புனித சூசையப்பர் ஆலயம்
இடம்: வெளியக்கோட்டை, ஏ.ஆர். மங்கலம் அஞ்சல், ஆர்.எஸ். மங்கலம் தாலுகா
மாவட்டம்: இராமநாதபுரம்
மறைமாவட்டம்: சிவகங்கை
மறைவட்டம்: ஆர். எஸ். மங்கலம்
நிலை: கிளைப்பங்கு
பங்கு: புனித அந்தோனியார் ஆலயம், ஏ.ஆர். மங்கலம்
பங்குத்தந்தை அருட்பணி. X. அன்பரசு, O.Praem
குடும்பங்கள்: 50
அன்பியங்கள்: 2
திருப்பலி நேரங்கள்:
ஞாயிறு திருப்பலி மாலை 06:30 மணி
மாதத்தின் முதல் புதன் மாலை 07:00 மணி புனித சூசையப்பர் நவநாள் திருப்பலி
திருவிழா: மே மாதம் 01-ம் தேதி
Church Map location:
https://maps.app.goo.gl/jfLhotEN8apoVua39
வழித்தடம்: திருச்சி -இராமேஸ்வரம் சாலையில், சனவேலி பேருந்து நிலையத்திலிருந்து, 2கி.மீ தொலைவில் வெளியக்கோட்டை அமைந்துள்ளது.
வரலாறு:
1895 ஆம் ஆண்டு கல்லடிதிடல் பங்கைச் சார்ந்த வெளியக்கோட்டை கிராமத்தில், 20 குடும்பங்கள் ஒன்றுசேர்ந்து குடிசை ஆலயம் அமைத்து இறைவனை வழிபட்டு வந்தனர். 1900 ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து சந்தன மரத்தால் ஆன சுரூபங்கள் கடல் வழியாக கொண்டு வரப்பட்டது.
1900 ஆண்டு காலக்கட்டத்தில் பல கிராமங்களில் ஆலயம் இல்லாத சூழல். அப்பொழுது டிசம்பர் மாதம் 25ஆம் தேதி கிறிஸ்து பிறப்பு நிகழ்வை விமரிசையாக 8 நாட்கள் மேளதாளத்துடன் வீட்டுக்கு வீடு சென்று அறிவிப்பார்கள். பின்னர் எட்டாம் நாள் பல கிராமத்தில் இருந்து குழந்தை இயேசுவைக் காண, அனைத்து சமய மக்களும் வருகை புரிவார்கள். அன்றைய காலத்தில் பேய் பிடித்தவர்கள், குழந்தை இயேசுவின் பாதத்தை தொட்டு வணங்கினால், பேய் விலகிச் செல்லும். இந்த அதிசயம் இன்றும் நடைபெறுகிறது. குழந்தை இல்லாதவர்கள் ஆலயம் வந்து ஜெபித்தால், குழந்தை பாக்கியம் பெறும் அதிசயமும் நடைபெற்றது. அப்பொழுது கோவில் பிள்ளை சூசைமுத்து திருப்பணி செய்தார். சுமார் 80 வருடங்கள் இந்த ஆலயத்தில் வழிபட்டு வந்தனர்.
பின்னர் 1974 ஆம் ஆண்டு ஓரிக்கோட்டை பங்கு, கைகாட்டி (சின்னகீரமங்கலம்) -யில் இருந்து செயல்பட்டது. காரணம் அப்போது ஓரிக்கோட்டை பங்காக இருந்தாலும், போக்குவரத்து மற்றும் பிற வசதிகளை கருத்தில் கொண்டு கைகாட்டி ஆலயத்தில் இருந்து பங்கு செயல்பட்டு வந்தது. அன்றைய பங்குத்தந்தை அருட்பணி. சவரி முத்து அவர்களின் ஆலோசனைப்படி ஓட்டு கொட்டகை அமைத்து, அதனை புனித சூசையப்பர் ஆலயமாக மாற்றம் பெற்று செயல்பட்டது.
அதன் பின்பு 1978 ஆம் ஆண்டு கொக்கூரணி பங்குடன் வெளியக்கோட்டை இணைக்கப்பட்டது. அன்றைய அருட்தந்தை பொன்னாடு அவர்கள், மாட்டு வண்டியில் வந்து, மாதம் ஒருமுறை திருப்பலி நிறைவேற்றுவார்.
தை மாதம் 5ஆம் தேதி அந்தோணியார் பொங்கல் சிறப்பாக, கலை நிகழ்ச்சியுடன் கொண்டாடப்பட்டது. பின்னர் 1997 ஆம் ஆண்டு ஆர்.எஸ் மங்கலம் பங்குடன் இணைக்கப்பட்டது. ஓட்டு கொட்டகை ஆலயமானது சேதம் அடைந்து, மழைக் காலங்களில் தண்ணீர் ஒழுகியது. ஆகவே புதிய ஆலயம் கட்டித்தர வேண்டும் என, அன்றைய பங்குத்தந்தை அருட்பணி. ஜெயபதி அவர்களிடம், மக்கள் கோரிக்கை விட்டுத்தனர்.
அருட்பணி. ஜெயபதி அவர்களின் முயற்சியால் சிமெண்டால் ஆன அட்டை (ஆஸ்பெஸ்டாஸ்) கூரை வேய்ந்து, முன்புறம் கான்கிரீட் தளம் போடப்பட்டு அதில் கோபுரம் அமைத்து, 2000 ஆம் ஆண்டு அன்றைய சிவகங்கை மறைமாவட்ட ஆயர் மேதகு எட்வார்ட் பிரான்சிஸ் அவர்களால் அர்ச்சித்து திறந்து வைக்கப்பட்டது.
பின்னர் 2011 ஆம் ஆண்டு ஒரு சில கிராமங்களுடன் வெளியக்கோட்டை கிராமத்தையும் இணைத்து, ஏ.ஆர் மங்கலம் என புதிய பங்கை சிவகங்கை மறைமாவட்ட ஆயர் மேதகு சூசை மாணிக்கம் அவர்கள் அறிவித்தார். அன்றைய பங்குத்தந்தை பிரான்சிஸ் O.Praem, அதற்கு பின்பு தாமஸ் ஆல்வா எடிசன் O.Praem ஆலய வளர்சிக்கு பாடுபட்டனர். 2019 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை பங்குத்தந்தையாக செயல்படும் X. அன்பரசு, Opraem அவர்கள் வெளியக்கோட்டை கிராமத்தில் அன்பியம், மரியாயின் சேனை, சூசையப்பர் சேனை,
வின்சென்ட் தே பவுல் சபை,
பங்கு பேரவை, இளைஞர் பேரவை போன்ற அமைப்புகளை ஏற்படுத்தி, வளர்ச்சிப் பாதையில் வழிநடத்தி வருகின்றார்.
புதுப்பொலிவுடன் ஆலயம்:
2000 ஆம் ஆண்டு கட்டப்பட்ட ஆலயத்தின் வெள்ளிவிழா நினைவாக, பங்குதந்தை அருட்பணி. அன்பரசு O.Praem அவர்களின் முயற்சியால், ஆலயம் புதுப்பிக்கப்பட்டு, நற்கருணை நிறுவப்பட்டு, சிவகங்கை மறைமாவட்ட ஆயர் மேதகு. லூர்து ஆனந்தம் அவர்களால் 26.05.2025 அன்று அர்ச்சிக்கப்பட்டது.
தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பங்குத்தந்தை யின் வழிகாட்டலில், ஏ.ஆர். மங்கலம் பங்கு ஆலய பொருளாளர் திரு. பிரதீப் ஜெயசீலன் அவர்கள்.






