22 புனித இராயப்பர், சின்னப்பர் ஆலயம், இடிந்தகரை


புனித இராயப்பர், சின்னப்பர் ஆலயம் (புனித லூர்து அன்னை ஆலயம்).

இடம் : இடிந்தகரை

மாவட்டம் : திருநெல்வேலி
மறை மாவட்டம் : தூத்துக்குடி

நிலை : பங்கு தளம்

குடும்பங்கள் :2500
அன்பியங்கள் : 65

ஞாயிறு திருப்பலி : காலை 04.15 மற்றும் 06.15 மணிக்கு.

பங்குத்தந்தை : அருட்பணி. பிரதீப்
இணை பங்குத்தந்தை : அருட்பணி. வினித்

திருவிழா :

ஆலய விழாக்கள் இரண்டு.
முதலாவது பெப்ரவரி 2 முதல் 11 வரை மாத திருவிழா. மேலும் ஜூன் 19 முதல் 29 வரை ராயப்பர் சின்னப்பர் விழா. 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தங்கதேர் இழுக்கப்படும் போன வருடம் இழுக்க பட்டது. இனி 2022 இல் இழுக்க படும். பெரிய தேர் ஆனது தூத்துக்குடிக்கு (தூய பனிமய மாதா தூத்துக்குடி)அடுத்து இங்கு தான் உள்ளது. இந்த தேர் 1956 ஆம் ஆண்டு செய்யப்பட்டது.

வரலாறு

மொத்தம் ஊரில் 5 சிறிய ஆலயங்கள் உள்ளது
1)கொடுவாய் முனை, புனித அந்தோணியார் திருத்தலம்.
2)தேழிப்பாய் முனை, புனித சவேரியார் ஆலயம்.
3)வடக்கு- அந்தோணியார் ஆலயம்.
4)புனித ஆரோக்கிய அன்னை ஆலயம், வேளை நகர்.
5)திருச்சிலுவை ஆலயம்,குருசடி தாவு.

இடிந்தகரை யை விசுவாசத்தின் விளை நிலம் என்று அழைப்பார்கள். காரணம் 40 ற்கும் அதிகமான குருக்கள் மற்றும் 110 ற்கும் அதிகமான கன்னியர்கள். மேலும் இரண்டு ஆயர்கள் இப்பங்கிலிருந்து உருவானதால் இப்படி அழைப்பார்கள்.

இடிந்தகரையின் முதல் ஆலயம் புனித இராயப்பர் மற்றும் சின்னப்பர் பெயரில் கிபி 1552ல் கட்டப்பட்டது. இவ்வாலயம் ஊரின் தென்கிழக்கே கடற்கரை ஓரமாக இருந்தது. இக்கோவில் சிறியதாகவும், பழமையாகவும் இருந்ததாலும், கடல் ஆலயப்பரப்பை நெருங்கியதாலும், சற்று வடமேற்காக பெரிய ஆலயம் ஒன்றைக்கட்ட மக்கள் தீர்மானித்தார்கள். கைவிடப்பட்ட பழைய ஆலயத்தில் புனித வியாகுல அன்னை கன்னியர் மடம் இயங்க ஆரம்பித்தது. பிறகு மடத்தைப் புதுப்பித்த போது, பழமையின் அருமை அறியாமல் கோவிலின் அமைப்பு மாற்றப்பட்டு விட்டது. 1833ல் புதிய கோவிலுக்காக ஊர்ச் செலவில் அந்திரைக்கட்டியார் மகன் தொம்மை சுவானி பட்டங்கட்டியாரிடமிருந்து நிலம் விலைக்கு வாங்கப்பட்டது.

கோவில் கட்டுவதற்கான செலவில் பெரும் பகுதி ஊர் மக்களால் கொடுக்கப்பட்டது. ஒரு சிறு பகுதி மட்டும் பிரான்ஸ் நாட்டிலிருந்து வந்தது. இடிந்தகரை முதலில் போர்ச்சுக்கல் நாட்டு துறவிகளின் பொறுப்பில் இருந்தது. புதிய கோவில் கட்டும் சமயத்தில் பிரான்ஸ் நாட்டு துறவிகளின் பொறுப்பில் இருந்தது. அக்காலத்தில் பிரான்ஸ் நாட்டில் லூர்து மலையில் லூர்து அன்னை காட்சி அருளியதன் காரணமாக உலகெங்கும் லூர்து அன்னை பக்தி பரவியது. இதன் காரணமாக புதிதாக அமைக்கப்பட்ட ஆலயம் லூர்து அன்னைக்கு அர்ப்பணம் செய்யப்பட்டது.

அன்னையின் சிலை பிரான்சிலிருந்து கொண்டு வரப்பட்டது. முற்றுப் பெறாத நிலையில் 1906ம் ஆண்டு பெப்ரவரி 2ம் தேதி ஆலயம் திறக்கப்பட்டது. அதுவரை ஆலயக் கட்டுமானச் செலவு ரூ.20,000/-.1928ம்ஆண்டு கோவில் முகப்பில் 91 அடி உயரமுள்ள இரு ஊசிக் கோபுரங்களும், ஒலி எழுப்ப பெரிய மணியும் அமைக்கப்பட்டன. திருமுழுக்கு வழங்கப்பட்ட கோவில் மணியின் பெயர் சுந்தரி.

1932ம் ஆண்டு மலையுடன் கூடிய கெபி கோவிலைச் சுற்றி அமைக்கப்பட்டது. இவ்வளவு பெரிய கெபியும், ஒழுங்காக அமையப்பெற்ற தேரோடும் வீதியும் வேறெந்த நெய்தல் கிராமத்திலும் இல்லை.

இக்கெபியில் அழகிய ஸ்தலங்கள் மாற்றம் செய்யப் பட்டு விட்டன. 1954-55ல் கோவில் முன் மேடை அமைக்கப்பட்டது. 1955-57ல் தேரும் அதற்கான பிறையும் அமைக்கப்பட்டன. இதே காலத்தில் முதலில் சுவரில் குடைந்து அமைக்கப்பட்டிருந்த லூர்து அன்னை, புனித இராயப்பர் மற்றும் புனித சின்னப்பர் சிலைகள் அழகிய தேக்கு மரப்பீடம் அமைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டன. 1962ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டின் லூர்து மலையில் அன்னையின் பாதம்பட்ட கல் ஒன்று இவ்வாலயக் கெபியில் உள்ள மலையில் அமலோற்பவ அன்னை சிலையின் நேர் கீழாக பதிக்கப் பட்டுள்ளது.
இந்த புனித கல்லை இடிந்தகரை ஈன்ற முதல் குருவும் எம் மண்ணின் முதல் ஆயரும்; திருச்சி, தூத்துக்குடி மறைமாவட்ட முன்னாள் ஆயருமான மேதகு தாமஸ் பர்னாந்து அவர்களால் கொண்டு வரப் பட்டது ஆகும்.

ஆலய அமைப்பு:

தென் தமிழகத்தில் இதன் வயதை ஒத்த ஆலயங்களில் இதுவே கொள்ளளவில் பெரிய ஆலயம்.கோவிலின் நீளமும், அகலமும் உயரமும் மற்ற கோவில்களை விடக் கூடுதல்.கோவிலின் நடுவில் மொத்தம் பக்கத்திற்கு 7 வீதம் 14 பெரிய தூண்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் 4 உருண்டை கல் தூண்களால் ஆனவை. பக்கச் சுவர்களில் பக்கத்திற்கு 7 வீதம் 14 தூண்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் 3 உருண்டை கல் தூண்களால் ஆனவை. பிற்காலத்தில் இவற்றின் மீது சாந்து பூசப்பட்டதால் இன்று ஒரே தூண் போல காட்சி அளிக்கிறது.

மிக உயரமான, பெரிய, பாரமுள்ள கோவில் மாடத்தை இத்தூண்களே தாங்குகின்றன. இவ்வளவு நீளமான கல் தூண்களை எங்கிருந்து, எப்படி கொண்டு வந்து கட்டினார்கள் என்பதை எண்ணும்போது வியப்பு மேலிடுகிறது. ஒவ்வொரு நான்கு கல்தூண்களையும் இணைத்துப் பிடிக்க அடியிலும்,மேல்முகட்டிலும் வட்ட வடிவ கல் பொருத்தப்பட்டுள்ளது.ஏராளமான தூண்கள் இருந்தாலும், கோவில் பீடத்தை கோவிலின் எல்லாப் பாகங்களிலிருந்தும் தெளிவாகப் பார்க்கும் வண்ணம் அமைந்துள்ளது. மக்கள் ஆலயத்திற்குள் நுழைய முன்புறம் கிழக்குப்பகுதியில் பெரிய மேடையும், அதை அடுத்து 3 வாயில்களும், வடக்குப்பகுதியில் 2ம், தெற்குப் பகுதியில் 2மாக , மொத்தம் 7 வாயில்கள் உள்ளன.

உள்ளே

கோவில் மாடத்தில் அலங்காரம் செய்ய வசதியாக பெரிய துளைகள் உள்ளன. 800 கிலோ எடை கொண்ட கோவில் மணி இடது புறம் உள்ளது. இதன் நாதம் 3 கிமீ அப்பால் வரை ஒலிக்கக் கூடியது.