566 புனித இராஜகன்னி மாதா ஆலயம், புன்னைக்காயல்

       

புனித இராஜகன்னி மாதா ஆலயம் 

இடம் : புன்னைக்காயல்

மாவட்டம் : தூத்துக்குடி 

மறைமாவட்டம் : தூத்துக்குடி 

மறைவட்டம் : தூத்துக்குடி 

பங்கு : புனித சவேரியார் ஆலயம், புன்னைக்காயல்

பங்குத்தந்தை : அருள்திரு. பிராங்க்ளின் பர்னாந்து 

உதவிப் பங்குத்தந்தை : அருள்திரு. ஷிபாகர் 

திருப்பலி நேரங்கள் :

ஞாயிறு காலை 05.00 மணி, காலை 07.00 மணி, காலை 09.30 மணி. 

வாரநாட்களில் காலை 05.15 மணி, காலை 06.10 மணி. 

திருவிழா : செப்டம்பர் மாதம் கடைசி வியாழன் கொடியேற்றம். அக்டோபர் மாதம் முதல் ஞாயிறு திருவிழா. 

வழித்தடம் : தூத்துக்குடி -திருச்செந்தூர் செல்லும் வழித்தடத்தில், வடக்கு ஆத்தூரில் இருந்து 6கி.மீ தொலைவில் அமைந்துள்ள ஒரு தீவு தான் புன்னைக்காயல். 

Location map : https://goo.gl/maps/iy5owBLucf2UhSe76

ஆலய வரலாறு :

புனித சவேரியாரின் வருகைக்கு முன்னரே புன்னைக்காயலில் ஒரு குடிசை ஆலயம் இருந்தது. இந்த முதல் ஆலயத்தை எழுப்பியவர் புன்னைக்காயல் மக்களுக்குத் திருமுழுக்கு வழங்கியவராகிய கொச்சி பங்குத்தந்தை அருள்தந்தை. பேதுரு கொன்சால்வஸ் என்று, 1623 ல் கொச்சி ஆயர் மேதகு செபஸ்தியான் தெ சான்பேதுரு அவர்களின் கடிதம் வழியாக அறியப்படுகிறது. 

பின்னர் 1544 ம் ஆண்டில் புனித சவேரியாரின் முயற்சியால் குடிசை ஆலயம் அமைக்கப் பட்டது. 1551 ம் ஆண்டில் புன்னைக்காயல் மீது மதுரை நாயக்கரின் வடுக படையெடுப்பின் போது இந்த ஆலயம் அழிக்கப் பட்டது. 

பின்னர் புன்னைக்காயல் மக்களிடமிருந்து நிதி திரட்டி அருள்தந்தை. ஹென்றி ஹென்றிக்ஸ் அடிகள் ஒரு அழகிய ஆலயத்தை 08.09.1552 -ல் எழுப்பி, இறையன்னையின் திருப்பிறப்புக்கு அர்ப்பணித்தார். பின்னர் இது இராஜகன்னி மாதா ஆலயம் என ஆனது. 1553 ல் ஏற்பட்ட இசுலாமியத் தாக்குதலின் போது இந்த ஆலயமும் அழிக்கப் பட்டது. அதன் பிறகு மீண்டும் புதிய ஆலயம் கட்டப் பட்டது. அருள்திரு. கஸ்பார் தெ அராஞ்சோ என்னும் புதிய குரு 08.09.1580 அன்று தமது முதல் திருப்பலி நிறைவேற்றினார். முத்துக்குளித்துறையின் பல ஊர்களில் இருந்தும் மக்கள் இந்த திருப்பலியில் பங்கேற்றனர். 

முத்துக்குளித்துறையில் புன்னைக்காயலில் இருந்த புனித இராஜகன்னி மாதா ஆலயம் மட்டும் இயேசு சபையாருக்கு சொந்தமானதாக இருந்தது. மற்ற ஊர்களில் இருந்த ஆலயங்கள் கொச்சி ஆயரின் அதிகாரத்திற்கு உட்பட்டவையாகும். 

முத்துக்குளித்துறையில் கற்கோவில் கட்ட மதுரை நாயக்கர் அனுமதி வழங்கிய பின், புன்னைக்காயல் இராஜகன்னி மாதா ஆலயம் கற்கோவிலாக மாற்றப்பட்டு, மூன்று பகுதிகளைக் கொண்ட சிலுவை ஆலயமாக 1599 ல் கட்டி முடிக்கப்பட்டது. 1685 ல் டச்சுக்காரர்களால் இவ்வாலயம் வணிகக் கிடங்காக மாற்றப்பட்ட பின்னர் இங்கு வழிபாடுகள் நடைபெறவில்லை. 

புனித அன்னம்மாள் ஆலயம்: 

புனித அன்னம்மாள் ஆலயமானது மாடிக்கட்டிடமாக 1700 ஆம் ஆண்டு இயேசு சபையாரால் உருவாக்கப் பட்டது. பின்னர் இது பழுது பார்க்கப்பட்ட போது மாடி அகற்றப் பட்டது. 

அன்றாட திருப்பலியும், ஞாயிறு முதல் திருப்பலியும் அன்னம்மாள் ஆலயத்திலும், ஞாயிறு இரண்டாவது திருப்பலி  புனித சவேரியார் ஆலயத்திலும் நிறைவேற்றப்படுவது வழக்கம். 

போதிய இடவசதி இல்லாததால் ஆண்கள் ஆலயத்திற்கு வெளியே இருந்து திருப்பலியில் பங்கேற்று வந்தனர். அருள்திரு. மத்தேயு பர்னாந்து (1923-1925), அருள்திரு. ஸ்டீபன் தாஸ் (1952-1956), அருள்திரு. ரிச்சர்ட் ரொட்ரிகோ (1967-1969) ஆகிய பங்குத்தந்தையர்கள், அன்னம்மாள் ஆலயத்தை பழுது நீக்கி புனரமைத்தனர். 

புன்னைக்காயலுக்கு பெரிய ஆலயம் தேவை என்பதை உணர்ந்து அருள்திரு. ராஜாபோஸ் அடிகள் (1978-1984) புனித அன்னம்மாள் ஆலயத்தை இடித்து விட்டு, அதே இடத்தில் புதிய ஆலயத்தை கட்ட முயற்சிகள் மேற்கொண்டார். 07.10.1979 அன்று அன்றைய தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் மேதகு அம்புறோஸ் ஆண்டகை புதிய ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார். 

அருள்திரு. பங்கிராஸ் பர்னாந்து அடிகள் பணிக்காலத்தில் ஆலயப் பணிகள் நிறைவு பெற்று, 07.10.1987 அன்று அப்போதைய ஆயர் மேதகு. S. T. அமலநாதர் அவர்களால் அர்ச்சிக்கப் பட்டு, இப்புதிய ஆலயமானது புனித இராஜகன்னி மாதாவிற்கு அர்ப்பணிக்கப் பட்டது. 

இராஜகன்னி மாதா திருவிழா :

அன்னை மரியாவுக்கு இராஜகன்னி மாதா என்று பெயர் சூட்டியவர் புன்னைக்காயலின் முதல் பங்குத்தந்தையாகிய அருள்பணி. ஹென்றி ஹென்றிக்ஸ் அடிகளே ஆவார். அவர் தாம் Selve Regina எனும் மந்திரத்தை தமிழில் மொழிபெயர்த்த போது Regina (அரசி) என்னும் சொல்லுக்கு ஈடாக இராஜகன்னி என்னும் பெயரை பயன்படுத்தினார். 

புன்னைக்காயலில் முதல்முதலாக   எழுப்பப்பட்ட  ஆலயம் மரியன்னையின் பிறப்புக்கு அர்ப்பணிக்கப் பட்டதாகும். அது புனித சவேரியார் காலத்தில் குடிசை ஆலயமாகவே காணப்பட்டது. பின்னர் ஹென்றி ஹென்றிக்ஸ் அடிகள் காலத்தில் இராஜகன்னி மாதா ஆலயம் என்னும் வழக்கினைப் பெற்றது. 

இராஜகன்னி மாதா ஆலயத்திற்கு எதிர்புறத்தில் திருஇருதய கெபிக்கு அருகிலே உள்ள கொடிமரத்தில் திருவிழா கொடியேற்றப் படுகிறது. 

திருவிழாவில் பயன்படுத்தப்படும் தேரானது மிகப்பெரியதாகும். திருவிழாவிற்கு இரண்டு வாரத்திற்கு முன்பு, தேருக்கு பாக்கு வைக்கும் வழக்கம் இன்றுவரை உள்ளது. 

திருவிழா கொடியேற்றத்திற்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமை திருப்பலியின் முடிவில் திருவிழா அறிக்கை ஆசிரிய விருத்தமாக, வானவர் போன்று ஒப்பனை செய்த சிறுவர் ஒருவரால் பாடப்படும். 

திரிபுவனாதி அருள் பரமநற் சோதியால் 

தெரிந்திடும் அமலேஸ்வரி.. 

திவ்விய குல தவிதிறை ஒவ்வுநவ மணியென

ஜென்மித்த ராஜேஸ்வரி.. 

நிறை கற்பரசியாம் மறையவர் சிரசியாம் 

நேசி தேக ப்ரகாசி 

நீளலகை நாசியாம் வாழ்தாசர் ராசியாம் 

நித்ய சம்பன்ன வாசி

சுரரடி தொழுநாரி சூசைமாமுனி பாரி

சுவக்கீன் அருள்குமாரி

தோஷமறு காரணி வாசமிகு பூரணி 

சுகந்த மலர் ஆரணியுமாய்

அரிய கிரணாம்பரி மதி சரணாம்பரி

அருணோதய யாம்பரியுமாய்

அன்னையாய் ஜெகமேத்து கன்னியாம் 

பன்னிரு உடு சென்னியாம்

சர்வ உயர்கட் (கு) அனுகூலியாம் வேலியாம் 

தத்துவக் கலை நூலியாம் 

சுவிசேஷணி பூசணி வாசவி 

தவநிலை ஆசனியுமாய்

சுருதி மறையோரணி ஜெபமாலை இராக்கினி 

தூய கன்னின தாயின்

சொல்லரிய திருநாளை நல்வதம் கொண்டாடிடவே 

துவக்குவதற்கினிதான நாள்

இரட்சணியம் இரண்டாயிரத்து பனிரெண்டாம் ஆண்டு

அரியதோர் செப்டம்பரில் 

இருபத்து ஏழெனும் தேதி குரு வாரமதில்

அருள்பெருகு கொடியேற்றியே 

தாயகமாம் பரிசுத்த அன்னையின் ஆலயம் 

தன்னிலே ஆசரிக்க 

தக்க கடன் உங்களுக் (கு) எப்போதுமாகவே

 சாற்றினோம் அறிகுவீரே.." 

வானவர் வேடமணிந்த சிறுவர் கொடிமரத்தின் முன்பு பாடும் இந்த இவ்விருத்தப் பாடலை, தற்போது ஆலயத்தில் ஆலய கணக்குப்பிள்ளை பாடும் வழக்கம் ஏற்படுத்தப் பட்டுள்ளது. 

பெர்செந்திமார்:

ஒருகாலகட்டத்தில் புன்னைக்காயலில் பரவிய கொள்ளை நோயினால், இளைஞர்கள் பலர் மடிந்தனர். ஆகவே இம்மக்கள் இராஜகன்னி மாதாவிடம் உருக்கமாக மன்றாடி ஒரு நேர்ச்சை செய்து கொண்டனர். அந்த நேர்ச்சையின்படி புன்னை மக்கள் அன்னையின் திருவிழாவைக் கொண்டாடும் பொறுப்பினை, நியமனம் செய்யப்பட்ட இளைஞர் குழுவிடம் ஒப்படைத்தனர். இந்தக் குழுவின் உறுப்பினர்கள் பெர்செந்திமார் (தலைவர் எனும் பொருள் கொண்ட Presidente என்னும் சொல்லின் திரிபு தான் பெர்செந்தி) என இன்றுவரை அழைக்கப் படுகின்றனர். திருவிழா திருப்பலியின் முடிவில் அடுத்த ஆண்டிற்கான பெர்செந்திமாரின் பெயர்கள் வாசிக்கப் படுகின்றன. இவ்வாறாக புன்னையின் அனைத்து இளைஞர்களும், தங்களது திருமணத்திற்கு முன்பு பெர்செந்திமாராகி விடுகின்றனர். தற்போதைய காலகட்டத்தில் ஊர் மக்கள் திருவிழா செலவை ஏற்றுக் கொண்டு, பெர்செந்திமார் திருவிழா தொண்டர்களாக இருந்து திருவிழாவை சிறப்பாக முன்னின்று நடத்துகின்றனர். 

தேர்பவனி :

திருவிழாவுக்கு முந்தைய நாள் மாலை வழிபாட்டுக்கு பின்னரும், 

திருவிழா திருப்பலிக்கு பின்னும் அன்னையின் தேர்பவனி ஊரைச் சுற்றி வலம் வரும் வழக்கம் இன்றுவரை உள்ளது. 

முத்துக்குளித்துறையில், தூத்துக்குடிக்கு அடுத்த நிலையில் புன்னைக்காயல் தேர் விளங்குகிறது. 

திருவிழாவுக்கு முந்தைய நாள் மாலை வழிபாட்டுக்கு பின்னர் செபமாலை அன்னை சுரூபத்தை பெர்செந்திமார், புனித சவேரியார் ஆலயத்திலிருந்து பல்லக்கில் தூக்கி வந்து, தேரில் அன்னையை அமர்த்துவர். 1987 ஆம் ஆண்டில் தூய இராஜகன்னி மாதா ஆலயம் எழுப்பப்பட்ட பின்னர், இங்கிருந்து சுரூபத்தை தூக்கி வந்து தேரில் ஏற்றுவர். 

புதிய தேர் :

அருள்திரு. கிஷோக் அவர்களின் பணிக்காலத்தில் மக்களின் ஒத்துழைப்புடன் புதிய தேர் செய்யும் பணியானது 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் துவக்கப் பட்டு, பணிகள் நிறைவு பெற்று 2019 ஆம் அக்டோபர் திருவிழாவின் போது தேர் ஓடியது. இந்த அழகிய பிரமாண்ட தேரை செய்தவர் திரு. சகாயம், மிக மிக அழகுற அலங்காரம் (ஜோடனை) செய்தவர் திரு. அந்த்வான்.

தேர் நிறுத்துமிடம் :

புன்னைக்காயலில் ஆலயமாக இருந்து, பின்னர் டச்சுக்காரர்களால் கிடங்காக மாற்றப்பட்ட 'கொதம்' இடிந்த நிலையில், அதன் ஒரு பகுதியில் தேர் நிறுத்தப்படுவது வழக்கமாக இருந்தது. பின்னர் புனித அன்னம்மாள் ஆலயத்திற்கு அருகில் மணிக்கூண்டுக்கு கிழக்கே தென்னங்கீற்றால் அமைக்கப்பட்ட இடத்தில் தேரை நிறுத்தி வைத்தனர். பின்னர் தேருக்கென்று நிலையான ஒரு கட்டிடத்தைப் புன்னைக்காயல் மண்ணின் மைந்தர் அமரர் செவாலியர். திரு. தியாகராஜ் பிஞ்ஞேயிர தமது செலவில் கட்டிக் கொடுத்தார். அங்கு தான் இப்போது தேர் நிறுத்தப்பட்டு வருகிறது. 

புனித வளன் பஜனைக்குழு :

1932 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட புனித வளன் பஜனைக் குழுவினர், தேரின் பின்னால் அன்னையை புகழ்ந்து இயற்றப்பட்ட பாடல்களை பாடிக் கோண்டே செல்கின்றனர்.

புலம் பெயர்ந்தும் திருவிழா :

புலம் பெயர்ந்து சென்னை, மும்பை யில் வாழும் புன்னைக்காயல் மக்கள் தாங்கள் வாழும் ஊர்களில் தூய இராஜகன்னி மாதா திருவிழாவை ஆடம்பரமாக சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

இவ்வாறு புன்னைக்காயல் மக்களின் வாழ்வோடு கலந்த புனித இராஜகன்னி மாதா ஆலயத்திற்கு, பல்வேறு வேண்டுதல்களுடன் தூத்துக்குடி மட்டுமல்லாது பல பகுதிகளிலும் இருந்தும் ஏராளமான இறை மக்கள் வந்து ஜெபித்து ஆசீர் பெற்று செல்கின்றனர். நீங்களும் புனித இராஜகன்னி மாதா ஆலயத்திற்கு வாருங்கள்.. அன்னையின் வழியாக இறைவனின் அருள் வரங்களை பெற்றுச் செல்லுங்கள்.. 

ஆலய வரலாறு : அருள்திரு. வெனான்சியுஸ் அடிகள் எழுதிய

புகழ் வென்ற புன்னைக்காயல் மற்றும் அருள்திரு. அமுதன் அடிகள் எழுதிய வரலாற்றில் புன்னைக்காயல் ஆகிய நூல்களில் இருந்து திரட்டப் பட்டது. 

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் : பங்குத்தந்தையின் வழிகாட்டுதலுடன் பங்கு உறுப்பினர்.