இயேசு மரியா திரு இருதய ஆலயம்
இடம்: செருப்பாலூர், கல்லடிமாமூடு -அண்டூர் சாலை, 629161
மாவட்டம்: கன்னியாகுமரி
மறைமாவட்டம்: மார்த்தாண்டம்
மறைவட்டம்: குலசேகரம்
நிலை: பங்குத்தளம்
பங்குத்தந்தை அருட்தந்தை. பிபின்
Mob: +91 89039 35895
குடும்பங்கள்: 110
அருள் வாழ்வியங்கள்: 4
1.புனித சகாய அன்னை அருள்வாழ்வியம்
2.புனித சூசையப்பர் அருள்வாழ்வியம்
3.புனித அந்தோனியார் அருள்வாழ்வியம்
4.புனித தேவசகாயம் அருள்வாழ்வியம்
ஆராதனை நேரங்கள்:
ஞாயிறு காலை 06:30 மணி காலை ஜெபம், திருப்பலி.
திங்கள், செவ்வாய், வியாழன், சனி காலை 06:30 மணி திருப்பலி
புதன் மாலை 05:30 மணி ஜெபமாலை, நவநாள், திருப்பலி
வெள்ளி மாலை 06:00 மணி மாலை ஜெபம், திருப்பலி
மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை மாலை 06:00 மணி மாலை ஜெபம், திருப்பலி, சிறப்பு நற்கருணை ஆராதனை
திருவிழா: மே மாதத்தில்
மண்ணின் இறையழைத்தல்:
அருட்தந்தை. அபிஷேக், மார்த்தாண்டம் மறைமாவட்டம்
வழித்தடம்: மார்த்தாண்டம் -குலசேகரம் சாலையில், கல்லடி மாமூடு சந்திப்பில் வந்து, இங்கிருந்து சுமார் 100மீ தொலைவில் செருப்பாலூரில் இவ்வாலயம் அடையலாம்.
Church Map location:
https://maps.app.goo.gl/KSGJzHvMoTpzrdfy9
ஆலய வரலாறு:
முக்கடலும் சங்கமிக்கும் எழில்மிகு கன்னியாகுமரி மாவட்டத்தில், ஆசியாவிலேயே மிக நீளமானதும், உயரமானதுமான மாத்தூர் தொட்டிப்பாலம் செல்லும் வழியில், ஓங்கி வளர்ந்து கிளைகள் அடர்ந்த மரங்கள் விண்ணைத் தொட்டுக் கொண்டு நிற்க, மரங்களின் இடையினூடே தென்படும் பாறைக்கூட்டங்கள் முத்தாய்ப்பாய் ஒருபுறம் அமைய, வெண்முகில் பாறைக்கூட்டங்களைத் தழுவிச் செல்லும் காட்சி மறுபுறம் இருக்க, பாறைக்கூட்டத்தின் மேல் ஏறி கிழக்கை நோக்கினால் கொட்டூர் சிற்றூரும், மேற்கை நோக்கினால் இட்டகவேலி சிற்றூரும், வடக்கை நோக்கினால் குலசேகரமும், தெற்கை நோக்கினால் மாத்தூர் சிற்றூரும் தெரிய, பேச்சிப்பாறை நீரினை சுமந்து வரும் சானல் அருகாமையிலே, மார்த்தாண்டம் -குலசேகரம் நெடுஞ்சாலையில், இயற்கை எழில் கொஞ்சும் எழில்மிகு சிற்றூராம் செருப்பாலூரில், இறைதூதினை சுமந்து கொண்டு வந்து, முதன் முதலாக மலங்கரை கத்தோலிக்க வழிபாட்டு முறையில் திருப்பலி ஒப்புக்கொடுத்து, இறைவனின் அருள் செருப்பாலூர் பகுதியில் பொழியப்பட்ட பொன்னாள் தான் 15.04.1979.
1979-ல் அருட்தந்தை. பிலிப் செண்பகசேரி அவர்கள், உண்ணாமலைக்கடை புனித சூசையப்பர் மலங்கரை கத்தோலிக்க ஆலயத்தில் பங்குத் தந்தையாக பணியாற்றியபோது, அந்தப் பங்கின் உறுப்பினராக இருந்த திரு. சத்தியன் என்பவர் சிட்டிப்பணம் (சிறுசேமிப்பு) பிரிப்பதற்காக திருவட்டார், செருப்பாலூர், குலசேகரம் போன்ற இடங்களுக்குச் செல்வது வழக்கமாக இருந்தது. ஒருநாள் அருட்தந்தை அவர்கள் திரு. சத்தியன் அவரிடம், "புத்தன்கடையிலும், குலசேகரத்திலும் இலத்தீன் கத்தோலிக்க ஆலயங்கள் இருக்கின்றன. இவை இரண்டிற்கும் இடையில் நமக்கோர் ஆலயம் அமைக்க வாய்ப்பு இருக்கிறதா! என்று விசாரித்துச் சொல்லுங்கள்" என்று கூற, திரு. சத்தியன் தனது நெருங்கிய நண்பராகிய, செருப்பாலூர் வெள்ளப்பாறவிளையைச் சேர்ந்த திரு. ஜார்ஜ் என்பவரிடம் இச்செய்தியை அறிவித்தார். இந்த செய்தியைக் கேட்டதும் நண்பர்கள் இருவரும் மிக்க மகிழ்ச்சியாக அருட்தந்தை பிலிப் செண்பகசேரி அவர்களை சந்திக்க சென்றார்கள்.
செருப்பாலூர் மக்கள் நடந்து சென்று திருப்பலியில் பங்குகொள்ள இயலாத அளவுக்கு இலத்தீன் கத்தோலிக்க ஆலயங்கள் இரண்டும் தொலைவில் இருந்தன. வாகன வசதிகளும் மிகக் குறைவு. இதனால் பல குடும்பங்கள் ஆலயத்திற்குச் செல்வதில்லை. "செருப்பாலூரில் ஒரு கத்தோலிக்க ஆலயம் அனைவருக்கும் நிறுவினால் வசதியாக இருக்கும். நாங்கள் அனைவரும் அங்கேயே வருவோம்" என திரு. ஜார்ஜ் அவர்கள் திட்டவட்டமாக கூறினார்.
மறைபரப்புப் பணியில் மிகுந்த ஆர்வமும், புதுப்புது மறைபரப்புத் தளங்கள் தொடங்க முனைப்புடன் இருந்த அருட்தந்தை அவர்களுக்கு, செருப்பாலூரில் ஒரு மறைபரப்புத் தளம் தொடங்குவதற்கு இந்த வார்த்தைகள் மிகவும் தூண்டுதலாக அமைந்தன.
ஆகவே, காலம் தாழ்த்தாமல் அருட்தந்தை பிலிப் செண்பகசேரி அவர்கள் செருப்பாலூர் வந்தார்கள். திரு. ஜார்ஜ் அவர்களும் அவருடைய குடும்பத்தினரும், நண்பர்களும் அருட்தந்தையவர்களுக்கு உறுதுணையாக நின்று செயல்பட்டார்கள்.
வீடுகள் சந்தித்து மக்களுக்கு உற்சாகம் ஊட்டவும், ஆர்வமுடையவர்களை ஒன்று சேர்த்து செபங்கள் மற்றும் பாடல்கள் கற்றுக் கொடுக்கவும், விசுவாச பாதையில் அவர்களைக் கொண்டு வரவும், விசுவாசத்தில் உறுதிப்படுத்தவும் அருட்சகோதரிகளின் பணி தேவையென உணர்ந்தார். ஆகவே “செருப்பாலூரில் ஒரு மறைபரப்புத் தளம் தொடங்க வேண்டும். உதவி செய்ய வருவீர்களா!” என்று அருட்சகோதரி. எமிலியானா அவர்களிடம் கேட்க, அவர்கள் அதை இன்முகத்துடன் ஏற்றுக்கொண்டு மறைபணியாற்றத் துவங்கினார்கள்.
ஆலயம் அமைக்க தகுந்த இடத்தைத் தேடி அலைந்தபோது, திரு. ஏனோஸ் அவர்களிடமிருந்து நிலத்தை வாங்க, ஆலயத்தின் முதற்கட்ட பணிகள் ஆரம்பமானது. அழகியமண்டபம் -பிலாங்காலை விண்ணேற்பு ஆலய பங்குத்தந்தை. பிலிப் செண்பகசேரி அவர்கள் முதல் திருப்பலி ஒப்புக்கொடுக்க, பிலாங்காலை பங்கின் இளைஞர்கள் திருப்பலிக்கு உதவினார்கள்.
1979-ல் உயிர்ப்புப் பெருவிழா! அன்று மாலையில் பலிபீடம் திருப்பலிக்கு ஆயத்தமானது. திருப்பலிபீடம் அமைக்கப்பட்ட ஆலயமோ பெத்லகேம் மாட்டுத்தொழுவத்தை நினைவூட்டும் ஓர் ஓலைக் குடிசையாக இருந்தது. ஆழ்ந்த இறைவிசுவாசமும். இறைப்பற்றுமுடைய செருப்பாலூர் மக்கள் ஆலயத்தில் குழுமியிருந்தனர். ஆலய நிகழ்ச்சிகள் ஊருக்கே பெரிய விழாவாகத் தென்பட்டது. அவை ஒரு பெரிய நிகழ்வின் தொடக்கமாகவே இருந்தது.
1979 ஜூன் 3-ம் நாள் 17 குடும்பங்களிலுள்ள 36 நபர்கள் அருட்தந்தை. பிலிப் செண்பகசேரி அவர்களின் கைகளால் முதன்முதலாக திரு முழுக்கும், உறுதிப்பூசுதலும் பெற்றுக் கொண்டனர். அன்று மோண்சிஞ்ஞோர் ஜோசப் குழிஞ்ஞாலில் அவர்கள் வருகை தந்து சிறப்பித்ததோடு, செருப்பாலூர் கிறிஸ்து அரசர் ஆலயம் உதயமானது. மக்கள் சமூகமாகவும். தனிப்பட்ட முறையிலும் ஆலயத்தில் சேர, ஆலயமானது நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து கொண்டே வந்தது.
திரு. சில்வெஸ்டர் அவர்களுடைய குடும்பமானது பங்கின் விசுவாச வளர்ச்சியிலும், குழந்தைகளுக்கு மறைக்கல்வி, பாடல், நடனம் இவற்றைக் கற்பிப்பதிலும் உறுதுணையாக இருந்தது.
ஆலயம் தொடங்கிய போதே குழந்தைகளுக்கு அடிப்படைக் கல்வியும், சத்துணவும் வழங்க ஒரு பாலர் பள்ளியானது தொடங்கப்பட்டு, இரு ஆசிரியர்கள் மற்றும் இரண்டு ஆயாமார்களும் சிறு ஊதியம் பெற்றுக் கொண்டு, குழந்தைகளின் வளர்ச்சிக்காக உழைத்தனர். ஊர்மக்களும் தங்கள் குழந்தைகளை உற்சாகத்தோடு பாலர் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். ஒரு சில ஆண்டுகளுக்குப் பின் அரசாங்கம் ஆலயத்தின் அருகில் சத்துணவுக் கூடம் துவங்கியதும், ஆலயத்திலுள்ள பாலர் பள்ளி பங்கின் வளர்ச்சியில் அதிக ஆர்வம் கொண்டிருந்த திரு. சி. கனகராஜின் முயற்சியால் கடல் பகுதிகளில் சென்று, தொண்டு (தேங்காய் நார்) வாங்கி, கயிறு முறுக்கும் சிறுதொழில் ஆரம்பிக்கப்பட்டு. சுமார் 10 நபர்கள் இதன் மூலம் வேலை வாய்ப்பைப் பெற்றனர். தவிர்க்க முடியாத சில காரணங்களால் இதனை தொடர்ந்து நடத்த இயலவில்லை.
ஆலயத்தின் ஆரம்ப காலம் முதல் Dr. ஜோஸ்லின் அவர்கள் மருத்துவராக பணிபுரிய, தாய் சேய் நலத்திட்டம் (M.C.H) வழியாக நோய் வராமல் எவ்வாறு உடலைப் பாதுகாக்கலாம் என்பது பற்றிய அறிவுரைகள், தடுப்பூசி, சத்துணவு வழங்குதல், எடை எடுத்தல் என மக்களின் நலனில் அதிக கவனம் செலுத்தப்பட்டது.
சில ஆண்டுகளுக்குப்பின் M.C.H - க்குப் பதிலாக, மார்த்தாண்டம் மறைமாவட்ட முதல் ஆயரான மேதகு ஆயர். லாரன்ஸ் மார் எப்ரேம் ஆண்டகையின் தலைமையில் HOM திட்டம் தொடங்கப்பட்டு, மஞ்சள் மாவு (சோளமாவு), பால் பவுடர், எண்ணெய் மற்றும் மருந்துகளும் வழங்கப்பட்டு, மக்களின் சுகாதாரத்தில் அதிக கவனம் செலுத்தப்பட்டது.
ஓலைக் குடிசைக்குப் பதிலாக ஓடு போட்ட ஒரு சிற்றாலயம் கட்ட, மேன்மைமிகு பேராயர் பெனடிக்ட் மார் கிரிகோரியோஸ் ஆண்டகை அனுமதியும், பொருளுதவியும் தந்ததோடு. 1981 பெப்ருவரி 19-ம் நாள் ஓடு ஆலயமானது பேராயரால் அர்ச்சிக்கப்பட்டது. 1979 ஏப்ரல் முதல் 1982 ஜூன் வரையிலும், ஆன்மீகம் மற்றும் பொருளாதார வளர்ச்சியில் அதிக கவனம் செலுத்திய அருட்தந்தை பிலிப் செண்பகசேரி அவர்கள் மேற்படிப்பிற்காக பெங்களூர் சென்றார்கள்.
தொடர்ந்து பிலாங்காலை பங்குத் தந்தையாகிய அருட்தந்தை மரிய அற்புதம் அவர்கள், செருப்பாலூர் பங்கின் பங்குத் தந்தையாக பொறுப்பேற்க, அருட்தந்தை ஜோண் ஜி. வடக்கேபுறம் அடிகளார் உதவி பங்குத்தந்தையாகப் பணியாற்றி வந்தார்கள்.
மார்த்தாண்டம் மண்ணின் மைந்தன் எனினும், செருப்பாலூரில் தங்க நேர்ந்ததால் செருப்பாலூரின் வளர்ப்பு மகனாகிய அருட்தந்தை ஜோசப் பருத்திவிளையில், அருட்தந்தை. தோமஸ் பூவண்ணாலின் காலத்தில் குருமாணவராக 1983-ல் குருத்துவக் கல்லூரியில் சேர்ந்து, 1994-ல் குருப்பட்டம் பெற்றார்.
1988-ல் ஆலயம் புதுப்பிக்கப்பட்டது. 1991-ல் அருட்தந்தை பிறேம்குமார் அவர்களின் காலத்தில் ஆலயத்தின் முன் நுழைவாயிலுடன் இணைந்த குருசடியானது கட்டப்பட்டதோடு, ஆலயத்தில் கோல்பிங் மற்றும் வின்சென்ட் தே பவுல் இயக்கம் தொடங்கப்பட்டது.
செருப்பாலூர் பங்கிற்கு கிறிஸ்து அரசர் என்ற பெயரை மாற்றி, இயேசு மரியா திரு இருதய ஆலயம் என்ற பெயரைச் சூட்டியதும் அருட்தந்தை. பிறேம் குமார் அவர்களே ஆவார்.
1991 முதல் 2000 வரை 15 அருட்தந்தையர்களின் காலத்தில் செருப்பாலூர் ஆலய வளர்ச்சிக்காக பணிபுரிந்தவர்கள் தான் அருட்சகோதரி. எமிலியானா அவர்கள். செருப்பாலூரைச் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளுக்கும் பால் பவுடர், மஞ்சள் மாவு, ஊசி, கோதுமை பொடி, எண்ணெய் போன்றவை கிடைக்கச் செய்ததோடு, சமாரியப் பெண்ணைப் போல இறை இயேசுவை செருப்பாலூர் மக்களுக்கு எடுத்துக் கூறிய பெருமை அருட்சகோதரி எமிலியானா அவர்களையே சாரும்.
1994 அருட்தந்தை. பீட்டர் ஆனந்த் அவர்களின் காலத்தில் மக்களின் பொருளாதார வளர்ச்சிக்காக கிரெடிட் யூனியன் தொடங்கப்பட்டதோடு, இளைஞர்களை ஒன்று சேர்த்து விளையாட்டு மைதானம் மற்றும் பூந்தோட்டம் அமைக்கப்பட்டு, MCYM சார்பில் பலிபீடமானது புதுப்பிக்கப்பட்டு, மறைக்கல்விக்கு உயிரோட்டம் அளித்து, மாணவ மாணவிகளின் திறமைகளை வெளிக்கொணர்ந்த பெருமை அருட்தந்தை. பீட்டர் ஆனந்த் அவர்களைச் சாரும்.
கி.பி. 2000-த்தில் அருட்தந்தை. ஜோசப் பத்றோஸ் அவர்கள் செருப்பாலூரில் வருகைதர, பங்கின் இருபுறமும் இடம் வாங்கப்பட்டது. ஆன்மீக வளர்ச்சியின் வித்தான அருள்வாழ்வியங்கள் கி.பி. 2005-ல் துவங்கப்பட்டன. ஓட்டு ஆலயம் மாற்றப்பட்டு, புது ஆலயம் கட்டப்பட்டு 28-06-2003 அன்று மேதகு ஆயர் யூகானோன் மார் கிறிஸோஸ்டோம் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது. அத்தோடு மேடைக்கான (பங்குதந்தை இல்லம்) அடிக்கல் நாட்டப்பட்டு, பணிகள் துவங்கப்பட்டது. ஆலய பங்குப் பேரவையின் ஒன்றுபட்ட கடின உழைப்பும். செயல்பாடுகளும் ஆலய வளர்ச்சிக்கு வித்திட்டது.
2008-ல் அருட்தந்தை. ஸ்டீபன் அவர்களின் காலத்தில் ஆலயத்தைச் சுற்றி காய்கறித் தோட்டம் அமைக்கப்பட்டது. 2009-ல் பங்குத் தந்தையர்கள் தங்குவதற்காக மேடையானது மேதகு ஆயர் யூகானான் கிறிஸோஸ்டோம் ஆண்டகை அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது. அருள்வாழ்வியங்கள் வலுப்படுத்தப்பட்டு. புதன்கிழமை அன்னையின் நவநாள் ஆரம்பிக்கப்பட்டது.
2015-ம் ஆண்டு அருட்தந்தை ஜோஸ் பெனட் அவர்கள் வருகை தந்ததோடு, மூன்றாக இருந்த அருள்வாழ்வியங்கள் ஏழாக உயர்த்தப்பட்டது. தற்போது 4 அருள்வாழ்வியங்களாக சிறப்புற செயல்பட்டு வருகின்றன. ஆதரவற்றோர் இல்லங்கள், முதியோர் இல்லங்கள், சிறுவர் இல்லம், மனநிலை பாதிக்கப்பட்ட ஆண்கள் இல்லம், மனநிலை பாதிக்கப்பட்ட பெண்கள் இல்லம் எனப் பல இல்லங்களை சந்தித்ததோடு, திருத்தலங்கள் பல அழைத்துச் சென்று திருப்பயணங்களின் தந்தையாக இருந்தார். சாலையோரத்தில் காணப்படுகிற மனநிலை பாதிக்கப்பட்ட மக்கள் பலரை இல்லங்களில் கொண்டு சேர்த்த பெருமை அருட்தந்தையவர்களுக்கு உண்டு. மரியாயின் சேனையை வலுப்படுத்தியதோடு முதல் வெள்ளிக் கிழமைகளில் நற்கருணை ஆராதனை, புதன் கிழமைகளில் நவநாள், வெள்ளிக்கிழமை இரக்கத்தின் செபமாலை மற்றும் திருஇருதய நவநாள் என ஆன்மீக காரியங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்தார். மாதா கெபி புதுப்பித்தல், மாதா கெபியைச் சுற்றிலும் Interlock, பலிபீடம் புதுப்பித்தல், இயேசு மரியா திரு இருதய சொரூபங்கள், அணையா விளக்கு, ஆலய மச்சு பாவுதல், கல்லறை தோட்டம், அசிசி பூங்கா புதுப்பித்தல் என ஆலய வளர்ச்சிப் பணிகள் பல செய்ததோடு; இயக்கங்களில் சிறப்புக் கவனம் செலுத்தி, செருப்பாலூர் பங்கு சிறப்பான பங்காக வளர வழிவகை செய்தார். நற்கருணை ஆராதனை ஆலயம் கட்டப்பட்டு 05-01-2021 அன்று மேதகு ஆயர் வின்சென்ட் மார் பவுலோஸ் ஆண்டகை அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.
2021 ஆகஸ்ட் மாதம் முதல் பேரருட்தந்தை மரியதாசன் அவர்கள் பங்குத்தந்தையாக பொறுப்பேற்றதோடு, மழைக்காலங்களில் அமர்ந்து ஜெபிப்பதற்கு ஏதுவாக மாதா கெபி மேற்கூரையானது விரிவாக்கம் செய்யப்பட்டது. ஐந்து இலட்சம் (5,00,000/-) ரூபாய் வைப்பு நிதியாக வங்கியில் போட்டதோடு, அதில் வரும் வருமானத்தை ஆலய வளர்ச்சிக்கு பயன்படுத்தும் முத்தாய்ப்பான திட்டத்தைக் கொண்டு வந்தார்கள். ஆன்மீக மறுமலர்ச்சியை ஏற்படுத்தினார். கலையரங்க அறை சரிசெய்யப்பட்டதோடு, கலையரங்க தரையானது Marbonite போட்டு சீரமைக்கப்பட்டது.
மண்ணின் மைந்தர் அருட்தந்தை அபிஷேக் அவர்களுடைய குருப்பட்ட விழாவை மிகவும் சிறப்பாக செயல்படுத்தினார்கள்.
2024 ஜூன் மாதம் அருட்தந்தை பிபின் அவர்கள் வருகை தந்ததோடு, ஆரம்ப காலத்திலேயே Sound system-த்தை நவீன கருவிகளோடு புதுப்பித்தார். பாலர் சபை, இளையோர் இயக்கம், மறைக்கல்வி ஆகியவற்றை வலுப்படுத்தியிருக்கின்றார். நோயாளிகளுக்கும், வயதானவர்களுக்கும் இல்லம் தேடிச் சென்று நற்கருணை வழங்கி வருகின்றார்கள். திருப்பயணங்களின் தந்தையாக இருந்து வருகின்றார்கள். ஆலய பீடம் மற்றும் ஆலய வளாகமானது ஒளிமயமாக்கப்பட்டு, தற்போது சீரும் சிறப்புமாக அனைத்து மக்களையும் பாசத்தோடு முத்தாய்ப்பாய் வழிநடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
பங்கின் பங்கேற்பு அமைப்புகள்:
மறைக்கல்வி
பாலர் சபை
MCYM
MCA
தாய்மார் சங்கம்
தந்தையர் சங்கம்
வின்சென்ட் தே பால் சபை
மரியாயின் சேனை.
தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பங்குதந்தை அருட்தந்தை. பிபின் அவர்கள்.










