரும் பெரும் எண்ணிக்கையில் கலந்துகொள்கின்றனர்.
ஆலய வரலாறு
17ஆம் நூற்றாண்டில் மைசூர் இராச்சியத்தின் தலைநகராயிருந்த ஸ்ரீரங்கப்பட்டணத்தில் முதன்முறையாக கிறித்தவம் 1648இல் அறிமுகமானது. அப்போது பெங்களூரு ஒரு சிறு ஊராகவே இருந்தது. மைசூர் மறைபரப்புத் தளத்தின் பகுதியாக விளங்கிய பெங்களூரில் கிறித்தவம் படிப்படியாக வேரூன்றியது. முதலில் மலபார் மறைத்தளத்தைச் சார்ந்த இத்தாலிய இயேசு சபையினர் அப்பகுதியில் கிறித்தவத்தைப் பரப்பினர். அதன் பின் பிரஞ்சு இயேசு சபையினர் மதுரை மற்றும் கர்நாடக மறைத்தளத்திலிருந்து வந்து 18ஆம் நூற்றாண்டில் கிறித்தவத்தைப் பரப்பினர்.
தொடக்கத்தில் செஞ்சி பகுதியிலிருந்து பெங்களூரில் குடியேறிய கத்தோலிக்க மக்கள் ஒரு சிறு கூரைக் கோவில் கட்டி அங்கு வழிபட்டனர். ஆனால் ஐதர் அலி ஆட்சியிலும் அதன் பிறகு திப்பு சுல்தான் ஆட்சியிலும் (1782-1799) கிறித்தவர்கள் மிகக் கொடுமையாகத் துன்புறுத்தப்பட்டார்கள். பல கிறித்தவக் கோவில்கள் தரைமட்டமாக்கப்பட்டன. கிறித்தவர்கள் தம் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள தப்பியோட வேண்டியதாயிற்று.
1799இல் பிரித்தானியர் ஸ்ரீரங்கப்பட்டணத்தைக் கைப்பற்றி, திப்பு சுல்தானை முறியடித்த பிறகு கிறித்தவ மறைப்பணியாளர்கள் மீண்டும் மைசூர் மறைத்தளத்தில் பணிபுரிய வழிபிறந்தது. பாரிசு வெளிநாட்டு மறைப்பணியாளர்கள் (Missions Etrangères de Paris) அங்கு மீண்டும் பணிபுரிய வந்தனர். அக்குழுவைச் சார்ந்த ஷான்-அந்துவான் துபுவா (Jean-Antoine Dubois) என்பவர் சோமனஹல்லி, கமனஹல்லி, பேகூர், குஞ்சம், பலஹல்லி, தோரனஹல்லி போன்ற பகுதிகளில் கத்தோலிக்க குடும்பங்களைச் சந்தித்து அவர்களின் ஆன்ம தேவைகளைக் கவனித்தார்.
தமிழ்க் கத்தோலிக்க குடும்பங்கள் குடியேறி விவசாயம் செய்த பகுதி "பிலி அக்கி பள்ளி" (பிறகு "பிளாக் பள்ளி") என்று அழைக்கப்பட்டது. அங்கு துபுவா அடிகள் ஓலையால் வேய்ந்த ஒரு சிறு கோவிலை 1803இல் கட்டினார்.
அக்கோவிலில் அவர் திருப்பலி நிறைவேற்றினர். அக்கோவிலின் பெயர் "காணிக்கை மாதா கோவில்" என்பதாகும். 1813இல் அக்கோவில் சிறிதே விரிவாக்கப்பட்டு, "சுத்திகர மாதா கோவில்" என்று பெயர் பெற்றது. அப்பழைய கோவில் கட்டப்பட்ட ஆண்டு ஒரு கல்லில் பதிக்கப்பட்டது. துபுவா அடிகள் அக்கோவிலின் அருகே குருக்கள் இல்லம் ஒன்றையும் கட்டினார்.
அவருக்குப் பின் பணிப்பொறுப்பை ஏற்றவர் அருட்பணி அந்திரேயாஸ் என்பவர். அவர் புதுச்சேரியைச் சார்ந்த தமிழ்க் குரு. அவர் கோவிலை விரிவுபடுத்தி சிலுவை வடிவில் கட்டினார். ஆனால் பெங்களூரில் 1832இல் நிகழ்ந்த கலவரத்தின்போது கோவில் கட்டடம் அழிந்தது. அங்கு மறைப்பணி செய்த போஷத்தோன் அடிகள் அதிசயமாக உயிர்தப்பினார். அந்த இடத்தில்தான் இன்று புனித அன்னை மரியா பெருங்கோவில் எழுந்துள்ளது.
சில ஆண்டுகளுக்குப் பின் பெங்களூரில் கொள்ளை நோய் ஏற்பட்டது. மக்கள் அன்னை மரியாவிடம் வேண்டிக் கொண்டவர். மக்களுக்கு நலமளித்த அன்னையை "ஆரோக்கிய அன்னை" என்ற பெயராலும் மக்கள் அழைத்தனர்.
இன்றைய ஆலயம்
இன்று கோத்திக் கலைப்பாணியில் எழுந்துயர்ந்து நிற்கின்ற அன்னை மரியா கோவில் 1875-1882 காலக்கட்டத்தில் கட்டப்பட்டது. அதைக் கட்டியவர் அருட்பணி எல். இ. க்ளைனர் (Rev. L. E. Kleiner) என்பவர் ஆவர். அவர் பின்னர் மைசூரின் ஆயராக நியமனம் பெற்றார்.
புதிய ஆலயம் 1882, செப்டம்பர் மாதம் 8ஆம் நாள் ஆயர் யோவான்னஸ் மரியா கோவாது என்பவரால் அர்ச்சிக்கப்பட்டு அர்ப்பணிக்கப்பட்டது. அந்நிகழ்ச்சி 35 குருக்கள் மற்றும் 4000 கத்தோலிக்க மக்கள் முன்னிலையில் நடந்தது.
இன்று பெங்களூரில் உள்ள அனைத்து கத்தோலிக்க கோவில்களுக்கும் தாய்க் கோவிலாக அமைந்தது அன்னை மரியா கோவிலே என்பது குறிப்பிடத்தக்கது.
பேராலய நிலைக்கு உயர்த்தப்படல்
இக்கோவிலின் வரலாற்று முக்கியத்துவத்தைக் கருதி திருத்தந்தை ஆறாம் பவுல் இக்கோவிலை 1973, செப்டம்பர் 26ஆம் நாள் "இணைப் பெருங்கோவில்" (minor basilica) நிலைக்கு உயர்த்தினார். 1974, சனவரி 26ஆம் நாள் அந்த அறிக்கை வெளியிடப்பட்டு, கொண்டாட்டம் நிகழ்ந்தது.
கோவில் கட்டடக் கூறுகளும் கலைப் பாணியும்
ஆலயத்தை வடிவமைத்தவர் ஒரு பிரஞ்சு கட்டடக் கலைஞர். கோவிலின் நீளம் 172 அடி, அகலம் 50 அடி. கோவிலின் முகப்புக் கோபுரத்தின் உயரம் 160 அடி.
அண்மையில் இக்கோவிலின் பங்குத் தந்தையாகப் பணியாற்றிய அருட்பணி செபமாலை (Rev. T. Jabamalai) என்பவரின் பணிக்காலத்தில் புதியதொரு பெருங்கூடம் கோவிலின் அருகே கட்டப்பட்டது. கோவிலுக்கு உள்ளே சென்று அன்னை மரியாவுக்கு வணக்கம் செலுத்திய மக்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்ததால் அன்னை மரியாவின் திருவுருவம் கோவிலிலிருந்து அகற்றப்பட்டு புதிதாகக் கட்டப்பட்ட கூடத்தில் ஓர் பீடத்தின்மீது வைக்கப்பட்டது. அன்னை மரியாவின் கையில் குழந்தை இயேசு உள்ளார். 6 அடி உயரம் கொண்ட அச்சிலையின் முன் வேண்டுதல் நிகழ்த்த மக்கள் பெருமளவில் கூடுகின்றனர். ஒவ்வொரு நாளும் அன்னை மரியாவின் சுரூபத்திற்கு அழகிய சேலை அணிவிக்கப்படுகிறது.
கோவிலுக்கு உள்ளே அன்னை மரியா சுரூபம் இருந்த இடத்தில் குழந்தை இயேசு சுரூபம் வைக்கப்பட்டது. 2004இல் கோவிலின் தலைமைப் பீடம் புதுப்பிக்கப்பட்டு அழகூட்டப்பட்டது. பீடத்தின்மீது புதிய நற்கருணைப் பேழையும் வைக்கப்பட்டது. இப்பணிகளைச் செய்தவர் அப்போது பங்குத்தந்தையாகவும் மறைமாவட்ட முதன்மைக் குருவாகவும் பணியாற்றிய அருட்பணி செபமாலை ஆவார். மேலும் அவர் 2005-2007 ஆண்டுகளில் கோவிலை முழுமையாகப் புதுப்பித்தார். இவ்வாறு புதுப்பித்து அழகுபெற்ற கோவிலை மறைமாவட்டப் பேராயர் பெர்னார்து மோறாஸ் 2006, ஆகத்து 29ஆம் நாள் அர்ச்சித்தார்.
2008, செப்டம்பர் 8ஆம் நாள், கோவில் திருவிழாவின்போது புனித அன்னை மரியா கோவில் "மறைமாவட்ட திருத்தலம்" என்ற நிலைக்கு உயர்த்தப்பட்டது.
கோத்திக் பாணியில் கட்டப்பட்ட இக்கோவிலுக்கு வளைவுகள், அலங்காரப் பதிகைகள், கண்ணாடிப் பதிகைகள் கொண்ட சாளரங்கள் போன்றவை அழகூட்டுகின்றன. இக்கோவிலில் அமைந்துள்ள தூண்கள் தொகுப்புகளும் குறிப்பிடத்தக்கவை. மேலும் இக்கோவிலின் கோபுரங்கள் பிரமாண்டமாக எழுந்து நிற்கின்றன.
கண்ணாடிப் பதிகைச் சாளரங்கள் இரண்டாம் உலகப் போரின் போது அகற்றப்பட்டன. பின்னர் 1948இல் மீண்டும் பொருத்தப்பட்டன.
ஆலயத் திருவிழா
ஆண்டுத் திருவிழா அன்னை மரியாவின் பிறந்த நாள் விழாவான செப்டம்பர் 8ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. ஆகஸ்ட் 29ஆம் நாள் ஆடம்பர கொடியேற்றத்தோடு நவநாள் பக்திமுயற்சி தொடங்கி செப்டம்பர் 7ஆம் நாள் வரை நீடிக்கும். பத்தாம் நாளான செப்டம்பர் 8 பெரிய திருவிழாவாகக் கொண்டாடப்படும். திருவிழாவின் ஒவ்வொரு நாளும் கொடியேற்றம் நிகழ்த்துவது இக்கோவிலுக்கே சிறப்பான ஓர் அம்சம்.
பத்தாம் திருவிழாவன்று நிகழும் தேரோட்டம் சிறப்பானது. அப்போது தேரில் அன்னை மரியாவின் திருவுருவம் சிவாஜி நகரின் தெருக்கள் வழியாகக் கொண்டுசெல்லப்படும். அச்சிலை வழக்கமாக கோவில் நுழைவாயில் அருகே இருக்கும். 1832இல் நடந்த கலவரத்தின் போது சிலர் கோவிலுக்குத் தீவைத்த வேளையில் இச்சுருபம் மட்டும் அதிசயமாகத் தப்பியது. பின்னர் அச்சிலையை அங்கிருந்து அகற்றி சிறப்பான பீடத்தில் வைக்க முயன்றபோது அச்சிலை நகர மறுத்துவிட்டதாக வரலாறு. எனவே இன்றுவரை அன்னை மரியாவின் அச்சிலை கோவில் நுழைவாயில் அருகேயே உள்ளது. கோவில் திருவிழா நிகழ்ச்சிகளிலும் தேரோட்ட நிகழ்ச்சியிலும் மக்கள் பக்தியோடு பங்கேற்பர். திருவிழா நாட்களில் மக்கள் காவி உடை அணிந்து வருவது வழக்கமாக உள்ளது.
திருப்பலி பல மொழிகளில் நடைபெறும். ஏழை எளியோரின் திருமணங்கள் நடத்திவைக்கப்படும். மேலும் திருமண ஐம்பதாம் ஆண்டு விழா நடப்பதும் உண்டு.