782 புனித ஆரோக்கிய அன்னை ஆலயம், நொச்சிமேடு இருதயபுரம்

      

புனித ஆரோக்கிய அன்னை ஆலயம்

இடம்: நொச்சிமேடு, இருதயபுரம், மணப்பாறை, மஞ்சம்பட்டி அஞ்சல், 621307

மாவட்டம்: திருச்சி

மறைமாவட்டம்: திருச்சி

மறைவட்டம்: மணப்பாறை

நிலை: கிளைப்பங்கு

பங்கு: தூய லூர்து அன்னை ஆலயம், மணப்பாறை

பங்குத்தந்தை: அருட்பணி. தாமஸ் ஞானதுரை.

இணைப் பங்குத்தந்தை: அருட்பணி. இன்பென்ட் ராஜா

குடும்பங்கள்: 150

அன்பியங்கள்: 5

மாதத்தில் இரண்டு தினங்கள் மாலை 06:30 மணிக்கு திருப்பலி நடைபெறும்

நாள்தோறும் மாலை 07:00 மணிக்கு ஜெபமாலை

திருவிழா: மே மாதம் இரண்டாம் வார சனி மற்றும் ஞாயிறு

வழித்தடம்: மணப்பாறை -திண்டுக்கல் செல்லும் சாலையில், பைபாஸ் சந்திப்பு.

வரலாறு:

1977 ஆண்டு காலகட்டத்தில் பெருவெள்ளத்தால் தமிழகத்தின் பல பகுதிகளில் பாதிப்புகள் ஏற்பட்ட போது, நொச்சிமேடு என்னும் இருதயபுரத்திலும் அந்த பாதிப்பு ஏற்பட்டது. இந்த இருதயபுரம் ஊரில் உள்ள பல வீடுகளுக்கும் பெருத்த சேதம் ஏற்பட்டது. ஊரின் நடுவில் இருந்த சிறிய சிலுவை திண்ணை மாடமும் சிதிலமடைந்து பாதிப்பிற்குள்ளானது. 

இதனைத் தொடர்ந்து மணப்பாறை மறைவட்ட குருக்கள் மற்றும் மாண்ட்போர்ட் கபிரியேல் சபை அருட்சகோதரர்களின் பெரும் பொருளாதார நிதிதிரட்டலின் மூலம் இந்தப் பகுதி மக்களுக்கு வீடுகள் கட்டி கொடுக்கப் பட்டது.‌ பின்னர் சிலுவை மாடத்தை ஆலயமாக மாற்ற வேண்டும் என தீர்மானம் செய்து, வைகாசி மாதம் 04-ம் நாளில் அடிக்கல் நாட்டப்பட்டு அழகிய சிற்றாலயம் கட்டப்பட்டது. மறைவட்ட குருக்கள் மற்றும் மாண்ட்போர்ட் சபை அருட்சகோதரர்களின் நற்செய்திப் பணிகளால் இருதயபுரம் ஒரு ஆன்மீகச் சோலையாக மாறத் தொடங்கியது. பின்னர் திருச்சிலுவையானது, அருட்பணி. ஜோசப் அவர்களால் ஆலய பீடத்தில் நிறுவப்பட்டது. கபிரியேல் சபை சகோதரர்களின் பணிகளால் இளையோர், சிறுவர் என அனைவரும் ஆர்வமாக ஆலயம் வரத் தொடங்கினர்.

இருதயபுரம் திரு. ஆசீர்வாதம் -சாந்தாயி குடும்பத்தின் நட்பின் வழி வந்த, குழந்தை பாக்கியம் இல்லாதிருந்த சிலோன் தம்பதிகள் இங்குள்ள சிலுவை மரத்தடியில் கண்ணீர் சிந்தி மனமுருகி ஜெபித்தனர். தங்களுக்கு ஆரோக்கிய மாதாவைப் போல பெண் குழந்தை வேண்டும் என்றும், குழந்தை பிறந்தால் இந்த ஆலயத்திற்கு ஆரோக்கிய மாதாவின் சுரூபத்தை வாங்கித் தருவதாகவும் வேண்டிக் கொண்டனர். ஒரு வருடத்திற்குள்ளாகவே வேண்டுதல் நிறைவேறி பெண் குழந்தையை பெற்றெடுத்து, மரியாள் மேரி எனப் பெயரிட்டனர். தங்களது வேண்டுதல் நிறைவேறியதால் வேளாங்கண்ணி பேராலயத்தில் இருந்து புனித ஆரோக்கிய அன்னையின் சுரூபத்தை வாங்கி, புனிதம் செய்து எடுத்து வந்து, மணப்பாறை அருட்பணியாளர்கள் மற்றும் கல்லாத்துப்பட்டியைச் சேர்ந்த பொந்து செல்வம், தீராம்பட்டி ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் இருதயபுரம் ஊர் பொதுமக்கள் சாட்சியாக ஆலயத்தில் நிறுவப்பட்டது. 

அன்று முதல் இன்று வரை இறையாசீரை வழங்கி வருகின்ற ஆலயமானது மிகவும் பழைய தோற்றத்தில் இருப்பதை மாற்றி புதுப்பிக்க வேண்டும் என்ற நோக்கில் 2020 ஆம் ஆண்டு திட்டமிடப்பட்டு, பல உலகியல் சூழல் மற்றும் கொரோனா பெருந்தொற்றுகளைக் கடந்து, 26.11.2021 அன்று ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. 

ஆலயப் பணிகளை தொடங்கியது ஸ்டார் ரைடர்ஸ் இளைஞர் நற்பணி மன்றம் என்ற இளைஞர் படையினர். ஆலய பீடமும் புதிதாக உருவாக்கப்பட்டது. 25.12.2021 கிறிஸ்துமஸ் தினத்தன்று மேற்கூரை கான்கிரீட் அமைக்கப்பட்டது. 

அனைவரின் ஒத்துழைப்புடன் ஆலயப் பணிகள் நிறைவு செய்யப்பட்டு 29.05.2022 அன்று ‌மாலை 05:00 மணிக்கு மணப்பாறை பங்குத்தந்தை அருட்பணி. ஆரோக்கிய சுந்தர்ராஜ், உதவிப் பங்குத்தந்தை அருட்பணி. செல்வ ஜெயமணி, குளத்தூராம்பட்டி பங்குத்தந்தை அருட்பணி. ஆரோக்கியராஜ் பென்கர் மற்றும் மதுரை மாவட்ட கப்புச்சின் சபை மண்டலத் தலைவர் அருட்பணி. சத்தியன் ஆகியோர் தலைமையில் திருப்பலி நிறைவேற்றப்பட்டு, ஆலயம் அர்ச்சிக்கபட்டு திறந்து வைக்கப்பட்டது.  

இதன் பிறகு ஆலயத்தில் பல அதிசயங்களும் அற்புதங்களும் நடந்து வருவதை அறிந்து, திருச்சி மாவட்டத்தின் பல இடங்களில் இருந்தும் மக்கள் வந்து ஜெபித்து செல்கின்றனர்.

17.07.2022 அன்று கொடிமரம் நிறுவப்பட்டது.  

நம்புங்கள்...! செபியுங்கள்...! நல்லது நடக்கும் என்பதற்கிணங்க, அன்னையிடம் தினம் தினம் இறைமக்கள் வந்து ஜெபிக்கின்றனர். குறிப்பாக குழந்தை வரம், உடல்நலம், கால்நடைகள் நலம் ஆகியற்றைப் பெறுகின்றனர்.

சிலுவை திண்ணை வரலாறு: 

அன்று போர்ச்சுக்கீசிய மாலுமிகள் கடலில் ஏற்பட்ட கடும் புயல் சீற்றத்தால் அன்னை மரியின் தயவால் வேளாங்கண்ணியில் கரை ஒதுங்கினார்கள். அதன் நினைவாக வைக்கப்பட்ட அந்த வியாபார கப்பலில் இருந்த கொடி மரத்தை, வேளாங்கண்ணியில் இன்றளவும் காண முடிகிறது. அது போல தான் அன்றைய நாளில் நொச்சிமேடு பகுதியில் ஆலயம் கட்டுவதற்கு முன்னர், முதல் முதலாக இந்த திருச்சிலுவையானது கபிரியேல் சபை அருட்சகோதரர்களால் நிறுவப்பட்டது. அவர்கள் நிறுவிய அந்த சிலுவையை நினைவு கூறும் வகையில் தற்போது புதிய ஆலயம் கட்டப்பட்டாலும்,  இதற்காக சிலுவைத் திண்ணை புதிதாக அமைக்கப்பட்டது. இங்கு வருகை தரும் பக்தர்கள் முதலில் சிலுவைத் திண்ணைக்கு சென்று மெழுகுவர்த்தி ஏற்றி மனம் உருகி பிரார்த்தனை செய்து விட்டு தான் ஆலயத்திற்குள் வந்து வழிபடுவார்கள்...

 திருவிழா வரலாறு:

 2011 ஆம் ஆண்டுக்கு முன்னர் மஞ்சம்பட்டி கபிரியேல் சபை அருட்சகோதரர்களால், இருதயபுரம் (நொச்சிமேடு) புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் வருடந்தோறும் கிறிஸ்துமஸ் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வந்தது. அதன்பிறகு அந்த கிறிஸ்துமஸ் கலை விழா கைவிடப்பட்டது, அதனை விடாமல் இருக்க, இவ்வூர் இளைஞர்கள் ஒன்றிணைந்து பொதுமக்களிடம் முடிந்த தொகையை வசூலித்து, தொடர்ந்து கிறிஸ்துமஸ் கலை விழாவை இன்றளவும் சிறப்புற நடத்தி வருகின்றனர். இது தவிர வேறு திருவிழா என்பது இந்த நொச்சிமேட்டிற்கு கிடையாது. இவ்வூர் மக்களின் தாய் கிராமமான தீராம்பட்டி புனித வனத்து அந்தோணியார் ஆலயத்தில் நடைபெறும் தை மாதம் திருவிழாவை எதிர் நோக்கி காத்திருந்தார்கள். இந்த வேளையில் தற்போது இவ்வூரில் எழுப்பப்பட்ட புதிய ஆலயத்தில் புனித ஆரோக்கிய அன்னை, புனித பதுவை அந்தோணியார், புனித சூசையப்பர், அற்புத குழந்தை இயேசு, உயிர்த்த ஆண்டவர் சுரூபங்கள் ஆலய திறப்பு விழாவிற்கு முதல் நாள் 28.5.2022  ஆலயத்தில் வைக்கப்பட்டது. இது தான் இந்த ஊருக்கு முதல் திருவிழா என்பது குறிப்பிடத்தக்கது. இனிவரும் காலங்களில் இவ்வூரின் ஆண்டுத் திருவிழா மே மாதம் இரண்டாம் வாரம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும்.

திருவிழாக்கள்: 

ஜனவரி 1 ம் தேதி காலை 08:00 மணிக்கு கால்நடைகள் மந்திரித்தல்,

 மாலை செபமாலை, மன்றாட்டு மாலை நடைபெறும்.

மே மாதம் இரண்டாம் வாரம் சனிக்கிழமை இரவு தேர்பவனி,

ஞாயிறு  பகல் தேர்பவனி.

செப்டம்பர் மாதம் 8 ஆம் தேதி மாதா பிறந்தநாளில் மாபெரும் சமபந்தி அன்னதானம்.

டிசம்பர் மாதம் 25 காலை விளையாட்டுப் போட்டிகள்.

அன்று மாலை முளைப்பாரி ஊர்வலம்.

டிசம்பர் 26 இரவு 07:00 மணிக்கு கிறிஸ்துமஸ் கலை நிகழ்ச்சிகள்.

ஆலய பங்கேற்பு அமைப்புக்கள்:

1. மறைக்கல்வி (மௌன மடத்தில் வைத்து)

2. புனித ஆரோக்கிய மாதா ஃபண்ட்

3. இளையோர் மன்றம்

நம்பிக்கையுடன் வந்து இருதயபுரத்து புனித ஆரோக்கிய மாதாவிடம் செபியுங்கள்.. நல்லது நடக்கும் என பெரும் வாஞ்சையுடன் தங்களை அழைக்கின்றனர்... இருதயபுரத்தின் ஊர் பொதுமக்கள் மற்றும் ஸ்டார் ரைடர்ஸ் இளைஞர் நற்பணி மன்றத்தினர்...

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: நொச்சிமேடு ஊர் பெரியவர்கள் வழிகாட்டலில் மண்ணின் மைந்தர் A. Edison Prabhakaran