1021 துன்ப முடிச்சுகளை அவிழ்க்கும் அன்னை ஆலயம், தாழம்பூர்

       

துன்ப முடிச்சுகளை அவிழ்க்கும் அன்னை ஆலயம்

இடம்: ஜெய்பீம் நகர், தாழம்பூர் சென்னை, 603103

மாவட்டம்: செங்கல்பட்டு

மறைமாவட்டம்: செங்கல்பட்டு

மறைவட்டம்: தாம்பரம் 

நிலை: கிளைப்பங்கு

பங்கு: இடைவிடா சகாய மாதா ஆலயம், ஒட்டியம்பாக்கம்

பங்குத்தந்தை அருட்பணி. வினோத் குமார்

Contact no: +91 93454 57764

குடும்பங்கள்: 220

அன்பியங்கள்: 6

வழிபாட்டு நேரங்கள்:

ஞாயிறு திருப்பலி காலை 08:20 மணி (தமிழ்)

காலை 11:30 மணி (ஆங்கிலம்)

மாலை 06:30 மணி (தமிழ்)

திங்கள், செவ்வாய், புதன், வியாழன் மற்றும் வெள்ளி திருப்பலி மாலை 06:30 மணி

சனி காலை 11:30 மணி திருப்பலி மற்றும் மாலை 06:30 மணி திருப்பலி, நற்கருணை ஆசீர்

மாதத்தின் முதல் சனிக்கிழமை காலை 11:30 மணி நற்கருணை ஆராதனை. நண்பகல் 12:30 மணி திருப்பலி. மதியம் அன்னையின் அன்பு உணவு.

மாலை 06:00 மணி திருத்தேர் மந்திரிப்பு, திருத்தேர் பவனி

மாலை 06:45 மணி குணமளிக்கும் நற்கருணை ஆராதனை

மாலை 07:45 மணி சிறப்பு திருப்பலி

திருவிழா: ஜூலை மாதத்தில் இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்தில் நடைபெறும்.

பேருந்து வழித்தடங்கள்:

1. தாம்பரம் -தாழம்பூர்: 105, 105A

2. தாம்பரம் -மேடவாக்கம் சந்திப்பு - 51

மேடவாக்கம் சந்திப்பு காரணை - 51B

அங்கிருந்து தாழம்பூருக்கு ஆட்டோவில் வரலாம்.

3. சைதாப்பேட்டை -காரணை - 51B அங்கிருந்து தாழம்பூருக்கு ஆட்டோவில் வரலாம்.

4. கேளம்பாக்கம் -தாழம்பூர்: M51D சைதாப்பேட்டை -தாழம்பூர் - M51

5. கோயம்பேடு பேருந்து நிலையம் -தாழம்பூர் - 570T

6. அடையார் பழைய பேருந்து நிலையம் -தாழம்பூர் - 19P

7. கேளம்பாக்கம் பேருந்து முனையம் -தாழம்பூர் - 19P

Map location:

https://maps.app.goo.gl/YN2KF7LcR5U2Yn7N9?g_st=awb

வரலாறு:

1700-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட "மரியா துன்பம் என்னும் முடிச்சுகளை அவிழ்ப்பவர்” (Mary Untier of Knots/Undoer of Knots) ஓவியம், ஜெர்மனியின் பவேரியா பகுதியில் ஆக்ஸ்பர்க் நகரிலுள்ள புனித பீட்டர்ஆம் பெர்லாக் ஆலயத்தில் வணக்கத்துக்குரியதாக தோற்றமளிக்கிறது. 1985-ஆம் ஆண்டில் அருட்தந்தையாக விளங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் இத்தேவாலயத்திற்கு வருகை தந்த பின்னர், துன்ப முடிச்சுகள் அவிழ்க்கும் மரியன்னை பக்தி, அவரின் சொந்த நாடான அர்ஜென்டினா உட்பட தென் அமெரிக்க நாடுகளில் வெகுவேகமாகப் பரவிற்று. 2001-ஆம் ஆண்டில் கர்தினாலாக நியமிக்கப்பட்ட அவர், 2005-ஆம் ஆண்டில் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் பொறுப்பேற்றபோது, துன்ப முடிச்சுகள் அவிழ்க்கும் அன்னையின் திருவுருவப்படத்தை, திருப்பலியின் இரசக்கிண்ணத்தில் வடித்து பரிசாக அளித்தார்.

அன்னை தோற்றத்தின் ஆழ்ந்தபொருள்:

அன்னை மரியா விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையே மாட்சியோடு காட்சியளிக்கிறார். தூய ஆவியார் புறா வடிவில் அன்னையின் மீது நிழலாடுகிறார். தூய ஆவியினால் கருவுற்ற இறைமகனை ஈன்றெடுத்த இறைவனின் தாய் என்னும் அருள் நிறைந்த நிலையை இக்காட்சி உணர்த்துகிறது. அன்னை அணிந்திருக்கும் ஆடைகள் அவரை இப்பிரபஞ்சத்தின் அரசியாக சித்தரிக்கிறது. பன்னிரு திருத்தூதர்களுக்கும் தலைமை திருத்தூதர் தாமே என்பதன் அடையாளமாக தலையில் பன்னிரு விண்மீன்களை அடையாளமாகக் கொண்டிருக்கிறார். வானோர்களின் அரசி என்பதன் அடையாளமாக வானதூதர்கள் அவரைச்சூழ்ந்து நிற்கிறார்கள். பாம்பு வடிவில் இருக்கும் நெருக்கமான பல முடிச்சுகளை உடைய கயிறு ஒன்றை தமது கையில் வைத்திருக்கின்றார். வானதூதர் ஒருவர் சிக்கலான பல முடிச்சுகள் கொண்ட நமது வாழ்வை அன்னையிடம் ஒப்படைக்க, அதை மரியா தமது பொறுமை, முழுமையான அர்ப்பணிப்பின் மூலம் நம்வாழ்வின் சிக்கல்களை அவிழ்த்து, சிக்கல் இல்லாத மென்மையான கயிறாக மற்றொரு வானதூதரிடம் கையளிக்கின்றார். நிலவு வளையத்தின் மேல் அன்னை நிற்பது போலவும், அவரது காலின் கீழ் பாம்பின் தலை மிதிக்கப்படுவதாகவும் அமைந்துள்ள காட்சி அலகையின் மீதும், தீமைகள் மீதும் அன்னை அடைந்த வெற்றியை குறித்துக் காட்டுகிறது.

இக்கருத்தாக்கம் லியோன் நகரைச் சார்ந்த புனித இரேனியு எழுதிய "தப்பறைகளுக்கு எதிராக" என்ற அவரது குறிப்பேடுகளிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. ஏவாளின் கீழ்ப்படியாமையால் விளைந்த வாழ்வின் முடிச்சுகள், மரியாவின் கீழ்ப்படிதலால் அவிழ்க்கப்பட்டன. ஏவாள் கொண்டிருந்த அவநம்பிக்கையால் அடிமை நிலைக்குத் தள்ளப்பட்ட மனிதர்களின் வாழ்க்கை, மரியாவின் நம்பிக்கையால் விடுவிக்கப்பட்டது.

ஓவியம் உருவான பின்னணி:

ஜெர்மனி நாட்டைச் சார்ந்த உல்ஃப் காங்லாங்கன் மண்டல் (1586-1637) சோபியா ரென்ட்ஸ் (1590-1649) தம்பதியருக்குள் ஏற்பட்ட பிணக்கு மணமுறிவுவரை போனநிலையில், மிகுந்த வருத்தத்துக்கு உள்ளான உல்ஃப் காங், இயேசு சபை குருவானவரும், மரியன்னைமீது ஆழ்ந்த பக்தி கொண்டவருமான ஜேக்கப்ரேம் என்பாரின் உதவியை நாடினார். இருவரும் சந்தித்தபோதெல்லாம் அன்னையிடம் இணைந்து செபித்தார்கள்.

1615-ஆம் ஆண்டு செப்டம்பர் 28 அன்று இருவரும் இறுதியாகச் செபித்தார்கள். அன்றைய தினம் உல்ஃப் காங் -சோபியா தம்பதியர் திருமண நாளன்று மணமக்களின் கரங்களை இணைக்கவும், அவர்களின் திருமண ஒன்றிப்பை சுட்டிக் காட்டவும் பயன்படுத்திய முடிச்சுகள் நிறைந்த ரிப்பனை அருட்தந்தை ரேம் அன்னையின் திருவுருவத்திற்கு முன்பாக உயர்த்தி, செபித்த வண்ணம் அந்த முடிச்சுகளை ஒவ்வொன்றாக அவிழ்த்தார். முடிச்சுகள் நீக்கப்பட்ட நிலையில் அந்த ரிப்பன் வெண்மையானது. அவர்களுடைய செபமும் கேட்கப்பட்டது. உல்ஃப் காங் தன் மனைவி சோபியாவுடன் திருமண வாழ்வில் மீண்டும் இணைந்தார். தம்பதியர் வாழ்வில் நிகழவிருந்த கசப்பான ஆபத்து மறைந்து போனது. சில ஆண்டுகள் கழித்து அவர்கள் பேரன் அம்புரோஸியஸ் குருவாக மாறினார். அவர் தம்முடைய தாத்தா -பாட்டி நினைவாக ஜெர்மனியில் ஆக்ஸ்பர்க் நகரில் இருந்த புனித பீட்டர் ஆம் பெர்லாக் ஆலயத்திற்கு ஒரு பீடம் உபயம் வழங்கினார். அப்பீடம் அன்னை மரியா தங்கள் குடும்பத்திற்கு செய்த அற்புதத்தை நினைவூட்ட வேண்டும் என்று விழைந்தார். உல்ஃப் காங் -சோபியா தம்பதியர் வாழ்வில் தந்தை ரேம் அவர்களின் துணையில், அன்னை மரியா நிகழ்த்திய அற்புதத்தை ஓவியமாக வரைவதற்கு யோகன் ஜார்ஜ் மெல்கியோர் ஸ்மித்னர் பணிக்கப்பட்டார். யோகன் ஜார்ஜ் கைவண்ணத்தில் உருவானதுதான் மரியா துன்ப முடிச்சுகளை அவிழ்க்கும் அன்னை ஓவியம். 1700-ஆம் ஆண்டில் இந்த ஓவியம் புனித பீட்டர் ஆம் பெர்லாக் ஆலயத்தில் நிறுவப்பட்டது.

பக்திமுயற்சி:

18-ஆம் நூற்றாண்டிலிருந்தே மரியா, துன்பமென்னும் முடிச்சுகளை அவிழ்ப்பவர் என்ற நம்பிக்கை மிகுந்த பக்தி முயற்சி மக்களிடையே பரவலாயிற்று. அர்ஜென்டினா, பிரேசில் போன்ற நாடுகளில் அன்னைக்கு பல ஆலயங்கள் நிறுவப்பட்டுள்ளன. நவநாள் பக்தி முயற்சிகளும், திருப்பயணங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 2013-ஆம் ஆண்டு மே 31 அன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வத்திக்கான் தோட்டத்தில் துன்ப முடிச்சுகள் அவிழ்க்கும் அன்னையின் ஓவியத் தோற்றத்திற்கு முடி சூட்டினார்.

திருமண வாழ்வில் ஏற்படக்கூடிய பல்வேறு சிக்கல்களை, துன்ப முடிச்சுகளை அன்னையிடம் ஒப்படைத்து அவற்றை அவிழ்க்கவும், அதன் வழியாக

குடும்ப வாழ்வில் அமைதியும் ஒற்றுமையும் பெருகவும் வரம் வேண்டி தம்பதியர் மன்றாடுகிறார்கள். சோதனைகள், வேதனைகள், பாவங்கள், இடர்கள், வியாகுலங்கள், பயங்கள், பலவீனங்கள் போன்ற பல்வேறு துன்ப முடிச்சுகளை அவிழ்த்து நாம் தேடும் பாதுகாப்பு, விடுதலை, மீட்பு, ஆறுதல், திடம், உடல் நலம், மனவலிமை போன்ற வரங்களை அன்னை மரியா இறைவனிடமிருந்து பெற்றுத் தருகிறார் என்பது உறுதி.

ஆசியாவின் முதல் ஆலயம்:

செங்கல்பட்டு மறைமாவட்டம், தாழம்பூர் இறைமக்கள் தங்கள் பகுதியில் ஒரு தேவாலயம் எழுப்பப்பட இடம் வேண்டும் என்ற நீண்ட காலக் கோரிக்கையை ஏற்று, ஊர்ப் பஞ்சாயத்து தலைவர் திரு. தேவசித்தம் அவர்கள், ஆலயம் அமைத்திட சிறிய நிலம் வழங்கினார். அருட்தந்தை ஜார்ஜ் விக்டர் அவர்களின் முயற்சியால் தாழம்பூரில் துன்பமுடிச்சுகள் அவிழ்க்கும் அன்னைக்கு ஆலயம் எழுப்பப்பட்டு, 13.07.2014 அன்று செங்கல்பட்டு மறைமாவட்ட ஆயர் மேதகு. நீதிநாதன் ஆண்டகை அவர்களால் ஆலயம் அர்ச்சிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. ஆசியா கண்டத்திலேயே துன்ப முடிச்சுகள் அவிழ்க்கும் அன்னைக்கு தாழம்பூரில்தான் முதல் ஆலயம் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 2018-2023 ஆண்டுக்காலம் அருட்தந்தை செல்வம் பெல்லார்மின் அவர்கள் அவ்வாலயத்தை சிறப்பாக வழிநடத்தினார். 

பங்குத்தந்தை அருட்பணி. வினோத் அவர்கள் பொறுப்பேற்று இறைமக்களின் ஒத்துழைப்போடு அன்னையின் ஆலயத்தைப் புதுப்பிக்க, 18.07.2024 அன்று மேதகு ஆயர் நீதிநாதன் அவர்களால் புதுப்பிக்கப்பட்ட ஆலயம் திறந்து வைக்கப்பட்டது. ஆலயத்தில் நவநாள் பக்தி முயற்சிகள் தொடர்ந்து செய்யப்பட்டு வருகிறது. ஆலயம் நாடி வரும் மக்களின் துன்ப முடிச்சுகளை, பாசம் மிகுந்த தாயாக நின்று அவிழ்த்தெறிந்து அமைதியும் ஆறுதலும் மகிழ்ச்சியும் வழங்குபவராய் அன்னை தம் மக்களை பாதுகாத்து வருகிறார்.

அருள் வரங்களை பொழிகின்ற செபங்களிலேயே சிறந்தது திருச்செபமாலையாகும்.

அன்னையின் இதயத்தைத் தொடுகின்ற சிறந்த செபம் இது. உங்கள் இல்லங்களில் அமைதி நிலைபெற வேண்டுமானால் திருச்செபமாலையை செபியுங்கள். என்கிறார் புனித 10-ம் பத்திநாதர்.

பல்வேறு துன்ப முடிச்சுகளால் அல்லல்படுகிற மக்கள் இவ்வாலயம் வந்து, அன்னையிடம் ஜெபித்து, வாழ்வில் வெளிச்சத்தைக் காண்கின்றனர். இதனால் நாள்தோறும் ஆலயத்தில்  பெருங்கூட்டதையும் காணலாம். நீங்களும் வாருங்கள் உங்களது துன்ப முடிச்சுகளை அவிழ்த்து இன்பமாக வாழ வழி வகுப்பார் நமது பரிசுத்த மாதா.

தகவல்கள்: பங்குதந்தை அருட்பணி. வினோத் குமார் அவர்கள்.