659 தூய பாத்திமா அன்னை ஆலயம், நாகர்கோவில்

   
தூய பாத்திமா அன்னை ஆலயம் 

இடம் : என். ஜி. ஓ. காலனி, நாகர்கோவில் 

மாவட்டம் : கன்னியாகுமரி 

மறைமாவட்டம் : கோட்டார் 

மறைவட்டம் : கோட்டார்

நிலை : பங்குத்தளம் 

பங்குத்தந்தை : அருள்பணி. P. பென்சிகர் 

குடும்பங்கள் : 82

அன்பியங்கள் : 2

வழிபாட்டு நேரங்கள் : 

ஞாயிறு திருப்பலி காலை 07.00 மணி

திங்கள், வியாழன், சனி திருப்பலி : காலை 06.30 மணி

புதன், வெள்ளி திருப்பலி : மாலை 06.00 மணி

மாதத்தின் முதல் சனி மாலை 06.30 மணி நவநாள், திருப்பலி, நற்கருணை ஆசீர் 

திருவிழா : அக்டோபர் 13ம் தேதியை மையமாகக் கொண்ட ஐந்து நாட்கள் 

மண்ணின் இறையழைத்தல்:

அருள்சகோதரி. எலிசபெத் அல்போன்சினி (Linus)

வழித்தடம் : நாகர்கோவில் -பள்ளம் சாலையில் NGO காலனி அமைந்துள்ளது. 

வரலாறு :

நாகர்கோவில் காந்திநகர் அரசு அலுவலர் குடியிருப்பு என்னும் NGO காலனியானது 1971 ஆம் ஆண்டு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களால் உருவாக்கப் பட்டது. இவ்வூர் நாகர்கோவில் சங்குதுறை கடற்கரை சாலையில் வல்லன்குமாரவிளையை அடுத்த குஞ்சன்விளை என்ற இடத்தில் அமைந்துள்ளது. பல மாவட்டங்களில் இருந்தும் வந்து சாதி, சமய, மொழி இனவேறுபாடின்றி அனைவரும் இணைந்து வாழும் அழகிய ஊர் இது. 

1984 ஆம் ஆண்டு வரை 11 கத்தோலிக்க கிறிஸ்தவ குடும்பங்கள் இங்கு வந்து குடியேறினர். இவர்கள் ஆரம்ப காலத்தில் மறவன்குடியிருப்பு ஆலயத்திற்கு ஞாயிறு திருப்பலியில் பங்கேற்க சென்று வந்தனர். 

பின்னர் என். ஜி. ஓ காலனியில் ஒரு ஆலயம் கட்ட வேண்டும் என்ற எண்ணத்துடன் 17.04.1984 அன்று 11 கத்தோலிக்க குடும்பங்களும் இணைந்து 'கத்தோலிக்க நற்பணி மன்றம்' என்ற அமைப்பை ஏற்படுத்தினர்.  

1984 ஆம் ஆண்டில் தவக்கால தியானத்திற்கு வந்த மேதகு ஆயர் ஆரோக்கியசாமி அவர்கள், என். ஜி. ஓ காலனி மக்களின் ஆன்மீகத் தேவையை உணர்ந்து, மறவன்குடியிருப்பு பங்குத்தந்தை அருள்பணி. எம். டி. சகாயம் அவர்களுக்கு, என். ஜி. ஓ காலனி மக்களின் இல்லங்களில் திருப்பலி நிறைவேற்ற அனுமதி வழங்கினார். 26.12.1984 முதல் என். ஜி. ஓ காலனி கத்தோலிக்க மக்களின் இல்லங்களில் சுழற்சி முறையில் சனிக்கிழமை மாலையில் திருப்பலி நிறைவேற்றப்பட்டு வந்தது. 

11 குடும்பத்தினர் கொடுத்த நன்கொடை மற்றும் அப்போது வள்ளியூர் தூய பாத்திமா அன்னை ஆலய பங்குத்தந்தை அருள்பணி. அந்தோணி S. பர்னாண்டோ (late) அவர்கள் அளித்த ரூ. 1001 நன்கொடை இவற்றுடன் 11 குடும்பங்கள் ஊர் ஊராகச் சென்று திரட்டிய நன்கொடை, மேதகு ஆயர் ஆரோக்கியசாமி அவர்கள் வழங்கிய நிதியுதவி ஆகியவற்றை மூலதனமாகக் கொண்டு மறவன்குடியிருப்பு பங்குத்தந்தை அருட்பணி. M. D. சகாயம் அவர்களின் பணிக்காலத்தில் 23 சென்ட் நிலம் வாங்கப்பட்டது. ஆலய முதல் பங்குத்தந்தை அருள்பணி. M. D. சகாயம் அவர்களால் 15.06.1990 அன்று ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டப் பட்டது. 

பின்னர் பங்குத்தந்தை பி. டி. ஆல்பர்ட் ராஜ் அவர்களால் ஆலயம் கட்ட திட்டம் தயாரிக்கப்பட்டு மேதகு ஆயர் லியோன் அ. தர்மராஜ் அவர்களிடம் ஒப்படைக்கப் பட்டது. மேதகு ஆயர் வெளிநாட்டில் இருந்து பெற்றுத்தந்த நிதியுதவி மூலமாக ஆலய கட்டுமானப் பணிகள் நடந்து வந்தன. தொடர்ந்து பணிப் பொறுப்பேற்ற அருள்பணி. M. பீட்டர் அவர்களின் வழிகாட்டுதலில் பணிகள் சிறப்பாக நடைபெற்று வந்தது. அவரைத் தொடர்ந்து பணியேற்ற அருள்பணி. தாமஸ் பர்னாந்து அவர்களால் 21.02.1993 அன்று ஆலயம் அர்ச்சிக்கப் பட்டது. அன்று முதல் சனிக்கிழமை தோறும் மாலையில் திருப்பலி நிறைவேற்றப்பட்டு வந்தது. 

தொடர்ந்து பணியாற்றிய அருள்பணி. மரிய சூசை வின்சென்ட் அவர்களின் முயற்சியால் அக்டோபர் மாதத்தில் திருவிழா கொண்டாடும் வழக்கம் 1996 ஆம் ஆண்டு முதல் உருவானது. மேலும் கிளைப்பங்கு என்னும் நிலைக்கு உயர்த்தப்பட்டது. 

அருள்பணி. S. சாலமன் பணிக்காலத்தில் 05.02.1999 அன்று ஆலயத்தில் நற்கருணை பேழை நிறுவப்பட்டது. மேலும் ஆலயத்திற்கு 23 சென்ட் நிலம் வாங்கப்பட்டது. 

26.04.2009 அன்று மேதகு ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் அவர்கள் தலைமையில் ஆலய வெள்ளிவிழா சிறப்பாக கொண்டாடப் பட்டது.

பங்குத்தந்தை இல்லம் கட்டப்பட்டு 05.08.2020 அன்று திறந்து வைக்கப்பட்டது. 

மறவன்குடியிருப்பு பங்கிலிருந்து பிரிக்கப்பட்டு 13.09.2020 அன்று NGO காலனி தனிப்பங்காக உயர்த்தப் பட்டது. முதல் பங்குத்தந்தையாக அருள்பணி. P. பென்சிகர் அவர்கள் பணிப்பொறுப்பேற்று சிறப்பாக வழிநடத்தி வருகிறார். 

பங்கில் புனித பாத்திமா மாதா குருசடி ஒன்று உள்ளது. 

பங்கின் பங்கேற்பு அமைப்புகள் :

1. மரியாயின் சேனை 

2. கத்தோலிக்க சேவா சங்கம் 

3. பாலர் சபை 

4. மறைக்கல்வி 

5. வழிபாட்டுக்குழு

6. பாடகற்குழு 

7. நிதிக்குழு 

8. தணிக்கைக்குழு 

9. பங்குப்பேரவை

10. பீடச்சிறார் 

தகவல்கள் : பங்குத்தந்தை அருள்பணி. P. பென்சிகர் 

வரலாறு : ஆலய வரலாற்று மலர் 

புகைப்படங்கள் : ஆலயம் அறிவோம் நண்பர்.