புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம்
இடம் : கோழிப்போர்விளை.
மாவட்டம் : கன்னியாகுமரி
மறை மாவட்டம் : குழித்துறை
திருத்தந்தை : பிரான்சிஸ்
ஆயர் : மேதகு ஜெறோம் தாஸ்
பங்குத்தந்தை : அருட்பணி ஆல்பின் ஜோஸ்.
நிலை : பங்குதளம்
கிளைகள்:
1. கிறிஸ்து அரசர் ஆலயம், முகமாத்தூர்
2. புனித சவேரியார் ஆலயம், மல்லன்விளை.
குடும்பங்கள் : 225
அன்பியங்கள் : 7
ஞாயிறு திருப்பலி : காலை 06.30 மணிக்கு.
திருவிழா : அக்டோபர் மாதத்தில் பத்து நாட்கள்.
வரலாறு :
கோழிப்போர்விளை இறை சமூகம் மலர்ந்த விதம் :
சுமார் 51 ஆண்டுகளுக்கு முன் கோழிப்போர்விளை பகுதியில் உள்ள சில கிறிஸ்தவ குடும்பத்தினர் முளகுமூடு புனித மரியன்னை ஆலயத்திற்குச் சென்று இறைவனை வழிபட்டு வந்தனர். அந்நேரங்களில் கிறிஸ்துவைப்பற்றிய நற்செய்தியை அறிவிக்கும் பொருட்டு அருட்பணி வர்கீஸ் அவர்களும் முளகுமூடு ICM சபையின் அருட்சகோதரி ஜோசப் அவர்களும் கோழிப்போர்விளை பகுதிக்கு இறைப்பணியாற்ற வருவது வழக்கம்.
ஒரு சில மக்களிடம் தொடர்பு வந்தபிறகு கோழிப்போர்விளை பகுதியில் நினைவில் வாழும் திரு அம்புறோஸ் அவர்கள் நிலத்தில் சிறிதளவு தண்ணீர் கூட மரத்தடியில் வீழாதவாறு அடர்த்தியான கிளைகளைக் கொண்டு பச்சைக் கம்பளம் போல் காட்சியளிக்கும் பெரிய மாமரம் ஒன்று கம்பீரமாக நின்றது.
அங்கு கிறிஸ்தவ மக்களும் பிற மக்களும் ஒன்று கூடி மறைக்கல்வி கற்றார்கள். இறைவார்த்தையைக் கேட்டு பயன் பெற்ற மக்கள், இறைபணியாளர்களிடம் நன்றியாகக் காணிக்கைப் பொருட்களை கொடுத்தனர். அவற்றில் சில பொருட்களை ஏழைகளுக்கும் சிலவற்றை ஏலமிட்டும் வந்தனர். இதன் வழியாக வந்த வருவாயில் ஒரு மணியை வாங்கி மாமரக் கிளையில் கட்டி ஜெப நேரங்களில் அடித்து வந்தனர். மணியோசை கேட்கும் போது சிறுவர்களும் பெரியவர்களும் மாமரத்தடியில் மகிழ்ச்சியோடு கூடுவர். இவ்வாறு தான் கோழிப்போர்விளை பகுதியில் இறை சமூகம் மலர்ந்தது.
இறைப்பணி சிறப்பாக நடைபெறுவதைப் பார்த்த திரு அம்புறோஸ் அவர்கள் மாமரத்திற்கு அருகாமையில் 12 1/2 சென்ட் நிலத்தை அன்பளிப்பாக ஆலயம் கட்டுவதற்காக வழங்கினார். அதில் ஓலை கொண்டு சிறு குருசடி அமைக்கப்பட்டு ஒரு சிலுவை வைத்து மக்கள் ஆராதித்து வந்தனர். இப்பகுதியில் சுமார் 40 கிறிஸ்தவ குடும்பங்கள் இருக்கின்றனர் என்பதை அறிந்த அப்போதைய முளகுமூடு பங்குத்தந்தை இப்பகுதியில் ஒரு ஆலயம் கட்டலாம் என்று மக்களிடம் கோரிக்கை விடுக்க, ஊரிலுள்ள திரு செபஸ்தியான் அவர்கள் முன்னின்று அனைவரையும் ஒருங்கிணைத்து கருங்கல் சுவர்களாலும் மேற்கூரை ஓடாலும் அமைந்த ஒரு ஆலயத்தைக் கட்டியெழுப்பினர். இந்த அழகிய ஆலயத்தை தூய மிக்கேல் அதிதூதரைப் பாதுகாவலாகக் கொண்டு முளகுமூடு புனித மரியன்னை ஆலயத்தின் கிளைப் பங்காக செயல்படவும் அப்போதைய கோட்டார் மறை ஆயர் மேதகு ஆஞ்ஞிசுவாமி அவர்கள் அர்ச்சித்து வைத்தார்கள்.
முதலில் மாதத்திற்கு ஒரு திருப்பலி எனத் துவங்கி பின்பு படிப்படியாக இரு வாரங்களுக்கு ஒரு முறையும் பின்னர் ஒரு வாரம் சனிக்கிழமையும் அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமையும் திருப்பலி சுழற்சி முறையிலும், நாளடைவில் எல்லா ஞாயிற்றுக்கிழமைகளிலும் திருப்பலி நிறைவேற்றப் பட்டது.
தூய மிக்கேல் அதிதூதரின் அருளால் கிளைப்பங்காக இருந்த இவ்வாலயம் 31-05-1997 ல் பங்காக உயர்ந்தது. பங்கின் முதல் பங்குத்தந்தையாக அருட்பணி N. மார்ட்டின் அவர்கள் பணிப் பொறுப்பேற்றார்கள். அப்போது இதன் கிளைப் பங்குகளாக மல்லன்விளை, முகமாத்தூர், மருதங்கோடு ஆகியன இருந்தன. 15-09-2000 அன்று கிளைப்பங்கான மருதங்கோடு, பனவிளை பங்குடன் சேர்க்கப் பட்டது.
1990 முதல் பங்குப்பேரவை துவக்கப் பட்டு சிறப்பாக நடத்தப் படுகிறது. 1995 ல் ஐந்து அன்பியங்கள் உருவாக்கப்பட்டு சிறப்பாக வழிநடத்தப்பட்டு வருகிறது. 2012 ம் ஆண்டு அன்பியங்களின் எண்ணிக்கை ஏழாக அதிகரிக்கப் பட்டது.
பங்கின் முதல் பங்குத்தந்தையாகிய அருட்பணி மார்ட்டின் அவர்கள் பணிக்காலத்தில், பங்குத்தந்தை இல்லம் கட்டப்பட்டு 31-05-1999 ல் கோட்டார் மறை ஆயர் மேதகு லியோன் அ. தர்மராஜ் அவர்களால் அர்ச்சித்து திறந்து வைக்கப்பட்டது.
தூய மிக்கேல் அதிதூதரின் பரிந்துரையால் இறைவனின் கருணை மிகு ஆசியால் கோழிப்போர்விளை தலத்திருச்சபை மக்கள் வாழ்வில் ஏற்றம் பெற்றனர். குடும்பங்கள் பெருகின. ஆகவே ஆலயத்தில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டது. மேலும் ஆலயமும் பழுதடைந்த நிலையில் இருந்ததால் புதிய ஆலயத்தின் அவசியத்தை அறிந்த பங்குத்தந்தை அருட்பணி ப. றசல்ராஜ் அவர்கள், புதிய ஆலயம் கட்ட முயற்சிகள் மேற்கொண்டு 10-11-2001 அன்று குருகுல முதல்வர் பேரருட்பணி ஜான் குழந்தை தலைமையில் முளகுமூடு முதன்மை குரு அருட்பணி இயேசு ரத்தினம் முன்னிலையில் அடிக்கல் நாட்டப்பட்டது. பங்கு மக்களின் அயராத தன்னலமற்ற உழைப்பு, நன்கொடைகள் மற்றும் பங்குத்தந்தையின் வழிகாட்டுதலால் ஆலயப் பணிகள் விரைவாக முடிக்கப்பட்டு 31-05-2002 அன்று கோட்டார் மறை மாவட்ட ஆயர் மேதகு லியோன் அ. தர்மராஜ் அவர்கள் தலைமையில் பங்குத்தந்தை ப. றசல்ராஜ் மற்றும் பங்குமக்கள் முன்னிலையிலும் அர்ச்சிக்கப் பட்டது.
2006 ல் அருட்பணி இராபர்ட் பென்னி பணிக்காலத்தில் அவரது முயற்சி மற்றும் பங்கு மக்களின் ஒத்துழைப்புடன் 22 1/2 சென்ட் நிலம் வாங்கப்பட்டது. இவரது பணிக்காலத்தில் பங்குத்தந்தை இல்லத்திற்கு வழிப்பாதைக்காக ஒரு சென்ட் நிலமும் வாங்கப்பட்டது.
2010 ம் ஆண்டு பங்குத்தந்தை அருட்பணி Francis Sebastian அவர்களின் வழி காட்டுதலில் பங்குமக்களின் முயற்சியிலும் ஆலய தரை மார்பிள் போடப்பட்டது.
மேலும் பங்குத்தந்தை செபாஸ்டியன் அவர்களின் பணிக்காலத்தில் 2010 ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் புதிய சமூக அரங்கத்திற்கான அடிக்கல் போடப்பட்டு பங்குமக்களின் பங்களிப்பினால் பணிகள் நிறைவு பெற்று 31-05-2011 அன்று சமூக அரங்கமானது "St. Micheal community Hall "என்ற பெயரில் கோட்டார் மறை மாவட்ட முதன்மை குரு அருட்தந்தை மரியதாசன் அவர்கள் மற்றும் முளகுமூடு வட்டார முதன்மை குரு அருட்தந்தை ஜார்ஜ் பொன்னையா அவர்களால் திறந்து வைக்கப் பட்டது.
2014 ம் ஆண்டு ஆலய முற்றத்தில் பங்குத்தந்தை அருட்பணி பபியான்ஸ் அவர்களின் வழிகாட்டுதலில் இளைஞர்களின் முயற்சியிலும் பங்கு மக்களின் நன்கொடையாலும் இன்டர்லாக் போடப்பட்டது.
மேலும் 2016 ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் அருட்பணி பபியான்ஸ் அவர்களின் வழிகாட்டுதலில் பங்கு மக்களின் முற்சியாலும் புதிய பீடம் மற்றும் மாதா தோட்டம் ஆகியன சிறப்பாக வடிவமைக்கப்பட்டு பணிகள் நிறைவு பெற்று 31-05-2016 அன்று குழித்துறை மறை மாவட்ட ஆயர் மேதகு ஜெறோம் தாஸ் அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது. புதியதாக கல்லாலான கொடிமரம் வைக்கப் பட்டு 23-09-2016 அன்று குழித்துறை மறை மாவட்ட முதன்மை செயலர் அருட்தந்தை ப. றசல்ராஜ் அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது.
1984 ல் இருந்த குருசடி பழுதடைந்த காரணத்தால் புதிய குருசடி அருட்பணி பபியான்ஸ் அவர்களின் வழிகாட்டுதலில் பங்கு மக்களின் நன்கொடையால் கட்டப்பட்டு குழித்துறை மறை மாவட்ட முதன்மை செயலர் ஆருட்பணி ப. றசல்ராஜ் அவர்களால் அர்ச்சிகாகப் பட்டது. மேலும் 15-06-2015 ல் தூய மிக்கேல் மழலையர் பள்ளி துவக்கப்பட்டு சிறப்பாக நடத்தப் பட்டு வருகிறது.
கிறிஸ்துமஸ் குடில் திட்டம் துவக்கப்பட்டு 2015 ம் ஆண்டு முதல் ஏழைகளுக்கு இலவச வீடு கட்டி கொடுக்கப் படுகின்றது முக்கியமான செயலாகும்.
மேலும் சமூகப்பணியிலும் கோழிப்போர்விளை தலத்திருச்சபை சிறந்து விளங்குகின்றது. கோழிப்போர்விளை பகுதியில் காணப்பட்ட டாஸ்மாக் கடையை மாற்றும் பணியில் பங்குத்தந்தை பபியான்ஸ் மற்றும் பங்கு மக்கள், கிளைப்பங்கு மக்கள், ஊர்ப்பொது மக்கள் முதன்மையாக செயல் பட்டு பல்வேறு போராட்டங்கள், முற்றுகைப் போராட்டங்கள் கண்டன ஊர்வலங்கள் பல பல கட்டங்களாக நடத்தப்பட்டு (04-08-2015 முதல் 06-09-2016 வரை) வந்ததின் பயனாக 06-09-2016 மாலை 06.00 மணிக்கு டாஸ்மாக் கடை மூடப்பட்டதை மக்கள் கோழிப்போர்விளை ஜங்சனில் பாயாசம் காய்ச்சியும், இனிப்பு வழங்கியும் மகிழ்வினை வெளிப்படுத்தினர். போராட்டத்திற்கு மேல் போராடி டாஸ்மாக் கடையை மூடச் செய்தது தமிழகத்திலேயே இது தான் முதல் நிகழ்வாகும். 12-09-2016 அன்று டாஸ்மாக் கடையை மூடியதற்காக ஆட்சியாளருக்கு நன்றியும் தெரிவிக்கப் பட்டது.
"தூது மாத இதழ் " மாதந்தோறும் போடப்படுகிறது. இதில் பங்கின் மாத நிகழ்வுகள், பிறந்தநாள், திருமணநாள் வாழ்த்துச் செய்திகளும், கவிதை கட்டுரைகள் பங்கின் மாதச் செயல் பாடுகள் மற்றும் மாத அறிக்கை மாத வரவு செலவுக் கணக்குகளும் போடப் பட்டு தூது புறாவாக பங்கின் இல்லங்களுக்கு கொண்டு செல்கிறது.
கோழிப்போர்விளை பங்கில் இறைபணியாற்றிய அருட்பணியாளர்கள் :
முளகுமூடு பங்கின் கிளைப் பங்காக இருந்தபோது:
Fr. வர்க்கீஸ்
Fr. அந்தோணிமுத்து
Fr. J ஜார்ஜ்
Fr. செல்வராஜ்
Fr. கபிரியேல்
Fr. லாரன்ஸ்
Fr. ஜோசப் ராஜ்
Fr. சேவியர் புரூஸ்
Fr. அமிர்தராஜ்.
தனிப்பங்காக செயல்பட்ட போது :
Fr. N. மார்ட்டின்
Fr. றசல்ராஜ்
Fr. ரபேல்
Fr. அல்காந்தர்
Fr. இராபர்ட் பென்னி
Fr. செபாஸ்டியன்
Fr. பபியான்ஸ்
Fr. ஆல்பின் ஜோஸ் (தற்போது)