93 லூர்து அன்னை ஆலயம், ஆலஞ்சோலை

    

தூய லூர்து அன்னை ஆலயம்

இடம் : ஆலஞ்சோலை. 

மாவட்டம் : கன்னியாகுமரி 

மறைமாவட்டம் : குழித்துறை 

மறைவட்டம்: புத்தன்கடை

பங்குத்தந்தை : அருட்பணி. V. வின்சோ ஆன்றனி 

நிலை : பங்குத்தளம் 

கிளைப்பங்குகள்:

1. தூய தோமையார் ஆலயம்,  சிற்றார் 

2. தூய சலேசியார் ஆலயம், சானல்கரை (சிற்றார் Dam 2)

குடும்பங்கள் : 230

அன்பியங்கள் : 11

ஞாயிறு திருப்பலி : காலை 07:00 மணி

ஞாயிறு காலை 09:00 மணி திருப்பலி (சிற்றார்)

ஞாயிறு திருப்பலி காலை 11:00 மணி (சானல்கரை)

திருவிழா : பெப்ரவரி 11 ஆம் தேதியை உள்ளடக்கிய ஏழு நாட்கள். 

வழித்தடம்: மார்த்தாண்டம் -மேல்புறம் -அருமனை -களியல் -கடையாலுமூடு -ஆலஞ்சோலை.

Location map: https://g.co/kgs/6VbQMo

ஆலஞ்சோலை ஆலய வரலாறு :

இயற்கை எழில் கொஞ்சும் ஓர் அழகிய கிராமம் ஆலஞ்சோலை. இக்கிராமத்தில் பிலாங்காலை எனும் பகுதியில் தூய லூர்து அன்னை ஆலயம் உள்ளது. இவ்வூரில் விவசாயம் தலைசிறந்து விளங்குகிறது. குறிப்பாக உணவுப் பயிர்களான நெல், பயறு வகைகள், கிழங்கு வகைகள் விளைகின்றன. முக்கனிகளின் சங்கமும் இங்குதான். பணப்பயிரான இரப்பர் மிக அதிகம். ஆனால் இம் மக்களின் கல்விக் கண்கள் திறக்கப்படவில்லை.

இச்சூழலில் குலசேகரம் ICM சபையைச் சார்ந்த அருட்சகோதரி மரிய எமின் என்பவர், ஆலஞ்சோலை ஊரில் உள்ள மக்களோடு நெருங்கிப் பழகி, நல்லுறவை ஏற்படுத்தி அவர்களை விசுவாசத்தில் வழிநடத்தி வந்தார்கள். இவரைக் "கூனித்தாயார்" என மக்கள் அன்புடன் அழைத்தனர்.

1961-ஆம் ஆண்டு குலசேகரம் பங்குத்தந்தையாக இருந்த அருட்பணி. லாசர் அவர்களின் முயற்சியாலும், திக்கணங்கோட்டைச் சார்ந்த திரு. இராஜேந்திரன் என்பவரின் உதவியோடும், திரு. வேதநாயகம் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் ஓர் ஓலைக் குடிசை ஆலயம் அமைக்கப்பட்டது. 12 குடும்பங்களைக் கொண்டு மாதத்திற்கு ஒரு திருப்பலி நிறைவேற்றப்பட்டது. எஞ்சிய நாட்களில் மக்கள் ஒன்று கூடி செபமாலை செபித்து வந்தனர்.

16-08-1961-ல் ஓலைக்குடிசை இருந்த இடத்தை உள்ளடக்கிய 5 சென்ட் நிலம், 1961-ல் 5 சென்ட் நிலமும் 28-10-1961 -ல் 10 சென்ட் நிலமும் விலைக்கு வாங்கப்பட்டது. இதற்கு அருட்சகோதரர் தாமஸ் அவர்கள் ஒத்துழைத்துள்ளார்.

1964-ல் கடையல் பங்கு தனிப்பங்காக உயர்த்தப்பட்டது. அங்கு பணிபுரிந்த அருட்பணி. மத்தியாஸ் அவர்களால் ஆலஞ்சோலையில் ஆலயம் கட்டப்பட்டு, 11-02-1969-ல் மேதகு ஆயர் ஆஞ்ஞிசுவாமி அவர்களால் புனிதப்படுத்தப்பட்டு, புனித லூர்து அன்னை ஆலயம் எனப் பெயரிடப்பட்டு, கடையல் பங்கின் கிளைப்பங்காக செயல்பட்டது.

திருமதி. ஞானபாக்கியம் என்பவர் வீடு வீடாகச் சென்று குழந்தைகளைக் கூட்டிச் சேர்த்து, செபங்கள் கற்றுக் கொடுத்துள்ளார்கள்.

1969 முதல் 1970 வரை அருட்பணி. A. பீட்டர் அவர்களும், 1970 முதல் 1973 வரை அருட்பணி. அருள்சுவாமி அவர்களும், 1973 முதல் 1977 வரை அருட்பணி. M. வின்சென்ட் அவர்களும், 1977 முதல் 1979 வரை அருட்பணி. பீட்டர் ஜான் அவர்களும் இறைமக்களை வழிநடத்தியுள்ளார்கள்.

1979-ல் அருட்பணி. I. கார்மல் அவர்கள் பணி ஏற்றார்கள். இவரது பணிக்காலமான சுமார் 10 வருடங்கள் இறைமக்களின் பொற்காலம் எனலாம். ஏழைகளுக்கு வீடு கட்டிக் கொடுத்தும், பசியைப் போக்க பால்பொடி, கோதுமை, சோளமாவு போன்றவை வழங்கியும், ஆலஞ்சோலை

மக்களின் ஏழ்மையையும் பசியையும் நீக்கியுள்ளார்கள். பணம் தேவைப்பட்டோருக்கு உதவி செய்துள்ளார்கள். வரி விதிக்கப்படவில்லை.

அருட்சாதனங்கள் பெற நிபந்தனைகள் தளர்த்தப்பட்டன. பங்கு மக்களின் கல்விக்

கண்கள் திறக்கப்பட்டன. தந்தை அவர்களின் அன்பினால் ஆட்கொள்ளப்பட்டு, அன்னையைத் தேடி வந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தது.

1988-ல் அருட்பணி. அந்தோணி M. முத்து அவர்கள் பணி ஏற்றார்கள். அவர்களது வருகை ஆலஞ்சோலை ஆலய வளர்ச்சிக்கு படிக்கல்லாகவே இருந்தது. 25- 07-1989-ல் முதல் பங்கு அருட்பணிப் பேரவையைத் தோற்றுவித்தார்கள். பொறுப்புகள் பதிரப்பட்டு ஆலய வளர்ச்சிக்கு வித்திடப்பட்டது. 1990- ல் மறைக்கல்வி மன்றம் ஆரம்பிக்கப்பட்டது.

07-05-1990-ல் திரு. மைதீன் பீருக்கண் என்பவரிடமிருந்து 7 சென்ட் நிலம் விலைக்கு வாங்கப்பட்டது. குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க ஆலயத்தில் இடமில்லாமற் போயிற்று. ஆண்கள் வாசலுக்கு வெளியே நின்று திருப்பலியில் பங்குபெறும் நிலை ஏற்பட்டது. எனவே ஆலயத்தை விரிவுபடுத்த தீர்மானித்து மக்களுக்கு வரி விதிக்கபட்டது. ஆலயத்தின் முன்பக்கச் சுற்றுச்சுவர் அருட்பணி. அந்தோணி M. முத்து பணிக்காலத்தில்தான் கட்டப்பட்டது. அதில் சிறியதாக ஒரு குடிசடியும் 25-10-1990-ல் கட்டி முடித்து அர்ச்சிக்கப்பட்டது.

1991 முதல் 1993 வரை அருட்பணி. K. ஜார்ஜ் அவர்கள் பொறுப்பேற்று அருட்பணி. அந்தோணி M. முத்து அவர்களின் திட்டங்களைப் பின்பற்றி 13-07-1992-ல் புதிய

ஆலயத்திற்கான கட்டுமான பணிகளை ஆரம்பித்தார்கள்.

இச்சூழ்நிலையில் 1993-ல் ஆலஞ்சோலை பங்கு MSFS சபையைச் சார்ந்த அருட்பணியாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது

முதல் அருட்பணியாளராக அருட்பணி. ஜோசப் ஹென்றி பொறுப்பேற்று தொடர்ந்து கட்டுமானப் பணிகளை மேற்கொண்டார்கள். 04-09-1995 அன்று புதிய ஆலயம் மேதகு ஆயர் லியோன் அ. தர்மராஜ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது. அன்பியம் இவர்கள் காலத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

1995-ல் அருட்பணி. V. ராபர்ட் அவர்கள் குழந்தைகள், இயேசுவை மையமாகக் கொண்டு சிறந்த கிறிஸ்தவ வாழ்வு வாழத் தூண்டும் வகையில், 16-03-1998-ல் பாலர்சபை ஆரம்பிக்கப்பட்டது.  பங்கில் பெண்கள் அன்னை மரியாவை முன்மாதிரியாகக் கொண்டு சிறப்பாக வாழ "மரியாயின் சேனை" என்ற பக்த சபையும் ஆரம்பிக்கப்பட்டது. ஆலயத்தின் அருகாமையில் உள்ள 19 சென்ட் நிலத்தை வாங்க சைபர் லோண் எடுக்க முடிவு செய்யப்பட்டது.

2001-ல் அருட்பணி. A. மைக்கேல் அவர்கள் பொறுப்பேற்று இறைமக்களை வழிநடத்தி வந்தார்கள். இவரது ஒத்துழைப்பால் 17-09-2002-ல் 19 சென்ட் நிலம் விலைக்கு வாங்கப்பட்டது.

2002-ல் அருட்பணி. S. அலெக்சாண்டர் அவர்கள் பணியேற்றார்கள். இவரது பணிக்காலத்தில் 13-02-2003-ல் ஆலயத்திற்காக 39 1/2 சென்ட் நிலம் விலைக்கு வாங்கப்பட்டது.

2005-ல் அருட்பணி. மரியஜான் போஸ்கோ அவர்கள் பணியேற்றார்கள்.

இவரது பணிக்காலத்தில்,

17-11-2005-ல் 27 சென்ட் நிலம் விலைக்கும் 06-10-2006-ல் 2 சென்ட் நிலம் புதிய குருசடி கட்டுவதற்காக இனாமாகவும் வாங்கப்பட்டது. 

தூய லூர்து மாதா குருசடி கட்டப்பட்டு 27.05.2007 அன்று அர்ச்சிக்கப்பட்டது.

17-09-2007-ல் 2 சென்ட் நிலம் இனாமாகவும் வாங்கப்பட்டது. தூய லூர்து அன்னை ஆலயம், ஆலஞ்சோலை தனிப்பங்காக உயர அருட்பணி. மரியஜான் போஸ்கோ பெருமளவில் உழைத்தார். ஆனால் தந்தையவர்களின் கனவு நனவாகும் முன்னரே 21-12-2008-ல் இறைவனடி சேர்ந்தார்.

29-01-2008-ல் பொறுப்புக்களைத் தற்காலிகமாக ஏற்றுக் கொண்ட அருட்பணி. பவுல்  அவர்களின் முயற்சியால், 21-04-2008 -ல் 3 சென்ட் நிலம் (ரோடு அருகில்) விலைக்கு வாங்கப்பட்டது. இப்பங்கு தனிப்பங்காக அருட்பணி. மரிய ஜான்போஸ்கோ அவர்கள் எடுத்த முயற்சிகளை, தொடர்ந்து செயல்படுத்தியதன் விளைவாக, 14-05-2009-ல் மேதகு ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் அவர்கள் ஆலஞ்சோலை பங்கை தனிப்பங்காகப் பிரகடனம் செய்தார்கள். அன்று முதல் MSFS குருக்களிடமிருந்து ஆலஞ்சோலை ஆலயம் திருப்பி எடுக்கப்பட்டு, கோட்டார் மறைமாவட்ட அருட்பணியாளர் ஷெல்லிரோஸ் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இவரது பணிக்காலத்தில் மருதம்பாறையில் மறைபரப்புதளம் ஆரம்பிக்கப்பட்டது. கலையரங்கம் கட்டி முடிக்கப்பட்டது. ஆலய நிலத்தை சுற்றி வேலி அமைக்கப்பட்டது. 

தொடர்ந்து பொறுப்பேற்ற அருட்பணி. மரிய அற்புதம் அவர்கள் பணிக்காலத்தில், கல்லறைத் தோட்டத்திற்கு 45 சென்ட் நிலம் வாங்கப்பட்டது. குருசடி அருகில் 5 சென்ட் நிலமும் வாங்கப்பட்டது.

அதன்பின் பொறுப்பேற்று தற்போது வரை சிறப்புற பணியாற்றிவரும் அருட்பணி. வின்சோ ஆன்றனி அவர்களின் முயற்சியால் கிணறு வெட்டப்பட்டது. ஆலயத்திற்கு புதிய வர்ணம் பூசப்பட்டது. குருசடிகளில் திருவிழா சிறப்புற கொண்டாடப்பட்டு வருகிறது. 

இவ்வாலய திருவிழாவின் போது அருகில் உள்ள இந்து மற்றும் முஸ்லிம் மக்களும் இணைந்து பங்கேற்று திருவிழாவை கொண்டாடுவது, சமய ஒற்றுமைக்கு சான்றாகும். 

ஆலஞ்சோலை ஸ்ரீ தர்மசாஸ்தா ஆலய திருவிழாவிற்கு இவ்வாலயத்தில் இருந்து கொடி கொண்டு செல்வதும், முஸ்லிம் பள்ளியில் இருந்து கொடி கயிறு ஆகியவற்றையும் பவனியாகக் கொண்டு வந்து, ஆலய விழாவில் கலந்து கொள்வது வழக்கம். 

அருட்பணி. வின்சோ ஆன்றனி அவர்கள் சமூக சேவைகள், ஆன்மீக பணிகள் என அனைத்தையும் திட்டமிட்டு ஒருங்கிணைத்து வழிநடத்தி, ஆலஞ்சோலை இறைசமூகத்தை வளர்ச்சிப் பாதையில் வழிநடத்தி வருகின்றார்.

மண்ணின் இறையழைத்தல்கள்:

1. அருட்பணி. மரிய செல்வன் 

2. அருட்சகோதரி. பபிலா மேரி

3. அருட்சகோதரி. ஜெயா டெல்பின் 

4. திருத்தொண்டர். டிபின்.

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பங்குத்தந்தை அருட்பணி. வின்சோ ஆன்றனி அவர்கள்.