உண்மையான ஆலய வளர்ச்சி...

இன்று பல பங்குகளையும், அந்த ஆலயமா அவர்கள் நல்ல வளர்ச்சி என புகழப்படுகின்றன. உண்மையில் வளர்ச்சி என்பது எதனால் அளக்கப் படுகின்றது?

ஞாயிறு காணிக்கைகள் அதிகமாக வந்தால் வளர்ச்சி என்பர்..! 

இருக்கின்ற ஆலயத்தை ஆங்காங்கே இடித்து இன்னும் பல்வேறு வசதிகள் செய்தால் அது வளர்ச்சி..! 

ஒரு சில கோடி ரூபாய்களில் கட்டாமல் பல கோடி ரூபாய்கள் செலவு செய்து பிரமாண்டமாய் ஆலயம் கட்டினால் அது வளர்ச்சி..! 

இருக்கின்ற கொடி மரத்தினை மாற்றி பல இலட்சங்கள் செலவில் கொடி மரம் வைத்தால் அது வளர்ச்சி..! 

சமூக நலக்கூடங்கள், வணிக வளாகங்கள் கட்டி வாடகை மூலமாக ஆயிரங்களைக் குவித்தால் அது வளர்ச்சி..! 

ஆலயத்தை சுற்றிலும் அதிகமாக நிலங்களை வாங்கி சேர்த்துக் கொண்டேயிருந்தால் அது வளர்ச்சி..! 

ஆடம்பரமாக திருவிழாக்கள் எடுத்து பலவித வண்ணத் தோரணங்கள், அலங்கார வளைவுகள், அதிகமான அருட்பணியாளர்களை வரவழைத்து திருவிழாத் திருப்பலிகள் நிறைவேற்றுதல் அது வளர்ச்சி..! 

பங்கு மக்களில் பெரும்பாலானவர்கள் பட்டாடைகள் உடுத்தி பளபளப்புடன் வந்தால் அது வளர்ச்சி..! என பல்வேறு நிலைகளிலும் பங்கின் வளர்ச்சியை மற்ற பங்கு சமூகம் கூற பெருமைப் பட்டுக் கொள்வார்கள்...!

உண்மையில் இது தான் இறைவன் விரும்பிய வளர்ச்சியா என்றால் நிச்சயமாக இல்லை...!

இவையனைத்தும் நம்முடைய வெளிப் பார்வையிலான வளர்ச்சி..! வருமானம் கூடிக் கொண்டிருக்க வசதிகளைப் பெருக்கிக் கொள்கின்றோம், அவ்வளவே..! 

உண்மையான ஒவ்வொரு பங்கின் வளர்ச்சி என்பது, மனத்தாழ்ச்சியுடனும், ஒருவர் மற்றவர்களிடத்தில் அன்பு செய்து வாழ்வதிலும், பங்கின் வருமானத்தில் குறைந்தது பத்து சதவீதத்தை ஏழைகள் நலனுக்காக ஒதுக்குவதோடு நின்று விடாமல் தேவையிலிருப்போரைக் கண்டடைந்து இன்னும் அதிகமாக உதவி செய்வதிலும்; ஆலயத்தில் ஆண்டவரே அறியாமல் செய்த பிழைகளை மன்னியும் என்று மன்றாட்டுக்களை வாசித்து விட்டு மீண்டும் பிழைகள் செய்யாமல் வாழ்வதிலும், தனி மனித ஒழுக்கங்களிலும், இறைவனை நம் ஒவ்வொரு ஏற்றத் தாழ்வுகளிலும் நினைந்து அவரை மகிமைப் படுத்தி போற்றி புகழ்வதிலும் தான் உண்மையான பங்கின் வளர்ச்சி காணப்படும். 

இது தான் இறைவன் விரும்பும் வளர்ச்சி...!