356 புனித மிக்கேல் அதிதூதர் கதீட்ரல் பேராலயம், கோவை


புனித மிக்கேல் அதிதூதர் கதீட்ரல் பேராலயம்

இடம் : கோவை
மாவட்டம் : கோவை
மறை மாவட்டம் : கோவை
மறை வட்டம் : கோவை

நிலை : கதீட்ரல்

கிளைப் பங்குகள் :
1. புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயம், NH Road
2. புனித மார்ட்டின் டி போரஸ் ஆலயம், ஆத்துப்பாலம்

பங்குத்தந்தை : அருட்பணி தனசேகர்
இணை பங்குத்தந்தை : அருட்பணி ஷிஜூ

குடும்பங்கள் : 700
அன்பியங்கள் : 31

ஞாயிறு திருப்பலி : காலை 05.15 மணி, காலை 06.30 மணி, காலை 08.00 மணி மற்றும் மாலை 05.30 மணி.

வார நாட்களில் திருப்பலி : காலை 06.15 மணி மற்றும் மாலை 06.30 மணி.

திருவிழா : செப்டம்பர் 29 -ஆம் தேதி.

கதீட்ரல் பேராலய வரலாறு :

"உலகெங்கும் சென்று, படைப்பிற்கெல்லாம் நற்செய்தியை அறிவியுங்கள்" என்னும் இறை வார்த்தைக்கு உருக்கொடுத்தோர் பலர். முதல் நூற்றாண்டிலேயே திருத்தூதர் தோமையார் நம் நாட்டில் இப்பணியினை துவக்கி வைத்தார். தொடர்ந்து பல இறையடியார்கள் இப்பணியைத் தொடர்ந்தனர். குறிப்பாக புனித அருளானந்தர், வீரமாமுனிவர் மற்றும் புனித சவேரியார் ஆகியோர் இந்தியாவின் பல பகுதிகளிலும் பயணித்து, தங்களது வார்த்தையாலும், வாழ்வாலும் கிறிஸ்தவ விசுவாசத்தை இங்கு விதைத்தனர்.

ஆரம்ப காலத்தில் இவர்களில் சிலர் தங்களது இன்னுயிரையும் கூட ஈந்து, கிறிஸ்தவம் செழித்து வளர உரமிட்டனர். இதனால் எண்ணற்ற மக்கள் கிறிஸ்தவ விசுவாசத்தை ஏற்றுக் கொண்டனர். இவ்வாறு ஆங்காங்கே சிறுசிறு குழுக்களாக வாழ்ந்து வந்த கிறிஸ்தவர்களின் ஆன்மீகத் தேவைகளை நிறைவு செய்ய பல மறை மாவட்டங்கள் தோன்றலாயின.

இந்த காலகட்டத்தில் குறிப்பாக கி.பி 2 முதல் கி.பி 5 -ம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் இன்றைய கோவை, சேலம் மற்றும் திருச்சிராப்பள்ளியில் ஒரு பகுதியையும் இணைத்து 'கோயி' எனும் இனத்தினர் கொங்கு தேசத்தை உருவாக்கினர். தங்கள் புதிய தலைநகரமாக 'கோயர்களின் புதுநகரம்' எனும் கோயம்பத்தூரையும் நிர்மாணித்தனர்.

இந்தப் பகுதியில் வாழ்ந்த கிறிஸ்தவர்களை ஒருங்கிணைத்து ஆன்மீகப் பணியாற்ற தாய்த் திருச்சபையால் கோவை மறை மாவட்டம் உருவாக்கப்பட்டது. இதன் தாய்க்கோவிலாக கோயமுத்தூரில் தூய மிக்கேல் அதிதூதர் பேராலயம் கட்டப்பட்டது.

நீண்ட நெடிய ஆழமான இதன் வரலாற்றை மூன்று பகுதிகளாக பிரிக்கலாம்.

அவை :
1. இயேசு சபையினரின் பணிக்காலம்.
2. பிரெஞ்சு வேதபோதக சபையின் பணிக்காலம்.
3. இந்திய ஆயர்களது பணிக்காலம்.

இயேசு சபையினர் பணிக்காலம்:

இயேசு சபையினரின் தொன்மையான வேதபோதகப் பணித்தள மையங்களில் ஒன்று மதுரை மிஷன். இந்த பணித்தளம் கோவை தொடங்கி மைசூர் வரையிலான இந்தியாவின் கிழக்கு தீபகற்பம் முழுவதும் விரிந்திருந்தது.

1606 -ம் ஆண்டு போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த இயேசுசபை குரு இராபர்ட் டி நொபிலி இந்த பணித்தளத்தை ஆரம்பித்தார். 1644 இல் மதுரை, திருச்சி மற்றும் சத்தியமங்கலம் பணித்தளங்கள் உருவாயின.

இங்கு பணியாற்றிய வேத போதகர்களில் புனித அருளானந்தர் மற்றும் அருட்தந்தை பெஸ்கி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களது அயராத மறைப்பரப்பு பணியினால் ஏராளமான கிறிஸ்தவர்கள் உருவாயினர்.

இந்த காலகட்டத்தில் சத்தியமங்கலத்தை சுற்றி 23 ஆலயங்கள் கட்டப்பட்டன. இவர்களுக்காக பணியாற்றியவர்களில் அருட்பணி ஆர்க்கோலினி குறிப்பிடத்தக்கவர் ஆவார்.

கி.பி 16 மற்றும் 17 -ஆம் நூற்றாண்டுகளிலேயே கோவையும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளும் மதுரை மிஷனோடு இணைந்திருந்தன.

1650 -ஆம் ஆண்டிலேயே இன்று NH road என்றழைக்கப்படும் மட்டக்காரத் தெருவில் புனித சவேரியார் சிற்றாலயம் கட்டப்பட்டிருந்தது. 1676 -இல் கருமத்தாம்பட்டியில் தங்கிப் பணியாற்றிய இயேசு சபை குரு கார்ரியோ, கோவைப்பகுதி கிறிஸ்தவர்களின் ஆன்மீகத் தேவைகளை நிறைவேற்றி வந்தார். இவ்வாறு இயேசு சபையைச் சார்ந்த அருட்பணியாளர்கள் 1773 -ஆம் ஆண்டு வரை இப்பகுதியில் வேதபோதகப் பணியாற்றி வந்தனர்.

பாரிஸ் வேதபோதகச் சபையினர் பணிக்காலம் :

கி.பி 1650 களில் உருவான பாரிஸ் வேத போதகச் சபையினர் (MEP) தங்களது முதல் பயணமாக ஆசியா மற்றும் வட அமெரிக்கவிற்கு வந்தனர். இந்தியாவில் பாண்டிச்சேரியை மையமாகக் கொண்டு பணித்தளத்தை ஏற்படுத்தினர். கி.பி 1775 -இல் கோயமுத்தூர் பகுதியில் பணியினை விரிவு படுத்தினர். இவர்களது பணியின் நோக்கம் நற்செய்தியை அறிவிப்பது மற்றும் சுதேசி குருக்களை உருவாக்குவது. இதன்படி 1772 -இல் புதுவை குருமடத்தில் முதல் இந்திய குருக்களாக அருட்பணி தோமாஸ் மற்றும் பிலிப்பு இருவரும் குருப்பட்டம் பெற்றனர்.

இந்த காலகட்டத்தில் கோவை பகுதியில் வாழ்ந்த கிறிஸ்தவர்கள் காலரா, பஞ்சம் போன்றவற்றாலும், 1784 -இல் திப்புசுல்தானாலும் பல இன்னல்களை சந்தித்தனர். குருக்கள் வெளியேற்றப்பட்டனர். பின்னர் 1797 -இல் கோவை மற்றும் தாராபுரம் பகுதிகள் ஆங்கிலேயர் ஆட்சிக்கு உட்பட்டன.

அச்சமயத்தில் அருட்தந்தை டியூபோயிஸ் மற்றும் சுதேச குருக்களின் அயராத பணியினால் கோவை மற்றும் சத்தியமங்கலத்தை சுற்றி வாழ்ந்த கிறிஸ்தவர்கள் ஒன்றிணைக்கப்பட்டு, ஆவர்களது ஆன்மீக வாழ்வு செழிக்கலாயிற்று. கருமத்தாம்பட்டி மற்றும் கொடிவேரி-யில் இரு பங்குத்தளங்கள் உருவாயின. இதன்பயனாக 1845 ல் கருமத்தாம்பட்டியை தலைமையகமாகக் கொண்ட கோவை மண்டலம் உருவானது.

அருட்தந்தை பக்ரோ என்ற பாரிஸ் வேத போதகக் குருவானவர் 1847 -இல் ஒரு வீட்டையும், அதனைச் சுற்றியுள்ள புகையிலைத் தோட்டத்தையும் வாங்கினார். அவ்விடத்தில் தான் தற்போது பேராலயம், ஆயர் இல்லம், மைக்கேல் பள்ளிக்கூடம், குருமடம், ஜீவஜோதி ஆஸ்ரமம், தாயார் மடத்து மருத்துவமனை, காணிக்கை அன்னை தலைமையகம், ஐ. சி கான்வென்ட் மற்றும் அருட்தந்தையர் புதிய வீதிகள் அமைந்துள்ளன.

கோவை மறை மாவட்ட முதல் ஆயர் மேதகு மாரியோன் தெ பிரெசியாக்:

கருமத்தாம்பட்டி கோவை மறைப்பரப்புப் பகுதியின் தலைமை இடமாக 03-04-1845 -இல் உயர்த்தப்பட்டது. பரிபாலகராக பேரருட்பணி மாரியோன் தெ பிரெசியாக் நியமிக்கப்பட்டார். பின்னர் 04-10-1845 இல் கருமத்தாம்பட்டி ஆலயத்தில் ஆயராக திருநிலைப்படுத்தப் பட்டார். 03-04-1850 இல் இப்பகுதி கோவை மறை மாவட்டம் என்ற நிலையை அதிகாரப்பூர்வமாக பெற்றது.

இவரது சிறந்த தொலைநோக்குப் பார்வையின்படி கோவை மறை மாவட்டம் வேகமாக வளர்சியடையும் நோக்கத்தில், தனது சொந்த ஊரின் பாதுகாவலரான தூய மிக்கேல் அதிதூதரின் பாதுகாவலில் தன் மேற்றிராசனத்தை ஒப்படைத்து, புனிதர் பெயரில் பேராலயம் கட்ட தீர்மானித்தார்.

தூய மிக்கேல் அதிதூதர் பேராலயம் :

பேராலயத் திருப்பணிகள் 24-07-1849 அன்று துவங்கினார். அருட்தந்தை துபுவா கோயமுத்தூர் மிஷனுக்காகக் கொடுத்த 10000 பிராங்குகளை இதற்காக ஒதுக்கினார்.

உரோமை புனித இராயப்பர் பேராலய அமைப்பில் கட்ட விரும்பினார். 1850 ம் ஆண்டு இறுதியில் தூய மிக்கேல் அதிதூதர் பேராலயத்திற்கு கோவை ஆயர் மேதகு பிரெசியாக் அவர்கள் அடிக்கல் நிறுவினார்.

இரண்டாம் ஆயர் மேதகு மூ. காடெல் :

பொருளாதார நெருக்கடி காரணமாக பேராலயத்தின் வடிவம், அளவு இவற்றில் சிறிது மாற்றம் செய்து பணிகளைத் தொடர்ந்தார்.

மூன்றாம் ஆயர் மேதகு கிளாதியூஸ் மரிய தெப்போமியோ:

பேராலய கட்டிடப் பணிகளை தோடர்ந்து நிறைவு செய்து, 28-04-1867 அன்று இவ் ஆயர் அவர்களே அர்ச்சித்தார். இப்பேராலயம் கட்டி முடிக்க 17 ஆண்டுகள் ஆயின. ஆங்கில வழி கல்விக்கூடங்களை ஆரம்பித்தார். 1873 இல் மரணமடைந்த இவரது உடலானது பேராலயத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

நான்காம் ஆயர் மேதகு ஜோசப் பார்து :

1874 ம் ஆண்டு பொறுப்பேற்றார். இவரது பணிக்காலத்தில் 1876-1878 காலகட்டத்தில் கோவை பகுதிகளில் கடும் வறட்சியும், பஞ்சமும் ஏற்பட்ட போது 'கஞ்சித் தொட்டி' வைத்து தொடர்ந்து மக்களுக்கு வாழ்வு கொடுத்தார்.

1900 ஆண்டில் ஏற்பட்ட பூமி அதிர்ச்சியில் பேராலயத்தின் கிழக்கு மணிகோபுரம் இடிந்து விழுந்தது. அதனை மீண்டும் கட்டியெழுப்பப் பட்டது. FMM சபையை தோற்றுவித்தார். பல ஆலயங்களை, பள்ளிக்கூடங்களை கட்டினார். புனித சூசையப்பர் தொழிற் பள்ளியைத் துவங்கினார். 1903 -ம் ஆண்டு மரணமடைந்தார்.

ஐந்தாம் ஆயர் மேதகு அகஸ்டின் ராய் :

இவரது பணிக்காலத்தில் பேராலயத்தில் சிலுவைப்பாதை நிலைகள் அமைக்கப்பட்டது. மின்விளக்குகள் பொருத்தப்பட்டது. நிர்வாக அமைப்புகளை உருவாக்கினார். 1937 ல் வெலிங்டன் நகரத்தில் மரணமடைந்தார். பின்னர் இவரது உடலை அங்கிருந்து கொண்டு வந்து 25-05-1987 இல் பேராலயத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

ஆறாவது ஆயர் மேதகு லூயிஸ் தூர்னியே :

1932 ம் ஆண்டில் ஆயரான இவர் இரண்டாம் உலகப் போரில் பிரான்ஸ் நாட்டு இராணுவத்தில் பணியாற்றி போர்க் கைதியாக சிறை சென்றவர். கோவை மறை மாவட்ட எல்கைகளை வரையறுத்துக் கொடுத்தவர் இவரே. 1938 -இல் மரணமடைந்தார்.

இந்திய ஆயர்களின் பணிக்காலம் :

பேராலயம் தொடங்கி 1940 ஆம் ஆண்டு வரை மதுரை மிஷன் (இயேசு சபை) மற்றும் பாரிஸ் வேத போதகச் சபையினர் கண்காணிப்பில் கோவை மறை மாவட்டம் இயங்கி வந்தது. 1940 ஆம் ஆண்டில் இந்திய ஆயர்களின் பொறுப்பில் ஒப்படைத்தனர்.

ஏழாவது ஆயர் மேதகு உபகாரசாமி :

கோவை மறை மாவட்டத்தின் முதல் இந்திய ஆயர். இவரது பணிக்காலத்தில் மில் தொழிலாளர் சங்கம் உருவாக்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமைகளை விடுமுறை நாட்களாக கடைபிடிக்க நடவடிக்கை மேற்கொண்டார்.

அக்காலத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் என கருதப்பட்டவர்கள் ஆலயத்தின் இடதுபுறமும், ஆங்கிலேய மக்கள் ஆலயத்தின் வலதுபுறமும், ஏனைய மக்கள் ஆலயத்தின் உட்புறமும் அமர்ந்து வழிபாடுகளில் கலந்து கொண்டனர். ஆங்கிலேய மக்கள் மட்டும் நாற்காலிகளைப் பயன்படுத்தினர். மேதகு ஆயர் உபகாரசாமி இதனை மாற்றி அனைவரும் எல்லாப் பகுதிகளிலும் அமர்ந்து வழிபாடுகளில் கலந்து கொள்ள ஏற்பாடு செய்தார்.

எட்டாவது ஆயர் மேதகு பிரான்சிஸ் சவரிமுத்து :

1950 ல் பொறுப்பேற்றுக் கொண்டார். கோவை மறை மாவட்டத்தின் நூற்றாண்டு நினைவாக மக்களின் நன்கொடையில் இயேசுவின் திருஇருதய கெபியினை கட்டினார். 1962 -இல் பேராலயத்தின் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளை விரிவாக்கம் செய்து சிலுவை வடிவில் உருகொடுத்தார். பல புதிய பங்குத்தளங்களை அமைத்தார். இவர் இறந்த பின், இவரது விருப்பத்திற்கிணங்க உடலானது திருஇருதய பீடத்தின் கீழ் அடக்கம் செய்யப்பட்டது.

ஒன்பதாவது ஆயர் மேதகு சி. ம விசுவாசம் :

1972 -இல் பொறுப்பேற்றார். சிறந்த சிந்தனையாளர். மறை மாவட்டத்தின் கட்டமைப்புகளை பெருக்கியவர். மறை மாவட்ட ஜீவஜோதி ஆஸ்ரமத்திற்கு அடிக்கல் போட்டு, அதனை கட்டியெழுப்பினார். 1979 இல் மரணமடைந்தார்.

பத்தாவது ஆயர் மேதகு ம. அம்புரோஸ் :

1980 -இல் பொறுப்பேற்றார். இவர் பேராலயப் பங்கைச் சார்ந்தவர் என்பதால் 'மண்ணின் மைந்தர்' என அழைக்கப்பட்டார்.

பேராலயத்தின் 150 -வது ஆண்டு நினைவாக பேராலய முகப்பு மண்டபம் கட்டப்பட்டது. பல புதிய கல்வி நிறுவனங்கள், புதிய ஆலயங்கள் உருவாயின.

சிறுவர் மறைக்கல்விக்கு முக்கியத்துவம் அளித்து, விசுவாச உண்மைகளை விளக்கியதால் இவர், 'மறைக்கல்வி ஆயர்' என அன்புடன் அழைக்கப்பட்டார். மற்ற மறை மாவட்டங்களுடன் இணைந்து கோவையில் நல்லாயன் குருத்துவ கல்லூரியை உருவாக்கினார். 2009 -இல் மரணமடைந்தார்.

பதினொன்றாவது ஆயர் மேதகு லெ. தாமஸ் அக்குவினாஸ் :

2002-இல் பொறுப்பேற்றார். நிறைய குருக்கள் மேற்படிப்புக்காக அனுப்பி வைக்கப் படுகின்றனர். மறை மாவட்ட நிர்வாக அலுவலகங்கள் அடங்கிய புதிய ஆயர் இல்லத்தைக் கட்டினார்.

புதிய பேராலயம் :

ஏற்கனவே இருந்த பழைய பேராலயத்தில் பழுதுகள் ஏற்பட்டதால் புதிய பேராலயம் கட்ட தீர்மானிக்கப்பட்டது.

பழைய பேராலயக் கட்டிடம், ஆயர் இல்லம் ஆகிய இரண்டும் இடிக்கப்பட்டு திருத்தந்தையின் இந்தியத் தூதர் மேதகு சால்வதோரே பென்னாக்கியோ அவர்களால், கோவை ஆயர் மேதகு தாமஸ் அக்குவினாஸ் அவர்கள் முன்னிலையில் 12-05-2013 இல் அடிக்கல் போடப்பட்டது.

29-06-2013 இல் பேராலய கட்டுமானப் பணிகள் துவக்கப்பட்டது. வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள், உடல்நலம் குன்றியவர்கள் வசதியாக பேராலயம் வந்தடைய சாய்வுப் பாதைகள் அமைக்கப்பட்டன.

உரோமானிய, கோத்திக் மற்றும் நவீன பாரம்பரிய தோற்றத்தையும் உள்ளடக்கி ஆலயம் கட்டப்பட்டது.

09-12-2016 அன்று விசாகப்பட்டினம் உயர் மறை மாவட்ட பேராயர் மேதகு பிரகாஷ் மல்லவரப்பு அவர்களால் மறை மாவட்ட ஆயர்கள், அருட்தந்தையர்கள், பங்கு மக்கள் முன்னிலையில் அர்ச்சிக்கப்பட்டது. இந்த நாளில் பேராலயமானது சிறப்பு அஞ்சல் துறையின் தபால்தலை வெளியிடப்பட்டது.

ஆலய மணிகள்:
கோவையின் மூன்றாவது ஆயர் காலத்தில், பிரான்ஸ் நாட்டிலிருந்து கொண்டு வரப் பட்ட மூன்று மணிகள் உள்ளன. இதில் பிரெஞ்சு மற்றும் இலத்தீன் மொழியில் வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன.

தமிழகம் மற்றும் கேரளா என பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான இறைமக்கள் இவ்வாலயம் வந்து புனிதரின் பரிந்துரையால் இறைவனின் ஆசீர்வாதங்களை பெற்றுச் செல்கின்றனர்.

வரலாறு : நம் வாழ்வு மலரிலிருந்து எடுக்கப்பட்டு தொகுக்கப் பட்டது.