திடீரென ஆலயத்தின் சுவர்களுக்குப் பேசும் சக்தி வாய்த்துவிட்டால் அவை என்னவெல்லாம் பேசும்? எத்தனை எத்தனை கதைகள் சொல்லும்? ஊரில் உள்ள கத்தோலிக்க மக்களின் வரலாறு முழுவதையும் சொல்லிவிடாதா? ஒரு கத்தோலிக்க கிறிஸ்தவனின் வாழ்வில் முக்கியமான நிகழ்ச்சிகள் நடந்தேறுவதெல்லாம் ஆலயத்தில் தானே!
ஒன்றுமறியாக் குழந்தையாக தன் பெற்றோரின் கரங்களில் தவழுகின்றபோது ஞானஸ்நானம் பெற்று தாய்த் திருச்சபையின் ஓர் அங்கமாகி, அதன்மூலம் அனைத்துலகத் திருச்சபையின் அங்கத்தினராக மாறுவது ஆலயத்தில் தான்!
மாசறியாப் பருவத்தில் வெள்ளையுடை அணிந்து, மனம் நிறைய மகிழ்ச்சியோடு, நற்கருணை வடிவில் வரும் நாயகனை முதன்முறையாக உட்கொள்வதும் ஆலயத்தில் தானே!
கிறிஸ்தவ விசுவாசத்தில் ஆயரால் நிலைப்படுத்தப்பட்டு, அவ்விசுவாசத்தை வாழ்ந்து காட்ட உறுதிப்பூசுதல் என்னும் திருவருட்சாதனம் மூலமாக உறுதிபூணுவதும் ஆலயத்தில் தானே!
உறுதியெல்லாம் பலவீனங்களால் கலைந்துபோய், தவறுகள் இழைத்து, பாவங்கள் புரிந்து, குற்ற உணர்வு சுமையாய் இதயத்தை அழுத்த, மன்னிப்பு தேடி, பச்சாதாபம் (அ) பாவசங்கீர்த்தனம் என்னும் திருவருட்சாதனம் மூலமாக குருவிடம் பாவங்களை அறிக்கையிடுவதும் ஆலயத்தில் தானே!
இறைமகன் இயேசுவின் பணியைத் தொடரவும், நற்செய்தி அறிவிக்கவும், திருச்சபையைக் கட்டிக்காப்பேன் என்ற உடன்படிக்கையோடு குருத்துவம் என்னும் அருட்சாதனம் மூலமாக சத்திய போதகத்திற்கு சாட்சியாக வாழ திருநிலைப் படுத்தப்படுவதும் ஆலயத்தில் தானே!
இளமை தருகின்ற வனப்போடும், வலிமையோடும், வாழ்க்கைத்துணையாய் தேர்ந்துகொண்ட நங்கையோடு நின்று, குருவும் திருச்சபையும் சாட்சியாய் நிற்க, ”சாகும்வரை மாறாமல் அன்பு செய்வேன்” என்ற உடன்படிக்கையோடு திருமணம் செய்துகொள்வதும் ஆலயத்தில் தானே!
காலம் கரைந்து, எல்லாம் முடிந்து, சொந்தமும், சுற்றமும், நட்பும் அழுதுகொண்டு நிற்க, வெறும் உடலாய், கல்லறைக்கு முன்னால் வருவதும் ஆலயத்திற்கு தானே!
இத்தனை நிகழ்ச்சிகளையும் பார்க்கின்ற ஆலயத்துச் சுவர்கள் ஒரு மனிதனின் வாழ்க்கை வரலாற்றையே சொல்லிவிடாதா? பக்தி மிக்கவர்கள் என்று நாம் பாராட்டும் சிலரை ஆலயத்துச் சுவர்கள் பரிகாசம் செய்யலாம்! ஆலயத்தில் அமர்ந்திருந்த வேளையில்கூட இந்த பக்தியான ஆசாமிகளின் மனதில் ஆட்டம் போட்ட எண்ணங்களை அவை சுட்டிக் காட்டலாம்! ஆலயத்தில் இருப்பதே தெரியாமல், அமைதியாய், அடக்கமாய் அமர்ந்திருந்த ஏழைகள் சிலர் இறைவனுக்கு எத்துணை நெருக்கமாய் இருந்தனர் என்று காட்டி, நம்மை ஆச்சர்யப்படுத்தலாம்! எருசலேம் ஆலயத்தின் காணிக்கைப் பெட்டியில் சல்லிக்காசு போட்ட விதவையை இயேசு மனமுவந்து பாராட்டியதை நமக்கு நினைவுபடுத்தலாம்!
ஆலயத்தில் நாம் தூங்கி வழிந்த நேரங்களை, மனமொன்றி செபிக்காமல் பார்வையையும், மனதையும் அலையவிட்ட நேரங்களைச் சுட்டிக்காட்டிச் சிரிக்கலாம்! ஆண்டுக்கு ஓர் முறை, இரண்டு முறை, கிறிஸ்மஸ்-ஈஸ்டர் அன்று மட்டும் ஆலயத்தில் தலைகாட்டிவிட்டு, மற்ற நாட்களில் ஆலயம் பக்கம் எட்டிப் பார்க்காத நபர்களைக் கடிந்துகொள்ளலாம்! மக்களின் ஆன்மீக நலனை விட, ஆலய வருமானத்தில் அதிக அக்கறை காட்டுபவர்களை எச்சரிக்கலாம்! “என் தந்தையின் இல்லத்தை வணிகக் கூடமாய், திருடர் குகையாய் மாற்றிவிட்டீரே” என்று சினந்து சாட்டையால் கோவில் வியாபாரிகளை விரட்டிய இயேசுவை நினைவுபடுத்தலாம்!
மிகப்பெரிய திருத்தலங்கள் முதல், சிற்றாலயங்கள் வரை இறைவனின் பிரசன்னம் ஒன்று தான்! அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ஆலயங்களின் வரலாற்றினையும் அற்புதங்களையும் இங்கே பதிவிட உதவிய நல்லுள்ளங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்! உங்களுக்காக தொடர்ந்து செபிக்கின்றோம்.
- இயேசுக்கிறிஸ்துநாதரின் பணியில் அன்புடன் S.Christopher.