762 புனித ஜார்ஜியார் மலங்கரை ஆலயம், செல்லங்கோணம்

        

புனித ஜார்ஜியார் மலங்கரை கத்தோலிக்க ஆலயம்

இடம்: செல்லங்கோணம், கப்பியறை அஞ்சல், 629156

மாவட்டம்: கன்னியாகுமரி

மறைமாவட்டம்: மார்த்தாண்டம்

மறைவட்டம்: அழகியமண்டபம்

நிலை: பங்குத்தளம்

பங்குத்தந்தை: அருள்தந்தை. ஜிபு மேத்யூ

குடும்பங்கள்: 449

அருள் வாழ்வியங்கள்: 15

ஞாயிறு காலை 07:00 மணி காலை ஜெபம், 07:30 மணி திருப்பலி 

நாள்தோறும் காலை 06:15 மணி காலை ஜெபம், 06:30 மணி திருப்பலி

வியாழன் மாலை 05:30 மணி மாலை ஜெபம், 06:00 மணிக்கு திருப்பலி

வெள்ளிக்கிழமை காலை 10:00 மணி முதல் 01:00 மணி வரை ஜெபமாலை, நற்கருணை ஆராதனை

திருவிழா: ஏப்ரல் மாதம் கடைசி வாரத்தில் ஆரம்பித்து, மே மாதம் முதல் ஞாயிறு நிறைவு பெறும் வகையில் பத்து நாட்கள்

மண்ணின் இறையழைத்தல்கள்:

அருட்பணியாளர்கள்:

1. Rev. Fr. Maria Arputham, Marthandam Dio

2. Rev. Fr. Premkumar, Marthandam Dio

3. Rev. Fr. S. John, Marthandam Dio

4. Rev. Fr. Franklin, Marthandam Dio

5. Rev. Fr. Arnold Dias, Marthandam Dio

6. Rev. Fr. Jerome, Marthandam Dio

7. Rev. Fr. Anto Jebin, Marthandam Dio

மண்ணின் அருட்சகோதரிகள்:

1. Rev. Sr. Nesam, St. Annes

2. Rev. Sr. Christy Bella, C.T.C

3. Rev. Sr. Amalorpavam, D.M

4. Rev. Sr. Rajammal, F.M.M

5. Rev. Sr. Lalitha, F.M.M

6. Rev. Sr. Lysa, St. Annes

7. Rev. Sr. Vijaya, IHM

8. Rev. Sr. Regina

9. Rev. Sr. Rose Mary, St. Annes

10. Rev. Sr. Jeniba, D.M

11. Rev. Sr. Aquila, D.M

வழித்தடம்: முளகுமூடு -கருங்கல் சாலையில், முளகுமூட்டில் இருந்து 4கி.மீ தொலைவில் செல்லங்கோணம் அமைந்துள்ளது.

கருங்கல் -செல்லங்கோணம்

Location map:

St George Syro-Malankara Catholic Church, Chellamkonam

https://maps.app.goo.gl/Kc8HsFyq3oKvGi2x5

வரலாறு:

இயேசுவின் சீடரான புனித தோமையர் கி.பி 52 ஆம் ஆண்டில் இந்தியாவிற்கு வந்தார்.‌ இவரது நற்செய்தி அறிவிப்பால் உருவான கிறிஸ்தவ சமூகத்தினர் மார்தோமா கிறிஸ்தவர்கள் என்று அழைக்கப்பட்டனர். 

மார்தோமாவின் மக்கள் பிறவழிபாட்டுமுறை ஆதிக்கத்தினால் தாய்திருச்சபையை விட்டுப் பிரிந்து 400 ஆண்டுகள் வாழ்ந்த சூழலில், திருச்சபை வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட நன்னாள் தான் 20.09.1930. பேராயர் மார் இவானியோஸ் ஆண்டகை அவர்கள், ஆர்த்தடோக்ஸ் சபையிலிருந்து பிரிந்து, தாய்த்திருச்சபையுடன் இணைந்து மறுஒன்றிப்பையும், மறைத்தூதுப் பணியையும் சிரமேற்கொண்டு மலங்கரை சிறியன் கத்தோலிக்க திருச்சபைக்கு வடிவம் கொடுத்த வரலாற்றுச் சிறப்புமிக்க பொன்னாள். கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தை மையமாகக் கொண்டு மலங்கரை சிறியன் கத்தோலிக்க திருச்சபை வளர்ந்தது.

மறுஒன்றிப்பின் சிற்பி மார் இவானியோஸ் ஆண்டகை அவர்கள், 1932 ஆம் ஆண்டில் ஆயன் இல்லா ஆடுகள் போல தவித்திருந்த திருவிதாங்கூர் அரசின் தென்பகுதியாகிய இன்றைய கன்னியாகுமரி மாவட்டத்தின் பல இடங்களை சந்தித்தபின், அருள்தந்தை மோண். ஜோசப் குழிஞ்ஞாலில்  அவர்களுக்கு ஆசி வழங்கி, குமரி மாவட்ட மக்களிடம் அனுப்பினார். நம்பிக்கை உள்ள ஊழியனாக வந்த அவர் 29.06.1934 இல் முதல் முதலில் வெட்டுவெந்நியில் (வெட்டுமணி) கால்பதித்தார். அன்றே மார்த்தாண்டம் வடக்குத் தெருவில் 3 ரூபாய் வாடகை வீட்டில் தங்கி, 30.06.1934 அன்று திருப்பலியும் நிறைவேற்றினார். தொடர்ந்து நட்டாலம், செல்லங்கோணம் என பல இடங்களுக்கும் அவரது பணி பரவியது.

அருள்தந்தை ஜோசப் குழிஞ்ஞாலில் அவர்கள் கருங்கல் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளை பார்வையிட, செல்லங்கோணம் பகுதி மக்கள் ஏழைகளாகவும், கல்வியறிவு அற்றவர்களாகவும், சமுதாயத்தில் ஒடுக்கப்பட்டவர்களாகவும், மூடப்பழக்கவழக்கங்களில் மூழ்கித் திளைத்தவர்களாகவும் இருப்பதைக் கண்டு, இவ்வூரில் ஓர் ஆலயம் தேவை என்பதை உணர்ந்தார்.

அருள்தந்தை. ஜோசப் குழிஞ்ஞாலில் அவர்களும், காஞ்சிரகோடு திரு. இராமகிருஷ்ணன், செல்லங்கோணம்  திரு. பிரபாகரன் நாயரும் நண்பர்களாயினர். அருள்தந்தை அவர்கள் கருங்கல் ஊருக்கும் பாம்பூரி வாய்க்காலுக்கும் இடையே ஓர் ஆலயம் அமைக்க 25 சென்ட் இடம் தேவை என்று கூறினார். இதனை திரு. இராமகிருஷ்ணன் அவர்கள் திரு. பிரபாகரன் நாயரிடம் சொல்ல, இடையன்விளையில் பூஞ்செடிகளும், முட்புதர்களுமாக காட்சியளித்த தனது 40 சென்ட் நிலத்தை எழுதிக் கொடுத்தார் திரு. பிரபாகரன் நாயர் அவர்கள். ஆட்டிடையர்கள் தங்கி இருந்ததால் இப்பகுதி இடையன்விளை என்று பெயர் பெற்றது.

இடையன்விளைக்கு அருகில் உள்ள சிறுபகுதி செல்லங்கோணம் என்று அழைக்கப்பட்டதால் ஓர் ஊருக்கே அப்பெயர் நிலையானதாயிற்று. இவ்வாறு செல்லங்கோணம் பகுதியில் ஒரு மலங்கரை சிறியன் கத்தோலிக்க ஆலயம் உருவாகக் காரணமானார் அருள்தந்தை ஜோசப் குழிஞ்ஞாலில் அவர்கள்.

பேராயர் மார் இவானியோஸ் ஆண்டகை அவர்கள், அருள்தந்தை ஜாண் ஆறாஞ்சேரி அவர்களை செல்லங்கோணத்தின் முதல் பங்குத்தந்தையாக நியமித்தார்.‌ முதலில் ஓர் ஓலைக்குடிசை அமைத்து, அதனை புனித ஜார்ஜியார் மலங்கரை கத்தோலிக்க ஆலயமாக உருவாக்கி, 30.09.1934 ல் திருப்பலியும் ஒப்புக் கொடுக்கப்பட்டது. அந்த ஓலைக்குடிசையே பங்குத்தந்தையின் வசிப்பிடமாகவும் அமைந்தது. இக்காலத்தில் மக்களின் பசிப்பிணி போக்கவும், நோயில் இருந்து விடுபடவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.  அத்துடன் ஆன்மீக வளர்ச்சி, மூடப்பழக்க வழக்கங்களில் இருந்து விடுபடுதல் போன்றவற்றிற்கும் பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

மக்கள் கல்வியறிவு அடைந்தால் மட்டுமே முழுவளர்ச்சி அடைந்தவர்களாக மாற்ற முடியும் என்பதை உணர்ந்து, முதலில் நடுநிலைப் பள்ளி உருவாக்கப்பட்டு கல்வியறிவு வழங்கப்பட்டது. தேங்காய்பட்டினம், புதுக்கடை, பள்ளியாடி, முளகுமூடு, திருவிதாங்கோடு, திங்கள்நகர் ஆகிய ஊர்களில் இருந்தும் மாணவர்கள் வந்து கல்வி கற்கும் ஒரு சிறந்த கல்வி நிறுவனமாக விளங்கியது. இன்று எம்.எஸ்.சி தொடக்கப்பள்ளி, புனித சூசையப்பர் எம்.எஸ்.சி மேல்நிலைப் பள்ளி என இரு பள்ளிக்கூடங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.

இரண்டு ஆண்டுகாலம் (1985-87) ஆசிரியர் பயிற்சிப் பள்ளியும் நடத்தப்பட்டு, 40 ஆசிரியைகள் உருவாக்கப் பட்டனர். இங்கு கல்வி கற்றவர்கள் உயர்கல்வி பெறவும், ‌தொழிற்கல்வி பெறவும் வழிகாட்டுதல்களும் உதவிகளும் வழங்கப் பட்டன.

பள்ளிக்கூடங்களில் கல்வி கற்பிக்கும் பணியையும், மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் பணியையும் சிறப்புடன் செய்ய மேரி மக்கள் கன்னியர்களின் இரண்டாவது இல்லம் செல்லங்கோணத்தில் 4.4.1946 அன்று

தொடங்கப்பட்டு இன்றளவும் அவர்களின் சேவைகள் தொடர்கிறது. மேலும் அறியாமையிலிருந்தும், மூடப் பழக்க வழக்கங்களிலிருந்தும் மக்களை மீட்டெடுத்ததில் பெரும்பங்கு இவர்களையேச் சாரும்.

இச்சபை கன்னியர்களின் இல்லம் சார்பில் ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கென புனித வின்சென்ட் டி பவுல் குழந்தைகள் இல்லம் 14.01.1979 அன்று தொடங்கப்பட்டு, இன்றளவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தற்போது 50 குழந்தைகள் இங்கு தங்கி கல்வி பயின்று வருகின்றனர்.

செல்லங்கோணம் -கருக்குப்பனை சாலை அமைய பெரும் முயற்சி மேற்கொண்டவர் அருள்தந்தை சேவியர் ஞாயப்பள்ளி அவர்கள் ஆவார்.‌ போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்தவும் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

அன்றைய காலகட்டத்தில் கடிதப் போக்குவரத்து என்பது மிகவும் முக்கியமானது என்பதால், மக்களுக்கு வசதியாக இருக்கும் என்று ஆலயத்திற்கு சொந்தமான இடத்தில் கட்டிடம் கட்டிக் கொடுத்து 24.12.1972-ல் கப்பியறை அஞ்சலகம் அமைய  வழிவகுத்தது செல்லங்கோணம் பங்கு. இன்றளவும் பங்கின் கட்டிடத்திலேயே இயங்கி வருகிறது.

ஊரின் மையப்பகுதியில் நியாயவிலைக்கடை இருந்தால் வசதியாக இருக்கும் என்பதற்காக 29.06.1967 ல் பதிவு செய்து, 09.07.1967ல் விநியோகம் தொடங்கப்பட்டது. செல்லங்கோணம் பங்கிற்கு சொந்தமான கட்டிடத்திலேயே இது இயங்கி வருகிறது.

காதிபோர்டு உதவியுடன் இயந்திரத்தைப் பயன்படுத்தி நூல்நூற்க பெண்களுக்கு பயிற்சியும் பல ஆண்டுகள்  தொடர்ந்து பணிகளும் வழங்கப்பட்டன.

பலருக்கும் தேனீ வளர்ப்பு பயிற்சியளித்து, உயர் நிலை மாணவர்களுக்கு தேனீக்களுடன் கூடிய 5 கூடுகள் வீதம் இலவசமாகவும் வழங்கப்பட்டது. இங்கு பயிற்சி பெற்ற சிலர் இன்றளவும் தேனீ வளர்ப்பை தொழிலாகக் கொண்டுள்ளனர்.  

தையல் பயிற்சி வழங்கப்பட்டதுடன், பலருக்கும் இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. பலரும் ஓலை வீடுகளில் வசித்து வந்த காலகட்டத்தில், அதுகூட இல்லாமல் தவித்த 80 குடும்பங்களுக்கு ஓட்டு வீடுகள் கட்டிக் கொடுக்கப் பட்டது.

பலருக்கும் ஓட்டுநர், நடத்துநர் பயிற்சி கொடுக்கப்பட்டு வேலை வாய்ப்புகள் பெற வழிவகை செய்யப்பட்டது. இக்காலகட்டத்தில் பணிபுரிந்த அருட்சகோதரி பெனடிக்ட் அவர்களின் அளப்பரிய பணியை செல்லங்கோணம் இறைசமூகம் நன்றியுடன் நினைவு கூர்கின்றது.

காலரா போன்ற தொற்று நோய்கள் ஏற்பட்ட காலங்களிலும், இயற்கை பேரிடர் காலங்களிலும் பல்வேறு உதவிகள் வழங்கி அவர்களுக்கு உறுதுணையாக இருந்துள்ளது இப்பங்கு.

பொதுமக்களின் தேவைக்காக சமூக நலக்கூடம் ஒன்று கட்டப்பட்டு, இயங்கி வருகிறது.

சமூக நலப் பணிகள் அனைத்தும் சாதி சமய வேறுபாடின்றி செய்வது தனிச் சிறப்பு.

15.8.1978 அன்று செல்லங்கோணம் பங்கிலிருந்து பிரிக்கப்பட்டு, காட்டுவிளை தூய விண்ணேற்பு அன்னை ஆலயம் உருவாக்கப்பட்டது. 

பங்கின் செயல்பாடுகள், அறிவிப்புகள் நிகழ்வுகளை அனைவரும் தெரிந்து கொள்ளும் பொருட்டு 'ஜார்ஜியார் தூது' என்னும் செய்திமலர் வெளியிடப் படுகிறது.

திருவனந்தபுரம் மறைமாநிலத்துடன் செயல்பட்டு வந்த இப்பங்கு, மார்த்தாண்டம் மறைமாவட்டம் உருவாக்கப் பட்டதிலிருந்து (16.12.1996), இம்மறைமாவட்டத்தின் கீழ் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.  

தற்போதைய புதிய ஆலயத்திற்கு 14-04-2008 அன்று Most. Rev. Yoohanon Mar Chrysostom அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு, அனைவரின் ஒத்துழைப்புடன் கட்டப்பட்டு, 15-01-2011 அன்று Moran Mar Baselios Cleemis Catholicos அவர்களால் அர்ச்சித்து திறந்து வைக்கப்பட்டது.

மார்த்தாண்டம் மறைமாவட்ட வெள்ளிவிழாவை முன்னிட்டு தமிழக கத்தோலிக்க ஆயர் பேரவைக் கூட்டம்  மார்த்தாண்டம் மறைமாவட்டத்தில் நடைபெற்றது. அதன் ஒரு நிகழ்வாக தமிழகத்தின் அனைத்து கத்தோலிக்க ஆயர்களும் இணைந்து ஒப்புக்கொடுத்த திருப்பலி, மலங்கரை சபையின் தலைவரும் தந்தையுமாகிய மோறோன் மோர் பசலியோஸ் கர்தினால் கிளீமிஸ் ஆண்டகை தலைமையில் 28.01.2021 அன்று செல்லங்கோணம் பங்கில் வைத்து நடந்த நிகழ்வு, ஓர் வரலாற்று நிகழ்வாக இப்பங்கிற்கு பெருமை சேர்க்கின்றது.

இவ்வாறு மக்களின் அறியாமை இருளை அகற்றி ஆன்மீக வளர்ச்சிக்கும், சமூக பொருளாதார வளர்ச்சிக்கும் வித்திட்ட மார்த்தாண்டம் மறைமாவட்ட ஆயர்கள், குருக்கள், அருட்சகோதரிகளின் தன்னலமற்ற பணிகளை என்றும் நன்றியுடன் நினைவு கூர்கின்றது செல்லங்கோணம் இறைசமூகம்.

பங்கில் உள்ள குருசடிகள் 5:

1. புனித அந்தோனியார் குருசடி, மாங்கோடு

2. குழந்தை இயேசு குருசடி, ஏழுவிளை

3. புனித லூர்து மாதா குருசடி, மாதாநகர்

4. புனித பாத்திமா மாதா குருசடி, ஆத்திவிளை

5. புனித ஜார்ஜியார் குருசடி, செல்லங்கோணம்

பள்ளிக்கூடங்கள்:

1. St Joseph Primary School

2. St Joseph Higher Secondary School

பங்கில் உள்ள சபைகள் இயக்கங்கள்:

1. பாலர் சபை

2. மலங்கரை கத்தோலிக்க இளைஞர் இயக்கம்

3. மலங்கரை கத்தோலிக்க இயக்கம்

4. மறைக்கல்வி

5. கோல்பிங் இயக்கம்

6. புனித வின்சென்ட் தே பவுல் சபை

7. சான்றோர் பேரவை

8. தாய்மார் சங்கம்

9. பங்குப்பேரவை

பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள் பட்டியல்:

1. Msgr. Joseph Kuzhinjalil

2. Rev. Fr. John Aranchery (30-09-1934 -01-05-1955)

3. Rev. Fr. Xavier Gnayapalli (01-09-1955 -26-05-1957)

4. Rev. Fr. John Aranchery (26-05-1957 -01-01-1961)

5. Rev. Fr. Joseph Gnayalloor (01-01-1961 -30-07-1961)

6. Rev. Fr. Thomas Vilayil (30-07-1961 -15-06-1969)

7. Rev. Fr. John Thazhel (15-06-1969 -20-06-1970)

8. Rev. Fr. Zacharis Kuzhipparampil (20-06-1970 -11-08-1975)

9. Rev. Fr. George Omman (11-08-1975 -02-07-1983)

10. Rev. Fr. Zacharis Kuzhipparampil (02-07-1983 -05-06-1994)

11. Rev. Fr. Vincent Kulappuravilayil (தற்போதைய மார்த்தாண்டம் மறைமாவட்ட ஆயர்) (05-06-1994 -10-09-1998)

12. Rev. Fr. Jeyapaul, OIC (10-09-1998 -07-04-2002)

13. Rev. Fr. John Christopher, OIC (07-04-2002 -30-01-2006)

14. Rev. Fr. Jose Bright (30-01-2006 -02-06-2013)

15. Rev. Fr. Johnkumar (02-06-2013 -17-06-2018)

16. Rev. Fr. Jibu Mathew (17-06-2018 ....)

புனித ஜார்ஜியாரின் வழியாக இறையாசீர் பெற்றுச் செல்ல அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்...

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்:

பங்குப்பணியாளர் அருள்தந்தை. ஜிபு மேத்யூ அவர்கள்