401 புனித அல்போன்சா திருத்தலம், நாகர்கோவில்


புனித அல்போன்சா திருத்தலம்

இடம் : ஆயுதப்படை முகாம் சாலை (AR Camp road), நாகர்கோவில்

மாவட்டம் : கன்னியாகுமரி
மறை மாவட்டம் : தக்கலை
மறை வட்டம் : தக்கலை பிலாங்காலை.

நிலை : திருத்தலம்

பங்குத்தந்தை : அருட்தந்தை சனில் ஜோண் பந்திச்சிறக்கல்

இணை பங்குத்தந்தை : அருட்தந்தை அஜின் ஜோஸ்.

குடும்பங்கள் : 75
உறவியம் (அன்பியம்): 4

ஞாயிறு திருப்பலி : காலை 07.00 மணிக்கு மற்றும் மாலை 05.00 மணிக்கு

நாள்தோறும் திருப்பலி : காலை 06.00 மணிக்கு

சனிக்கிழமை மாலை 06.30 மணிக்கு நவநாள்.

மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை மாலை 06.30 மணிக்கு திருப்பலி, நற்கருணை ஆசீர்.

முதல் சனிக்கிழமை நவநாள், திருப்பலி மாலை 06.30 மணிக்கு (குருசடியில்)

மாதத்தின் மூன்றாவது சனிக்கிழமை மாலை 06.30 மணிக்கு நவநாள் தொடர்ந்து செபமாலை பவனி.

திருவிழா : ஜூலை 28 ம் தேதியை மையமாகக் கொண்ட பத்து நாட்கள்.

Location map : Alphonsa Nagar, ARP Camp Rd,
https://g.co/kgs/tzNwNJ

வரலாறு :

கி.பி 1960 ம் ஆண்டு செப்டம்பர் 17 ஆம் நாள் சங்ஙனாச்சேரி மறை மாவட்ட குருக்களால் குமரி மாவட்டத்தில் திருத்தொண்டு பணி துவங்கப் பட்டது.

நாகர்கோவில் பகுதியில் வாழ்ந்த சீரோ மலபார் கிறித்தவ மக்களை ஒருங்கிணைத்து 26.01.1985 ல் அருட்தந்தை டாமியன் துறத்து மலையில் அவர்களால் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது. தொடர்ந்து இப்பகுதி மக்களின் இறை வேண்டலாலும், இறை சித்தத்தாலும் சங்ஙனாச்சேரி உயர் மறை மாவட்டத்தின் கீழ், நாகர்கோவில் ஆயுதப்படை முகாம் சாலையில் முத்திப்பேறு பெற்ற அல்போன்சா ஆலயம் 10.09.1989 ல் கட்டியெழுப்பப் பட்டது.

ஆலயம் கட்ட நிலத்தை வாங்கி, ஆலயத்தை கட்டியெழுப்பி வழிபாடு நடத்த முழு முயற்சி செய்தவர், கன்னியாகுமரி மாவட்ட மறைப்பரப்பு ஒருங்கிணைப்பாளராக பணியாற்றிய பேரருட்பணி மாத்யு வாக்கயில் அடிகளார் ஆவார். பேரருட்பணி தாமஸ் முட்டத்துக் குன்னேல் மற்றும் அருட்தந்தை ஆன்றனி போரூர்க்கர் ஆகியோர் இப்பணிகளுக்கு பேரருட்தந்தை மாத்யு வாக்கயில் அவர்களுக்கு உதவியாக இருந்தனர். இவர்களது முயற்சிகள் பணிகள் பாராட்டுக்குரியது.

முதல் பங்குத்தந்தையாக அருட்தந்தை மாத்யு குளிஞ்ஞாலில் அடிகளார் பொறுப்பேற்று சிறப்பாக பணியாற்றினார்.

மேலும் அருட்தந்தை மாத்யு குழிஞ்ஞாலில் அவர்களால் 1990 ல் புனித அல்போன்சா பள்ளிக்கூடம் துவக்கப் பட்டது.

தொடர்ந்து 1992 ல் அருட்தந்தை மாத்யு ஓடலானி அடிகளார் பணியாற்றினார்.

1993 ஆம் ஆண்டு முதல் அருட்தந்தை தாமஸ் பௌவத்துபறம்பில் அடிகளார் பொறுப்பேற்று, 1993 ஆம் ஆண்டு முதல் புனித அல்போன்சா பள்ளிக்கூடத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தினார். இன்று இப்பள்ளிக் கூடத்தில் 2500 மாணவர்கள், 110 ஆசிரியர்கள், 60 பிற பணியாளர்களும் பணி புரிந்து வருவது குறிப்பிடத்தக்கது. இப் பள்ளிக்கூடத்தில் பயின்ற பல மாணவர்கள் இன்று பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் நுழைவுத் தேர்வு பயிற்சி மையம் (Entrance centre) இங்கு உள்ளது.

2008 அக்டோபர் 12 ம் நாளில் அல்போன்சா புனிதர் நிலைக்கு உயர்த்தப்பட்டதன் நினைவாக, 08.11.2008 ல் கோட்டார், மார்த்தாண்டம், தக்கலை மறை மாவட்டங்கள் இணைந்து நடத்திய விழாவின் போது, மதுரை உயர் மறை மாவட்ட ஆயர் மேதகு பீட்டர் பெர்னாண்டோ ஆவர்கள் நாகர்கோவில் புனித அல்போன்சா ஆலயத்தை திருத்தலமாக அறிவித்தார்.

"இறைமகன் வந்து உண்மையான இறைவனை அறிந்து கொள்ளும் ஆற்றலை நமக்குத் தந்துள்ளார். இது நமக்குத் தெரியும். நாம் உண்மையான இறைவனோடும் அவர் மகன் இயேசுகிறிஸ்துவோடும் இணைந்து வாழ்கிறோம். இவரே உண்மைக் கடவுள். இவரே நிலைவாழ்வு." 1 யோவான் 5:20 -என்னும் இறை வார்த்தையை உணர்ந்தவர்களாக, இந்த விழாவில் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வந்து சிறப்பு செய்தனர்.

இவ்வாறாக 1993 முதல் 2019 மே மாதம் வரை 26 ஆண்டுகள் இத் திருத்தலத்தில் பணிபுரிந்த அருட்தந்தை தாமஸ் பௌவத்துபறம்பில் அவர்களது தியாகம், உழைப்பு, தன்னலமற்ற இறைப்பணி ஆகியவற்றால் புனித அல்போன்சா திருத்தலமானது மிகப் பெரிய அளவில் வளர்ச்சி பெற்றது குறிப்பிடத் தக்கது. ஆகவே அருட்தந்தை தாமஸ் பௌவத்துபறம்பில் அவர்களை புனித அல்போன்சா திருத்தலத்தை செதுக்கிய சிற்பி என்றால் மிகையில்லை.

தற்போது 23.05.2019 முதல் அருட்தந்தை சனில் ஜோண் பந்திச்சிறக்கல் அடிகளார் மற்றும் உதவி பங்குத்தந்தையாக அருட்தந்தை அஜின் ஜோஸ் அவர்களும் சிறப்புற பணியாற்றி வருகின்றனர்.

குறிப்பாக தமிழக ஆயர் பேரவையின் (TNBC), 22 ஆயர்கள் இணைந்து இந்த வருடம் (2020) ஜனவரி மாதத்தில் இத்திருத்தலத்தில் பரிசுத்த திருப்பலி நிறைவேற்றியது மகத்துவம் நிறைந்ததும், மாட்சிமைக்குரியதும் ஆகும்.

திருத்தல திருவிழா :

ஜூலை 28 -ம் தேதியை மையமாகக் கொண்டு பத்து நாட்கள் நடைபெறும் திருவிழாவில் கலந்து கொள்ள தூத்துக்குடி, திருநெல்வேலி, மதுரை மாவட்டங்களில் இருந்து மக்கள் திருப்பயணிகளாக வந்து பங்கேற்று சிறப்பு செய்வார்கள்.

திருவிழாவில் முதல் சனிக்கிழமை அன்று குமரி மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் இளைஞர்கள், இறை மக்களும் கால்நடையாக திருப்பயணமாக திருத்தலம் வருவார்கள்.

பத்தாம் திருவிழாவான ஆடம்பர கூட்டுத் திருப்பலியானது தக்கலை மறை மாவட்ட ஆயர் தலைமையில் நடைபெறும். இத்திருப்பலியில் தக்கலை மறை மாவட்டத்தை சேர்ந்த அனைத்து அருட்தந்தையர்களும், மறை மாவட்டத்தின் இறை மக்களும் திருப்பயணமாக பங்கேற்று சிறப்புறச் செய்வார்கள்.

பெருவிழா திருப்பலியைத் தொடர்ந்து தேர்பவனியும், அதனைத் தொடர்ந்து பகலில் நேர்ச்சை உணவு (அன்பின் விருந்து) நடைபெறும். இந்நிகழ்வுகளில் திரளான மக்கள் சாதி மத பேதமின்றி கலந்து கொண்டு புனிதையின் வழியாக இறைவனின் நிறைவான ஆசீர்வாதங்களை பெற்றுச் செல்கின்றனர்.

இந்த திருத்தலமானது தமிழகத்தில் புனித அல்போன்சாவிற்கு அர்ப்பணிக்கப்பட்ட முதல் ஆலயம் என்பது தனிச் சிறப்பு. குமரி மாவட்டம் மட்டுமின்றி பிற மாவட்டங்களில் இருந்தும், குறிப்பாக தூத்துக்குடி, திருநெல்வேலி, மதுரை மாவட்டங்களில் இருந்தும் சாதி மத பேதமின்றி ஏராளமான மக்கள் வந்து, புனித அல்போன்சாவின் வழியாக இறைவனிடம் ஜெபித்து எண்ணற்ற அற்புதங்களை பெற்றுச் செல்கின்றனர்.

தகவல்களை மற்றும் புகைப்படங்கள் : பங்குத்தந்தை அருட்தந்தை சனில் ஜாண் பந்திச்சிறக்கல்.