புனித சூசையப்பர் திருத்தலம்
இடம்: பணகுடி
மாவட்டம்: திருநெல்வேலி
மறைமாவட்டம்: தூத்துக்குடி
மறைவட்டம்: வடக்கன்குளம்
நிலை: பங்குத்தளம்
கிளைப்பங்குகள்:
1. புனித சவேரியார் ஆலயம், வடலிவிளை
2. புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம், ரோஸ்மியாபுரம்
3. புனித அமல அன்னை ஆலயம், மாதாகோவில்
பங்குத்தந்தை: அருட்பணி. R. இருதயராஜ்
குடும்பங்கள்: 1200
அன்பியங்கள்: 27
திருவழிபாட்டு நேரங்கள்:
ஞாயிறு காலை 05:00 மணி முதல் திருப்பலி, காலை 07:00 மணி இரண்டாம் திருப்பலி, காலை 10:00 மணி மறைக்கல்வி மாணவர்களுக்கு திருப்பலி
நாள்தோறும் திருப்பலி காலை 05:30 மணி
புதன் மாலை 06:30 மணி ஜெபமாலை, மாலை 07:00 மணி புனித சூசையப்பர் நவநாள், குணமளிக்கும் திருப்பலி
மாதத்தின் முதல் புதன் காலை 11:00 மணி ஜெபமாலை, 11:30 மணி ஆடம்பர கூட்டுத் திருப்பலி, தொடர்ந்து அசனம். மாலை 06:30 மணி ஜெபமாலை, 07:00 மணி நவநாள், புனித சூசையப்பர் சப்பர பவனி, நவநாள், குணமளிக்கும் கூட்டுத் திருப்பலி.
திருவிழா: ஏப்ரல் மாதம் 22-ம் தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி மே மாதம் 01-ம் தேதி வரை.
மண்ணின் இறையழைத்தல்கள்:
1. அருட்திரு. ஜேசு செல்லத்துரை
2. அருட்திரு. ஆஸ்டின் ஜோஸ், சென்னை -மயிலை உயர் மறைமாவட்டம்
3. அருட்திரு. ஜேசுகுமார், சில்சார், அயஸ்வால் மறைமாவட்டம், அஸ்ஸாம்
4. அருட்திரு. வளன் அரசு, தூத்துக்குடி மறைமாவட்டம்
5. அருட்திரு. பால்ரோமன், தூத்துக்குடி மறைமாவட்டம்
6. அருட்திரு. ஜெரால்டு தேவசகாயம் ஸ்மித், OFM Cap
7. அருட்சகோதரி. நான்சி பவுலின், JMJ
8. அருட்சகோதரி. ஜெஸ்லின், புனித அன்னாள் சபை
9. அருட்சகோதரி. மேரி அனிட்டா, மரியின் ஊழியர் சபை
10. அருட்சகோதரி. மேரி லெல்லிஸ் ராணி, மரியின் ஊழியர் சபை
வழித்தடம்: வள்ளியூர் -நாகர்கோவில் நால்வழி தடத்தில், வள்ளியூரிலிருந்து 8கி.மீ தொலைவில் பணகுடி அமைந்துள்ளது.
நாகர்கோவில் -ஆரல்வாய்மொழி -காவல்கிணறு விலக்கு -பணகுடி.
Location map:
https://g.co/kgs/KZyQ75
வரலாறு:
மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில், இராதாபுரம் தாலுகாவில் அமைந்துள்ளது தான் பணகுடி.
பணகுடி முந்தைய காலத்தில் பனைவளம் நிறைந்த பகுதியாக காணப்பட்டது. இங்கு கத்தோலிக்க மக்கள் இல்லை. வடக்கன்குளம், காவல்கிணறு, கள்ளிகுளம் பகுதியில் உள்ள கிறிஸ்தவர்கள் பனைத்தொழில் செய்வதற்காக இப்பகுதியில் வந்து குடியேறினார்கள்.
கி.பி. 1870-ல் வடக்கன்குளம் பங்குத்தந்தையாக இருந்த அருட்பணி. கிரகோரி அவர்கள், 5 ஏக்கர் நிலத்தை பணகுடியில் வாங்கி, அதில் 2 ஏக்கர் நிலத்தை கோயில் கட்டுவதற்காகவும், மீதி 3 ஏக்கர் நிலத்தை ஒவ்வொரு கிறிஸ்தவ குடும்பத்திற்கும் தலா 2 சென்ட் வீதம் இலவசமாக கொடுத்ததாக கூறப்படுகிறது. எனவேதான் கோயிலைச் சுற்றியுள்ள பகுதி இன்றளவும் "சாமியார் குடியிருப்பு" என அருமையாக அழைக்கப்பட்டு வருகிறது.
அந்த காலகட்டத்தில் கி.பி. 1870-ல் அருட்தந்தை கிரகோரி அவர்கள் ஒரு
சிறிய தேவாலயத்தைக் கட்டினார்கள். அந்த நேரத்தில் ஒரு மாட்டு வண்டியில் புனித சூசையப்பர் சுரூபம் சேசு சபை குருக்களால் கொண்டு செல்லப்பட்டதாகவும், அந்த மாட்டுவண்டி பணகுடி சிறிய கோயில் பகுதியைவிட்டு நகர மறுத்ததாகவும், உடனே அந்த புனித சூசையப்பர் சுரூபத்தை கோயிலில் வைத்து, புனித சூசையப்பர் கோயிலாக அன்று முதல் அழைக்கப்பட்டு வருகின்றது. பழைய தேவாலயம் 1892-ல் புதுப்பிக்கப்பட்டது. கி.பி. 1892-ல் பணகுடி ஆலயம், காவல்கிணறு பங்கோடு இணைக்கப்பட்டது. அன்றிலிருந்து காவல்கிணறு பங்கிலிருந்து அருட்தந்தையர் மாட்டு வண்டிகளிலும், அதன்பின் மிதிவண்டியிலும் பணகுடி வந்து திருப்பலி நிறைவேற்றிச் செல்வார்கள்.
1894-ல் Fr. Pouget (போஜெட்) அவர்களால் மாதா கோயில் சமூகத்தினருக்கு கோயில் கட்ட அனுமதி வழங்கி மாதா கோயில் கட்டப்பட்டது.
கி.பி. 1938-ம் ஆண்டில் திரு இருதய சபை சகோதரர்கள் பணகுடியில் ஒரு பள்ளியைத் தொடங்கினார்கள். அப்பள்ளிதான் இன்று திரு இருதய மழலையர் பள்ளி, திரு இருதய ஆரம்பப் பள்ளி, திரு இருதய மேல்நிலைப் பள்ளி, திரு இருதய பப்ளிக் ஸ்கூல் என ஆலமரமாக பரந்து விரிந்து நிற்கிறது. கி.பி. 1939-ம் ஆண்டு டிசம்பர் 24 அன்று மேதகு திபூர்சியூஸ் ரோச் ஆண்டகை அவர்களால் பணகுடி தனிப்பங்காக அறிவிக்கப்பட்டது.
பங்குத்தந்தையர்களும் தடங்களும்:
1. அருட்திரு. சூசைநாதர்:
பணகுடி பங்கின் முதல் பங்குத்தந்தை என்ற சிறப்பு பெற்றவர் அருட்திரு. G. சூசைநாதர் ஆவார். இவர் கி.பி 1939 கி.பி. 1942 வரை நான்கு ஆண்டுகள் பணிபுரிந்தார். அவரது காலத்தில் பங்குத்தந்தைக்கு இல்லம் கட்டப்பட்டது.
2. அருட்திரு. கபரியேல் டிவோட்டா:
இவர் 1942 முதல் 1946 வரை பங்குத்தந்தையாக பணிபுரிந்தார். இவரது காலத்தில் 1945-ம் ஆண்டில் மரியின் ஊழியர் சபை இல்லம் கட்டப்பட்டு, பங்கின் கல்வி நிறுவனமான புனித ஜோசப் ஆர்.சி. துவக்கப்பள்ளி தொடங்கப்பட்டது. இன்று வரை இப்பள்ளியானது பங்குத் தந்தையர்களின் நிர்வாகத்தின் கீழ் மரியின் ஊழியர் சபை கன்னியர்களால் 1 முதல் 5-ம் வகுப்பு வரை நடத்தப்பட்டு வருகிறது.
3. அருட்திரு. ரெமிஜியுஸ் மிஸ்ஸர்:
இவரது பணிக்காலம் 1946 முதல் 1950 வரையாகும். கி.பி. 1947-ம் ஆண்டில் திருவிழா திருக்கொடி ஏற்றுவதற்காக, 36 அடி உயரம் கொண்ட கல்தூண் கொடிமரம் அமைக்கப்பட்டது.
4. அருட்திரு. பென்கர்:
1950 முதல் 1951 வரை சிறப்பாக பங்கில் ஆன்மீக காரியங்களை வளர்த்தார்.
5. அருட்திரு. வியாகுலம்:
1951 முதல் 1953 வரை பங்கில் சிறப்பாக இறைப்பணி புரிந்து வளர்த்தார்.
6. அருட்திரு. சேவியர் பெர்னான்டோ:
1953 முதல் 1956 வரை பங்கில் பல வளர்ச்சிப் பணிகள் செய்தார். இவரது காலத்தில் 1954-ம் ஆண்டில் மரியாயின் சேனை தொடங்கப்பட்டு இன்று வரை சிறப்பாக நடைபெற்று வருகிறது.
7. அருட்திரு. ஜெரோமியஸ்:
1956 முதல் 1958 வரை பங்கை சிறப்பான முறையில் வழிநடத்தி வந்தார்.
8. அருட்திரு. G. பிரான்சிஸ்:
1958 முதல் 1960 வரை பல வழிபாடுகளை நடத்தி, மக்களை இறையன்பில் வளர்த்து வந்தார்.
9. அருட்திரு. லூர்துமணி:
1961 முதல் 1965 வரை 5 ஆண்டுகள் மிகவும் சிறப்பாக அருட்பணி புரிந்தார். இவர் 1962-ம் ஆண்டில் புனித சூசையப்பருக்கான அலங்கார தேரை வடிவமைத்தார்.
10. அருட்திரு. பூபால் ராயர்:
1965 முதல் 1967 வரை பங்கில் பல வளர்ச்சிப் பணிகளை செய்து வந்தார்.
11. அருட்திரு. ரோசாரியோ கொறைரோ:
1967 முதல் 1968 வரை மக்கள் மனதில் இறை விசுவாசத்தை தன் போதனையால் புகுத்தினார்.
12. அருட்திரு. சேவியர் இக்னேசியஸ்:
1968 முதல் 1969 வரை இறைப்பணியாற்றிச் சென்றார். பழைய ஆலயத்தின் மேற்கூரையை புதுப்பித்து, Sound System முதன் முதலில் அறிமுகப்படுத்தினார்.
13. அருட்திரு. தேவசகாயம் பெர்னான்டோ:
1969 முதல் 1972 வரை பங்குத் தந்தையாக பணியாற்றினார். இவரது காலத்தில் தான் புனித சூசையப்பர் நற்பணி மன்றம் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பக் காலத்தில் திரு. அத்தனாஸ் அவர்கள் தலைவராக இருந்து செயல்பட்டார். இவரது காலத்தில் வழிபாடுகளுக்கு புத்துயிர் கொடுத்தார். குறிப்பாக தவக்கால வழிபாடுகள் மிகவும் சிறப்பாக அமைந்தது.
14. அருட்திரு. செங்கோல் மணி:
கி.பி. 1972 முதல் 1977 தந்தை அவர்கள் சிறப்பான முறையில் பங்கை வழிநடத்தினார். இவரது காலத்தில் தான் இரண்டாவது ஆலயமும், புனித அந்தோனியார் கெபியும் கட்டப்பட்டது. 1976-ம் ஆண்டு தூத்துக்குடி ஆயர் மேதகு. அமலநாதர் ஆண்டகையால் மந்திரிக்கப்பட்டு புனிதப்படுத்தப்பட்டது.
15. அருட்திரு. மரிய மாணிக்கம்:
கி.பி. 1977 முதல் 1981 வரை சிறப்பான முறையில் பங்கில் வளர்ச்சிக்கு வழி வகுத்தார்.
16. அருட்திரு. அமலதாஸ்:
அருட்தந்தை அவர்கள் 1981 முதல் 1986 முடிய 5 ஆண்டுகள் பணிபுரிந்தார். இவரது காலத்தில் பங்கானது பல துறைகளில் வளர்ச்சி பெற்றது. இவரது காலத்தில் தான் அன்னை வேளாங்கண்ணி கெபி கட்டி மந்திரிக்கப்பட்டது. ஆலயத்தைச் சுற்றி பெரிய சிலுவை பாதை நிலைகள் அமைக்கப்பட்டது. பழைய மணி உடைந்து விட்டதால் புதிய ஆலய மணி ஒன்று வாங்கப்பட்டது. ரோஸ்மியாபுரத்தில் தூய மிக்கேல் அதிதூதர் ஆலயம் கட்டப்பட்டது.
17. அருட்திரு. அந்தோணி தாஸ்:
1986 முதல் 1989 ஆண்டு வரை சிறப்பாக பங்குத்தந்தையாக பணியாற்றிச் சென்றார்.
18. அருட்திரு. பன்னீர் செல்வம்:
1989 முதல் 1993-ம் ஆண்டு வரை பணிபுரிந்தார். அவரது காலத்தில் குழந்தைகளுக்கு ஞாயிறு மறைக்கல்வி தொடங்கப்பட்டது. திருக்குடும்ப சபை, மாதா சபை வளர்ச்சி அடைந்தது. மக்களுக்கு ஆன்மீகத்தில் பல மாற்றங்களைக் கொண்டு வந்தார். 1990-ம் ஆண்டில் புனித அன்னாள் சபை சகோதரிகளால், புனித அன்னாள் சபை மழலையர் பள்ளி ஆங்கில வழி கல்வி ஆரம்பிக்கப்பட்டது. இன்று இப்பள்ளி பணகுடிக்கு அருகில் சிவகாமிபுரத்தில், புனித அன்னாள் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, புனித அன்னாள் ICSE பள்ளி என பரந்து விரிந்து நிற்கிறது. புனித ஜார்ஜியார் கெபி தந்தை அவர்கள் காலத்தில் கட்டி மந்திரிக்கப்பட்டது.
19. அருட்திரு. ஜேம்ஸ் பீட்டர்:
இவர் 1993 - 1994 வரை இரண்டு ஆண்டுகள் பணியாற்றினார். இவரது காலத்தில் மக்களின் விசுவாசத்தை வளர்க்கும் விதமாக, ஜெப கூட்டங்கள் நடத்தப்பட்டது. கிறிஸ்தவ பாடல்களை மக்கள் அதிகமாக பாடவும், பயன்படுத்தவும் தொடங்கினர். மேலும் பங்குத்தந்தை இல்லமானது புதுப்பிக்கப்பட்டது.
20. அருட்திரு. தேவசகாயம்:
கி.பி. 1994 முதல் 1999 வரை 5 ஆண்டுகள் பணிபுரிந்தார். இவரது காலத்தில்தான் பழைய கோயிலின் கோபுர உச்சியில் காணப்பட்ட திரு இருதய ஆண்டவரின் சுரூபம் மந்திரித்து நிறுவப்பட்டது. மேலும் இப்போது திருப்பலி நடைபெறுகின்ற புனித வளனார் கலையரங்கமும் அவரால் கட்டப்பட்டது. கலந்தபனையில் லூர்து அன்னை ஆலயம் தந்தை அவர்களால் கட்டப்பட்டது. இவரது காலத்தில்தான் கல்லறைத் தோட்டத்திற்கு சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டது.
21. அருட்திரு. ஜாண் போஸ்கோ:
இவர் 1999 முதல் 2001-ம் ஆண்டு வரை பங்கில் பணியாற்றினார். இவரது காலத்தில் கணிணியின் பயன்பாடுகள் குறித்த அறிவு மக்களுக்கு புகுத்தப்பட்டது. 2001-ம் ஆண்டு தந்தை அவர்கள் ஆலய வெள்ளி விழாவை, வெள்ளி விழா மலர் வெளியிட்டு கொண்டாடினார்கள்.
22. அருட்திரு. இசிதோர்:
கி.பி. 2001 முதல் 2006 வரை 5 ஆண்டுகள் பணியாற்றினார். இவரது காலத்தில் தான் 2001-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் நாள் பணகுடி ஆலயமானது திருத்தலமாக உயர்த்தப்பட்டது. புனித ஜோசப் ஆர்.சி. துவக்கப்பள்ளியின் தெற்கு பள்ளி கட்டிடம் கட்டப்பட்டது. மேலும் இவரது காலத்தில்தான் பங்கில் 24 அன்பியங்கள் தொடங்கப்பட்டது. அனைத்து சபைகளும் வளர்ச்சியடைந்தன. திருப்பலியில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சபை கொண்டாடும் முறை நடைமுறைக்கு வந்தது.
23. அருட்திரு. சேகரன்:
2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு
வரை பங்குத்தந்தையாக பணிபுரிந்தார். பக்த சபைகள், பக்த கூட்டங்கள் சிறப்பாக நடைபெற்றது. இவரது பணிக்காலத்தில் நான்கு வழி சாலையில் உள்ள மக்களுக்கு பாதுகாப்பிற்காக தந்தை அவர்கள் மக்களோடு இணைந்து புனித தேவசகாயம் கெபியை கட்டினார்கள். பங்கிலுள்ள மாணவர்களுக்கு லயோலா கல்லூரி, புனித சவேரியார் கல்லூரிகளில் படிக்க வழி வகை செய்து கொடுத்தார். அவரது குருத்துவ வெள்ளி விழா பணகுடி பங்கில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
24. அருட்திரு. தாமஸ்:
கி.பி. 2011 ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை பங்குத்தந்தையாக பணியாற்றினார். இவரது காலத்தில் புனித தேவசகாயம் கெபி வேலை முடிந்து மந்திரிக்கப்பட்டது. மேலும் புனித ஜோசப் ஆர்.சி. துவக்கப்பள்ளியின் வடக்கு பகுதி கட்டிடம் இவரது காலத்தில் தொடங்கப்பட்டது. அவருக்கு பின் வந்த பொறுப்பு தந்தை அருட்திரு. சகாயம் அவர்களால் மே மாதம் 1-ம் தேதி 2015-ல் மந்திரிக்கப்பட்டது.
25. அருட்திரு. நெல்சன் ராஜ்:
கி.பி. 2015 முதல் 2020 வரை ஐந்தாண்டுகள் பங்குத்தந்தையாக பணியாற்றினார். இவரது பணிக்காலத்தில் தான் தற்போதைய புதிய ஆலயத்திற்கு 2018-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு, வேலை தொடங்கி நடந்து வந்தது. இவரது காலத்தில் மூன்று அன்பியங்கள் புதிதாக தொடங்கப்பட்டது.
26. அருட்திரு. ரா. இருதயராஜ்:
2020 முதல் பங்குத்தந்தையாக பணியாற்றி வருகிறார். இவரது விடாமுயற்சியாலும், அயரா உழைப்பாலும், மக்களோடு இணைந்து புதிய ஆலயத்தைக் கட்டி முடிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு பணியாற்றினார். எதிர்ப்புகளும், சோதனைகளும் வந்தாலும் எடுத்த பணியை நிறைவேற்றுவேன் என்ற உறுதியோடு, புனித சூசையப்பர் ஒன்றாம் திருவிழாவான 22.04.2025 அன்று, தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் மேதகு ஸ்டீபன் அந்தோனி அவர்களால் ஆலயம் அர்ச்சிக்கப் பட்டது. கொடிமரம் செய்யப்பட்டு நடப்பட்டுள்ளது. பக்த சபைகள், அன்பியங்கள் வளர்ச்சி பெற்றுள்ளது. மறைக்கல்வி முறையாக அன்பாக புகுத்தப்படுகிறது. திரு இருதய ஆண்டவர் பக்தியை வெகு வேகமாக மக்களிடம் புகுத்தி வருகிறார்.
புதிய ஆலயம் ஒரு பார்வை:
"விண்ணக வாசல் என்பது இதுதானா?” என வியக்கும் வண்ணம் விண்ணை முட்டும் கோபுரத்தின் மீது 'திருச்சிலுவை' ஒளி வீசி "கலங்காதே! நான் என்றும் உன்னோடு” என்று சொல்வது போல் உலகையே பார்த்துக் கொண்டிருக்க, அதன் இருபுறமும் இரண்டு துணைக் கோபுரங்களில் அமர்ந்துள்ள சிலுவைகள் பட்டொளி வீசி நம்மை பரவசப்படுத்த கோபுரத்தின் நடுவிலே பங்கின் பாதுகாவலர் புனித சூசையப்பர், குழந்தை இயேசுவோடு உங்களுக்காக நான் இடைவிடாது, ஜெபித்துக் கொண்டிருக்கிறேன் என புன்முறுவலோடு அமர்ந்திருப்பது அழகோ! அழகு! பேரழகு!
இசைக்கருவிகளின் இன்னிசை ராகங்களை தன்னகத்தே கொண்டு தெய்வீக ஓசை எழுப்பி "அழைக்கிறார் இயேசு ஆண்டவர் ஆவலாய் நாமும் செல்லுவோம்" என நம் ஒவ்வொருவரையும் தெய்வீக திருப்பலியில் பங்கேற்க தட்டி எழுப்பும் ஆலய மணி அமைந்துள்ள கோபுர அழகோ! அழகு! ஆலயமணியின் ஓசை அதைவிட அழகு.
கண்ணைக் கவரும் கலை நுணுக்கமுள்ள கதவின் வேலைப்பாடுகளைப் பார்த்து, வியப்புற்று தலைவாசலை தாண்டினால் இது சூசையப்பர் ஆலயமா? இல்லை வானலோகத்தின் பிரதிபலிப்பா? என ஆச்சரியப்படும் அழகு! கோயிலின் நடுமையத்திலே நற்கருணை பேழை வைக்கப்பட்டுள்ள திருப்பீடத்தை சுற்றிலும் பகலவன், நிலா, விண்மீன்கள் ஒரே நேரத்தில் ஒளிக்கதிர்களைப் பரப்ப, மேலே டூமிலே விவிலிய வீரர்களின் கதைப் படங்கள் பல வண்ண நிறங்களில் மின்னிக் கொண்டிருக்க! புனிதர்கள், புனிதைகள் சுற்றிலும் நின்று "அல்லேலூயா! கீதம் பாடி புகழ்ந்து கொண்டிருக்க, நற்கருணை ஆண்டவரின் இருபுறமும் சம்மனசுகள் நின்று ஆராதனை செய்து கொண்டிருக்க! சூசையப்பர் அனைத்தையும் பார்த்து அமைதியுடன் ரசித்துக் கொண்டிருக்க. நம் தாய் மேரி மாதா ஒரு பக்கம், மற்றும் அனைத்து புனிதர்களும் புதிய பாடல் பாடி மங்கள வாத்தியங்கள் முழங்கிக் கொண்டிருக்க! திருப்பீடத்தின் அழகே அழகு! அற்புதமே அற்புதம்! பீட அலங்காரம் மெய்சிலிர்க்க வைக்க, மின் விளக்குகள் நம் கண்ணைப்பறிக்க! மேள வாத்தியங்கள் இசைமுழங்க! நற்கருணை நாதர் எழுந்துள்ள அழகே அழகு! பேரழகு!
தேவ அன்னை கற்றுத்தந்த வெற்றிதரும் ஜெபமாலையை ஒவ்வொரு மக்களும் அனுதினம் தியானித்து ஜெபிக்க துணைபுரியும் பொருட்டு, ஆலயத்தின் இருபுறங்களிலும் தேவரகசியங்களை ஓவியமாய் பல வண்ண நிறங்களில் சித்தரிக்கப்பட்டுள்ள அழகைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.
பாவிகளாகிய நமக்காக தம் உயிரையே பலியாக்க திருவுளம் கொண்டு, "பிலாத்துவின் அரண்மனை முதல்
கல்வாரி மலை வரை" சிலுவையை சுமந்து சென்ற கல்வாரி பயணத்தை ஆலயத்திற்கு வரும் ஒவ்வொருவரும் நினைவுகூரும் வகையில் அமைக்கப்பட்டுள்ள 14 ஸ்தலங்களும் பார்ப்போர் ஒவ்வொருவரையும் கண்ணில் நீர் வர வைக்கும் அளவிற்கு உயர்ந்த, உன்னதமான, அமைதியான ஒரு அழகு!
திருப்பீடத்திலிருந்து கிழக்கே, தலைவாசலின் மேலே பார்த்தால் நமது பாதுகாவலர் புனித சூசையப்பர் தச்சுத்தொழில் செய்ய, குழந்தை இயேசு தந்தைக்கு உதவி செய்து கொண்டிருக்க, மாதா தையல் வேலைச் செய்ய, திருக்குடும்பத்தின் படமோ அழகிலும் அழகு! கொள்ளை அழகு!
ஆலயத்தின் மேற்கு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள டூமின் மேலே உலக இரட்சகர் மேற்கிலிருந்து - ஆலயத்திற்கு வருபவர்களை இருகரம் விரித்தவராய் - இதயத்தை திறந்தவராய் "வாருங்கள்! சுமை சுமந்து சோர்ந்திருப்போரே! நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருகிறேன்!" என்று அழைக்கிறார்
ஆலயத்தின் ஒவ்வொரு அசைவும் அழகு! ஒவ்வொரு அங்கமும் அழகு! பேரழகின் பிரதிபலிப்பே இந்த ஆலயம்.
பங்கில் உள்ள துறவற இல்லங்கள்:
1. மரியின் ஊழியர் சபை அருட்சகோதரிகள் இல்லம்
2. புனித அன்னாள் சபை அருட்சகோதரிகள் இல்லம்
3. திரு இருதய சபை சகோதரர்கள்
பங்கில் உள்ள கெபிகள்:
1. புனித அந்தோனியார் கெபி
2. புனித மிக்கேல் அதிதூதர் கெபி
3. புனித ஜார்ஜியார் கெபி
4. புனித பாத்திமா மாதா கெபி
5. மரியாயி புண்ணியவதி கெபி
6. புனித தேவசகாயம் கெபி
(ஒவ்வொரு கெபியிலும் மாதத்தில் ஒருநாள் திருப்பலி)
பங்கின் பங்கேற்பு அமைப்புக்கள்:
1. புனித சூசையப்பர் நற்பணி மன்றம்
2. திருக்குடும்ப சபை
3. நற்கருணை வீரர் சபை
4. மரியாயின் சேனை
5. பாலர் சபை
6. பீடப்பூக்கள்
7. மறைக்கல்வி
8. பாடகற்குழு (பெரியோர் / சிறியோர் / மறைக்கல்வி)
9. உதவும் கரங்கள்
10. அன்பியங்கள்
11. புனித அமலோற்பவ மாதா சபை
12. புனித வளனார் இளையோர் இயக்கம்
13. புனித வின்சென்ட் தே பவுல் சபை.
புதுமைகள் நிறைந்த, விண்ணைத் தொடும் கோபுரத்தையும், கண்ணைக் கவரும் அழகையும், உள்ளம் கவரும் விவிலிய நிகழ்வுகள் அடங்கியுள்ளன சித்திரங்களையும் கொண்ட பணகுடி திருத்தலத்தைக் காணவும், புனித சூசையப்பரின் வழியாக இறையாசீரைப் பெறவும், நாள்தோறும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான மக்கள் வருகை தருகின்றனர். இத்தகைய சிறப்பு வாய்ந்த ஆலயத்திற்கு வாருங்கள்... இறைவனின் ஆசீரை பெற்றுச் செல்லுங்கள்..
தகவல்கள்: பங்குதந்தை அருட்பணி. இருதயராஜ் அவர்கள்.
ஆலய வரலாறு: ஆலய அர்ச்சிப்பு விழா மலர் 2025.
புகைப்படங்கள் மற்றும் தகவல்கள் சேகரிப்பில் உதவி: ஆலய உறுப்பினர் திரு. அலெக்சாண்டர் அவர்கள்.
தகவல்கள் சேகரிப்பில் உதவி: பணகுடி மண்ணின் மைந்தர் அருட்பணி. ஜேசு குமார் அவர்கள்.
















