126 ஜெயராக்கினி அன்னை இணைப் பேராலயம், சேலம்


தூய ஜெயராக்கினி அன்னை இணைப் பேராலயம்

இடம் : செவ்வாய்பேட்டை, சேலம்.

மாவட்டம் : சேலம் 
மறை மாவட்டம் : சேலம்
மறைவட்டம் : சேலம்

நிலை : இணைப் பேராலயம் 
 கிளைகள் : 
1. புனித ஆரோக்கிய அன்னை சிற்றாலயம், சண்முக நகர்
2. புனித இஞ்ஞாசியார் செபக்கூடம், அன்னதானப்பட்டி
3. புனித ஆரோக்கிய நாதர் பஜனை மடம்
4. புனித செபஸ்தியார் குருசடி, PGR லைன்

பங்குத்தந்தை : அருட்பணி. பீட்டர் பிரான்சிஸ்

குடும்பங்கள் : 900
அன்பியங்கள் : 34

திருப்பலி நேரங்கள் : 
ஞாயிறு : காலை 06.00 மணி, காலை 06.45 மணிக்கு திருப்பலி (பாத்திமா சிற்றாலயத்தில்), 08.00 மணி மற்றும் மாலை 06.00 மணிக்கு திருப்பலி

திங்கள், புதன், வியாழன், வெள்ளி : காலை 06:15 மணிக்கு திருப்பலி
செவ்வாய், சனி : மாலை 06:15 மணிக்கு திருப்பலி

மாதத்தின் முதல் ஞாயிறு : காலை 10.00 மணிக்கு திருப்பலி (சண்முகா நகர்)

மாதத்தின் முதல் வெள்ளி : காலை 06:15 மணி, மாலை 06:15 மணிக்கு நற்கருணை ஆராதனை

மாதத்தின் முதல் சனி : காலை 06:15 மணி, மாலை 06:15 மணிக்கு கெபியில் திருப்பலி

திருவிழா : மே மாதம் கடைசி ஞாயிறு

வழித்தடம் : சேலத்திலிருந்து சேலம்-சங்ககிரி தேசிய நெடுஞ்சாலை வழியாக ஓமலூர் செல்லும் சாலையில் 4கி.மீ தொலைவில் செவ்வாய்பேட்டை தூய ஜெயராக்கினி அன்னை இணைப்பேராலயம்அமைந்துள்ளது.

செவ்வை நகர் பங்கின் மண்ணின் மைந்தர்கள் : 
1. அருட்பணி. மதலைமுத்து (late)
2. அருட்பணி. அமலன் செராபின், SDB
மற்றும் பல அருட்சகோதரிகள். 


செவ்வை நகர் பங்கின் வரலாறு

செவ்வாய்பேட்டையில் கிறுஸ்துவமறையின் தொடக்கம், அருட்திரு. இராபர்ட் தெ நோபிலி அவர்களின் காலத்திலிருந்தே உதயமானது. 1623ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல்முறையாக அருட்திரு.இராபர்ட் தெ நோபிலி அவர்கள் சேலம் அன்னதானப் பட்டியில் மறைபோதகம் செய்தார்கள். பின்பு 1796ஆம் ஆண்டு அருட்திரு. அப்பேதுபுவா அவர்களின் காலத்தில் அங்கு புனித இஞ்ஞாசியார் செபக்கூடம் கட்டப்பட்டது. அருட்திரு.பிரிக்கோ அவர்கள் (1837-1845)  இந்தியாவுக்கு வந்த பின்னர், சில மாதங்கள் கோவையில் பணியாற்றி வந்த அருட்திரு. ஞானாதிக்கம் அவர்களின் உதவிக்குருவாக பணியாற்றி வந்தார். இவர் பதினொரு மாதங்கள் சேலம் மறைமாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து 1838ஆம் ஆண்டு ஒரு குறிப்பு எழுதினார். இவர் செவ்வாய்பேட்டையில் 1840ஆம் ஆண்டு குருக்களின் இல்லமும் சத்திரமும் கட்டினார். அவருக்கு உதவிக்குருவாக பணியாற்றிய அருட்திரு. மாரியோன் தெ பிரெசியாக் அவர்கள் செவ்வாய் பேட்டை பங்கிலுள்ள வாலிபர்களை ஒன்று சேர்த்து ஒரு சங்கம் நிறுவினார். அந்த சங்கத்திலிருந்த திரு.மரிசவரிநாதர் (1850-1886) அவர்கள் குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார். அருட்திரு. மாரியோன் தெ பிரெசியாக் அவர்கள் கோவை ஆயராகி பிறகு ஆப்பிரிக்கா சென்று வேதபோதகக் குருவாக பணியாற்றினார். இவருக்கு புனிதர் பட்டம் கொடுக்க ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அதன்பிறகு அருட்திரு.குயோன் அவர்கள் (1845-1853) இந்தியாவுக்கு வந்த ஓராண்டிற்குள் சேலத்தின் பங்கு விசாரணையை ஏற்றார். அவர் ஆண்டுக்கு இருமுறை செவ்வாய்பேட்டையையும் அதைச்சுற்றியிருந்த அன்னதானம் பட்டி, லைன்மேடு, கோட்டை, முள்ளுவாடி, கருவாட்டுப்பாறை, கிச்சிப்பாளையம், அரிசிப்பாளையம் பகுதிகளையும் விசாரணை செய்து வந்தார். 

 1851ஆம் ஆண்டு புனித செபஸ்தியார் குருசடி PGR லைன் கிராஸ் ரோட்டில் கட்டப்பட்டது. 1852ஆம் ஆண்டுமுதல் இப்பகுதியில் குருக்கள் குடியிருக்க தொடங்கினர். 1860ஆம் ஆண்டு செவ்வாய் பேட்டையில் 30 அடி உயரமுள்ள ஒரு மணிக்கூண்டு கட்டப்பட்டு, அதுவரை காணாத விமரிசையுடன் திருவிழா நடத்தப்பட்டது. அடுத்த ஆண்டு ஆலயத்தின் சுற்றுச்சுவர் விரிவாக்கப்பட்டு அதற்குள்ளே ஒரு கிணறும் வெட்டப்பட்டது. 1865ஆம் ஆண்டுமுதல் 1869ஆம் ஆண்டுவரை அருட்திரு. பாலக்கூ ஈவ்ஸ் அவர்கள் பணியாற்றினார். 1874ஆம் ஆண்டு பஞ்சத்தின் போது 300 குழந்தைகள் செவ்வாய்பேட்டையிலிருந்ந கிறுஸ்துவக்குடும்பங்களில் தங்கவைக்கப்பட்டு வளர்க்கப்பட்டனர். மக்களின் இந்த சேவை மனப்பான்மை மிகவும் பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகும். 1887ஆம் ஆண்டு இங்கு தூய மரியன்னை திரு இருதய மடம் துவக்கப்பட்டது. 1902ஆம் ஆண்டு புனித ஆரோக்கியமாதர் பஜனை மடம் கட்டப்பட்டது. 1920ஆம் ஆண்டு ஜெயராக்கினி பள்ளி அரசு உதவி பெறும் பள்ளியாக மாற்றப்பட்டது. 1910 முதல் 1911 வரை, மேலும் 1921 முதல் 1924 வரை இப்பகுதியில் ஏற்பட்ட தொற்றுநோயின் காரணமாக பலர் இங்கிருந்து வெளியேறி பல பகுதிகளில் குடியேறினர். இதனால் இங்கிருந்த கிறிஸ்துவ மக்களின்  எண்ணிக்கை குறைந்தது.

அருட்திரு. புரூயெர் ஜான் க்ளே பங்குத்தந்தையாக பணியாற்றியபோது பல முன்னேற்றப் பணிகளைச் செய்து வந்தார். கோவில் நிலத்திலிருந்த வீடுகளை முன்னிட்டு மக்கள் அடிக்கடி சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். இதை முடிவுக்குக் கொண்டுவர தந்தை அவர்கள் அவ்வீடுகளை அவர்களுக்கே விற்றுவிட்டார். பெரியதொரு ஆலயம் கட்ட மிகுந்த விவேகத்துடன் நிதி சேர்த்தார். 1922ஆம் ஆண்டு தற்போதுள்ள ஆலயமும் அழகான பெரிய மணிக்கூண்டும் கட்டி முடித்தார். மக்கள் தாராளமாக உதவி செய்தபோதிலும் இவ்வித வேலைகளினால் ஏற்பட்ட பெரிய கடனை 1930ஆம் ஆண்டு புதிதாக ஏற்படுத்தப்பட்ட சேலம் மறைமாவட்டம் தீர்க்க வேண்டியதாக இருந்தது. இவர் தனது அறைவீட்டைப் பள்ளிக்கூடமாக மாற்றிவிட்டு சூரமங்கலத்தில் தங்கியிருந்தார். சில ஆண்டுகள் வரை நாள்தோறும் மிதிவண்டியில் மூன்று நான்கு தடவைகள் சூரமங்கலத்திலிருந்து  செவ்வாய்பேட்டைக்கு வந்து சென்று கொண்டிருந்தார். செவ்வாய் பேட்டையில் கன்னியர் இல்லமும் சரக்கு மூட்டைகள் வைப்பதற்குக் கிடங்குகளும் கட்டினார்.

26.05.1930 அன்று புதிதாக உருவாக்கப்பட்ட சேலம் மறைமாவட்டத்தின் முதல் ஆயராக மேதகு.ஹென்றி புரூனியர் அவர்கள் 14.09.1930 அன்று இவ்வாலயத்தில் பாண்டிச்சேரி பேராயர் மேதகு.மொரேல் அவர்களால் திருநிலைப்படுத்தப்பட்டார். சேலம் மறைமாவட்டம் உருவாக்கப்பட்டதிலிருந்து புனித ஜெயராக்கினி அன்னையைப் பாதுகாவலியாகக் கொண்டு மறைமாவட்ட பேராலயமாக இப்பங்கு விளங்கியது. 1956ஆம் ஆண்டில் அரிசிப்பாளையம் பங்கு பிரிக்கப்பட்டதிலிருந்து தனிப்பங்காகவும் 1991ஆம் ஆண்டில் அரிசிப்பாளையத்தில் குழந்தை இயேசு பேராலயம் மறைமாவட்ட ஆலயமாக ஏற்படுத்தப்படும் வரை பேராலயமாகவும் இருந்தது. 1953ஆம் ஆண்டிலிருந்தே தூய சவேரியார் இளங்குருமடத்திலுள்ள ஆலயத்தில் திருப்பலி நடைபெற தொடங்கியபோதும் 1956ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து தான் அரிசிப் பாளையம் தனிப்பங்காக செயல்படத்தொடங்கியது.

மக்களை ஆன்மீகத்தில் வளர்க்க பல புத்தகங்கள் அச்சடிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. எனவே, 1942ஆம் ஆண்டு புனித ஜெயராக்கினி அச்சகம் தொடங்கப்பட்டது. 

08.12.1975 அன்று இப்பங்கின் பொன்விழாவைக் கொண்டாடிய நாளில் பங்கு ஆலயம் அர்ச்சிக்கப்பட்டது. 1979ஆம் ஆண்டு சமூகக்கூடம் இங்குக் கட்டப்பட்டது. இப்பங்கின் கல்லறைப் பகுதி பதில் சுவர்கள் கட்டப்பட்டு புதுப்பொலிவுடன் விளங்குகிறது. 1979ஆம் ஆண்டு சண்முக நகர் பகுதியில் வசிக்கும் மக்களின் நலனுக்காக தூய ஆரோக்கிய அன்னை செபக்கூடம் கட்டப்பட்டது. 13.06.1990 அன்று அன்னதான பட்டியில் சிற்றாலயம் அர்ச்சிக்கப்பட்டது. 1990ஆம் ஆண்டு செவ்வாய்பேட்டை பங்கிலிருந்து சன்னியாசிகுண்டு என்ற புதிய பங்கு உருவாக்கப்பட்டது.

இவ்வாலயம் புதுப்பிக்கப்பட்டு 21-08-2011 அன்று அர்ச்சிக்கப்பட்டது. 

பங்கில் உள்ள பக்தசபைகள்

1. மரியாயின் சேனை (ஆண்கள் & பெண்கள்)
2. வின்சென்ட் தே பால் சபை
3. இளையோர் இயக்கம்
4. பாடகற்குழு
5. பீடச்சிறார்கள்

பங்கில் உள்ள கல்வி நிறுவனங்கள்

1. ஜெயராணி கலை மற்றும் அறிவியல் கல்லூரி (மரியாயின் மாசற்ற திருஇருதய சபை அருட்சகோதரிகள் நிர்வாகம்)
2. ஜெயராணி மெட்ரிக் பள்ளி (மரியாயின் மாசற்ற திருஇருதய சபை அருட்சகோதரிகள் நிர்வாகம்)
3. பத்ரீசியார் பள்ளி (மரியாயின் மாசற்ற திருஇருதய சபை அருட்சகோதரிகள் நிர்வாகம்)
4. ஜெயராக்கினி நடுநிலைப்பள்ளி (கொன்சாகா சபை அருட்சகோதரிகள்)

இல்லங்கள் 

1. மரியாயின் மாசற்ற திருஇருதய சபை அருட்சகோதரிகள் இல்லம்
2. புனித பாத்திமா இல்லம் (கொன்சாகா அருட்சகோதரிகள்)

பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள் 
1.அருட்பணி.அப்பேதுபுவா (1796)
2.அருட்பணி.பிரிக்கோ (1837-1845)
3.அருட்பணி.போர்தேரோ (1852-1857)
4.அருட்பணி.கூய்யோன் (1857-1862)
5.அருட்பணி.தெப்போமியே கெளவுத்மரி (1862-1863)
6.அருட்பணி.ஜெரோ ஹென்றி (1863-1865)
7.அருட்பணி.பால்க்கூ ஈவ்ஸ் (1865-1869)
8.அருட்பணி.பிரிசார் (1869-1878)
9.அருட்பணி.பெர்த்தோ ஜான்மரி (1879-1888)
10.அருட்பணி.போஸ்கோ (1888-1892)
11.அருட்பணி.தூரியெர் (1893-1895)
12.அருட்பணி.சீக்முல்லர் (1895-1902)
13.அருட்பணி.புருயெர் (1902-1903)
14.அருட்பணி.ஜூர்னு (1903-1904)
15.அருட்பணி.கொல்லின் (1905-1907)
16.அருட்பணி.ஸூவென்க் (1907-1911)
17.அருட்பணி.புருயெர் (1911-1925)
18.அருட்பணி.அதிரூபநாதர் (1925-1929)
19.அருட்பணி.மிஷோத் (1929)
20.அருட்பணி.மிஸேல் (1930)
21.அருட்பணி.மெர்சியர் (1930-1939)
22.அருட்பணி.உர்மாண்ட் (1939-1957)
23.அருட்பணி.வெங்கத்தனம் (1958)
24.அருட்பணி.பீட்டர் அட்டிப்பட்டி (1959-1974)
25.அருட்பணி.A.அந்தோணிசாமி (1974-1981)
26.அருட்பணி.R.சேவியர் (1981-1990)
27.அருட்பணி.A.பால் அந்தோணி (1990-2000)
28.அருட்பணி.A.X.இருதயம் (2000-2002)
29.அருட்பணி.M.அல்போன்ஸ் (2002-2003)
30.அருட்பணி.L.மரியசூசை (2003-2006)
31.அருட்பணி.S.தியோடர் செல்வராஜ் (2006-2011)
32.அருட்பணி.S.லூர்துசாமி (2011-2016)
33.அருட்பணி.பீட்டர் பிரான்சிஸ் (2016 முதல் தற்போது வரை...)

பங்கில் பணியாற்றிய உதவிப் பங்குத்தந்தையர்கள் (1990ம் ஆண்டுமுதல்......)

1. அருட்பணி. ஸ்டேன்லி குமார்
2. அருட்பணி. D. பிரான்சிஸ் ஆசைத்தம்பி
3. அருட்பணி. D. மைக்கேல்ராஜ் செல்வம்
4. அருட்பணி. ஜோதி பெர்னாண்டோ
5. அருட்பணி. R. பிரான்சிஸ்
6. அருட்பணி. கிறிஸ்துராஜ்
7. அருட்பணி. J. விமல் தாஸ்
8. அருட்பணி. பீட்டர் ராஜ்
9. அருட்பணி. ரோஸ்லின் ராஜா 
10. அருட்பணி. அசோக் குமார்
11. அருட்பணி. ஆல்சன் ஆரோக்கியராஜ்
12. அருட்பணி. சதன்ஸ்டார்
13. அருட்பணி. ஹென்றி கிஷோர்
14. அருட்பணி. ஜெயபாலன்

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் : ஆலய வேதியர்

வரலாறு : சேலம் மறைமாவட்ட பவளவிழா புத்தகத்திலிருந்து....