இடைவிடா சகாய அன்னை ஆலயம்
இடம்: அஞ்சல்நகர், மதுரை, 625018
மாவட்டம்: மதுரை
மறைமாவட்டம்: மதுரை உயர் மறைமாவட்டம்
மறைவட்டம்: மதுரை வடக்கு
நிலை: பங்குத்தளம்
பங்குத்தந்தை அருட்பணி. S. அருள்சேகர், C.Ss.R
குடும்பங்கள்: 680
அன்பியங்கள்: 26
திருவழிபாட்டு நேரங்கள்:
ஞாயிறு திருப்பலி காலை 07:30 மணி மற்றும் மாலை 06:00 மணி
நாள்தோறும் திருப்பலி மாலை 06:00 மணி
புதன் மாலை 06:00 மணி ஜெரார்டு மெஜல்லா நவநாள், திருப்பலி
சனி மாலை 06:00 மணி இடைவிடா சகாய மாதா நவநாள் திருப்பலி
மாதத்தின் முதல் சனி காலை 10:30 மணி ஜெபமாலை, 11:00 மணி நவநாள், குணமளிக்கும் ஆராதனை, எண்ணெய் பூசுதல், சாட்சியம் சொல்லுதல், திருப்பலி, SMS-சகாய மாதா சாப்பாடு.
மாலை 06:00 மணி தேர்பவனியுடன் ஜெபமாலை. தொடர்ந்து நவநாள் திருப்பலி,
திருவிழா: ஜூன் மாதம் கடைசி சனி, ஞாயிறு நிறைவு பெறும் வகையில் பத்து நாட்கள் நடைபெறும்.
மண்ணின் இறையழைத்தல்கள்:
1. அருட்பணி. ஜெரோம் எரோணிமூஸ், மதுரை உயர் மறைமாவட்டம்
2. அருட்பணி. மா. ஜான் மார்ட்டின், மதுரை உயர் மறைமாவட்டம்
3. அருட்பணி. பால் பிரிட்டோ, மதுரை உயர் மறைமாவட்டம்
4. அருட்பணி. ஆரோக்கிய இருதயராஜ், HGN, USA
5. அருட்பணி. சகாய மணி ராஜா, SMA, Starsbourg, France
6. அருட்பணி. கெவின், C.Ss.R
7. அருட்சகோதரி. ஜோஸ்பின் பவுலின், Little Sisters of the Poor, Bangalore
8. அருட்சகோதரி. செலின், Sisters of St Joseph of Lyons
9. அருட்சகோதரி. பிரான்சிஸ்கோ நிர்மலா, Franciscan Missionaries of Mary
வழித்தடம்: மதுரை -அலங்காநல்லூர் வழித்தடத்தில், கூடல்நகரில் அஞ்சல்நகர் அமைந்துள்ளது.
Location Map: Sahaya Matha Church
https://maps.app.goo.gl/Xjz5NExqMUX2CYcD7
வரலாறு:
"உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்" (மாற்கு 16:15) எனும் இறைவாக்கு மொழியை இயம்பிடும் நல்நோக்கோடு, இடைவிடா சகாய அன்னையின் இறைநிறைப் பரிந்துரையுடன் பொன்விழாக் கண்ட பங்கு ஆலய வரலாற்றுத் தொகுப்பு.
மாமதுரையும் இரட்சகர் சபை வருகையும்:
மல்லிகை மணம் பரப்பும் மதுரை மாநகரில், மக்கள் மனங்களில் ஆன்மீக ஒளி பரப்பும் நன்நோக்கோடு, 1968ஆம் ஆண்டு, மதுரை உயர் மறைமாவட்டப் பேராயராக இருந்த மேதகு டாக்டர் P. ஜஸ்டின் திரவியம் ஆண்டகை அவர்கள், மதுரை மண்ணில் ஆன்மீகப் பணி புரிதல் பொருட்டு, இரட்சகர் சபையினருக்கு (C.Ss.R) அழைப்பு விடுத்தார். பேராயரின் அழைப்பினை விருப்புடன் ஏற்று, ஆன்மநலப் பணியாற்ற முன்வந்தது இரட்சகர் சபை. அழைப்பு விடுக்கப்பட்ட காலத்தில், பெங்களூர் மறைமாநிலத் தலைவராக இருந்தவர் அருட்தந்தை ஜேம்ஸ் கென்னோலி, C.Ss.R அவர்கள். அருட்தந்தையின் சபை நெறிமுறை ஒப்புதலின்படி, அருட்தந்தை A. J. பிரான்சிஸ், அருட்தந்தை ஸ்டேன் மெல்லட் மற்றும் அருட்தந்தை சக்கரியாஸ் கஞ்சப்பரம்பில் இணைந்து; மதுரை -திருநகரில் இருந்த வாடகை வீட்டில் தங்கி, அருட்பணிகள் புரியத் தொடங்கினர். இவ்வாறாக 1968ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 2ஆம் நாளன்று இரட்சகர் சபை நிறுவனர் புனித அல்போன்ஸ் லிகோரி பெருவிழாவை முன்னிட்டு, 'அருளகம்' என்று பெயரிடப்பட்டு, மதுரையில் புதிய இரட்சகர் சபைக் குழுமம் உதயமாயிற்று.
திருநகரில் திருப்பணிகள்:
மதுரை -திருநகரில் இருந்து இரட்சகர் சபை தோற்றுவிக்கப்பட்ட நாள் முதல், இரட்சகர் சபைத் துறவியர் தமிழகம் முழுவதும் தங்களின் பங்குப் பணித் தளங்களை நிறுவுதல், தியானங்கள் நடத்துதல் ஆகிய திருப்பணிகளைச் செய்ய ஆரம்பித்தனர். மதுரை செபமாலை அன்னை ஆலயப் பங்கின் ஒரு பகுதியாக இருந்த திருநகர்ப் பகுதி, CIC அருட்சகோதரிகள் மற்றும் புனித சார்லஸ் பொரோமியோ சபை சகோதரிகளின் உதவியுடனும், இறைமக்களின் ஒத்துழைப்புடனும், உதவிப் பங்காக இயங்க ஆரம்பித்தது.
நகர்வும், அஞ்சல் நகரும்:
ஆன்மீகப் பணியில் கொண்ட ஆழமான ஈடுபாடு காரணமாகவும், மறைபரப்புதலை அகலப்படுத்தி விரிவாக்கும் படியான இறைத் தூண்டுதலின் பொருட்டும், மதுரைப் பேராயரின் திட்டத்தினை அழைப்பாக ஏற்று, இரட்சகர் சபையினர் தங்கள் இல்லத்தை அப்போது புதிதாக வளர்ச்சி அடைந்து கொண்டிருந்த பாலமேடு சாலைப் பகுதிக்கு மாற்றி, 1971ஆம் ஆண்டு தற்போது உள்ள இடத்தின் ஒரு பகுதியை விலைக்கு வாங்கி, இடைவிடா சகாய அன்னையின் அருளால் புதிய பங்கிளை உருவாக்கினார்கள். ஞானஒளிவுபுரத்தின் இணைப் பங்காக, இடைவிடா சகாய அன்னைப் பங்கு இயங்கி, இரட்சகர் சபையினரால் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இக்கால கட்டத்தில் இரட்சகர் சபையினருக்காக 'அருளகம்' என்னும் பெயரில் இல்லம் கட்டப்பட்டது.
பொன்விழாக் கொண்டாடி மகிழும் பங்கின் குருக்கள் இல்லம் 1973ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் நாள் பொங்கல் அன்று, மதுரை உயர் மறைமாவட்டப் பேராயர் மேதகு ஜஸ்டின் திரவியம் அவர்களால் ஆசீர்வதிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. பின்பு 1989இல் இல்ல அதிபராகப் பணிபுரிந்த அருட்பணி, ஜெயராஜ், C.Ss.R அவர்களால் புதிய அருளகம் கட்டப்பட்ட பின், பழைய 'அருளகம்' பல உருமாற்றங்கள் பெற்று தற்போது St Clements Community Hall ஆக, புழக்கத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தொடக்ககாலப் பணிகளும், தொடர் பணிகளும்:
ஞானஒளிவுபுரத்தின் ஒரு அங்கமாகவும், பாத்திமா கல்லூரி சிற்றாலயத்தில் வாரநாள் மற்றும் ஞாயிறு திருப்பலிகள் நிறைவேற்றும் கிளைப் பங்காகவும் அஞ்சல்நகர் செயல்பட்டுக் கொண்டிருந்தது. இரட்சகர் சபைத் தந்தையர்கள் தமிழகம், இந்தியா மற்றும் இலங்கை போன்ற பிற நாடுகளுக்கும், இடங்களுக்கும் சென்று மறையுரைப் பணியாற்றி மகத்துவமாய்ச் செயலாற்றினர். மக்களின் ஆன்ம நலன் பேணுதலில் முனைப்புடன் செயல்பட்டனர். விளைச்சலின் பயனாய் ஆண்டவரின் அருட்துணையோடு 19.01.1975 அன்று அஞ்சல் நகர் தனிப்பங்காக செயல்படத் தொடங்கியது. புதிதாக உருவான பங்கின் முதல் பங்குத்தந்தையாக அருட்பணி. கென்னத் பிரிட்டோ, C.Ss.R அவர்கள் 19.01.1975 அன்று பொறுப்பேற்றார். தற்போது (2025) பங்கின் பதினெட்டாவது பங்குத் தந்தையாக அருட்பணி. S. அருள் சேகர், C.Ss.R பணிக்காலம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. திருநகரில் இருந்து தொடங்கி, ஞானஒளிவுபுரத்தில் சங்கமித்து, அஞ்சல் நகரில் உதித்து, செங்கோல் நகரைத் தனிப் பங்காகத் தளிரச் செய்து, 2019இல் பாக்கியநாதபுரம் பங்கு தனித்து செயல்படத் தூண்டுகோலானது அஞ்சல் நகர் பங்கு.
பன்முகப் பணிகளில் அருட்சகோதரிகளின் பங்களிப்பு:
பங்கின் தொடக்கத்திலிருந்தே ஏற்கெனவே பல ஆண்டுகள் பெண்களுக்கான கல்லூரி நடத்திக் கொண்டிருந்த லயன்சின் புனித வளனார் சபையும், இரட்சகர் சபை அஞ்சல் நகருக்கு வந்த அதே நேரத்தில் வருகை தந்த அடைக்கல அன்னை சபையும், அமல அன்னை (SMI) சபையும் அவரவர் சபையின் சிறப்புப்படி, பங்கில் ஈடுபாடு கொண்டு, கல்விப் பணி, மறைக்கல்விப் பணி, அருட்பணி, மருத்துவப் பணி ஆகிய அரும் பணிகளை அன்று முதல் இன்று வரை அயராது செய்து வருகின்றனர். 1992ஆம் ஆண்டில் திருச்சிலுவை அருட்சகோதரிகளும் வந்து பெண்கள் முன்னேற்றப் பணிகளில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
அர்ச்சிப்பும், அதிசயங்களும்:
1975இல் ஊன்றப்பட்ட வித்து, 1978இல் ஆலயமாகக் கட்டி எழுப்பப்பட்டது. 1978ஆம் ஆண்டு ஜனவரித் திங்கள் 26ஆம் நாளன்று அன்னையின் ஆலயம் அர்ச்சிக்கப்பட்டது. ஆலய அர்ச்சிப்பு நாளை ஆண்டுதோறும் நினைவுகூர்ந்து ஆண்டவருக்கும், அன்னை மரியாளுக்கும் நன்றி செலுத்தும் விதமாக அன்றைய நாள் பங்கின் நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அர்ச்சிப்பு நாள் தொட்டு நாள்தோறும், அன்னையைத் தரிசித்து அருள் வேண்டி, அன்னையின் பரிந்துரையாய் பெற்ற அதிசயங்களுக்கு அன்னை மரி திருவருவப் படம் முன்பு வேண்டும் உள்ளங்களும், ஏற்றப்படும் மெழுகுதிரிகளுமே சாட்சிகள்.
பங்கின் கத்தோலிக்க மக்கள் தொகை:
அன்றும் இன்றும் பங்கு புதிதாக மலர்ந்த போது, கத்தோலிக்கக் குடும்பங்களின் எண்ணிக்கை 150 மட்டுமே! அவர்களில் பெரும்பாலானோர் தற்போது கிறிஸ்து அரசர் பங்கிலுள்ள இறைமக்கள். ஆனால், பிறகு ஏற்பட்ட பாலமேடு சாலை நீள்விரிவாக்கம் மற்றும் ஆனையூர் குடியிருப்புப் பகுதிகளின் வேகமான வளர்ச்சியினாலும், பங்கின் தற்போதைய கத்தோலிக்கக் குடும்பங்களின் எண்ணிக்கை 680 ஆகும்.
பங்கில் அங்கம் வகிக்கும் புலம் பெயர்வாழ் இலங்கை மக்கள்:
1980களில் இருந்தே புலம் பெயர்ந்த இலங்கை மக்கள் நம் நாட்டிற்குள் வர ஆரம்பித்தனர். நமது அரசும் நமது பங்கிலுள்ள ஆனையூர், கூடல் நகர் ஆகிய இரண்டு இடங்களில் அம்மக்களுக்காக முகாம்களை அமைத்தனர். அருட்பணி. ஜோசப் ஞானம், C.Ss.R. பங்குத்தந்தையாக இருந்த போது புலம் பெயர்ந்த மக்களின் வருகை மிகவும் அதிகமாகி இருந்தது. இவர்கள் தங்கள் தாய்நாட்டை விட்டு வெளியேறி வந்தத் துயரத்தைக் குறைக்கும் நோக்குடன், பங்கு சார்பாக, ஒரு தற்காலிகப் பள்ளிக்கூடம் அமைத்துக் கொடுக்கப்பட்டது. கடந்த 35 வருடங்களாக அஞ்சல் நகர் பங்கின் மைந்தர்களாக இணைந்து பயணித்துக் கொண்டிருக்கும் இவ்விரு முகாம்களில் உள்ள கதோலிக்கக் குடும்பங்களின் இன்றைய எண்ணிக்கை 100 ஆகும். ஒவ்வொரு முகாமிலும் ஒரு குருசடியும், அவற்றில் மாதந்தோறும் திருப்பலிகளும், வருடந்தோறும் திருவிழாக்களும் சிறப்பாக நடத்தப்பட்டு வருகின்றன. பங்கு மக்கள் என்ற முறையில், அவர்கள் எல்லா உரிமைகளையும், நன்மைகளையும் பெற்று மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். பங்கின் நிர்வாகத்திலும், வளர்ச்சியிலும் இவர்கள் மிகச் சிறந்த பங்காற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. தாய் நாட்டைப் பிரிந்து வந்தாலும், தாய்த் திருச்சயை என்றும் அவர்களுடன் உள்ளது என்பதற்குத் தக்க சான்று இது எனின் மிகையில்லை.
பொன்விழா (1975-2025):
1975ஆம் ஆண்டு தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கும் 2025 ஆம் ஆண்டு வரையிலாக, ஏறக்குறைய பதினெட்டு பங்குத் தந்தையரின் பங்குப் பொறுப்பின் கீழ் பல்வேறு முன்னெடுப்புகள்.. கிறிஸ்துவின் மறைபரப்புப் பணியை மையமாகக் கொண்டு சமயப் பணி, சமூகப் பணி எனப் பல்வேறு பணிகளைத் தத்தம் பொறுப்புக் காலங்களில் புரிந்து, தன்நிகரில்லாப் பணியாற்றி வரும் இரட்சகர் சபைக் குருக்களின் இறைப் பற்றும், இறை மக்களுடனான தோழமை உணர்வுமே இன்று பொன்விழாக் கொண்டாடி மகிழும் பங்காக மிளிரக் காரணம் ஆகும். அலைகள் இல்லாக் கடல் இல்லை என்றாலும் கூட, ஆழ்கடலில் தானே அழகிய முத்துக்கள் இருக்கின்றன. அதுபோல இறைமக்கள், இரட்சகர் சபையினரின் வழிகாட்டுதலில் மோசேயுடன் பயணித்த இஸ்ரயேலர் போல் பின்செல்ல, மோசேயை வழி நடத்திய தந்தையானவர் இரட்சகர் சபையினரை வழிநடத்த, கடந்த ஐம்பது ஆண்டு கால ஆன்மீகப் பயணம் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கிறது....
இன்னும் தொடரும் இப்பயணம் உலகை மீட்ட இரட்சகரால் பங்கினை வழிநடத்தும் இரட்சகர் சபைத் துறவிகளால்....
பங்குத்தந்தையர்களும் பதித்த தடங்களும்:
1) அருட்பணி. கென்னத் பிரிட்டோ, C.Ss.R அவர்கள் அஞ்சல் நகர்ப் பங்கின் முதல் பங்குத் தந்தையாக நியமிக்கப்பட்டார். 15.01.1975 அன்று தென்னங்கீற்றுகளால் வேயப்பட்ட தற்காலிக ஆலய கட்டுமானப் பணிகள் தொடங்கப் பெற்றது.
19.01.1975 அன்று தமிழக இரட்சகர் (C.Ss.R) சபையினரின் வாழ்வில் ஒரு புது அத்தியாயம் ஆரம்பமானது. மதுரைப் பேராயர் மேதகு ஜஸ்டின் திரவியம் அவர்கள் தலைமையில் ஞானஒளிவுபுரம் பங்குத்தந்தை டி. ஏ. சூசை மற்றும் அருட்தந்தையர்கள் கூட்டுத் திருப்பலி நிறைவேற்ற, அருட்பணி. கென்னத் பிரிட்டோ, C.Ss.R அவர்கள் அஞ்சல்நகர் பங்கின் முதல் பங்குத்தந்தையாகப் பங்குப் பொறுப்பு ஏற்றார். செய்ததனைத்தையும் செம்மையாக, முறையாக செய்வதில் வல்லுநராகிய இவர், பங்கிலுள்ள அனைத்து வீடுகளையும் சந்தித்து, தகவல்களைத் திரட்டிக் கோப்புகளைத் தயாரித்தார்.
2) 05.10.1975 அன்று முதல் அருட்பணி. சந்தியாகு, C.Ss.R அவர்கள். பங்கு மக்கள் மத்தியில் தொடர்புகளை ஏற்படுத்த "நமது பங்கு" என்ற மாத வெளியீடு ஆரம்பிக்கப்பட்டது. புதிய ஆலயத்திற்கான கட்டிட உருவபடத்தை அருட்பணி. ஸ்டீபன்ஸ், சே.ச. அவர்கள் தயாரிக்க, கட்டடக் கலைஞர் திரு. ஜெர்மானூஸ் அவர்களால் கட்டடம் கட்டப்பட்டது. கட்டுமானப் பணிகளை மேற்பார்வையிட அருட்சகோதரர் அல்போன்ஸ், C.Ss.R அவர்கள் பெங்களூரில் இருந்து மதுரை வந்தார்.
15.02.1976 அன்று பேராயர் ஜஸ்டின் திரவியம் அவர்களால் புதிய ஆலயத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.
11.03.1976 சனிக்கிழமையன்று பங்கின் பாதுகாவலியான இடைவிடா சகாய அன்னைக்கு நவநாள், அருட்பணி. அஜோ பிரான்சிஸ் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது.
1976ஆம் ஆண்டு சனவரித் திங்கள் 26ஆம் நாள் இடைவிடா சகாய அன்னை ஆலயப் பங்கு மக்களுக்கு மறக்கவியலா மகத்தான நாள். அன்று காலை 7.00 மணிக்குப் பேராயர் மேதகு ஜஸ்டின் திரவியம் அவர்கள், எண்பதுக்கும் மேற்பட்ட குருக்களுடன் கூட்டுத் திருப்பலி நிறைவேற்றி, புதிய ஆலயத்தை அருள்பொழிவு செய்தார். ஆலய அருள்பொழிவு விழா மிக ஆடம்பரமாசு கொண்டாடப்பட்டது.
3) 12.11.1978 அன்று முதல் அருட்பணி. அருள் லூக்காஸ், C.Ss.R அவர்கள். இவர் பணிபுரிந்த காலத்தில் அருங்கொடை செபவழிபாடுகள் நடத்தப்பட்டன.
4) 1981 அக்டோபர் மாதம் முதல் அருட்பணி. ஜோசப் அந்தோனிசாமி, C.Ss.R அவர்கள். பொறுப்பேற்றார். சி.ஏ.எஸ். குடியிருப்பில் நூலகமாக இருந்த இடம், புனித அருளானந்தர் சிற்றாலயமாக மாற்றப்பட்டது. புதன்கிழமைதோறும் புனித அருளானந்தருக்கு நவநாளும், திருப்பலியும் கொண்டாடப்பட்டன. மதுரை -திண்டுக்கல் நெடுஞ்சாலையைத் தாண்டி இறைமக்கள் அஞ்சல் நகருக்கு வர பல சிரமங்கள் இருந்ததால், வைகை ஆற்றுக்கும் திண்டுக்கல் சாலைக்குமிடையே ஆலயம் ஒன்று அமைக்க வேண்டும் என்ற கருத்து மிக வலுவாக எழுந்தது.
பங்கிலுள்ள ஏழைகளுக்கு உதவிக்கரம் நீட்டி அவர்களின் துயர் துடைக்க, புனித வின்சென்ட் தே பவுல் சபை ஆரம்பிக்கப்பட்டது. மக்கள் வாழும் பகுதியில் இறந்தோரை நல்லடக்கம் செய்வதற்குக் கல்லறைத் தோட்டம் அமைக்க அரசு அனுமதி மறுத்ததால், மதுரை மறைமாவட்டம் சார்பில் துவரிமான் பகுதியில் கல்லறைத் தோட்டம் வாங்க முடிவு செய்யப்பட்ட போது, அஞ்சல் நகர் பங்கு மக்கள் சார்பில் நிதி திரட்டி வழங்கினார்.
5) 1984ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் அருட்பணி. ஜோசப் ஞானம், C.Ss.R அவர்கள். பங்கானது பகுதி வாரியாகப் பிரிக்கப்பட்டு, பகுதித் திருப்பலிகள் நிறைவேற்றப்பட்டன. இடைவிடா சகாய அன்னையின் நவநாட்களின்போது பல்வேறு தலைப்புகளில் மறை உரை சிந்தனை வழங்கப்பட்டு, மாமரியின் புகழும் திருவிவிலியச் சிந்தனைகளும் மக்கள் மனதில் விதைக்கப்பட்டன.
12.10.1985 அன்று இடைவிடா சகாய அன்னை நவநாளின் 500ஆவது வாரம் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு, சிறப்பு மலர் ஒன்றும் வெளியிடப்பட்டது. கலை நிகழ்ச்சிகள் நடத்த திறந்தவெளி அரங்கம் ஒன்று கட்டப்பட்டது. இலங்கையிலிருந்து இடம் பெயர்ந்து வந்த மக்களுக்கு உதவிட, மதுரை பல்நோக்கு சேவா சங்கத்தின் உதவியுடன், தொழிற் பயிற்சிக் கூடம் அமைக்கப்பட்டது. அஞ்சல் நகர்ப் பங்கின் வளர்ச்சியைக் கண்டு மகிழ்ந்த பேராயர் மேதகு கஸ்மீர் ஞானாதிக்கம் அவர்களால் வருமான வரி குடியிருப்புப் பகுதிகளில் கிளைப் பங்கு ஒன்றை உருவாக்க இடம் வாங்கப்பட்டது.
6) 1988ஆம் ஆண்டு முதல் அருட்பணி. சி. எஸ். லூக்காஸ், C.Ss.R அவர்கள். அந்தக் காலக் கட்டத்தில் ஆலய மணி பொருத்தப்பட்டது. ஒலிப்பெருக்கி சாதனங்கள் புதிதாக வாங்கப்பட்டு பொருத்தப்பட்டன. இலங்கையிலிருந்து மீண்டும் இடம் பெயர்ந்து வந்த மக்கள் மீது சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டது. அஞ்சல் நகர்ப் பங்கின் வளர்ச்சியில் ஆர்வம் காட்டிய பேராயர் மேதகு மரியானூஸ் ஆரோக்கியசாமி அவர்கள், வருமான வரி குடியிருப்புப் பக்கம் ஏற்கெனவே வாங்கப்பட்ட நிலத்தை அடுத்து இருந்த நிலங்களையும் வாங்கி, புதிய ஆலயம் கட்டவிருந்த இடத்தை மேலும் விரிவாக்கினார்.
7) 14.10.1990 அன்று முதல் அருட்பணி. மே. செ. அந்தோனி, C.Ss.R அவர்கள் அஞ்சல் நகர் பங்கின் 7ஆவது மற்றும் 8ஆவது பங்குத்தந்தையாகப் பொறுப்பில் இருந்தார். 15.10.1990 அன்று வருமானவரி குடியிருப்புப் பகுதியில், புதிய ஆலயம் எழுப்ப பேராயர் மேதகு மரியானூஸ் ஆரோக்கியசாமி அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு புனிதப்படுத்தப்பட்டது. பங்கின் பல்வேறு பகுதிகள் காலத்தின் தேவைக்கேற்ப பிரிக்கப்பட்டு, பகுதித் திருப்பலிகள் முறையாக நடைபெற்றன.
வருமான வரி குடியிருப்புப் பகுதியில் கட்டப்பட்ட கிறிஸ்து அரசர் ஆலயப்பணி நிறைவு பெற்று, 17.04.1994 அன்று பேராயர் மேதகு மரியானூஸ் ஆரோக்கியசாமி அவர்களால் அருள்பொழிவு செய்யப்பட்டது.
பொது நிலையினரின் பொருளுதவியால் ஆலயத்தில் சிலுவைப்பாதை திருவுருவங்கள் பொருத்தப்பட்டன. ஆலய நுழைவாயிலில் திருச்சிலுவைக்கும். இடைவிடா சகாய அன்னைக்கும் கெபிகள் கட்டப்பட்டன.
9) 08.09.1996 அன்று முதல் அருட்பணி. சிரில், C.Ss.R அவர்கள். தடையில்லா மின் விநியோகம் செய்யும் சாதனம் பொருத்தப்பட்டது. இளைஞர் மன்றம், பாடகர் குழு ஆகிய குழுக்கள் உத்வேகத்துடன் செயல்பட்டன.
10) 1998இல் அருட்பணி. அருள் லூக்காஸ் C.Ss.R, இரண்டாவது முறையாகப் பொறுப்பேற்று செயலாற்றினார். வருங்காலத் திருச்சபை இன்றைய குழந்தைகளைச் சார்ந்ததே என்பதைக் கருத்தில் கொண்டு சிறுவர், சிறுமியரின் மறைக்கல்விக்கு முதலிடம் கொடுத்து மக்களை நெறிப்படுத்தினார். மறைக்கல்வி புத்துயிர் பெற்று, புதுவடிவம் பெற்றது.
11) 17.10.1999 அன்று முதல் அருட்பணி. பால் ஜெயக்குமார், C.Ss.R அவர்கள். 05.02.2000 அன்று பங்கின் வெள்ளிவிழா மதுரை உயர் மறைமாவட்ட துணை ஆயர் மேதகு அந்தோனி பாப்புசாமி அவர்கள் தலைமையில் மிகவும் ஆடம்பரமாகக் கொண்டாடப்பட்டது. பங்கின் வெள்ளி விழா நினைவாக 24.06.2000 அன்று துணை ஆயர் மேதகு அந்தோனி பாப்புசாமி அவர்களால் இடைவிடா சகாய அன்னைக்குப் பொன்முடி சூட்டப்பட்டது. இடைவிட சகாய அன்னையின் பக்தியைப் பரப்ப பல பயனுள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. சிக்கந்தர் சாவடி பகுதி, சமயநல்லூர் பங்கிலிருந்து பிரிக்கப்பட்டு. அஞ்சல் நகர் பங்கோடு இணைக்கப்பட்டது. ஆலய வளாகத்தில் 2001இல் அன்னை மரியாவுக்கு ஒரு கெபி எழுப்பப்பட்டது. கொடி மரம் புதுப்பிக்கப்பட்டது. ஆலயத்தின் உள்ளே செல்ல, தார்சாலை வசதியும் செய்யப்பட்டது. ஒலிப்பெருக்கி சாதனம் புதிதாகப் பொருத்தப்பட்டது.
12) 11.10.2002 அன்று முதல் அருட்பணி. T. ராபர்ட், C.Ss.R அவர்கள். நம் தமிழக ஆயர்களின் தீர்மானத்தின்படி, பங்கில் அன்பியங்களை உருவாக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. சிதிலம் அடைந்த ஆலயம் சீரமைக்கப்பட்டு புதுப்பொலிவு அடைந்தது. ஆலய வெள்ளி விழா யூபிலியும், இடைவிடா சகாய அன்னையின் பெருவிழாவும், மதுரை உயர் மறைமாவட்டப் பேராயர் மேதகு பீற்றர் பெர்னாந்து அவர்களின் தலைமையில் மாபெரும் விழாவாகக் கொண்டாடப்பட்டன. புனித ஜெரால்டு மஜெல்லா நவநாள் ஆரம்பிக்கப்பட்டது.
13)2005 முதல் அருட்பணி. சி.எஸ். லூக்காஸ், C.Ss.R அவர்கள். மரத்தால் செய்யப்பட்ட இருக்கைகள் (Pews) பங்கு மக்கள் பயன்பாட்டிற்காகப் போடப்பட்டன. புனித ஜெரால்டு மெஜல்வாவிற்குப் பீடமும், பழைய பங்கு அலுவலகமும் இவர் பணியாற்றிய காலக்கட்டத்தில் கட்டப்பட்டன.
2006இல் அருட்தந்தை செங்கோல்ராஜ், C.Ss.R அவர்களது உழைப்பினால் ஆலயத்தைச் சுற்றிலும் மதிற்சுவர் கட்டப்பட்டது.
14) 2008-2015 வரை பங்கின் 14 மற்றும் 15வது பங்குத்தந்தையாக அருட்பணி. சந்தியாகு, C.Ss.R செயல்பட்டார். இவரது பணிக்காலத்தில் லிகோரி அரங்கம் (விழா மேடை), ஆராதனை சிற்றாலயம் வட்டப் புல்வெளிப் பூங்கா, ஆலய முற்றத்தில் பேவர் பிளாக்குகள், புல்தரை ரவுண்டானா ஆகியன அமைக்கப்பட்டன. ஆலயத்திலும், வளாகத்திலும் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டன. இடைவிடா அன்னை நவநாளின் 2000ஆவது வாரம் 27.09.2014 அன்று சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இதன் நினைவாக ஆலய வளாக நுழைவாயிலில் பல அடுக்குக் கெபி கோபுரம் (Perpetuel Help Tower) கட்டப்பட்டது.
அருட்பணி. கிளமெண்ட் ஜோசப், C.Ss.R
இல்ல அதிபராக இருந்த போது, இடைவிடா சகாய அன்னை வணிக வளாகம் கட்டி முடிக்கப்பட்டு, 27.06.2010 அன்று திறந்து வைக்கப்பட்டது.
16) 2015-2019 காலகட்டத்தில் அருட்பணி. ஜோசப் கென்னடி, C.Ss.R பொறுப்பில் இருந்தார். கொடிமரம் புதுப்பிக்கப்பட்டது. பங்கிற்கென்று ஒரு கல்லறைத் தோட்டம் பெரிய ஊர்சேரி என்ற இடத்தில் 2 ஏக்கர் பரப்பளவில் வாங்கப்பட்டது. பழுதடைந்திருந்த சுவர்களும், ஆலய தளமும் புதுப்பிக்கப்பட்டு, ஆலயம் புதுப்பொலிவிற்குக் கொண்டு வரப்பட்டது. புதுப்பிக்கப்பட்ட ஆலயமானது 15 டிசம்பர் 2010 அன்று மதுரை உயர் மறைமாவட்டப் பேராயர் மேதகு அந்தோனி பாப்புசாமி அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.
17) 2019-2023 அருட்பணி. லூர்து அமிர்தராஜ், C.Ss.R. 2021இல் ஆலயப் பீடம் பொன் நிற பின்னணியில் கலைநயத்துடன் புதுப்பிக்கப்பட்டது.
ஆலய வளாக நுழைவாயிலிலிருந்து வரும் பாதையும், ரவுண்டானா பாதையும், ஆலயப் பின்புறங்களும் பேவர் பிளாக்குகள் அமைக்கப்பட்டு, வளாகம் மெருகூட்டப்பட்டது. நவீன முறையில் புதிய கழிப்பிடங்கள் கட்டப்பட்டன. கல்லறைத் தோட்டத்திற்கான பழைய நிலம் விற்கப்பட்டு, புதிதாக அய்யூர் என்ற இடத்தில் இரண்டரை ஏக்கர் பரப்பளவில் 14 செப்டம்பர் 2022 அன்று வாங்கப்பட்டது. சுற்றுச்சுவர் கட்டும் பணியானது 4இல் மூன்று பங்கு நிறைவு செய்யப்பட்டது.
ஆலய வளாகத்தில் புனித மிக்கேல் அதிதூதர், புனித அந்தோனியாருக்கு குருசடிகள் அமைக்கப்பட்டன.
2022இல் பங்கின் பல்வேறு அருள்பணிகள், சமூக மற்றும் கலை நிகழ்ச்சிகளுக்குத் தேயையான சமூகக் கூடம் Saint Clement's Community Hall அருட்பணி. சேவியர், C.Ss.R இல்ல அதிபராக இருந்தபோது கட்டப்பட்டது.
பங்கின் பொன்விழாக் காலமானது ஜூன் 10, 2023ஆம் ஆண்டு பங்கின் 18ஆவது பங்குத்தந்தையாக அருட்பணி. S. அருள் சேகர், C.Ss.R பொறுப்பேற்ற நாளிலிருந்து ஆரம்பமானது. ஆன்மீகக் காரியங்களில் மக்கள் அதிகமாகப் பங்கேற்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு, சிறந்த பங்காக விளங்க செயல்படுத்தப்பட்டு வருகிறது.
03 பிப்வரி 2024 அன்று இடைவிடா சகாய அன்னையின் நவநாளின் 2500 ஆவது வாரம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. சிறப்புத் திருப்பலியானது பாளையங்கோட்டை மேனாள் ஆயர் மேதகு ஜூடு பால்ராஜ் அவர்களால் நிறைவேற்றப்பட்டது. மேலும் பெங்களூரு இரட்சகர் சபை மாநிலத் தலைவர், அருட்தந்தை எட்வர்டு ஜோசப், C.Ss.R. அவர்களால் ஆங்கிலத்தில் திருப்பலி நிறைவேற்றப்பட்டு சிறப்பு செய்யப்பட்டது. அன்று முதல் மாதந்தோறும் மரியன்னையின் முதல் சனி பக்தி முயற்சி சிறப்பிக்கப்படுகிறது. முதல் சனியன்று நவநாள், சிறப்பு ஆராதனை, குணமளிக்கும் வழிபாடு, சாட்சியம் சொல்லுதல், திருப்பலி, எண்ணெய் பூசுதல், சகாய மாதா சாப்பாடு போன்ற பல நிகழ்வுகள் நடைபெறுகின்றன. அன்று மாலை பாவசங்கீர்த்தனம், அன்னையின் தேர்ப்பவனி, நவநாள், ஆராதனை, எண்ணெய் பூசுதல், சாட்சியம் சொல்லுதல் திருப்பலியுடன் நிறைவு பெறுகின்றது. ஒவ்வொரு மாதமும் மாதத்தின் இரண்டாம் சனியன்று சிறப்பு உபவாசத் தியானம் / உபவாசத் தொடர் ஜெபமாலை நடைபெறுகின்றது.
கல்லறைத் தோட்டத்தில், இறந்தவர்களை அடக்கம் செய்வதற்குப் பஞ்சாயத்துத் தலைவர், ஊராட்சித் தலைவர்களிடம் அனுமதி கோரி, சுமார் 4 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த பஞ்சாயத்து தீர்மானம் பெறப்பட்டது. அதன் பின்னர், அனுமதி கோரி மனு தயார் செய்து பங்குத்தந்தை, பங்குப் பேரவை பொறுப்பாளர்கள் கையொப்பமிட்டு 02.09.2024ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டு, கடுமையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, 10 ஆண்டுகளாக செய்த அனைத்து முயற்சிகளுக்குப் பயனாக, இறுதியாக 05.05.2025 அன்று மாவட்ட ஆட்சியர் அவர்களின் ஒப்புதலும் பெறப்பட்டது, இறைவனுக்கு நன்றி.
பொன்விழாக் கொண்டாட்டம்:
பங்கின் பொன்விழா நினைவாக புதிய அரங்கம் (stage) கட்டுவதற்கு 24, ஆகஸ்ட் 2024 அன்று அடிக்கல் நாட்டப்பட்டது. ஆலய நுழைவு வாயிலில் பொன்விழா வளைவு (Arch) கட்டுவதற்கு, 16.11.2024 அன்று அடிக்கல் நாட்டப்பட்டது. பங்கின் பொன்விழா நினைவாக லிகோரி அரங்கம் முற்றிலும் புதிதாகக் கட்டப்பட்டுள்ளது. மேலும் ஆலயநுழைவு வாயிலில் பொன்விழா வளைவும் கட்டப்பட்டுள்ளது.
பங்கின் பொன் விழாவினை 3 நாட்கள் மிகவும் சிறப்பாகக் கொண்டாடத் திட்டமிட்டு, அதற்கான பல்வேறு நிகழ்வுகள் செயல்படுத்தப்பட்டன.
24 ஜனவரி 2025-ஒப்புரவின் நாள்
25 ஜனவரி 2025-உறவின் நாள்
26 ஜனவரி 2025-நன்றியின் நாள் என மூன்று நாட்கள் பொன்விழா சிறப்பிக்கப்பட்டது.
25 ஜனவரி 2025 பொன்விழா நாளாகக் கொண்டாடப்பட்டது. அன்று புதிய பொன்விழா அரங்கம் (stage) மற்றும் புதிய பொன் விழா வளைவு (Arch) திறந்து வைக்கப்பட்டது. பொன் விழா அரங்கத்தில் சிவகங்கை மறைமாவட்ட மேனாள் ஆயர் மேதகு செ. சூசைமாணிக்கம் அவர்களின் தலைமையில் பொன்விழாத் திருப்பலி நிறைவேற்றப்பட்டு, 50க்கும் மேற்பட்ட குருக்கள் கலந்து கொண்டனர். பொன்விழா மலர் வெளியிடப்பட்டது. மேலும், இடைவிடா சகாய அன்னைக்கு ஒரு புதிய பாடல் மற்றும் நவநாள் புத்தகம் வெளியிடப்பட்டது.
கடந்த ஆண்டுகளில் இறைவன் இம்மக்களுடன் இருந்து, அவரது வல்லமை மிக்க அருள்கரத்தால் இவர்களை வழிநடத்தி வந்தமைக்காக, நிறைந்த உள்ளத்தோடு ஆண்டவரைப் போற்றிப் பெருமைப்படுத்துகின்றனர். இடைவிடா சகாய அன்னையின் சக்திமிகு இறைவேண்டலும், பாதுகாப்பும் இவர்களுக்கு எப்போதும் உண்டு என்ற நம்பிக்கையோடு தங்களது விசுவாசப் பயணத்தைத் தொடர்கின்றனர்.
பங்கின் பங்கேற்பு அமைப்புகள்:
1. மரியாயின் சேனை
2. மறைக்கல்வி மன்றம்
3. பீடசிறார் குழு
4. வின்சென்ட் தே பவுல் சபை
5. இளையோர் இயக்கம்
6. முதியோர் இயக்கம்
7. வழிபாட்டுக் குழு
8. பாடகர் குழு
பங்கில் உள்ள துறவற இல்லங்கள்:
1)Bon Secours Sisters
2)Holy Cross Sisters
3) Sisters of Mary Immaculate
4) Sisters of St Joseph of Lyons.
(ஆதாரம்: பங்குப் பதிவேடு, ஆலய வெள்ளிவிழா மலர் மற்றும் குருக்களின் வாயிலாக)
தகவல்கள்: பங்குதந்தை அருட்பணி. அருள் சேகர், C.Ss.R அவர்கள்.
தகவல்கள் சேகரிப்பு மற்றும் புகைப்படங்கள்: பங்குப் பேரவை செயலர் திரு. சாமுவேல் அவர்கள்.
தகவல்கள் சேகரிப்பில் உதவி: புனித சவேரியார் அன்பியத் தலைவர் திருமதி. குயின் மேரி அவர்கள்.








