746 உலக இரட்சகர் ஆலயம், தாதன்குளம்

                

உலக இரட்சகர் ஆலயம்

இடம்: தாதன்குளம்

மாவட்டம்: தூத்துக்குடி

மறைமாவட்டம்: தூத்துக்குடி

மறைவட்டம்: சாத்தான்குளம்

நிலை: கிளைப்பங்கு

பங்கு: புனித லூசியாள் ஆலயம், செய்துங்கநல்லூர்

பங்குத்தந்தை: அருட்பணி. ஜாக்சன் M. அருள்

குடும்பங்கள்: 55

ஞாயிறு திருப்பலி காலை 11:00 மணி

திருவிழா: மே மாதம் முதல் வெள்ளிக்கிழமை ஆரம்பித்து பத்து நாட்கள் நடைபெறும்

வழித்தடம்: திருநெல்வேலி -கருங்குளம் -தாதன்குளம்

Location map:RC Church https://maps.app.goo.gl/egMZid3PbFS4bmpZA

வரலாறு:

இயற்கை வளம்மிக்க அழகிய அமைதியான ஊர் தாதன்குளம். சுமார் 120 ஆண்டுகளுக்கு முன்னர் தாதன்குளம் ஊரில் சிறிய தூய சகாய மாதா ஆலயம் கட்டப்பட்டு,  பாளையங்கோட்டை பங்கிற்கு உட்பட்டு,  மதுரை மறை மாவட்ட அருட்பணியாளர்களின் வழிகாட்டலில் செயல்பட்டு வந்தது.

பின்னர் 1954 ஆம் ஆண்டில் புதிய ஆலயம் கட்டப்பட்டு, உலகர் இரட்சகர் பெயருக்கு அர்ப்பணிக்கப்பட்டது. பழைய சகாய மாதா ஆலயமானது சிறிய கெபியாக மாற்றப்பட்டது.

1923 ஆம் ஆண்டு தூத்துக்குடி மறைமாவட்டம் உருவான பின்னர்,  செய்துங்கநல்லூர் பங்கின் கிளைப்பங்காக மாற்றப்பட்டது. 

பங்குத்தந்தை அருட்பணி. ஆரோக்கியம் லாசர் அவர்களின் வழிகாட்டலில், தாதன்குளம் இறைமக்களின் உதவியுடன் 2017 ஆம் ஆண்டு ஆலயம் அழகுற புதுப்பிக்கப்பட்டது.

வெளியூரில் வாழ் தாதன்குளம் இறைமக்கள்:

தாதன்குளம் ஊரில் தற்போது 15 கத்தோலிக்க குடும்பங்களே வசித்து வருகின்றனர். இவ்வூரைச் சேர்ந்த நாற்பதுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வெளியூர், வெளிமாவட்டங்களில் வசித்து வருகின்றனர். ஒவ்வொரு வருடமும் மே மாதம் நடைபெறும் திருவிழாவிற்கு இவர்கள் அனைவரும் தவறாமல் ஒன்று கூடி திருவிழாவை சிறப்பிப்பது தனிச் சிறப்பு. ஒன்பது மற்றும் பத்தாம் திருவிழாவில் சிறப்பாக தேர்பவனி ஊரைச் சுற்றி வருகிறது. 11-ம் நாளில் ஊர் கூடி அசனம் (அன்பு விருந்து) வைத்து கொண்டாடுகின்றனர்...

11-ம் நாளில் அசனம் முடிந்தவுடன் அனைவரும் தத்தம் ஊர்களுக்கு சென்றுவிட, ஊரானது மீண்டும் களையிழந்து வெறிச்சோடி காணப்படும் என்பதும், மீண்டும் அடுத்த திருவிழா எப்போது வரும் என்று அன்றுமுதல் நாட்களை எண்ணிக்கொண்டிருப்போம்... என்று ஊர்ப்பெரியவர்கள் கூறுவதைக் கேட்கும்போது நம்மையறியாமல் கண்கள் கலங்குவது வேதனையான தருணம்!

புதுமைகள் நிறைந்த வேப்பமரம்:

இங்கு நோய் தீர்க்கும் வேப்பமரம் ஒன்று உள்ளது. இதன் இலைகளைப் பறித்து, அதனை அரைத்து குடித்தால் தீராத நோய்கள் நீங்கி விடுகிறது. குறிப்பாக வயிற்றுக் கோளாறு நீங்கியும், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் குழந்தை வரம் பெற்றுள்ளனர். ஆகவே இந்த அதிசயத்தைக் கேள்விப்பட்டு பல பகுதிகளிலும் இருந்தும் ஏராளமான மக்கள் வந்து, வேப்பமர இலையை பறித்துச் சென்று நோய் நீங்கி நலமடைகின்றனர். 

மேலும், பொதுவாக வேப்பமர இலையானது கசப்புத்தன்மை உடையது. ஆனால் தாதன்குளம் ஆலயத்தில் உள்ள வேப்பமர இலைகளோ சற்றே துவர்ப்பு தன்மை உடையது!!! 

இலைகள் கசப்பதுமில்லை!!! இந்த மரத்தின் விதைகள் முளைப்பதில்லை!!!! என்பதும் ஆச்சரியம் நிறைந்த உண்மை.

பார்வை பறிபோய்வந்த அதிசயம்:

சில வருடங்களுக்கு முன்னர் இரவு நேரத்தில் இந்த ஆலயத்திற்கு உள்ளே திருடன் புகுந்து, காணிக்கைகள் மற்றும் பொருட்களை திருடி மூட்டையாக கட்டிய வேளையில்.. திடீரென்று திருடனின் கண்கள் குருடாகிப் போனது. அந்த நேரத்தில் ஆலய மணியும் தானாக விடாது அடிக்கவே!!! மக்கள் வந்து பார்த்து திருடனைப் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்து வழக்கு பதிவு செய்த போது, திருடன் தனது தவறை உணர்ந்து மன்னிப்பு கோரியுள்ளார். பின்னர், அவனது பார்வை மீண்டும் கிடைத்தது அதிசயம்.

சகாய மாதா கெபியில் (பழைய ஆலயம்) உள்ள மாதா சுரூபத்தை புகைப்படம் எடுக்கும் போது, உருவம் பதிவதேயில்லை என்பதும் ஆச்சரியம் கலந்த உண்மை. இது பல ஆண்டுகள் தொடர்ந்து கொண்டே வந்தது. தற்போது மாதாவின் புகைப்படம் கேமராவில் பதிவாகிறது. 

"அழையா விருந்தாளி" அதிசயம் ஆனால் உண்மை:

2017 ஆம் ஆண்டு ஆலயத்தின் எட்டாம் திருவிழா திருப்பலி முடிந்தபின் இரவு வைரி என்ற பறவை எப்படியோ ஆலயத்துக்குள் வந்துவிட்டது. அதை வெளியே துரத்த பலமுறை முயன்று இருக்கிறார்கள் ஆனால் முடியவில்லை. ஒன்பதாம் திருநாள் அன்று சென்ற சிலரும் அதை துன்புறுத்தாமல் துரத்த முயன்று இருக்கிறார்கள். முடியவில்லை.!

ஒன்பதாம் திருநாள் அன்று உலக இரட்சகர் சுரூபத்தை பீடத்தில் வைத்தவுடன் பறந்து வந்து அருகில் உள்ள திண்டில் அமர்ந்து கொண்டது. ஆலய திறப்பு விழா அன்று அதிகாலை 05:00 மணிக்கு உலக இரட்சகர் கையில் வைத்துள்ள சிலுவையின் மீது அமர்ந்தது. ஆயர் வந்து ஆலயத்தை அர்ச்சித்து திருப்பலி நிறைவேற்றிக் கொண்டிருந்த போது, எதிரே உள்ள விட்டதில் அமர்ந்து கொண்டு உன்னிப்பாக கவனித்துக்கொண்டு இருந்தது.

ஆலய அர்ச்சிப்பு எல்லாம் முடிந்த பின் மதியம் எப்படியோ வெளியே பறந்து சென்று விட்டது. மூன்று நாட்கள் பட்டினியாக கிடந்தும் தளரவில்லை அந்த பறவை! இரவு பார்வை தெரியாத அந்த பறவை எப்படி வந்தது? ஏன் வந்தது? யாரும் துரத்தாமல் யாருக்கும் தெரியாமல் எப்படி வெளியே சென்றது? புரியாத புதிர்!!!

மேலும் உலக இரட்சகராம் நமது ஆண்டவர் இயேசு கிறிஸ்து தாதன்குளம் ஊரை எவ்விதமான நோய் நொடிகளோ..! தீவினைகளோ..! அண்ட விடுவதில்லை... இறைமக்களும் அவரின் அரவணைப்பில் பாதுகாப்பாகவே வாழ்ந்து வருகின்றனர்.

அதிசயங்களும் அற்புதங்களும் அமைதியும் நிறைந்த தாதன்குளம் ஊருக்கு வாருங்கள்... இறைவனின் ஆசிர் பெற்றுச் செல்லுங்கள்..

தகவல்கள்: பங்குத்தந்தையின் ஆசியுடன் ஆலய பொறுப்பாளர்.

புகைப்படங்கள்: catholictamil.com  Mr.Christopher

நன்றி: ஆலய உறுப்பினர் திரு.M.மிக்கேல்ராஜ். 


இணையத்தளம்:

உலகம் முழுவதும் பரவியுள்ள நமது இணையதளம் www.catholictamil.com உருவாகுவதற்கு முக்கிய காரணமாக இருந்ததும் தாதன்குளம் உலக இரட்சகர் தான். அதனால்தான் நமது இணையதளத்தில் இந்த ஆலயத்தின் படம் இடம் பிடித்துள்ளது!

அன்புடன், S.Christopher