1023 புனித ஆரோக்கிய மாதா ஆலயம், பொட்டல்குளம்

    

புனித ஆரோக்கிய மாதா ஆலயம்

இடம்: பொட்டல்குளம், அழகப்பபுரம் அஞ்சல்

மாவட்டம்: கன்னியாகுமரி

மறைமாவட்டம்: தூத்துக்குடி

மறைவட்டம்: வடக்கன்குளம்

நிலை: கிளைப்பங்கு

பங்கு: புனித அந்தோனியார் ஆலயம், அழகப்பபுரம்

பங்குத்தந்தை அருட்பணி. M. மார்ட்டின் 

உதவி பங்குத்தந்தை அருட்பணி. ஜேம்ஸ் ரொசாரியோ

குடும்பங்கள்: 55

அன்பியங்கள்: 2

ஞாயிறு திருப்பலி காலை 06:30 மணி

நாள்தோறும் மாலை 05:30 மணி ஜெபமாலை, பிரார்த்தனை

திருவிழா: ஆகஸ்ட் மாதம் 16-ம் தேதி முதல் 25-ம் தேதி வரையிலான பத்து நாட்கள்.

மண்ணின் இறையழைத்தல்கள்:

1. அருட்பணி. தேவசகாயம், திருஇருதயங்கள் சபை

2. அருட்சகோதரர். ஆரோக்கிய பர்வின் ராஜ், OFM Cap 

வழித்தடம்: காவல்கிணறு விலக்கு -குமாரபுரம் -அஞ்சுகிராமம் -அழகப்பபுரம் -புன்னார்குளம். புன்னார்குளத்தில் இருந்து இடதுபுறமாக சுமார் 3/4கி.மீ தொலைவில் சென்றால் பொட்டல்குளம்.

நாகர்கோவில் -சுசீந்திரம் -வழுக்கம்பாறை -சகாயபுரம் -மயிலாடி -புன்னார்குளம். இங்கிருந்து வலதுபுறமாக 3/4 கி.மீ தொலைவில் சென்றால் பொட்டல்குளம் அமைந்துள்ளது.

Church location map:

https://maps.app.goo.gl/hpnT6K8MZjxjMGz16

வரலாறு:

அழப்பபுரத்திற்கு சற்று தென் மேற்காக, மருந்துவாழ் மலையின் வடகிழக்காக இயற்கை எழில் கொஞ்சும் வயல் வெளிகளும், தென்னந்தோப்புகளும் சூழ்ந்துள்ள இடமே பொட்டல்குளம். இந்த கிராமத்தில் இந்து மதத்தினரும், தென்னிந்திய திருச்சபையைச் சார்ந்தவர்களும், ஒன்றிரண்டு கத்தோலிக்க மக்களும் வாழ்ந்து வந்தனர். இந்த ஒன்றிரண்டு கத்தோலிக்க குடும்பங்களும் அழகப்பபுரம் பங்கிற்கு உட்பட்டவர்களாக வாழ்ந்து வந்தனர்.

பொட்டல்குளத்தில் வாழ்ந்த அருள்மணி (தென்னிந்திய திருச்சபையை சார்ந்தவர்) என்பவர் சிறியபுஷ்பம் என்ற சுத்தோலிக்கப் பெண்ணை மணமுடித்தார். ஆனால் அருள்மணி சி.எஸ்.ஐ ஆலயத்திற்கே சென்று வந்தார். சிறியபுஷ்பத்தையும் அங்கே வரும்படி அழைத்தார். ஆனால் சிறியபுஷ்பம் பக்தியுள்ள பெண்ணாக இருந்ததால் அங்கு செல்ல மறுத்து விட்டார். இந்நிலையில் அவர்களுக்கு குழந்தைகள் பிறந்தனர். 1974-ம் ஆண்டில் அருள்மணிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அவ்வேளையில் சிறிபுஷ்பம் அவர்கள் தனது கணவரின் அருகில் வேளாங்கண்ணி மாதாவின் திருவுருவ படத்தை வைத்து ஜெபித்து வந்தார். தூக்கத்தில் அருள்மணி அவர்களுக்கு வேளாங்கண்ணி மாதா காட்சி கொடுத்து, தற்போது ஆலயம் அமைந்துள்ள இடத்தைக் காட்டி தமக்கு ஒரு ஆலயம் கட்ட வேண்டும் என்று கூறியுள்ளார். தூக்கம் விழித்தவர் புதுமையாக உடல்நலம் பெற்றதாகவும் உணர்ந்தார்.

பொழுது விடிந்ததும் அழகப்பபுரம் வந்து அப்போதைய பங்குத்தந்தை அருள்திரு. ஜாண்சேவியர் அவர்களிடம் நிகழ்ந்ததைத் தெரிவிக்க, அவரும் உடன்பட்டவராக அவ்விடம் சென்று பார்வையிட்டார். ஆனால் அந்த குறிப்பிட்ட இடம் ஒரு ராணுவ வீரரின் பொறுப்பிலிருந்தது. அந்த நிலத்தை விற்கப் போவதையறிந்த அழகை மரியாயின் சேனையினரின் முயற்சியால், 16 சென்ட் நிலத்தை ராணுவ வீரர் கோவில் கட்டுவதற்கென்று வெறும் 2000 ரூபாய்க்கு கொடுக்க, பங்குத்தந்தையின் இசைவுடன் வாங்கப்பட்டு, ஆலயம் அமைக்க ஏற்பாடுகள் தொடங்கப் பட்டன. 31-05-1975 அன்று தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் மேதகு அம்புரோஸ் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது. பங்குத்தந்தையின் முயற்சியாலும், தாய்ப்பங்கான அழகப்பபுரம் மக்களின் நன்கொடையாலும், அருகிலிருந்த பாறையிலிருந்து தலைச்சுமையாக சுமந்து வந்து சேர்த்த கருங்கல்லால் சுவர்களும் கட்டப்பட்டு, விரைவாக வேலை நடைபெற்று வந்தது. மறைமாவட்டமும் உதவியது. ஆலய பாதுகாவலியாக புனித வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதாவே வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு, அன்னையின் சுரூபம் வாங்கப்பட்டது. ஆலயப்பணி செவ்வனே முடிவடைந்து 28-03-1976 அன்று மேதகு ஆயர் அம்புரோஸ் அவர்களால் அர்ச்சித்து திறந்து வைக்கப்பட்டது.

ஆரம்பக் கட்டத்தில் ஒவ்வொரு மாதமும் முதல் சனியன்று மாலையில் திருப்பலி நடைபெறும். மக்கள் இங்கு திருப்பலி அழகப்பபுரத்திலிருந்து மக்கள் அழகப்பபுரத்திற்கும், பொட்டல் குளத்திற்கும் இடையிலிருக்கும் செங்குளத்தின் மேற்கு வரப்பில் அமைக்கப்பட்டுள்ள சாலை வழியாக செபமாலை செபித்துக் கொண்டு பவனியாகச் செல்வர். ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் 16-ம் தேதியில் கொடியேற்றப்பட்டு, 24-ம் தேதி மாலையில் ஆடம்பர மாலை ஆராதனையும், 25-ம் தேதி காலை சிறப்புத் திருப்பலியும் நடைபெறும். 9-ம் திருவிழாவன்று அழகப்பபுரம் மக்கள் அன்னையின் சுரூபம் தாங்கிய அலங்கரிக்கப்பட்ட ரதத்துடன் செபமாலை, பாடல்களுடன் பவனியாகச் சென்று திருவிழாவில் பங்கெடுப்பர். 

அன்னையின் வழியாக வேண்டியதைப் பெற்றவர்கள் இங்கு அசனம் என்ற அன்னதானம் செய்கின்றனர். எனவே தொடர்ந்து வந்த பங்குத்தந்தையர்கள் ஆலயத்தில் ஒலிபெருக்கி வசதி, ஆலய பொருட்கள் வைக்க தனி அறை, அசனம் கொடுப்பவர்களுக்கு வசதியாக பொருள் வைக்கும் அறை, சமையல் அறை, ஆலய

விரிவாக்கம், சாலையோர குருசடி, திருக்கொடிமரம் என பல்வேறு வளர்ச்சிப் பணிகளைச் செய்துள்ளனர். தற்போது அடிப்படை வசதிகளுடன் ஆலயமானது புதுப்பொலிவுடன் காணப்படுகிறது.

அழகப்பபுரத்திலிருந்து சில குடும்பங்கள் அருகிலுள்ள புன்னார்குளம் சந்திப்பில் வந்து குடியேறினர். பிறசமய குடும்பங்களினர் சிலரும் திருமறையைத் தழுவினர். ஆரம்பக் கட்டத்தில் வெறும் ஐந்து குடும்பங்களுடன் தொடங்கப்பட்ட இந்த கிளைப்பங்கு, தற்போது ஐம்பதுக்கும் மேலான குடும்பங்களுடன் சீரும் சிறப்புடனும் செயல்பட்டு வருகின்றது. தானாகவே இடம் தேர்வு செய்து அங்கேயே கோவில் கொண்டுள்ள அன்னை மரியா, அங்கு சிறப்பான ஆசீர்வாதங்களையும் பொழிகிறார் என்பது மிகவும் உண்மை. எனவே அன்னையிடம் நம்பிக்கையுடன் வருவோம், அருளாசி பெறுவோம்..

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பங்குத்தந்தை அருட்பணி. மார்ட்டின் அவர்களின் அனுமதியுடன், ஆலய உறுப்பினர் திரு. அமல அன்றோஸ் அவர்கள்.

ஆலய வரலாறு: 2019 ஆம் ஆண்டு அழகை சாரல் இதழில் வெளிவந்த கட்டுரை.