564 புனித பவுல் ஆலயம், இளநகர்

    

புனித பவுல் ஆலயம்

இடம் : இளநகர், இளநகர் அஞ்சல், எலச்சிப்பாளையம் தாலுகா, 636212

மாவட்டம் : நாமக்கல்

மறைமாவட்டம் : சேலம்

மறைவட்டம் : நாமக்கல்

நிலை : பங்குத்தளம்

கிளைப் பங்குகள் : 

1. புனித ஆரோக்கிய அன்னை ஆலயம், அணியார்.     

2. புனித மகதலா மரியாள் ஆலயம், கோதூர்.

பங்குத்தந்தை : அருட்பணி. செல்வம் பிரான்சிஸ் சேவியர்

குடும்பங்கள் : 15 (கிளைப்பங்குகள் சேர்த்து 54)

ஞாயிறு திருப்பலி : காலை 09.00 மணிக்கு 

திங்கள் முதல் சனி வரை திருப்பலி : காலை 06.00 மணிக்கு.

மாதத்தின் முதல் வெள்ளி : மாலை 06.30 மணிக்கு சிறப்பு ஆராதனை, திருப்பலி.

திருவிழா : ஜூன் மாதம் 29 ம் தேதி.

வழித்தடம் : நாமக்கலில் இருந்து ஈரோடு செல்லும் சாலையில் இளநகர் ஆலயம் அமைந்துள்ளது. 

வரலாறு :

நாமக்கல் மாவட்டத்தில் இளநகர் என்னும்  ஊரில் அமைந்துள்ள புனித பவுல் ஆலய வரலாற்றைக் காண்போம். 

அருட்பணி. ஹென்றி புரூனியர் அவர்கள் 26.06.1920 அன்று முதல் கும்பகோணம் மறைமாவட்டத்தில் பணிசெய்யத் தொடங்கினார். பிறகு, 16.12.1926 முதல் நாமக்கல் பகுதியில் தங்கி இறைப்பணி செய்து வந்தார். இரவு பகல் பாராது சுற்றிலுமுள்ள கிராமங்களுக்குச் சென்று நற்செய்தி அறிவித்து வந்தார். அவர் நற்செய்தி அறிவித்த கிராமங்களில் இலுப்பிலி கிராமமும் அடங்கும். முதல்முறையாக இலுப்பிலி கிராமத்தில் 21.08.1929 அன்று திரு. சவரிமுத்து அவர்கள் திருமுழுக்குப் பெற்றார். நாட்கள் செல்லச் செல்ல அருட்பணி. உர்மாண்ட் அவர்களின் அயராத மறைப்பரப்பின் பயனால் இறைமக்களின் எண்ணிக்கை அதிகரித்தது. எனவே, 1939 -ம் ஆண்டு புனித கொலேத் அவர்களை பாதுகாவலராகக் கொண்டு இலுப்பிலி பங்கு உருவாக்கப்பட்டது. இலுப்பிலியில் ஆலயத்தையும் பங்குத்தந்தை இல்லத்தையும் அருட்பணி. ரிக்கோட்டியே அவர்கள் கட்டினார்.

அருட்பணி. குருவிலா தாமஸ் (1977-1984) அவர்களின்

பணிக்காலத்தில் கிளைப்பங்கான அணியாரில் கைத்தறி நெசவுக்கூடம் கட்டப்பட்டு, ஏழை மக்களின் நலனுக்காக செயல்பட்டது. மேலும், உணவுத்திட்டத்தின்கீழ் ஏழைமக்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டது. மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த அருட்பணி. குருவிலா தாமஸ் அவர்கள் அருட்பணிகளையும், சமுதாயப் பணிகளையும் செய்து வந்தார்.

காலத்தின் தேவைக்கேற்பவும், போக்குவரத்து வசதியைக் கருதியும் இளநகர் பகுதியில் பங்கு ஆலயம், தூய பவுல் அடிகளாரைப் பாதுகாவலராகக் கொண்டு கட்டப்பட்டது. அதுமுதல் இளநகர் பங்கின் கிளைப்பங்காக இலுப்பிலி மாறியது. 11.02.1991 அன்று  பங்குத்தந்தை இல்லம் புதிதாக கட்டப்பட்டது. 

28.04.1993 அன்று புதிய ஆலயம் கட்டப்பட்டு அர்ச்சிக்கப்பட்டது.

அருட்பணி. C.மைக்கேல் அவர்கள் பணிக்காலத்தில் பெல்ஜியம் மாணவர்களால் 10 வீடுகள் கட்டித்தரப்பட்டன. 

அருட்பணி. மரிய ஜோசப் (1994-1996) அவர்களின் பணிக்காலத்தில் பெல்ஜியம் நாட்டு உதவியுடன், ஏழைமக்களுக்கு வீடுகள் கட்டித் தரப்பட்டன.

அருட்பணி. மாசில்லாமணி (1998-2003) அவர்களின் பணிக்காலத்தில் கிளைப்பங்கான அணியார் மற்றும் இலுப்பிலியில் ஆலயங்களை கட்டியெழுப்பினார். ஏழைமக்களுக்கு வீடுகள் கட்டிதரப்பட்டன. மேலும், பல சமுதாயப் பணிகளையும் செய்துவந்தார்.

அருட்பணி. R. பிரான்சிஸ் அவர்களின் பணிக்காலத்தில் நிறைய செபக்கூட்டங்களை நடத்தி மக்களை ஆன்மீகப் பாதையில் நடத்திச் சென்றார்.

அருட்பணி. அமல்ராஜ் அவர்களின் பணிக்காலத்தில் அன்பியங்கள் மூலமாக மக்களை ஆன்மீகப் பாதையில் நடத்தி சென்றார்.

அருட்பணி. அருள் சுந்தர் பணிக்காலத்தில் ஆலய பீடம் புதுப்பிக்கப்பட்டது. 

தொடர்ந்து அருள்பணி. அருள் சுந்தர் மற்றும் அவருக்கு உறுதுணையாக இருந்த திருத்தொண்டர் ஆசீர்வாதம் அவர்களும் இணைந்து, கிளைப் பங்கான எலச்சிப்பாளையம் ஆலயத்தை புதுப்பித்து, அப்போதைய சேலம் மறைமாவட்ட ஆயர் மேதகு செ. சிங்கராயன் அவர்களால் புனிதப் படுத்தப் பட்டது.

2007-2008 ஆண்டை திருச்சபை புனித பவுல் ஆண்டாக அறிவித்து சிறப்பு செய்தது. ஆகவே சேலம் மறைமாவட்டத்தில் உள்ள ஒரே புனித பவுல் ஆலயமாகிய இளநகர் ஆலயத்தில் இவ்விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

அருட்பணி. பிரான்சிஸ் சேவியர் பணிக்காலத்தில், கிளைப் பங்கான எலச்சிப்பாளையம் தனிப்பங்காக உயர்த்தப்பட்டு, முதல் பங்குத்தந்தையாக அருட்பணி. விக்டர் சுந்தர் ராஜ் அவர்கள் பணிப் பொறுப்பேற்றார்.

இன்றைய பங்குத்தந்தை அருட்பணி. செல்வம் பிரான்சிஸ் சேவியர் அவர்களின் பணிக்காலத்தில் ஆலயம், ஆலய திருத்தூயகம், ஆலய வளாகம், புனித ஆரோக்கிய அன்னை கெபி ஆகியவைகள் புதுப்பிக்கப்பட்டு மேதகு ஆயர் செ. சிங்கராயன் அவர்களால் 24.08.2019 அர்ச்சிக்கப்பட்டது. தொடர்ந்து கிளைப்பங்கான கோதூரில் ஆலயமும், பலிபீடமும் புதுப்பிக்கப்பட்டு அர்ச்சிக்கப்பட்டது. மேலும், கல்விப்பணிகளிலும் சமுதாயப்பணிகளிலும், முழுமூச்சாக ஈடுபட்டு இளநகர் பங்கினை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்கிறார். 

கொன்சாகா அருள்சகோதரிகள் இல்லம்:

கொன்சாகா சபை அருள்சகோதரிகள் தொடக்க காலத்தில் இலுப்பிலி பகுதியில் வாழ்ந்த மக்களுக்கு உணவு பல உதவிகளையும் செய்து வந்தார்கள். 

இளநகரில் புனித தெரசாள் சிறுவர் சிறுமியர் இல்லம் அமைத்து, அவர்களை பராமரித்து வருகின்றனர். மேலும் புனித தெரசாள் RC நடுநிலைப் பள்ளிக்கூடத்தை நிறுவி, குழந்தைகளுக்கு தரமான கல்வி வழங்கி வருகின்றனர்.

இவ்வாறாக இப்பங்கில் கொன்சாகா சபை அருட்சகோதரிகள் பங்குத்தந்தையுடன் இணைந்து ஆன்மீகப்பணி, சமுதாயப்பணி, கல்விப்பணி ஆகிய பணிகளில் இறைவனின் மீட்பை எடுத்துரைக்கும் வகையில் செய்து வருகிறார்கள்.

பங்கில் உள்ள இல்லம் : புனித தெரசாள் சிறுவர் சிறுமியர் இல்லம்

பள்ளிக்கூடம் : 

புனித தெரசாள் R.C நடுநிலைப்பள்ளி.

பங்கில் பணியாற்றிய பங்குப்பணியாளர்கள் : 

1. அருட்பணி. J. L. உர்மாண்ட் (முதல் பங்குத்தந்தை)

2. அருட்பணி. J.கிராஸ்

3. அருட்பணி. P. வெங்கத்தனம்

4. அருட்பணி. A. சாவவெலி

5. அருட்பணி. மத்தேயு புலிக்கல்

6. அருட்பணி. பால் தாலதட்

7. அருட்பணி. T. C. ஜோசப்

8. அருட்பணி. A. வெங்கத்தனம்

9. அருட்பணி. ஐசக் (இளையவர்)

10. அருட்பணி. அந்தோணிசாமி

11. அருட்பணி. T. C. ஜோசப்

12. அருட்பணி. V. S. புஷ்பநாதர்

13. அருட்பணி. மத்தேயு கடவில்

14. அருட்பணி. குழந்தைசாமி

15. அருட்பணி. A. L. இருதயம் (1948-1950)

16. அருட்பணி. C. கெங்கனல் (1950-1952)

17. அருட்பணி. T. C. தாமஸ் (1952-1956)

18. அருட்பணி. இக்னேஷியஸ் (1960-1961)

19. அருட்பணி. N. தெக்கடம் (1961-1968)

20. அருட்பணி. I. செல்வரத்தினம் (1968-1969)

21. அருட்பணி. P. A. சக்கரியாஸ் (1969-1973)

22. அருட்பணி. C. S. அந்தோணிசாமி (1973-1977)

23. அருட்பணி. குருவிலா தாமஸ் (1977-1984)

24. அருட்பணி. சவரியப்பன் (1984-1986)

25. அருட்பணி. C. மைக்கேல் (1986-1988)

26. அருட்பணி. S. சவரிமுத்து (1988-1993)

27. அருட்பணி. மைக்கேல்ராஜ் (1993-1994)

28.அருட்பணி. S. மரிய ஜோசப் (1994-1996)

29. அருட்பணி. இராஜமாணிக்கம் (1996-1998)

30. அருட்பணி. R. மாசில்லாமணி (1998-2003)

31. அருட்பணி. T. மைக்கேல்ராஜ் செல்வம் (2003-2004)

32. அருட்பணி. R. பிரான்சிஸ் (2004-2006)

33. அருட்பணி. S. அமல்ராஜ் (2006-2008)

34. அருட்பணி. அருள் சுந்தர் (2008-2011)

35. அருட்பணி. பிரான்சிஸ் சேவியர் (2011-2016)

36. அருட்பணி. செல்வம் பிரான்சிஸ் சேவியர் (2016 முதல் தற்போது வரை...)

தகவல்கள் : பங்குத்தந்தை அருள்பணி. செல்வம் பிரான்சிஸ் சேவியர் அவர்கள்.

தகவல் சேகரிப்பு மற்றும் புகைப்படங்கள் :SPB காலனி பங்கின் பீடச்சிறுவன்.