புனித லூர்து அன்னை ஆலயம்
இடம்: 3-வது குறுக்குத் தெரு, கணேஷ்நகர், மடிப்பாக்கம், சென்னை 600091
மாவட்டம்: சென்னை
மறைமாவட்டம்: செங்கல்பட்டு
மறைவட்டம்: தோமையார் மலை
நிலை: பங்குத்தளம்
சிற்றாலயம்:
புனித அன்னை தெரேசா சிற்றாலயம், புழுதிவாக்கம்
பங்குத்தந்தை அருட்பணி. ஆ. யாக்கோபு
குடும்பங்கள்: 948
அன்பியங்கள்: 20
திருவழிபாட்டு நேரங்கள்:
ஞாயிறு காலை 06:30 மணி திருப்பலி (ஆங்கிலம்)
காலை 08:30 மணி திருப்பலி (தமிழ்)
காலை 10:30 மணி திருப்பலி (தமிழ்)
மாலை 05:00 மணி திருப்பலி (தமிழ்)
திங்கள் முதல் சனி வரை திருப்பலி காலை 06:30 மணி (தமிழ்)
செவ்வாய், வெள்ளி, சனி திருப்பலி மாலை 06:30 மணி
மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை மாலை 06:30 மணி திருச்செபமாலை, திருப்பலி, ஆராதனை
முதல் சனிக்கிழமை காலை 08:30 மணி திருச்செபமாலை, திருப்பலி, திருஎண்ணெய் பூசுதல், சாட்சியப் பகிர்வு
புனித லூர்து அன்னை சிறப்பு தினம்:
ஒவ்வொரு மாதமும் 11-ம் தேதி காலை 10:30 மணி திருச்செபமாலை, நற்கருணை ஆராதனை, சாட்சியப் பகிர்வு, நவநாள் திருப்பலி, அன்பின் விருந்து.
மாலை 06:30 மணி திருச்செபமாலை, தேர்பவனி, திருப்பலி, நற்கருணை ஆராதனை, அன்பின் விருந்து.
திருவிழா: பிப்ரவரி மாதம் 11-ம் தேதி
புனித அன்னை தெரசா சிற்றாலயம்:
ஞாயிறு திருப்பலி காலை 08:00 மணி
செவ்வாய், வெள்ளி காலை 06:30 மணி திருப்பலி
புதன் மாலை 06:30 மணி திருப்பலி
ஒவ்வொரு மாதமும் 05-ம் தேதி மாலை 06:30 மணி நவநாள் திருப்பலி, அன்பின் விருந்து
மண்ணின் இறையழைத்தல்கள்:
1. அருட்பணி. பிரபு, SDB
2. அருட்பணி. ஆன்றோ, SDB
Church Map location: Our Lady Of Lourdes Church
https://maps.app.goo.gl/G6Xt2SRbbfeDJjtW7
வழித்தடம்: தாம்பரம் -குரோம்பேட்டை -பல்லாவரம் ரேடியல் சாலை -பெருங்குடி சாலையில் சிக்னல் பக்கத்தில் இருந்து இடது புறமாக உள்ளே சென்றால் மடிப்பாக்கம் வந்தடையலாம்.
பாரிஸ் -வேளச்சேரி -விஜயநகர் -பள்ளிகரணை -கைவேலி. இங்கிருந்து வலதுபுறமாக நேராக பஜார் சாலை -சபரிசாலை -மடிப்பாக்கம்
புனித லூர்து அன்னை ஆலய வரலாறு:
அமைதியும் அழகும் அருளும் தவழும் திருவதனத்தோடு, மனித குலத்தின் தாயாகக் காட்சி தரும் தூய லூர்து அன்னையின் ஆலயமானது, சென்னை மடிப்பாக்கத்தில் கணேஷ் நகர் பகுதியில் அமைந்துள்ளது. சிறுகச் சிறுகச் சேர்க்கப்பட்டு, ஒரு சீரிய தலமாகக் காட்சியளிக்கும் ஆலய வளாகம் இன்று பன்னிரண்டு கிரவுண்டு (60 சென்ட்) நிலத்தில் பாங்குறத் தோற்றமளிக்கிறது.
புனித லூர்து அன்னை ஆலய வரலாற்றுப் பதிவுகள்
1992-ம் ஆண்டு, மறைந்த அருட்தந்தை P. J. குரியன் அவர்கள் அன்றைய சென்னை -மயிலை உயர் மறைமாவட்ட பேராயர் கஷ்மீர் ஞானாதிக்கம் ஆண்டகை அவர்களிடம் அனுமதி பெற்று, மடிப்பாக்கம் கணேஷ் நகர் பகுதியில் ஏறக்குறைய மூன்று கிரவுண்டு நிலம் வாங்கி, அங்கு ஓலைக்கீற்றினால் வேயப்பட்ட ஒரு சிற்றாலயத்தை உருவாக்கினார்.
சென்னை ஆதம்பாக்கம் புனித மாற்கு ஆலயத்தின் பங்குத்தந்தையாக அருட்தந்தை P. J. குரியன் பொறுப்பேற்றபோது, அதன் கிளைப்பங்காக மடிப்பாக்கம் ஆலயம் மாற்றம் பெற்றது. புனித லூர்து அன்னை ஆலயம் என்ற பெயர் இச்சிற்றாலயத்துக்குச் சூட்டப்பட்டு, 1992 மார்ச் மாதம் 28-ம் நாள் அப்போதைய மறைமாவட்ட முதன்மை குரு அருட்தந்தை ஜோசப் தைப்பரம்பில் அடிகளாரால் திருப்பலி நிறைவேற்றப்பட்டு, இச்சிற்றாலயம் இறைமக்களின் ஆன்மீக வாழ்வுக்கு வழிவகுக்கும் விதத்தில் சிறப்புற அர்ச்சிக்கப்பட்டது.
ஒரு பங்கினை உருவாக்குவதில் தனிப்பெரும் பங்காற்றிய அருட்தந்தை P. J. குரியன் வேறு பங்குக்கு மாற்றலாகிச் செல்ல, அவருக்குப் பின் பங்குத் தந்தையாகப் பொறுப்பேற்ற அருட்தந்தை T. S. குரியன் தம் பணிக் காலத்தில் ஏற்கனவே சிற்றாலயம் அமைந்திருந்த நிலத்தோடு இணைத்து, மேலும் மூன்று கிரவுண்டு நிலத்தை வாங்கினார். அவர் ஆற்றிய பணி மிகச் சிறப்புக்குரியதாக இருந்தது.
1995-ம் ஆண்டு அருட்தந்தை T. S. குரியன் அவர்கள் வேறு பங்குக்கு மாற்றல் பெற, பின்னர் பொறுப்பேற்ற அருட்தந்தை ஜோசப் மாணிக்கம் பங்கின் வளர்ச்சிக்குப் பெரிதும் பாடுபட்டார். அன்னையின் ஆலயத்தில் பக்தர்களின் அதிகரிப்பால் இடப்பற்றாக்குறை ஏற்படவே, அருட்தந்தையவர்கள் அன்றைய பேராயர் காலம் சென்ற அருள்தாஸ் ஜேம்ஸ் ஆண்டகையிடம் வலியுறுத்தியதன் பலனாய் மேலும் மூன்று கிரவுண்டு நிலம் வாங்கப்பட்டு, ஆலய வளாகத்துடன் இணைக்கப்பட்டது.
தனிப் பங்கு:
பங்கு இறைமக்களின் எண்ணிக்கை அதிகரிக்க, பங்குத்தந்தை ஜோசப் மாணிக்கம் அவர்களோடு கருத்தொருமித்து பங்குப் பேரவை உறுப்பினர்கள் பேராயர் அருள்தாஸ் ஜேம்ஸ் ஆண்டகையை பலமுறை சந்தித்து, கிளைப்பங்கை தனிப்பங்கு நிலைக்கு உயர்த்துமாறு வலியுறுத்தினர். இறை மக்களின் வேண்டுகோளுக்கிணங்க, இதுகாறும் ஆதம்பாக்கம் புனித மாற்கு ஆலயத்தின் கிளைப்பங்காகச் செயல்பட்டுக் கொண்டிருந்த மடிப்பாக்கம் புனித லூர்து அன்னை ஆலயம், 11.05.1999 அன்று பேராயர் அருள்தாஸ் ஜேம்ஸ் ஆண்டகை அவர்களால் தனிப் பங்காக உயர்த்தப்பட்டது.
அருட்தந்தையர்களின் அரும்பணிகள்:
தனிப் பங்கின் முதல் பங்குப் பணியாளராக அருட்தந்தை ஜோசப் மாங்காட் அவர்கள் பொறுப்பேற்றார். அவருடைய முயற்சியால் கீற்றுக் கொட்டகையாக இருந்த சிற்றாலயம் சிமெண்ட் கூரை வேயப்பட்ட கட்டிடமாக உருப்பெற்றது. 2002-ம் ஆண்டு பங்குத்தந்தை ஜோசப் மாங்காட் அவர்களின் முயற்சியால் நன்மங்கலம் பகுதியில் மூன்று கிரவுண்டு நிலம் வாங்கப்பட்டு, 2003-ம் ஆண்டில் அங்கே புனித ஸ்தேவான் ஆலயம் உருவாகியது. இதன் மூலம் நன்மங்கலம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் வாழும் இறைமக்கள் திருப்பலியில் பங்கேற்க வழி வகுக்கப்பட்டது.
அச்சமயம் சென்னை -மயிலை உயர் மறைமாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, மடிப்பாக்கம் பங்குத்தலம் செங்கல்பட்டு மறை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. செங்கை மறைமாவட்டத்தின் முதல் ஆயராகப் பொறுப்பேற்று இன்றளவும் அரும்பணியாற்றிக் கொண்டிருக்கும் மேதகு ஆயர் நீதிநாதன் ஆண்டகை அவர்கள் அளித்த நிதி உதவியாலும், பங்கு மக்களின் ஒத்துழைப்பாலும், பங்குத் தந்தையின் விடாமுயற்சியாலும், ஆலயத்துக்காக மேலும் மூன்று கிரவுண்டு நிலம் வாங்கப்பட்டு, புனித லூர்து அன்னை ஆலய வளாகம் பன்னிரண்டு கிரவுண்டு நிலத்தில் விரிவாக்கம் செய்யப்பட்டது.
2003-ம் ஆண்டில் அருட்தந்தை ஜோசப் மாங்காட் மாற்றலாகிச் சென்றபின், அருட்தந்தை தேவசியா அவர்கள் பங்குத் தந்தையாகப் பொறுப்பேற்றார். 15.02.2004 அன்று மேதகு ஆயர் நீதிநாதன் அவர்களால் ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அருட்தந்தை. தேவசியா அவர்களின் கடின உழைப்பினாலும், விடா முயற்சியாலும், ஆன்மீகப் பேரார்வத்தாலும் செங்கை மறைமாவட்ட ஆயரிடமிருந்தும், பங்கு மக்களிடமிருந்தும் நிதியுதவி பெற்று புதிய பங்கு ஆலயத்தை நிர்மாணித்தார். ஆலயக் கட்டுமானப் பணிக்குத் தேவையான பணத்தின் பெரும் பகுதியையும், தேவைப்பட்ட பொருட்களையும் பங்கின் மக்களே நன்கொடையாக வழங்கி ஆலயம் சிறப்புற அமைய உதவி புரிந்தனர். 2006-ம் ஆண்டு மே மாதம் 28-ம் நாள் மேதகு ஆயர் நீதிநாதன் ஆண்டகை இவ்வாலயத்தை அர்ச்சிப்பு செய்தார். ஆலய பீடத்தில் அருட்தந்தை புனித பியோ அவர்களின் அருளிக்கம் வைக்கப்பட்டது.
அருட்தந்தை தேவசியாவுக்குப் பின் அருட்தந்தை அருளப்பா அவர்கள் 2009-ம் ஆண்டு மே மாதம் பங்குத்தந்தையாகப் பொறுப்பேற்றார். ஆன்மீகத்தில் மிகச் சிறப்பாக பங்கு மக்களை வழி நடத்திய அவரின் நல்முயற்சியால் பல நல்ல உள்ளங்களின் உதவியோடு ஆலயத்துக்கு அருகாமையில் தூய லூர்து அன்னைக்கு எழில்மிகு கெபி ஒன்றை அமைத்தார். 2011-ம் ஆண்டில் தனது குருத்துவ திருநிலைப்பாட்டின் வெள்ளிவிழா நினைவாக, ஆலய வளாகத்தில் பல்நோக்கு மண்டபம் உருவாக அடித்தளமிட்டு அதை நிறைவேற்றி முடித்தார்.
2012-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அருட்தந்தை ஜார்ஜ் ஸ்டீபன் அவர்கள் பங்குத் தந்தையாகப் பொறுப்பேற்று, குறுகிய காலமாக ஆறு மாதங்களே இங்குப் பணியாற்றினார். 2013-ம் ஆண்டு ஜூலை மாதம் 2-ம் நாள் கிளைப் பங்காக இதுவரை விளங்கிய நன்மங்கலம் புனித ஸ்தேவான் ஆலயம் தனிப் பங்காக உருவெடுக்க பங்கு மக்களை ஒருங்கிணைத்து அவர் ஆற்றிய பணி சிறப்புக்குரியது. மேதகு ஆயர் நீதிநாதன் ஆண்டகை திருப்பலி நிறைவேற்றி தனிப் பங்காக உயர்த்தி நிறுத்திய, நன்மங்கலம் புனித ஸ்தேவான் ஆலயப் பங்கிற்கு, அருட்தந்தை செல்வம் பெல்லார்மின் முதல் பங்குத் தந்தையாகப் பொறுப்பேற்றார்.
2013-ம் ஆண்டு மே திங்கள் 26-ம் நாள் அருட்தந்தை தாமஸ் பிரேம்குமார் அவர்கள் மடிப்பாக்கம் புனித லூர்து அன்னை ஆலயப் பங்கின் ஐந்தாவது பங்குத் தந்தையாகப் பொறுப்பேற்று, அமைதியிலும் ஆன்மீகத்திலும் இறைமக்களை செவ்வனே வழி நடத்தினார். மடிப்பாக்கம் அருகில் அமைந்துள்ள புழுதிவாக்கத்தில் புனித அன்னை தெரேசா பெயரில் புதியதொரு சிற்றாலயம் எழுப்பினார்.
2018-ஆம் ஆண்டில் அருட்தந்தை லூயிஸ் ராயர் ஆறாவது பங்குத்தந்தையாகப் பொறுப்பேற்று மிகச் சிறப்பாகச் செயலாற்றினார். தந்தையவர்கள் சமயம், சமூகம் சார்ந்த காரியங்களில் மக்களை சிறப்பாக வழி நடத்தினார். கொரோனா பெருந்தொற்றுக் காலத்திலும் இறைமக்களின் ஆன்மிக வாழ்வு அர்த்தமுள்ளதாக அமைய உதவினார். ஐந்தாம் ஆண்டு நிறைவில் பங்கின் வெள்ளி விழாவைத் துவக்கி வைத்து, ஆலயப் புதுப்பித்தலுக்கான முயற்சியில் மக்களோடு இணைந்து ஆலோசித்து தீர்மானங்கள் மேற்கொண்டார்.
2023-ஆம் ஆண்டில் அருட்தந்தை யாக்கோபு அவர்கள் ஏழாவது பங்குத்தந்தையாகப் பொறுப்பேற்றார். வெள்ளி விழாவின் நிகழ்வுகளை மக்களோடு கலந்தாலோசித்து சரியான திட்டமிடுதலோடு 25 தீர்மானங்களை தெரிவு செய்து இறைமக்களோடு பயணித்தார். கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் தொய்வடைந்த ஆக்கப் பணிகளுக்கு ஊக்கம் அளித்தார். அன்பியங்களைப் புதுப்பித்தல், இயக்கங்களைப் புதுப்பித்தலோடு ஆன்மிக தியானங்களை ஒருங்கிணைத்து செயல்பட்டார். பங்கு மக்களின் பரிந்துரையான ஆலய பலிப்பீடம் புதுப்பித்து அர்ச்சித்தல், புனித நிகழ்வை முதல் நோக்கமாகக் கொண்டு இப்போது நாம் காணும் புதியதான ஆலயத் தோற்றம், புதிய ஆலயப் பலிப்பீடம் ஆகியவற்றை நமது ஆயர் அவர்களின் அனுமதியோடும் ஆசியோடும் நிறைவேற்றி நமக்கு அளித்து, 17.08.2024 அன்று செங்கை மறைமாவட்ட ஆயர் மேதகு நீதிநாதன் அவர்களால் ஆலயம் அர்ச்சிக்கப்பட்டு, பங்கின் வளர்ச்சிக்கு துணை நின்றார்.
வெள்ளி விழா:
பங்கின் வெள்ளிவிழா 22.09.2024 அன்று சென்னை-மயிலை உயர் மறைமாவட்ட பேராயர் மேதகு ஜார்ஜ் அந்தோனிசாமி அவர்கள் தலைமையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
பங்கில் உள்ள பத்த சபைகள் இயக்கங்கள்:
1.பங்குப் பேரவை
2.பங்கு நிதிக்குழு
3.புனித வின்சென்ட் தே பவுல் சபை
4.மரியாயின் சேனை
5.கிறிஸ்தவ தொழிலாளர் இயக்கம்
6.புனித பெர்னதத் இளையோர் இயக்கம்
7.பாடற்குழு
8.புனித பியோ செபக்குழு
9.பீடச் சிறுவர் சிறுமியர்
10.பெண்கள் பணிக்குழு
11.மறைக்கல்வி மன்றம்
12.திருவழிபாட்டுக் குழு
13.அன்பிய ஒருங்கிணைப்புக் குழு.
புதுமைகள் நிறைந்த மடிப்பாக்கம் புனித லூர்து அன்னை ஆலயம் வாருங்கள்... அன்னையின் வழியாக, இறையாசீர் பெற்றுச் செல்லுங்கள்...
தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பங்குத்தந்தை அருட்பணி. யாக்கோபு அவர்களின் வழிகாட்டலில், ஆலய உறுப்பினர் ஜோசப் தாஸ் அவர்கள்.
ஆலய வரலாறு: ஆலய வெள்ளிவிழா மலர் 2025.





