1007 புனித தோமையார் ஆலயம், பேய்க்குளம்

        
புனித தோமையார் (மலையப்பர்) ஆலயம்

இடம்: பேய்க்குளம் (தோமையார்புரம்)

மாவட்டம்: தூத்துக்குடி

மறைமாவட்டம்: தூத்துக்குடி

மறைவட்டம்: சாத்தான்குளம்

நிலை: கிளைப்பங்கு

பங்கு: புனித சவேரியார் ஆலயம், சி.சவேரியார்புரம்

பங்குத்தந்தை அருட்பணி. ரெமிஜியுஸ் S. லியோன்

குடும்பங்கள்: 30

ஞாயிறு திருப்பலி காலை 10:00 மணி

திருவிழா: ஜூன் மாதம் கடைசி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, ஜூலை 3-ம் தேதியை அடுத்து வருகிற ஞாயிற்றுக்கிழமை நிறைவுபெறும் வகையில் பத்து நாட்கள் நடைபெறும்.

மண்ணின் இறையழைத்தல்கள்:

அருட்பணி. தாமஸ் ராயன், DS (Disciples of Hope), USA

அருட்சகோதரி. S. ஆரோக்கியம்மாள், Cluny

அருட்சகோதரி. D. ஜெனட்மேரி, DSMP (Gunellian Sisters)

Map location: St. Thomas Church, Thommaiyarpuram

https://maps.app.goo.gl/KaPVAaHF8gzZryeT9

வரலாறு:

சாத்தான்குளம் வேத போதக மறைதளத்தின் வரலாறானது, சோமநாதபேரி, பேய்க்குளம் ஆகிய பகுதிகளை மையமாகக் கொண்டதாகும். அதில் வடமேற்கு பகுதியான பேய்க்குளம்  மனம் திரும்பிய பழைய கிறிஸ்தவர்கள் வாழ்ந்த பகுதியாகும். 1861-ல் சாத்தான்குளம் தனிப்பங்காக உருவாகும் முன்னர், கி.பி. 1682க்கு முன்பே, உலர் மீன்கள் வியாபாரம் செய்ய வந்த பரதர்கள் இங்கு குடியேறி, புனித மலையப்பர் என்ற தோமையாருக்கு இந்த ஆலயத்தை எழுப்பியுள்ளனர். 

ஆரம்பத்தில் சுமார் 30 மீனவ குடும்பங்கள் வசித்ததாக வரலாறு கூறுகிறது. மேலும் இந்த ஆலயம் சாத்தான்குளம் மறைவட்டத்தில் உள்ள ஆலயங்களிலேயே பழைமையான, புராதன ஆலயமாக இருந்து வருகிறது. ஆதி பெயர் மலையப்பர் ஆலயம் என்றே அழைக்கப்பட்டு வருகிறது.

தெற்கு விஜயநாராயணம் மற்றும் சேரகுளம் ஊர்களில் வாழ்ந்தவர்கள் இந்த ஆலயத்தை தாய்க் கோவிலாக கருதி வந்தார்கள். அருகிலுள்ள கிராமங்களில் ஆலயங்கள் இல்லாத போது; திருமுழுக்கு, முதல் திருவிருந்து போன்ற திருவருட்சாதனங்கள் இவ்வாலயத்தின் வழியாகவே வழங்கப்பட்டு வந்துள்ளது.

1682க்கு முன்னரே கட்டப்பட்ட இந்த ஆலயம், தற்போது வரை இடிக்கப்படாமல் அதன் பழைமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு, வழிபாடுகள் நடந்து வருகிறது. ஆலய பீடம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. 2004ம் ஆண்டு புனித தோமையார் கெபி கட்டப்பட்டது. 

2015ம் ஆண்டு ஓட்டு மண்டபம் மாற்றப்பட்டு கான்கிரீட் மண்டபம் அமைக்கப்பட்டது. 2023ல் ஆலயம் மற்றும் மண்டப தளங்கள் கிரானைட் கற்களால் புதுப்பிக்கப்பட்டன. திருவிழா திருப்பலி நடத்திட அரங்கம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. சப்பரம் நிறுத்தும் கூடம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. நோயாளிகள் தங்கி செபிக்க கூடம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

தற்போது ஆலயத் திருவிழாவானது ஜூன் மாதம் கடைசி வெள்ளிக்கிழமை கொடியேற்றி, ஜூலை மாதம் முதல் சனி, ஞாயிறு அன்று திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இத்திருவிழாவில் சுற்று வட்டாரங்களில் உள்ள அனைத்து கத்தோலிக்க, தென் இந்திய திருச்சபை கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி இந்து சகோதரர்களும் கலந்து கொண்டு சிறப்பித்து வருகிறார்கள்.

சாத்தான்குளம், சோமநாதபேரி மற்றும் சிந்தாமணி ஆகிய பங்குகளின் இணையூராக இருந்த இந்த ஊர் தற்போது சி.சவேரியார்புரம் பங்கின் இணையூராக இருந்து வருகிறது. சி.சவேரியார்புரம் பங்கில் இணையூராக உள்ள இவ்வூரின் ஆலயமே மிகப் பழமையான ஆலயத்தைக் கொண்டுள்ளது என்றால் அது மிகையல்ல.

தகவல்கள் பங்குதந்தை அருட்பணி. ரெமிஜியுஸ் S. லியோன் அவர்கள்.

ஆலய வரலாறு: சி.சவேரியார்புரம் பங்கு ஆலய வெள்ளிவிழா மலர் 2024.

புகைப்படங்கள்: சகோதரர். ஜிம் எலியட் பிரேம்குமார், பாளையங்கோட்டை.