185 புனித அந்தோணியார் ஆலயம், செம்பருத்திவிளை


புனித அந்தோணியார் ஆலயம்

இடம் : செம்பருத்திவிளை

மாவட்டம் : கன்னியாகுமரி
மறை மாவட்டம் : குழித்துறை

நிலை : பங்குதளம்

கிளைகள் :

1. புனித ஆரோபண அன்னை ஆலயம், மேக்காமண்டபம்
2. கிறிஸ்து அரசர் ஆலயம், ஈத்தவிளை

குடும்பங்கள் : 980
அன்பியங்கள் : 14

ஞாயிறு திருப்பலி : காலை 06.45 மணிக்கு

செவ்வாய்க்கிழமை மாலை 06.30 புனித அந்தோணியார் நவநாள், திருப்பலி.

திருவிழா :
சாம்பல் புதனுக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமையை முடிவு நாளாகக் கொண்ட 13 நாட்கள்.

பங்குத்தந்தை : அருட்பணி இராபர்ட் ஜான் கென்னடி

செம்பருத்திவிளை ஆலய வரலாறு :

செண்பகம் மற்றும் செம்பருத்தி மலர்களால் நிறைந்து அழகு சேர்த்து, பச்சை பசேல் என சோலை வனமாய் திகழ்ந்ததால் *செம்பருத்திவிளை* எனப் பெயர் பெற்ற செம்பருத்திவிளையில் புனித அந்தோணியாரின் பாதுகாவலில் சிறப்புற உயர்ந்து நிற்கும் ஒரு தலத் திருச்சபையாகும்.

இந்த ஆலயத்தின் வயது 78 ஆண்டுகள் என்றாலும் இங்கு வாழ்ந்த முன்னோர்கள் அதற்கு முன்பாகவே பாரம்பரிய கிறிஸ்தவர்கள் என்பது வரலாற்று குறிப்புகளில் தெரிகிறது. இதனை உறுதிப்படுத்த கல்லறைத்தோட்ட குருசடியிலுள்ள *இருபட்டைக் குருசு* சான்றாக அமைந்துள்ளது.

இக்குருசு புனித தோமையார் காலத்தில் அவரால் நிறுவப்பட்ட குருசின் அமைப்பாகும். எனவே தோமையார் வாழ்ந்த காலத்திலேயே இப்பகுதியில் கிறிஸ்தவர்கள் வாழ்ந்து வந்திருக்கிறார்கள் என்பது புலனாகிறது.

புனித சவேரியாரின் வருகைக்குப் பிறகு கன்னியாகுமரி மாவட்டத்தில், குறிப்பாக முளகுமூடு, மணலிக்கரையை சார்ந்த பகுதிகளில் கிறிஸ்தவம் வளரத் துவங்கிய போது, அது செம்பருத்திவிளையிலும் பரவியது.

தொடக்க காலத்தில் இங்கு வாழ்ந்த மக்கள் வறுமைநிலை மற்றும் கொள்ளை நோய்களிலிருந்து விடுதலை வேண்டி, தற்போது சமூக அரங்கம் அமைந்திருக்கும் இடத்தில் சிறிய குருசடி ஒன்றை அமைத்து புனித அந்தோணியார் வழியாக இறைவனை வழிபட்டு வந்தனர். பக்கத்து ஊரிலுள்ள பிற சமய மக்களும் வழிபட்டு வந்தனர். இந்த வேளையில் பிரான்சிஸ்கன் சபை குருக்களும், அதன்பிறகு கார்மெல் சபை குருக்களும் வந்து மறைக்கல்வியும் வழிபாடுகளும் நடத்தினார்கள். அவர்களுள் முதன்மையானவர் அருட்பணி இன்னாசியார் ஆவார்.

1934 -ம் ஆண்டு ஊரிலுள்ள பெரியவர்கள் ஆலயம் ஒன்று கட்ட வேண்டும் என்று அருட்தந்தை இன்னாசியார் அவர்களிடம் கோரிக்கை வைத்தனர். அதன்படி புதிய ஆலயத்திற்கான அடிக்கல்லை 1935- ம் ஆண்டு அருட்பணி இன்னாசியார் அவர்களால் போடப் பட்டது.

பங்கின் ஆண்கள் ஒவ்வொருவரும் 100 ரூபாயுடன், 10 நாட்கள் வேலையையும் ஊதியம் பெறாமல் இலவசமாக செய்தனர்.

அருட்பணி இன்னாசியாரைத் தொடர்ந்து பொறுப்பேற்ற அருட்பணி ரபேல் அடிகளாரின் பெரும் முயற்சிகளாலும், RPH கிரவுதர் அவர்களின் மேலான உதவியுடனும், பங்கு மக்களின் அயராத தன்னலமற்ற உழைப்பாலும் ஆலயப் பணிகள் நிறைவு பெற்று 29-10-1939 ல் மேதகு ஆயர் ஆஞ்ஞிசுவாமி அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது. ஆலயத்தில் உள்ள புனித அந்தோணியார் சுரூபம் இத்தாலி நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்டதாகும்.

1942 வரை மணலிக்கரை -யின் கிளைப் பங்காக இருந்த செம்பருத்திவிளை 1943 - ல் தனிப் பங்காக உயர்ந்தது. முதல் பங்குத்தந்தையாக அருட்பணி தனிஸ்லாஸ் அவர்கள் பொறுப்பேற்றார்கள்.

ஆலயத்தை சுற்றி நிலமும், கல்லறைத் தோட்டத்திற்கு நிலமும் இவரது பணிக்காலத்தில் வாங்கப் பட்டது.

1946 ல் அருட்பணி லூக்காஸ் அவர்கள் பொறுப்பேற்று மகளிர் மன்றம் அமைந்திருக்கும் பகுதியில் நிலம் வாங்கப் பட்டது.

1950 ல் அருட்பணி தர்மநாதர் தொடர்ந்து அருட்பணி ஸ்டீபன் மேரி - யும் பொறுப்பேற்றனர். கார்மல் மாதா குருசடி இவர் பணிக்காலத்தில் கட்டப்பட்டது.

1956 -ல் அருட்பணி ராஜமணி அவர்கள் பொறுப்பேற்று, இவரது பணிக்காலத்தில் ஆலய வளாகத்தில் நிலம் வாங்கப்பட்டது.

1959- ல் பொறுப்பேற்ற அருட்பணி ரபேல் அவர்கள் பணிக்காலத்தில் கல்லறைத் தோட்டப் பகுதியில் நிலம் வாங்கப்பட்டது.

1965 ல் அருட்பணி ஸ்டீபன் அவர்கள் பொறுப்பேற்றார்கள்.

1967 ல் திரு. சிலுவைமுத்து அவர்கள் காஞ்சிரத்துக்கோணம் பகுதியில் புனித சவேரியார் குருசடி அமைத்துக் கொடுத்தார்.

1976 ல் அருட்பணி அருள் அவர்கள் பொறுப்பேற்றார்கள்.

1980 ல் பொறுப்பேற்ற அருட்பணி C. M வென்சஸ்லாஸ் பணிக்காலத்தில் பங்கு அருட்பணிப் பேரவை அமைக்கப்பட்டது. மேலும் நிலம் வாங்கப்பட்டது.

1984 -ல் அருட்பணி ஜெயச்சந்திரா அவர்களும், தொடர்ந்து அருட்பணி லாரன்ஸ் அவர்களும் இறை பணி செய்தனர்.

அருட்பணி ஜான் ஜோசப் அவர்கள் 1987-ல் பொறுப்பேற்றார்கள். 1989 -ம் ஆண்டை ஆலய 50-வது பொன்விழா ஜூபிலி ஆண்டாக அறிவித்து மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

1990-ல் அருட்பணி பீட்டர் பணிக்காலத்தில் மறை மாவட்ட நிதியுதவியுடன் ஆலய விரிவாக்கப் பணிகள் துவக்கப்பட்டது. அன்பியங்கள் ஏற்படுத்தப் பட்டது.

1991 -ல் பொறுப்பேற்ற அருட்பணி மரிய சூசை வின்சென்ட் அவர்களின் பணிக்காலத்தில் ஆலய விரிவாக்கப் பணிகள் நிறைவு பெற்று 1993 -ல் மேதகு ஆயர் லியோன் அ தர்மராஜ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.

1995-ல் அருட்பணி மரிய கிளாட்சன் பணிக்காலத்தில் ஆழ்துளை கிணறு, ஜெனரேட்டர் வசதி செய்யப்பட்டது.

1996- ல் அருட்பணி ஆன்றனி தொடர்ந்து அருட்பணி வர்கீஸ் அவர்கள் பொறுப்பேற்று பங்குத்தந்தை இல்லம் கட்டப்பட்டு 14-11-1997 -ல் மேதகு ஆயர் லியோன் அ தர்மராஜ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது

1999-ல் பொறுப்பேற்ற அருட்பணி வின்சென்ட் ராஜ் அவர்கள் பணிக் காலத்தில் கிறிஸ்தவ தொழிலாளர் இயக்கத்தின் முயற்சியால் செம்மருத்திவிளை கார்மல் மாதா குருசடி நான்கு நிலைகளுடன் புதுப்பிக்கப்பட்டு 08-02-2000 அன்று அர்ச்சிக்கப்பட்டது.

மேலும் 12-02-2000 -ல் வட்டார முதன்மைப் பணியாளர் அருட்பணி செல்வராஜ் அவர்களால் சமூக அரங்கத்திற்கு அடிக்கல் போடப்பட்டது.

2002- ம் ஆண்டு பொறுப்பேற்ற அருட்பணி ஆன்றனி வில்லியம் அவர்களின் பணிக்காலத்தில் சமூக அரங்க கீழ்தள பணிகள் நிறைவு பெற்று 15-01-2003 ல் திறக்கப்பட்டது.

லூர்து அன்னை கெபி 08-07-2003 ல் அர்ச்சிக்கப்பட்டது. சமூக அரங்க மேல்தள பணிகள் நிறைவு பெற்றது. பங்கு அலுவலகம், நூலகம், குடும்பக் கையேடு ஆகியன இவர் பணிக்காலத்தில் உருவாக்கப் பட்டதோடு, நிலமும் வாங்கப்பட்டது.

2006 -ல் பொறுப்பேற்ற அருட்பணி ஹிலரி பணிக்காலத்தில், பள்ளிக்கூடத்திற்கு புதிய வகுப்பறைகள் கட்டப்பட்டது.

செம்பருத்திவிளையின் கிளைப்பங்காக செயல்பட்டு வந்த முட்டைக்காடு 29-11-2009 ல் தனிப் பங்காக உயர்த்தப் பட்டது.

2010 -ல் அருட்பணி ஒய்சிலின் சேவியர் பொறுப்பேற்று R. C நடுநிலைப் பள்ளியானது உயர் நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப் பட்டது. மேலும் ஆலயத்திற்கு புதிய ஒலிப்பெருக்கி அமைப்பு, ஜெனரேட்டர் வசதி செய்யப்பட்டது.

2013- ல் பொறுப்பேற்ற அருட்பணி ஜோசப் ராஜ் அவர்கள் பணிக்காலத்தில் ஆலய 75-வது ஆண்டு ஜூபிலியை முன்னிட்டு புதிய ஆலயம் கட்டுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு 09-12-2014 அன்று மறை மாவட்ட குருகுல முதல்வர் பேரருட்பணி சாலமோன் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது. தொடர்ந்து ஆலய கட்டுமானப் பணிகள் அருட்தந்தை ஜோசப் ராஜ் அவர்களின் வழிகாட்டுதலில் சிறப்பாக நடந்து வந்தது.

தொடர்ந்து வந்த தற்போதைய பங்குத்தந்தை அருட்பணி இராபர்ட் ஜான் கென்னடி அவர்கள் பங்கு மக்களின் அயராத தன்னலமற்ற உழைப்பு மற்றும் நன்கொடைகளால் பணிகளை நிறைவு செய்து 30-12-2018 அன்று மேதகு ஆயர் ஜெறோம் தாஸ் மற்றும் பாளை மறை மாவட்ட முன்னாள் ஆயர் மேதகு ஜூடு பால்ராஜ் தலைமையில் அர்ச்சிக்கப்பட்டது.

தற்போதைய பங்குத்தந்தை அருட்பணி இராபர்ட் ஜான் கென்னடி அவர்கள் பங்கு மக்களை ஒருங்கிணைத்து சிறப்பாக வழி ஆலய கட்டுமானப் பணிகளை நிறைவு செய்ததுடன், இப்பங்கை சிறப்பாக வழிநடத்தி வளர்ச்சிப் பாதையில் முன்னோக்கி அழைத்து செல்கின்றார்கள்.

புனித அடைக்கல அன்னை கன்னியர் இல்லமானது 07-06-1964 ல் உருவாக்கப்பட்டு, அருட்சகோதரிகள் கல்விப் பயணிகளுடன் மறை அறிவிப்பு பணிகளிலும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

பங்கின் தன்னிறைவுத் திட்டங்கள் :

பங்குத்தந்தை இல்லம்
கிணறு
புனித அந்தோணியார் ஆங்கிலப் பள்ளி
புனித அந்தோணியார் சமூக அரங்கம்
நூலகம்
பங்கு அலுவலகம்
தையல் பயிற்சி நிலையம்
சிறு சேமிப்புத் திட்டம்
RC உயர்நிலைப் பள்ளி
மாலை நேர வகுப்புகள்
கல்லறைத் தோட்டம்
பஜனை
மறைக்கல்வி
மகளிர் மன்றம்.

செம்பருத்திவிளை மண்ணின் இறையழைத்தல்கள்:

1. அருட்பணி. மரிய அருளப்பன்
2. அருட்பணி. மரிய மிக்கேல்
3. அருட்பணி. ஜோக்கின்ஸ்
4. அருட்பணி. டைட்டஸ் மோகன்
5. அருட்பணி. சர்ஜின் ரூபஸ்
6. அருட்பணி. ஜெரால்டு ஸ்டாலின் ரமேஷ்
7. அருட்பணி. அருள் விஜய்
8. அருட்பணி. சுனில்

1. சகோ சுர்ஜித் கோடன்

மேலும் பத்துக்கும் மேற்பட்ட அருட்சகோதரிகளை-யும் மறை பரப்பு பணிக்காக தந்துள்ளது செம்பருத்திவிளை இறை சமூகம்.