1020 புனித யாகப்பர் ஆலயம், வடசேரி

             

புனித யாகப்பர் ஆலயம்

இடம்: வடசேரி

மாவட்டம்: கன்னியாகுமரி

மறைமாவட்டம்: கோட்டார்

மறைவட்டம்: தேவசகாயம் மலை

நிலை: பங்குத்தளம்

கிளைபங்குகள்:

(1) புனித ஆரோக்கிய அன்னை ஆலயம், கிருஷ்ணன்கோவில்

(2) புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம், மீனாட்சிபுரம்

பங்கு அருட்பணியாளர்

அருட்பணி. ஆன்றனி பெர்டிக் புருனோ

குடும்பங்கள்: 299

அன்பியங்கள்: 8

1. புனித அந்தோணியார் அன்பியம்

2. புனித ஜார்ஜியார் அன்பியம்

3. புனித செபஸ்தியார் அன்பியம்

4. புனித தொன்போஸ்கோ அன்பியம்

5. புனித சவேரியார் அன்பியம்

6. புனித தேவசகாயம் அன்பியம்

7. புனித பேதுரு அன்பியம்

8. புனித பவுல் அன்பியம்

வழிபாட்டு நேரங்கள்:

ஞாயிறு திருப்பலி காலை 07:00 மணி

திங்கள், செவ்வாய், வெள்ளி, சனி காலை 06:20 மணி திருப்பலி

புதன் மாலை 06:15 மணி திருப்பலி

வியாழன் காலை 11:00 மணி நவநாள் திருப்பலி

மாதத்தின் முதல் வியாழன் காலை 11:00 மணி சிறப்பு நவநாள் திருப்பலி மற்றும் நற்கருணை ஆசீர்

திருவிழா: ஜூலை 25ம் தேதியை மையமாகக் கொண்ட 11 நாட்கள்.

மண்ணின் இறையழைத்தல்

அருட்பணி. மைக்கேல் ஜீவா

வழித்தடம்: வடசேரி -ஒழுகினசேரி இடதுபுறம்

வடசேரி -எஸ்எம்ஆர் வலதுபுறம் வந்தால் இவ்வாலயத்தை வந்தடையலாம்.

Map location: St. James Church

https://maps.app.goo.gl/6EyPJFHVGKyhqjco8

ஆலய வரலாறு:

முக்கடலும் முத்தமிழும் சங்கமிக்கும் குமரியில், வீரமும் ஈகையும் கரைபுரண்டோடும் இம்மண்ணில்; உரோமையர்களும், யவனர்களும், போர்ச்சுக்கீசியர்களும் வணிகத்திற்காக கோட்டாறு வந்தனர். கோட்டாறுக்கு வடக்கே அமைந்த ஊர் தான் வடசேரி.

அக்காலத்தில் திருவிதாங்கூர் சமஸ்தானம் வேணாடு என்று அழைக்கப்பட்டு வந்தது. அப்போது சேசுசபை குருக்கள் இறைப்பணியாற்றிக் கொண்டிருந்தனர். கி.பி.1542-ம் ஆண்டு புனித சவேரியார் நற்செய்தி அறிவிப்பு பணிக்காக இந்தியா வந்தார். அந்த புனிதரின் பாதங்கள் பட்ட பகுதியில் குமரி மண்ணும் ஒன்றாகும். அவர் வருவதற்கு முன்பே கிறிஸ்தவர்கள் இங்கு வாழ்ந்ததாக வரலாறு உண்டு.

கி.பி. 1544ம் ஆண்டு விசய நகர வடுகர் படை வேணாட்டை முற்றுகையிட்டது. அப்போது வேணாடு மன்னருக்காக நம் சவேரியார், வடசேரி மேட்டிலிருந்து வடுகர் படையை நோக்கி தன் சிலுவையை உயர்த்தி, இயேசுவை நோக்கி மன்றாடினார். அந்த சிலுவையிலிருந்த வெளிச்சம் இப்படையை பின்னோக்கி நகரச் செய்தது. இது வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் நினைவாக கி.பி. 1603-ம் ஆண்டு சுவாமி. அந்திரேயாஸ் புச்சேரியா என்பவர் புனித இஞ்ஞாசியார் குருசடியை நிறுவினார்.

சேசு சபையினரால் வடசேரி பகுதியில் சிற்றாலயம் அமைக்கப்பட்டது. அது மரியன்னை ஆலயமாக உருவாக்கப்பட்டு, போர்ச்சுகீசியருடைய கட்டிட அமைப்பில் பீடமும், கோயிலும் அமைக்கப்பட்டது. அதன்பின் பதுவேரா மிஷனை சார்ந்த குருக்கள் வருகை புரிந்து திருப்பலி நிறைவேற்றி வந்தார்கள். அதற்காக அவர்கள் தங்கி சென்றதற்கான இட அமைப்பும் அதாவது மேடையும் இருந்தது.

இந்த ஆலயமானது மாற்று சமூகத்தினரால் போற்றப்பட்டும், வணங்கப்பட்டும், வாழ்த்தப்பட்டும், கொண்டாடப்பட்டும் வந்தது. இக்கோவில் திருவிழாவில் எல்லா சமூகமும், சமயமும் ஒன்றிணைந்து வழிபட்டு வந்தனர். அதற்கு சான்றாக, குழந்தை பேறு பெற்றதற்கு நன்றியாக ஆலயத்தின் முன் மண்டபம் கட்டபட்டது. அதன்பின் ஏறக்குறைய 170 ஆண்டுகளுக்கு முன்னர் மணிகூண்டும் கட்டப்பட்டது.

பின்னாளில், வடசேரி ஆலயமானது இராயப்பர், சின்னப்பர், யாகப்பர் ஆலயமாக உருவாகியது. பின்னர் மருவி சந்தியாகப்பர் ஆலயமாக மாற்றமடைந்தது.

இத்தனை பழைமை வாய்ந்த பெருமைக்குரிய வடசேரி பங்குசமூகத்தின் பாதுகாவலராக இருக்கின்ற சந்தியாகப்பருக்குரிய பழைய ஆலயமானது இடிக்கப்பட்டு, அன்றைய கோட்டார் பங்கின் பங்குத்தந்தையும் பின்னாள் ஆயருமான அருட்தந்தை லியோன். A. தர்மராஜ் அவர்களின் வழிகாட்டுதலில் 5.1.1986 அன்று அருட்பணி மார்ட்டின். S. அலங்காரம் அவர்களால் புதிய ஆலயத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. பின் வடசேரி இறைமக்களின் அயராத உழைப்பினாலும், தியாகத்தினாலும் இப்புதிய ஆலயம் கட்டி முடிக்கப்பட்டு 25.7.1987 அன்று மேதகு ஆயர். ஆரோக்கியசுவாமி அவர்களால் அர்ச்சிக்கப்பட்டு, இறை வழிபாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டது.

கோட்டார் புனித சவேரியார் பேராலய பங்கின் கிளைப்பங்காக செயல்பட்டு வந்த வடசேரி, கிருஷ்ணன்கோயில் மற்றும் மீனாட்சிப்புரம் ஆகிய பங்குகள் 1997ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் நாளன்று, வடசேரி தூய யாகப்பர் ஆலயத்தை மையமாக கொண்டு, தனிபங்காக உருவாகி திறம்பட பணிபுரிய தொடங்கியது இப்பங்கு சமூகம்.

அருட்பணி. வலேரியன் அவர்கள் முதல் பங்குபணியாளராக பணியாற்றினார். 22.05.1999 அன்று அருட்பணியாளர்களுக்கான அலுவல் அறை மற்றும் அறைக்கான கட்டிடம் மேதகு ஆயர். லியோன் அ. தர்மராஜ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.

வடசேரி ஆலயமானது 2008ஆம் ஆண்டு முதல் 2025ம் ஆண்டு வரை, பங்கில் பணியாற்றிய அருட்பணியாளர்களின் ஒத்துழைப்புடன் ஆலயத்தின் தரை, பலிபீடம், நற்கருணை பேழை மற்றும் ஆலய திருபண்ட அறை என அனைத்தும் புதுப்பிக்கப்பட்டது. அத்துடன் ஆலய வளாகத்தினுள் குழந்தை இயேசு மற்றும் புனித அந்தோணியார் திருசுரூபம் அமைக்கப்பட்டுள்ளது.

2002ஆம் ஆண்டு முதல் பங்கு குடும்ப விழாவில், கிளை பங்குகள் திருப்பலி சிறப்பித்தலும், கிளை பங்கின் குடும்ப விழாக்களில் வடசேரி பங்கு மக்கள் திருப்பயணிகளாக சென்று திருப்பலி சிறப்பித்தும், தங்களது உடனிருப்பை பகிர்ந்து கொள்கின்றனர்.

பங்கு உருவான காலத்தில் ஐந்து அன்பியங்களாக செயல்பட்டு வந்த பங்குசமூகம், 2021ஆம் ஆண்டு மறுசீரமைக்கப்பட்டு எட்டு அன்பியங்களாக தற்போது செயல்பட்டு வருகிறது.

2012ஆம் ஆண்டு முதல் நவநாள் செபிக்கும் பக்தி முயற்சி தொடங்கப்பட்டது. அன்றிலிருந்து இன்றளவும் பல இடங்களிலிருந்தும் வரும் நம்பிக்கையாளர்கள் புனித யாகப்பரை நோக்கி மன்றாடி, அவரின் பரிந்து பேசுதலால் இறையருளை பெற்றுக் கொண்டே இருக்கிறார்கள். சிறப்பாக முதல் வியாழன் அன்று நடைபெறும் நவநாளில் திருப்பயணிகளாக வரும் அனைத்து மக்களும், புனித யாகப்பர் வழியாக இறையாசீர் பெற்று செல்கின்றனர்.

பங்கு குடும்ப விழாக்களின் கொடியேற்றத்தின் போது, இவர்களுடன் வாழும் பிற சமய சகோதரர்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்பட்டு, அவர்களும் திருகொடியேற்ற நிகழ்வில் பங்கேற்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறாக, யாகப்பரின் பரிந்துரையோடும். ஆசியோடும், அவரது வழி நடத்தலில் வடசேரி பங்குசமூகம் தனி பங்காக உருவாகி 28 ஆண்டுகளை கடந்து, ஆன்மீகப் பாதையில் சிறப்புற பயணித்து வருகின்றது.

பங்கில் உள்ள கெபி / குருசடி :

கி.பி.1544ம் ஆண்டு வடுகர் படையெடுப்பின் போது வேணாடு மன்னருக்கு உதவி செய்ய வந்த ஆங்கிலேயர் படைகள் தங்கிய பகுதியும், சவேரியார் சிலுவை பிடித்து வடுகர் படையை விரட்டிய பகுதியும் ஒன்றே. அதன் நினைவாக அப்குதி வாழ் மக்களுக்கு நவம்பர் 30 மற்றும் டிசம்பர் 1, 2 நாட்களில் படைகஞ்சி வழங்கிய வரலாறும் உண்டு. இன்றும் இந்நிகழ்வு தொடர்கிறது.

இங்கு சுவாமி. அந்திரேயாஸ் புச்சேரியா என்பவரால் 1603-ல் அமைக்கப்பட்ட புனித இஞ்ஞாசியார் குருசடி, 23.04.2000 இல் மறுசீரமைக்கப்பட்டது. இந்த இடத்தில் தான் அமைதி பூங்காவான கல்லறை தோட்டமும் அமைந்துள்ளது.

கி.பி 40ஆம் ஆண்டு அன்னை மரியா உயிரோடு எருசலேமில் வாழ்ந்த காலத்தில், நம் புனிதருக்கு ஸ்பெயின் நாட்டிலுள்ள சரகோசா நகரில் தூண் அன்னையாக காட்சியளித்து நற்செய்தி பணியில் திடப்படுத்தினார். அங்கிருந்து தூண் மாதாவின் திருசுரூபம் 25.07.2023 அன்று கொண்டுவரப்பட்டு, பீடத்தில் அமைக்கப்பட்டது.

ஆலய வளாகத்தில் உள்ள கன்னி மரியாள் கெபியானது, 19.7.2024 அன்று மறுசீரமைக்கப்பட்டு, தற்போது செபமாலை பக்தி முயற்சியால் மக்களை ஆன்மீகத்தில் நிலைத்திருக்க உறுதுணையாய் அமைந்துள்ளது.

பங்கின் மற்றொரு சிறப்பு :

கிளைபங்கு மீனாட்சிபுரம், புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம். ஓட்டுக் கட்டிடமாக அமைந்த இக்கோவில் 1974ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3ம் தேதி கட்டப்பட்டது. தற்போது பொன்விழாவை கடந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

பங்கின் மற்றும் ஒரு வியப்பு :

கிளைபங்கு கிருஷ்ணன்கோவில், புனித ஆரோக்கிய அன்னை ஆலயம். குருசடி அமைத்து இஞ்ஞாசியாரை வழிபட்டு வந்த மக்கள் அம்பலத்தை கோவிலாக மாற்றினர். எவ்வாறெனில், மேனாள் ஆயர் ரெமிஜியூஸ் அவர்களால் 17.08.1990 இல் அடிக்கல் நாட்டப்பட்டு, 27.9.1992 அன்று மேனாள் ஆயர். லியோன் அ. தர்மராஜ் அவர்களால் கோவிலாக இறைவழிபாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டது.

பங்கின் சபைகள் / இயக்கங்கள் :

மரியாயின் சேனை

புனித வின்சென்ட் தெ பவுல் சபை

இயேசுவின் திருஇருதய சபை

மறைக்கல்வி மன்றம்

உள்நாட்டு மீனவர் சங்கம்

கோல்பின் இயக்கம்

பாலர் சபை & சிறார் இயக்கம்

பங்கில் பணியாற்றிய பங்குதந்தையர் மற்றும் இணைபங்குதந்தையர் பட்டியல்:

1. அருட்பணி. வலேரியன் (1997-1999)

2. அருட்பணி. வென்சஸ்லாஸ் (1999-2002)

3. அருட்பணி. அருள்ராஜ் (2002-2002)

4. அருட்பணி. தார்சியூஸ் ராஜ் (2002-2006)

5. அருட்பணி. மார்ட்டின். S. அலங்காரம் (2006-2008)

6. அருட்பணி. கில்ட்டஸ் (2008-2010)

7. அருட்பணி. ஜோசப் (2010-2014)

8. அருட்பணி. விமல்ராஜ் (2014-2018)

9. அருட்பணி. சகாய ஆனந்த் (2018-2020)

10. அருட்பணி. ஆரோக்கிய ரமேஷ் (2020-2022)

11. அருட்பணி. ஆன்றனி பெர்டிக் புரூனோ (2022-----)

இணை பங்குதந்தையர்கள்:

அருட்பணி. ஜெல்பரின் (2014-2015)

அருட்பணி. ஜாண் மில்ட்டன் (2017-2018)

புதுமைகள் பலபுரியும் வடசேரி புனித சந்தியாகப்பர் ஆலயம் வாருங்கள்... இறையாசீர் பெற்றுச் செல்லுங்கள்..

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பங்குதந்தை அருட்பணி. ஆன்றனி பெர்டிக் புரூனோ அவர்கள்.