புனித அந்தோனியார் ஆலயம்
இடம்: சுன்னாகம்
நாடு: இலங்கை
மறைமாவட்டம்: யாழ்ப்பாணம்
மறைவட்டம்: இளவாலை
நிலை: பங்குத்தளம்
கிளைப்பங்குகள்:
1. புனித இசிதோர் ஆலயம், ஏழாலை
2. புனித தெரசம்மாள் ஆலயம், சூராவத்தை
பங்குத்தந்தை அருட்பணி. மைக்கேல் முத்து நிக்சன் கொலின்ஸ்
குடும்பங்கள்: 100 (கிளைப்பங்குகள் சேர்த்து 185)
அன்பியங்கள்: 5
வழிபாட்டு நேரங்கள்:
ஞாயிறு திருப்பலி காலை 08:00 மணி
திங்கள் & வெள்ளி திருப்பலி காலை 05:45 மணி
செவ்வாய் திருப்பலி மாலை 05:00 மணி
புதன் மாலை 05:30 மணி அன்பிய திருப்பலி (அன்பிய இல்லங்களில்)
மாதத்தின் முதல் செவ்வாய் காலை 05:45 மணி திருப்பலி, மாலை 05:00 மணி நற்கருணை ஆசீர்
திருவிழா: ஜூன் 13-ம் தேதி
மண்ணின் இறையழைத்தல்கள்:
1. அருட்சகோதரர். பே. சவியேல் சின்னப்பர் (செபமாலைத் தாசர் சபை)
2. அருட்பணி. ச. யஸ்தஸ் சின்னப்பு (OSB)
3. அருட்பணி. ஞா. அற்புதராஜா (O.M.I)
4. அருட்பணி. வெ. ஆ. ஜெறோம் (O.M.I)
5. அருட்பணி சூ. அல்றின் (O.M.I)
6. அருட்பணி. அ. றொபின்சன் யோசெப்
7. அருட்பணி. பா. கிறிஸ்டி நிர்மலராஜன் (O.M.I)
8. அருட்பணி. பெனடிக்ட் யூட் குயின்ரஸ் (CRS)
9. அருட்சகோதரி. அ. மேரி பிரான்சிஸ்கா (செ.தா)
10. அருட்சகோதரி அ. மேரி விமலினி (A.C)
வழித்தடம்: யாழ்ப்பாணம் -சுன்னாகம்
Church Map Location: புனித அந்தோணியார் தேவாலயம் - சுன்னாகம் | St.Antonys Church - Chunnakam
https://maps.app.goo.gl/nRivEpvdkwRykmQy6
வரலாறு:
1600களிலிருந்து சுன்னாகத்தில் கத்தோலிக்க கிறிஸ்தவம்:
போத்துக்கல் நாட்டுத் துறவற சபையினர்களான பிரான்சிஸ்கன் சபையினர், இயேசு சபையினர், அகுஸ்தீனார் முதன்முதலில் கத்தோலிக்க மறையைப் பரப்பிய சிறப்பிற்குரியவர்கள். இவர்கள் கத்தோலிக்க மறையைப் பரப்புவதற்குப் பொருத்தமான சில ஊடகங்களைப் பயன்படுத்தியுள்ளனர். அவ்வாறு பயன்படுத்திய ஊடகங்களாகத் திருவருட்சாதனங்களை நிறைவேற்றியமை, வழிபாடுகளை நடத்தியமை, பக்தி முயற்சிகளை அறிமுகம் செய்து கடைப்பிடிக்கத் தூண்டியமை, மனித நேயப் பணிகளை முன்னெடுத்தமை, பாடசாலைகளை நிறுவிக்கல்வி வழங்கியமை, இலக்கியங்களை உருவாக்கியதோடு நாடகங்களையும், ஏனைய கலையம்சங்களையும் பயன்படுத்தியமை குறிப்பிட்டுக் கூறப்பட வேண்டியவையாகும். சுருங்கக் கூறினால் இலங்கையில் ஐரோப்பா மயப்படுத்தப்பட்ட கத்தோலிக்கமே பரப்பப்பட்டது. இது இலங்கைக் கத்தோலிக்க மறையில் கணிசமான ஐரோப்பியக்கலை அம்சங்கள் செல்வாக்குச் செலுத்த வழிவகுத்தது.
ஒல்லாந்தர் (டச்சுக்காரர்கள்) இலங்கைக்கு காலடி எடுத்து வைக்கும் முன்னர், போத்துக்கீசியர் இலங்கையை ஆண்டகாலத்தின் இறுதி வருடங்களில், யாழ் குடாநாட்டின் கரையோரப் பகுதிகளில் பிரான்சிஸ்கன் சபைக் குழுக்களும், யாழ் குடாநாட்டின் நடுப்பகுதியில் இயேசு சபைக் குருக்களும் ஆன்மீகப் பணியில் ஈடுபட்டு வந்தனர். குடாநாட்டின் வலிகாமத்தின் வடக்கு, தெற்கு, கிழக்கு பகுதிகளின் சில இடங்கள் இவர்களின் ஆன்மீக நெறிப்படுத்தல் மையங்களாக விளங்கியுள்ளன.
அன்றைய யாழ்ப்பாணப் பட்டினத்துள் உள்ளடங்கிய சுன்னாகம் என்ற கிராமத்திலிருந்து, 49 வயதுடைய மாக்கோஸ் தாண்டவா என்ற கத்தோலிக்க கிறிஸ்தவர், 1645ஆம் ஆண்டு ஜூலை 18ம் தேதியில், போத்துக்கீசிய அதிகாரி கேப்டன் பிரான்சிஸ்கோ டி சொய்சாஸ் டி கப்ரொய்ரா என்பவர், தனக்குக் கிடைத்த வழக்கினை குறித்த விசாரணை நடத்திய போது, வேதாகம நூலில் ஆணையிட்டு சாட்சியம் அளித்ததாக வரலாற்றுத் தகவல்கள் ஒன்றுள்ளது. அன்றைய காலப்பகுதியில் வலிகாமத்தின் ஏனைய சில பகுதிகளில் காணப்பட்டது போன்று சுன்னாகப் பங்கிலும், அதன் பங்குத்தந்தை மக்களிடமிருந்து அளவுக்கு அதிகமான வரி வாங்கியதாகவும், ஆலயத்திற்கு சொந்தமான நிலங்களில் மக்களை கட்டாய வேலைக்கு அமர்த்தியதாகவும், மக்களிடமிருந்து பணம், பொருள் வடிவில் நன்கொடைகள் வலுக்கட்டாயமாகப் பெறப்பட்டதாகவும், இதை மீறுவோருக்கு கடினமான கட்டாய வேலைக்குப் பணிக்கப்பட்டதாகவும், இவர் (மாக்கோஸ் தாண்டவா) சாட்சியமளித்ததாக இவ்வரலாற்று ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதே போன்று 1645ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7ஆம் தேதி நடைபெற்ற மேலும் ஒரு வழக்கு விசாரணையில், டொம் பார்த்த சால் சந்தண மாப்பணர் என்ற சுன்னாகம் கிராமத்திலுள்ள ஊர்ப் பெரியவர் ஒருவர் சாட்சியம் அளிக்கையில், மேலே குறிப்பிட்டது போன்ற குற்றச்சாட்டை தனது “The catholic church in Sri Lanka – The Portuques Period-Volume” இன் 2ஆம் பதிப்பு பக்கங்கள் முறையே 367, 370, 404இல் அதன் ஆசிரியரான அருட்தந்தை V. Perniola S.J. அடிகளாரால் எழுதப்பட்டுள்ளது. ஆகவே அத்தகையதொரு சாட்சியத்தை வழங்கக்கூடிய கல்வியறிவு கொண்டதும், உறுதியான கத்தோலிக்க சமூகம் ஒன்று இருந்துள்ளது என்பதும் வெளிப்படையாகின்றது என்பதுடன், அங்கீகரிக்கப்பட்ட பொறுப்புடைய தலைவர் ஒருவர் சாட்சியம் அளித்துள்ளமையும், அக்காலத்தில் இருந்த கத்தோலிக்க சமூக நிறுவனக் கட்டமைப்பின் வலிமையையும் எடுத்துக்காட்டுகின்றது.
போத்துக்கீசருக்குப் பின்வந்த ஒல்லாந்தர் கத்தோலிக்க விசுவாசத்திற்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொண்டமையினால், கத்தோலிக்க தேவாலயங்கள் பல அழிவுக்குள்ளானது. இக் காலப்பகுதியில் கத்தோலிக்க மக்கள் மறைந்து வாழ வேண்டிய தேவை ஏற்பட்டது. இச்சூழ்நிலை 175 ஆண்டுகளாக நீடித்தது. ஆயினும் விசுவாசத் தீ பற்றி எரிந்து கொண்டிருந்தமையினால், ஒல்லாந்தர் அதிகாரிகள் சமய சகிப்பு நிலைக்குத் தங்கள் மனோநிலைகளை மாற்றிக் கொள்ள வேண்டியநிலை ஏற்பட்டது. இலங்கையில் ஒல்லாந்தர் ஆட்சியின் நிலைத்தன்மை பாதிக்கப்பட்டு வருகின்ற வேளையில், விசுவாசக் செயற்பாடுகளை ஓரளவு சகித்துக் கொண்ட காலப்பகுதியில், முத்திப்பேறுபெற்ற யோசேப்வாஸ் அடிகளாரின் (Oratorians) ஒறடோறியனஸ் சபைக் குருக்கள் ஆன்மீகப் பணிகளுக்கு உயிரோட்டம் வழங்கினர். அதாவது விசுவாசத் தீயை ஒல்லாந்தரால் அணைக்க முடியவில்லை.
பழைய ஆலயத்தின் கட்டிட வேலைகள் 1842ல் ஆரம்பிக்கப் பட்டுள்ளன என மக்களிடையே நிலவிய நாலடி செய்யுள் பாரம்பரியம் கூறுவதாக, நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் அடிகளார், OMI XXV Years Catholic Progress 25 வருட கத்தோலிக்க வளர்ச்சி என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். அந்நூல் கூறும் தகவலின்படி அவ்வாலயம் வேலு அந்தோனி (கண்ணனி) என்பவரால் எழுப்பப்பட்டது. 1837இல் சில கத்தோலிக்க விசுவாசத்திற்கு எதிரானவர்களால் இவ்வாலயம் தீயிடப்பட்டபோது, முழு ஆலயமும் எரிந்து சாம்பலான போதும், புனித அந்தோனியாரின் திருச் சுரூபமானது, வைக்கப்பட்டிருந்த கூட்டுடன் அதிசயிக்கத்தக்க வகையில் அழிவிலிருந்து தப்பியது. இந்நிகழ்ச்சிக்குப் பின் மக்கள் அந்தோனி மரியான் தலைமையில் கூடுதலாகப் பெற்றெடுத்த காணியில் (நிலத்தில்), நீக்கிலான் பிரான்சிஸ்ஸின் மருமகனும் வேலு அந்தோனியும் வேறு ஒரு ஆலயத்திற்கு 1842இல் அடிகோலினர்.
பின்னர் பங்குக்குரு அருட்தந்தை ஜென் அடிகள், OMI 1902 –1906 புதிய குருமனை வேலைகளைத் தொடக்கி, இவ்வாலய பழைய பீட வேலைகளையும் புனரமைப்புச் செய்தார். ஆலயம் தீயினால் அழிக்கப்பட்ட போது அதிகமாகத் தப்பிய புனித அந்தோனியார் திருச்சொருபம், சந்தன மரத்தினால் ஆனது என வாய்மொழியாகச் சொல்லப்படுவதாலும், அது வடிவமைக்கப்பட்ட விதத்தைக் கொண்டும் அது போர்த்துக்கீசியர் கால சொரூபம் என நம்பப்படுகின்றது.
1830களில் காணிக்கை மாதாவின் பெருவிழாக்கள் மிக விமரிசையாக சுன்னாகம் ஆலயத்தில் கொண்டாடப்பட்டுள்ளது. அக்கால கட்டங்களில் சில்லாலை, மாதகல் போன்ற பகுதிகளில் இருந்து மாட்டு வண்டில்களில் வந்து, மாதாவின் பக்தர்கள் கூடாரமிட்டு விழாவில் பங்கேற்றுச் சென்றதாக வாய்மொழிப் பாரம்பரியச் செய்திகளில் இருந்து அறியக்கூடியதாக உள்ளது. பின்னர் 1900களின் முற்பகுதிகளில் இங்கு நடத்தப்பட்ட நற்கருணை வழிபாடுகளும் சிறப்பு வாய்ந்தனவாக விளங்கியது. முழுக்கிராமத்தையும் விழாக் கோலமாக்கி, பல சிறப்பு மேடைகள் ஆங்காங்கே அமைக்கப்பட்டு, நற்கருணைப் பவனியும், வழிபாடும் இடம்பெற்றன.
பழைய திருச்சிலுவை மரமானது, 1995இல் யுத்தகால இடப்பெயர்வின் போது அழிவுக்குள்ளாகியதால், பின்னர் 2008ஆம் ஆண்டில் பங்குக்குரு அருட்தந்தை ம. ஹான்ஸ்போவர் அடிகளார் காலத்தில் புதிய திருச்சிலுவை மரமானது 25 அடி உயரத்திற்கு பலா மரத்தினால் செய்யப்பட்டுள்ளது. இதே போல 1995 இல் யுத்தகால இடப்பெயர்வின் போது, புனித அந்தோனியாருடைய திருப்பண்டமானது இடம்மாறியுள்ளது. இதைத் தேடி எடுப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
விளையாட்டு விழா:
இன்று வரை இம்மக்களின் பாரம்பரியத்தில் இருக்கும் வருடாந்திர விளையாட்டு விழாவானது, 1900ஆம் ஆண்டின் முற்பகுதியில் இருந்து தொடர்ந்து வருகின்றது என்றும், அது பங்குக்குரு அருட்தந்தை ஸ்கூர்மன் அடிகளாருடைய காலத்திற்குரியது என்றும் வாய்மொழித் தகவல்கள் கூறுகின்றன.
தற்போதுள்ள புதிய ஆலயத்தின் பீடகோபுரத்திற்கான அடிக்கல் 1936இல் கட்டப்பட்டது. 1842இல் அமைக்கப்பட்ட ஆலயத்தின் திருபீடமானது வடக்கு திசையை நோக்கி அமைந்திருந்தது. 1936இல் திருப்பீட அடிக்கல்லானது தெற்கு திசையை நோக்கிய ஆலயத்திற்கான அடிக்கல்லாக நாட்டப்பட்டு, பெரிய வில் அமைப்பிலான பீடக்கோபுரம் தொடர்ச்சியாகக் கட்டப்பட்டு வந்தது. இது பழைய ஆலயத்தின் முகப்பில் அமைக்கப்பட்டு இருந்தது.
புதிய ஆலயம்:
1972ஆம் ஆண்டளவில் பங்குக்குருவாக இருந்து அருட்தந்தை இராயப்பு ஜோசப் அடிகளார் (தற்போதைய மன்னார் மறைமாவட்ட ஆயர்) அவர்கள் பழைய ஆலயத்தை முற்றிலும் இடித்து விட்டு, புதிய ஆலயம் ஒன்றைக் கட்டி, 10.11.1974 அன்று யாழ் ஆயரால் அர்ச்சிக்கப்பட்டது. ஆலய முன்மண்டப வேலைகள், பங்குக்குரு அருட்தந்தை எட்மன் மைக்கல் அடிகளார் காலத்தில் தொடங்கப்பட்டது.
பங்குக்குரு அருட்தந்தை. அ. ஞானப்பிரகாசம் அவர்களின் காலத்தில் யுத்தத்தால் அழிவடைந்த மிகப்பழம்பெரும் பங்குதந்தை இல்லத்திற்குப் பதிலாக, புது இல்லம் அமைக்கப்பட்டுள்ளது. பங்குக்குரு அருட்தந்தை பா. பி. ராஜசிங்கம் அடிகளார் காலத்தில் யுத்தத்தால் சிதைவடைந்த ஆலய வராந்தாவானது மீள்ப்புனரமைத்துக் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
அருட்தந்தை ஜோசப் ஜெயசீலன் அடிகளாரால் 29.04.2005 அன்று புதிய மணிக்கூட்டுக் கோபுரத்திற்கான அடிக்கல் நடப்பட்டது. பங்கின் 175 ஆவது ஆண்டு விழா நினைவாக, பங்குத் தந்தை ஜே.பி. யோதிநாதன் அடிகளாரின் முன்னிலையில் யாழ். ஆயர் மேதகு ஜஸ்டின் ஞானப்பிரகாசம் ஆண்டகை அவர்களால் 13.06.2017 இல் புனித அந்தோனியார் பெருவிழாவின் போது திறந்து வைக்கப்பட்டது. அக் கோபுரமானது 50 அடி உயரத்தினைக் கொண்டு ஆலயத்தின் இரு புறமும் உயர்ந்து அழகுற எழுந்து நிற்கின்றது.
பங்கின் பங்கேற்பு அமைப்புகள்:
1. பாடற்குழாம்
2. பீடப்பணியாளர்
3. புனித வின்சென்ட் தே பவுல் சபை
4. இளையோர் மன்றம்
5. அன்னையர் மன்றம்
6. தந்தையர் மன்றம்
7. மரியகொரற்றி மன்றம்
8. மரியாயின் சேனை
9. இறை இரக்க பக்தி சபை
10. திருபாலத்துவ சபை
11. மறை ஆசிரியர் மன்றம்
12. கத்தோலிக்க ஆசிரியர் மன்றம்
13. கலை கலாச்சார குழு
14. மீடியா குழு
15. அருட்பணி சபை
கல்வி நிலையம் & நிறுவனம்:
புனித அந்தோனியார் ஆரம்ப பாடசாலை
ஜெபமாலை கடை.
கோடி அற்புதரின் ஆலயம் வாருங்கள்... வேண்டும் வரங்களை பெற்றுச் செல்லுங்கள்..
தகவல்கள்: பங்குதந்தை அருட்பணி. மைக்கேல் முத்து நிக்சன் கொலின்ஸ் அவர்கள்.















