372 புனித அந்தோணியார் ஆலயம், எறையூர்


புனித அந்தோணியார் ஆலயம்.

இடம் : எறையூர்

மாவட்டம் : காஞ்சிபுரம்
மறைமாவட்டம் : செங்கல்பட்டு
மறை வட்டம் : காஞ்சிபுரம்.

பங்குத்தந்தை : அருட்பணி J. பெலிக்ஸ் SDM

குடும்பங்கள் : 70
அன்பியங்கள் : 6

திருப்பலி நேரம் :

ஞாயிறு காலை : 07:30 மணிக்கு நற்கருணை ஆராதனை மற்றும் திருப்பலி.

திங்கள் முதல் வெள்ளி : மாலை 06:30 மணிக்கு திருப்பலி.

முதல் செவ்வாய் : மாலை 06:30 மணிக்கு திருப்பலி மற்றும் அந்தோணியாரின் சப்பர பவனி.

முதல் வெள்ளி : மாலை 06:30 மணிக்கு திருப்பலி மற்றும் நற்கருணை ஆராதனை.

திருவிழா : ஜுன் 13 ம் தேதியை ஒட்டிய சனி மற்றும் ஞாயிறு.

வழித்தடம் :
55A தாம்பரம் to வல்லக்கோட்டை. இறங்கும் இடம் : எறையூர்.
583 தாம்பரம் to திருப்பெரும்புதூர் இறங்கும் இடம் : வல்லக்கோட்டை.
வல்லக்கோட்டை to எறையூர் via auto 3km From Main Road.

மண்ணின் மைந்தர்கள்:
அருட்தந்தையர்கள் :
1. அருட்தந்தை சார்லஸ் ராயா
2. அருட்தந்தை ஜேம்ஸ் அமல்ராஜ் CSJ
3. அருட்தந்தை இம்மானுவேல் CSJ

அருட்சகோதரிகள்:
1. அருட்சகோதரி லில்லி புஷ்ப மலர் FBS
2. அருட்சகோதரி ஜெனிபர் SAB
3. அருட்சகோதரி கரோலின் ஆரோக்கியமேரி

வரலாறு:

சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தின் வட மாவட்டங்களில் கத்தோலிக்கத் திருச்சபையைச் சார்ந்த அருட்தந்தையரின் உதவியுடன், ஆந்திர மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் கிறிஸ்தவ மக்கள் வந்து குடியேறினர். அவ்வாறு குடியேறிய கிராமங்களில் ஒன்று தான் எறையூர்.

ஆரம்பத்தில் அங்ஙனம் எறையூரில் 20 குடும்பங்கள் வந்து குடியேறின. அப்போது ஜெர்மனியில் இருந்து வந்த துறவியர் இவ்வூருக்கு அருகில் “தெரசாபுரம்” என்று தற்போது அழைக்கப்படும் “பாதிரிமேடு” என்ற கிராமத்தில், மாணவர்கள் தங்கி பயில்வதற்கான விடுதிகள் அமைத்து கல்விச் சேவை செய்து வந்தனர்.

அத்துறவியர் மூலம் அருள்வாழ்வை கண்டடைந்த ஒரு சில தமிழ் குடும்பங்கள் இயேசு கிறிஸ்துவே மெய்யான தேவன் என்பதை உணர்ந்து கிறிஸ்தவ மறையில் இணைந்ததாக கூறப்படுகிறது.

1890 ஆம் ஆண்டு வரை இறை விசுவாசத்தில் மிகுந்த நாட்டம் கொண்ட இவ்வூர் இறை மக்கள், ஞாயிறு திருப்பலியில் பங்கேற்க அப்போதைய பங்காக இருந்த கீழச்சேரி ஆலயத்திற்கு 30 கி.மீ தூரம் நடந்தே சென்று வந்தனர்.

அப்போதுதான் ஞானம்மா தன் குழந்தைகளுடன் சென்னைக்கு வந்து சேர நேர்ந்தது. மொழி புரியாததன் காரணமாக அவரது உறவினர்கள் வசித்து வந்த எறையூர் கிராமத்தை வந்தடைந்தார். அங்கு எறையூர் மக்கள் அன்பும், ஆதரவும் அளித்து அவருக்கு அறுசுவை உணவையும் வழங்கி வந்தனர்.

அறுசுவை உணவை உண்டு வந்த அம்மக்கள் தங்கள் ஆன்ம தாகம் தீர்க்கும் ஆன்மீக உணவை உண்ண முடியவில்லையே என்று ஏங்கினர். அதனால் கீழச்சேரி ஆலயத்திற்கு நடந்து சென்று திருவழிபாடுகளில் பங்கெடுத்துக் கொண்டனர். அம்மக்களுடன் நடை பயணத்தில் ஞானம்மாவும் கலந்து கொள்வார்.

திருப்பலி நிறைவுறும் போது குருவானவர் வழங்கும் ஆசீர்வாதத்தினை முந்தானையில் முடிந்து வைத்துக் கொள்வார். வீட்டிற்கு வந்ததும் அவரது உறவினர்களை அழைத்து அவர்களை முழந்தாட்படியிடச் செய்து அந்த ஆசீர்வாதங்களை அவர்களுக்கு வழங்குவார். இது அவர் இறைவன் மீது கொண்ட அளவற்ற அன்பின் வெளிப்பாடும் திருப்பலியில் பலியாகும் இறைவனுக்கு அவர் எவ்வளவு முன்னுரிமை அளித்தார் என்பதையும் எடுத்துக்காட்டுகிறது.

தாட்டிபத்திரி ஞானம்மாள் இறைவன் மீது கொண்டிருந்த எல்லையில்லா அன்பின் வெளிப்பாடாக புனித அன்னாள் சபை நிறுவப்பட்டது. இச்சபை நிறுவப்படுவதற்கு எறையூர் கிராமம் தான் அடித்தளமிட்டது என்கிற பெருமையை பெற்று நிற்கிறது எறையூர்.

சிற்றாலயமும் அதன் வளர்ச்சியும் :

1890 ஆம் ஆண்டு எறையூர் பகுதியில் வாழ்ந்த இறைமக்கள் தங்கள் பகுதியிலேயே இறைவனுக்கு என்று ஆலயம் ஒன்றை அமைக்க வேண்டும் என்று விரும்பி சிற்றாலயம் ஒன்றினை உருவாக்கி, அதில் வழிபட்டு வந்தனர். இச்சிற்றாலயம் தற்போது எறையூரில் அமைந்திருக்கின்ற ஆலயத்தின் தெற்கு பக்கத்தில் அமைந்திருந்தது. 1891 ஆம் ஆண்டுக்குப் பின் எறையூர் கீழச்சேரி பங்கிலிருந்து அருகில் இருக்கும் பால்நெல்லூர் பங்கின் கிளைப் பங்காக சேர்க்கப்பட்டது. அப்போது பங்குத் தந்தையர்களாக இருந்த அருட்தந்தையர்கள் கிறிஸ்தவ மக்களிடையே இறை பக்தியை அதிகம் வளர்த்ததுடன் பங்கு மக்களுக்கென்று மிகப் பெரிய ஆன்மீக அடித்தளத்தையும் அமைத்துக் கொடுத்தனர்.

1964 ஆம் ஆண்டு வரை மக்கள் சிற்றாலயத்தில் தான் வழிபாடு நடத்தி வந்தனர். அப்போது பால்நெல்லூர் பங்குத்தந்தையாக இருந்த அருட்தந்தை ஜேக்கப் எறையூர் மக்களின் விசுவாசம் மற்றும் ஆன்மீக ஈடுபாடுகளை உணர்ந்து அம்மக்கள் சிறந்த முறையில் வழிபாடுகளில் பங்கெடுப்பதற்கு வசதியாக, விசாலமான ஆலயம் ஒன்று கட்ட வேண்டும் என்று முடிவு செய்தார். பின் அதற்கான முயற்சி மேற்கொண்டார்.

அவரது முயற்சியின் பயனாக இப்போதுள்ள அழகிய ஆலயம் கட்டி முடிக்கப்பட்டு 1965 ஆம் ஆண்டு மார்ச் 31-ம் நாள் சென்னை மயிலை பேராயர் மேதகு டாக்டர் லூயிஸ் மத்தியாஸ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டு, பால்நெல்லூர் பங்கின் கிளைப் பங்காகவே தொடர்ந்து வந்தது.

1972 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அப்போது சென்னை மயிலை உயர்மறை மாவட்டத்தின் பேராயராக இருந்த மேதகு டாக்டர் அருளப்பா அவர்களால் எறையூர், பால்நெல்லூர் பங்கிலிருந்து பிரிக்கப்பட்டு தனிப் பங்காக உதயமானது. கோவளத்தில் உதவி பங்குத்தந்தையாக இருந்த அருட்தந்தை G.M. ஜோசப் முதல் பங்குத் தந்தையாக பொறுப்பேற்றார்.

எறையூரின் பங்குத்தந்தையர்கள் :

அருட்தந்தை G.M. ஜோசப் ( 1971 to 1979) :

அருட்தந்தை G.M. ஜோசப் முதிர்ந்த அனுபவமும், நிறைந்த ஆற்றலும் பங்கு மக்களை ஆன்மீகத்தில் திறம்பட வழி நடத்தும் பக்குவமும் குரு மடத்திலேயே பெற்றிருந்தார்.

அதனால், அவர் பங்கு மக்களிடம் அன்புடனும், பாசத்துடனும் பழகினார். சாதி, மத வேறுபாடின்றி பங்கு மக்கள் அனைவரும் பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைவதற்கு வழிவகை செய்தார். எறையூரில் பள்ளிக் கட்டடம் இல்லாததை உணர்ந்து சென்னை வட்ட மேசை எண் -1 என்ற அமைப்பின் மூலம் பள்ளி கட்டடத்தை கட்டுவித்தார். ஆன்மீக செயல்பாடுகளில் பங்கு மக்களை மிகுந்த கண்டிப்புடன் வழி நடத்தினார். அவரது பணிக்காலத்தில் சுமார் 10 குடும்பங்கள் கத்தோலிக்கத் திருச்சபையில் இணைந்தன.

அவர் அங்கு பணியாற்றிய காலகட்டத்தில் பங்குத்தந்தை தங்கும் இல்லம் இல்லை. ஆலயத்திலுள்ள பின் அறையில்தான் தங்கியிருந்தார். அவரது எளிமையான வாழ்வியல் முறைகளை கண்டுணர்ந்த பங்கு மக்கள் சிறியோர் முதல் பெரியோர் வரை தங்களது மகத்தான பங்களிப்பை வழங்கி அவருக்கு ஒரு தங்கும் இல்லத்தை அமைத்துக் கொடுத்தனர்.

மேலும், இவரது பணிக்காலத்தில் படப்பை, ஆரம்பாக்கம், முடிச்சூர், கொளப்பாக்கம், மணிமங்கலம், வண்டலூரை அடுத்த ஓட்டேரி வரை பல கிளைப் பங்குகள் பரவி இருந்தன.

இறை மக்கள் நடுவே இறை அழைத்தலை ஊக்குவித்தார். இவருடைய தூண்டுதல் காரணமாக ஆன்மீகத்தில் மலர்ந்தவர் அருட்தந்தை சார்லஸ் ராயா.

எறையூர் பங்கில் அதிக ஆண்டுகள் பணிபுரிந்தவர் என்கிற பெருமையுடன் பங்கு மக்களுக்கு எண்ணற்ற நன்மைகளை செய்தவர் என்கிற நிறைவுடன் பங்கு மக்களின் உள்ளங்களில் நீங்கா இடம் பெற்ற அவர் 1980 ஆம் ஆண்டு மே மாதம் பங்கு மக்களிடமிருந்து கண்ணீருடன் விடை பெற்றுக் கொண்ட அவர் மானாம்பதி கண்டிகை -க்கு மாற்றலாகிச் சென்றார். பின் பல பங்குகளில் அல்லும், பகலும் அயராமல் ஆன்மீகப் பணிகள் செய்து கடின உழைப்பு காரணமாக உடல் நல பாதிப்புக்கு உள்ளானார். அதனால், சாந்தோம் வியான்னி ஓய்வு இல்லத்தில் தங்கி இருந்த அவர் 2012 ஆம் ஆண்டு ஜுன் 12ம் நாள் காலமானார்.

அருட்தந்தை P. செபாஸ்டியன் ( 1980 to 1981 ) :

இவர் தாடி சாமியார் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டார். ஓராண்டு காலமே பங்குத்தந்தையாக இருந்த போதிலும் அவருடைய காலகட்டத்தில் எறையூர் மக்களின் குடி நீர் ஆதாரமாக விளங்கிய குளத்தினை செப்பனிட்டு குளக்கரையை பலப்படுத்தினார். மிகக் குறுகிய காலத்திலேயே இறை மக்களின் இதயங்களில் இடம் பிடித்த அவர் 2007 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22 ஆம் நாள் காலமானார்.

அருட்தந்தை C. சின்னப்பா ( 1982 to 1991 ) :

1981 ஆம் ஆண்டு கீழச்சேரியில் உதவி பங்குத் தந்தையாக இருந்த அருட்தந்தை C. சின்னப்பா இப்பங்கின் மூன்றாவது பங்குத் தந்தையானார். இவரது பணிக்காலத்தில் பழுதடைந்திருந்த ஆலய தரையானது சீரமைக்கப்பட்டது. 1985 ஆம் ஆண்டு நீரில் அடித்துச் செல்லப்பட்ட குடிநீர் குழாய்களை மீண்டும் செப்பனிட்டு மக்களுக்கு குடிநீர் கிடைக்கச் செய்தார். சிறுவர் சிறுமியரை அடைமொழியால் அழைத்து மகிழ்விப்பதும், நகைச்சுவையுடன் பேசுவதும் இவரது தனிச்சிறப்பாகும். 1988 ஆம் ஆண்டு மாற்றலாகிச் சென்றார்.

அருட்தந்தை ராஜா விக்டோரியா ( 1989 to 1995 ) :

1989 ஆம் ஆண்டு அருட்தந்தை ராஜா விக்டோரியா நான்காவது பங்குத் தந்தையாக பொறுப்பேற்றார். பங்கிலுள்ள ஏழை, எளிய மக்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுத்தார். சிறு குழந்தைகளுக்கு நடன போட்டிகள் நடத்தி அவர்களுக்கு பரிசுகள் வழங்கி ஊக்குவிப்பார். 1996 ஆம் ஆண்டு மாற்றலாகிச் சென்றார்.

அருட்தந்தை . அமல்ராஜ் ( 1996 to 1997 ) :

ஏழை, எளிய மக்கள் மீது இரக்கம் கொண்ட அவர் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது இலவசமாக ஆடைகள் கொடுத்து மகிழ்வித்தார். 1998 ஆம் ஆண்டு மாற்றலாகிச் சென்றார்.

அதுவரை எறையூர் தனிப் பங்காக சிறப்புடன் செயலாற்றி வந்த நிலையில் 1997 ஆம் ஆண்டு போக்குவரத்து மற்றும் சில அடிப்படை தேவைகள் காரணமாக கிளைப் பங்காக இருந்த படப்பைக்கு எறையூர் மாற்றப்பட்டது. காலப்போக்கில் படப்பை தனி பங்காகச் செயல்பட துவங்கியது.

அருட்தந்தை சார்லஸ் கென்னடி ( 1998 to 2002 )

1998 ஆம் ஆண்டு ஜுன் மாதம் எறையூரிலிருந்து பங்கு படப்பைக்கு மாற்றப்பட்டதும் பழுதடைந்து மோசமான நிலையில் இருந்த ஆலயத்தினை செப்பனிட பேராயரிடமிருந்து ரூ. 90000 பெற்றுத் தந்தார். ஏழை எளிய மக்கள் மீது இரக்கம் கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். சிறுவர் சிறுமியருக்கு மறைக்கல்வி போதிப்பதன் அவசியத்தை உணர்ந்து பூந்தமல்லி குருமடத்திலிருந்து அருட்சகோதரர்களை வரவழைத்து ஆன்மீக அறநெறிகளை கற்றுக் கொடுத்தார்.

அருட்தந்தை G.R. பவுல் ஜான் ( 2003 to 2008)

2002 ஆம் ஆண்டு 7வது பங்குத் தந்தையாக அருட்தந்தை பவுல் ஜான் பொறுப்பேற்றார். அவர் படப்பையிலிருந்து வந்து எறையூரில் திருப்பலி நிறைவேற்றி வந்தார். இவரது பணிக்காலத்தில் ஊரின் வடக்கு பகுதியில் கெபி கட்டப்பட்டது. 2008 ஆம் ஆண்டு பெருங்குடி பங்கிற்கு மாற்றலாகிச் சென்றார்.

அருட்தந்தை ஜான் கான்சஸ் CMF ( 2009 to 2011 ) :

2009 ஆம் ஆண்டு கிளாரட் சபையுடன் ஒப்படைக்கப்பட்ட எறையூரின் 8வது பங்குத்தந்தையாக பொறுப்பேற்றவர் அருட்தந்தை ஜான் கான்சஸ். இவர் அப்பங்கின் கிளாரட் சபையின் முதல் பங்குதந்தை என்னும் சிறப்பையும் பெற்றார். ஆன்மீக செயல்பாடுகளில் மிகுந்த அக்கறையுடன் பங்கு மக்களை வழிநடத்திய இவர் 2011 ஆம் ஆண்டு ஜுன் மாதம் மாற்றலாகிச் சென்றார்.

அருட்தந்தை அந்தோணிசாமி CMF (2011 to 2014) :

இவரது பணிக்காலத்தில் பொது மக்களின் உதவியாலும், வெளியூர் வாழ் எறையூர் இறை மக்களின் உதவியாலும் ஆலயத்துக்கு சுற்றுச் சுவர் கட்டப்பட்டது. இதன் நீளம் சுமார் 2000 அடிகள் ஆகும். ஆலயத்தைச் சுற்றிலும் அழகான மரங்களை நட்டு அற்புதமான தோட்டத்தை உருவாக்கினார். தண்ணீர் தேவைக்கு ஆழ்துளைக் கிணறு ஒன்றை உருவாக்கினார். ஆலயத்தின் பின்புறம் கழிப்பிடங்களை அமைத்த அவர் பங்குத்தந்தை தங்குவதற்கென ஓர் இல்லத்தையும் அமைத்தார். கொடி மரத்திற்கு அழகிய அடித்தளத்தையும் அமைத்தார். ஆன்மீக செயல்பாடுகளிலும் அதிகம் அக்கறை காட்டினார். சிறப்பாக அமாவாசை செபம் நடத்தினர்.

அருட்தந்தை G.லூர்து ஜெயராஜ் CMF( 2014 to 2017 ) :

2015 ஆம் ஆண்டு இவரது வழிகாட்டுதலின்படி எறையூர் ஆலயத்தின் பொன்விழா வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டது. அவரது மேற்பார்வையில் பொன்விழா மலரும் சிறப்பாக தயாரிக்கப்பட்டது. மற்றும் பொன்விழாவின் நினைவாக ஆலயத்தின் முகப்பில் நினைவு வளைவும், கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்க்கு மேடையும், 50 அடி உயரம் கொண்ட புதிய கொடி மரம் நிறுவப்பட்டது. ஆலயத்தின் உள் பகுதி மற்றும் வெளிப்புறம் புனரமைக்கப்பட்டது. இவருடைய காலத்தில் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாக 50 ம் ஆண்டின் நினைவாக புனித அந்தோணியாரின் திருப்பண்டமானது இப் பங்கிற்கு வந்தடைந்தது. புனித அந்தோணியாரின் இறந்த இடத்திலிருந்து அவரது உடலிருந்து எடுக்கப்பட்டு இந்த திருப்பண்டமானது இறைமக்களின் வணக்கத்திற்காக இங்கே வைக்கப்பட்டுள்ளது.

அருட்தந்தை : P. சிங்கராயர் (2017 to 2019 ) :

இவர் ஆன்மீக காரியங்களில் சிறப்பாக செயல்பட்டு மக்களை அன்புடன் வழி நடத்தினார். இவருடைய காலத்தில் ஆலயத்தின் முகப்பு மற்றும் ஆலயத்தை சுற்றி இறைமக்கள் நடப்பதற்கு சிமென்ட் கற்கள் ( PAVEMENT WORK AROUND THE CHURCH ) அமைக்கப்பட்டது.

அருட்தந்தை பெலிக்ஸ் (2019 முதல் தற்போது...) :

2019 ம் ஆண்டு ஜூன் மாதம் 12 வது பங்குத்தந்தையாக பொறுப்பேற்றார். பங்கு மக்களுக்கு பக்தி, நற்பண்புகள், சிறுவர்களின் கல்வி மற்றும் ஒழுக்க காரியங்களில் கலனம் செலுத்தி பங்கின் வளர்ச்சிக்காக உழைத்துக்கொண்டு இருக்கிறார். பங்கின் வளர்ச்சிக்காக இவர் ஆலய கலை அரங்கம் முன் SHED அமைப்பதற்கும், ஆலய உள் பகுதியில் புதிய தோற்றம் அளிப்பதற்கும், ஆலய வளாகத்தில் புதியதாக கெபி அமைப்பதற்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

புனித அந்தோணியாரின் திருப்பண்டம் பங்கின் 50 ம் ஆண்டின் நிறைவாக புனித அந்தோணியாரின் பக்தியை வளர்ப்பதற்கு அப்போதைய பங்குத்தந்தையான அருட்தந்தை G. லூர்து ஜெயராஜ் CMF அவர்கள் மேற்கொண்ட முயற்ச்சியால் புனித அந்தோணியாரின் இறந்த இடத்திலிருந்து அதாவது பதுவை புனித அந்தோணியார் பழைய இத்தாலி மாகாணம் அருட்தந்தை ஜியோவானி வால்ட்டன், மறைமாநில அதிபர் அவர்களால் அதிகாரப்பூர்வமாக முத்திரையிடப்பட்டு இங்கு கொண்டு வரப்பட்டது. அதை இப்போதைய செங்கல்பட்டு மறைமாவட்ட ஆயர் மேதகு டாக்டர் A. நீதிநாதன் அவர்கள் திருக்கரங்களால் 2015 ம் ஆண்டு ஜூன் மாதம் 13 தேதி அன்று அர்ச்சிக்கப்பட்டு இறைமக்களின் வணக்கத்திற்காக வைக்கப்பட்டுள்ளது.

தொடர்புக்கு :
புனித அந்தோணியார் ஆலயம், மாதா கோவில் தெரு, ஏறையூர் கிராமம், மாத்தூர் அஞ்சல், திருப்பெரும்புதூர் தாலூக்கா, காஞ்சிபுரம் மாவட்டம் -602105.