புனித மரியன்னை பேராலயம் (புனித கொஞ்சேஞ்சி மாதா பேராலயம்)
இடம்: யாழ்ப்பாணம்
நாடு: இலங்கை
மறைமாவட்டம்: யாழ்ப்பாணம்
மறைவட்டம்: யாழ்ப்பாணம்
நிலை: பேராலயம் (கதீட்ரல்)
கிளைப்பங்குகள்:
1. புனித செபஸ்தியார் ஆலயம், யாழ்ப்பாணம்
2. புனித ஆரோக்கியநாதர் ஆலயம், யாழ்ப்பாணம்
3. புனித கார்மேல் மாதா ஆலயம், யாழ்ப்பாணம்
பங்குத்தந்தை அருட்தந்தை. M. ஜெறோ செல்வநாயகம்
உதவி பங்குத்தந்தையர் அருட்தந்தை. P. A. கமல்ராஜ்
அருட்தந்தை. றோகான் டியோனி
குடும்பங்கள்: 2500
அன்பியங்கள்: 40
வழிபாட்டு நேரங்கள்:
ஞாயிறு திருப்பலி காலை 05:30 மணி, காலை 07:00 மணி, மாலை 05:00 மணி- புனித மரின்னை பேரலாயம்
வாரநாட்களில் திருப்பலி காலை 05:30 மணி
சனிக்கிழமை காலை 05:30 மணி திருப்பலி (தமிழ்), மாலை 05:00 மணி திருப்பலி (ஆங்கிலம்)
கிளைப்பங்குகளில் திருப்பலி:
ஞாயிறு காலை 05:45 மணி, புனித கார்மேல் அன்னை ஆலயம்
ஞாயிறு காலை 06:00 மணி, புனித ஆரோக்கியநாதர் ஆலயம்
ஞாயிறு காலை 07:00 மணி, புனித செபஸ்தியார் ஆலயம்
வாரநாட்களில் திருப்பலி காலை 06:00 மணி, வியாழன் மாலை 05:00 மணி
திருவிழா: ஆகஸ்ட் 15-ம் தேதி
Church Map location: St. Mary's Cathedral Jaffna
https://maps.app.goo.gl/avtfwSbBx8ujBdaZ9
வரலாறு:
களிமண்ணாலான ஆலயம்:
ஏறக்குறைய ஒன்றரை நூற்றாண்டுக்காலம் (1658-1796) யாழ்ப்பாணம் போர்த்துக்கேயர் ஆட்சியிலிருந்து கைமாறி, ஒல்லாந்தர் (டச்சுக்காரர்கள்) ஆட்சியிலிருந்த போது கத்தோலிக்க கிறிஸ்தவம் தடை செய்யப்பட்டிருந்தது. ஆயினும் முத்திப்பேறுபெற்ற ஜோசப் வாஸ் அடிகளாரதும், அவரது ஒலூட்டோரியன் (தியான சம்பிரதாய) சபைக்குருக்களதும் அரும்பணியால் கத்தோலிக்க சமயம் அழிவிலிருந்து காப்பற்றப்பட்டது. மட்டுமல்லாமல் உயிர்த்துடிப்புடன் பரவவும் தொடங்கியது. ஒல்லாந்தருடைய கத்தோலிக்க சமயத்திற்கெதிரான தடைச்சட்டங்கள் கடுமையானவையாக இருந்தாலும், ஒல்லாந்தருடைய கடைசி ஐம்பது வருட ஆட்சியின் போது யாழ்ப்பாணம் உட்பட அவர்களது ஆட்சிக்குட்பட்டிருந்த எல்லா இடங்களிலும், கத்தோலிக்க சமயம் வெளிப்படையாக கடைப்பிடிக்கப்பட்டு, வழிபாடுகளும் பகிரங்கமாக நிறைவேற்றப்பட்டு வந்தன.
இந்நாட்களில் தற்போதைய பேராலயம் அமைந்துள்ள பகுதியில் இருந்த ஒரு புளிய மரத்தின் கீழ் மண்ணால் கட்டப்பட்டு, ஓலையால் வேயப்பட்ட ஒரு சிறு கட்டிடத்தில் வழிபாடுகள் நடந்து வந்தன. ஒல்லாந்தருடைய ஆட்சியின் இறுதி பத்து ஆண்டுகளிலும், கத்தோலிக்கர் தமது வழிபாட்டு சுதந்திரத்தை வெளிப்படுத்தி, கல்லினாலான ஒரு பிரமாண்டமான (அக்கால வரலாற்று அரசியல் பின்னணியில்) ஆலயத்தை கட்டுமளவிற்குத் துணிவுடன் நிலைநாட்டக்கூடிய நிலையை அடைந்திருந்தனர் என்றுதான் சொல்ல வேண்டும்.
பழைய ஆலயம்:
களிமண்ணாலான ஆலயம் காலப்போக்கில் இடவசதி இல்லாமலும், சிதைவடையத்துவங்கியும் இருந்திருக்க வேண்டும். ஆகவே ஒரு பெரிய கல்லாலான ஆலயம் கட்ட முடிவானது. பழைய ஆலய (தற்போதுள்ள ஆலயத்திற்கு முன்பிருந்த ஆலயம்) 1789ல் முறைப்படி அத்திவாரமிடப்பட்டது. ஓலூட்டே சமயக்குருவும், இவ்வாலயம் கட்டப்பட்ட பின் பணியாற்றிய முதல் பங்குக் குருவுமாகிய லெயோமை றெபேயிறோ அடிகளின் அயராத உழைப்பும், பங்கு மக்களின் முழுமையான ஒத்துழைப்பும் இருந்தமையாலேயே, ஆலயக் கட்டடப்பணி 1794ல் வழிபாடு நடத்துவதற்கு ஏற்ற வகையில் நிறைவு பெற்றது.
1794ல் ஆலயம் வழிபாட்டுக்குத் தயாராயிருந்தாலும், ஆங்காங்கே சில திருத்த வேலைகள் மற்றும் ஆலயத்தைப் பராமரிக்கும் வேலைகளையும் செய்வதற்காக, லெயோனாட் றெபேயிறோ அவர்கள், ஆலயக் கட்டளைக் காரர் என்று ஒரு குழுவினரை ஏற்படுத்தி, அவர்களது பொறுப்புக்களை வரிசைப்படுத்தி வகுத்துக்கொடுத்தார். இக்குழு தமது ஆலயப் பராமரிப்புப்பணியை 1837ம் ஆண்டு வரை திறம்படச் செய்தது. பின்னர் 1837ல் இவ்வாலயக் கிறிஸ்தவர்களுள் திருப்பணிச்சங்கம் என்று ஒரு சங்கம் உண்டாக்கி, இவர்களே ஆலயத்திருப்பணி வேலைகளைக் காலத்துக்காலம் செய்து வந்தனர்.
பழைய கோவா (Goanese) கட்டட முறைப்படி அமைத்த ஆலயத்தில் பதிவான சுவர்களும், ஆலயத்தின் நடுப்பகுதியில் இரண்டு வரி மரத்தூண்களும் அமைந்திருந்தன. இந்த அமைப்பில் சில விரிவாக்கமும், புதுப்பித்தலும் செய்யவேண்டியிருந்தது. முன்னர் இருந்த மரத்தூண்கள் அகற்றப்பட்டு, புதிய மரத்தூண்கள் நிலை நாட்டப்பட்டன (அகற்றப்பட்ட தூண்கள் புதுமை மாதா ஆலயத்திற்கு வழங்கப்பட்டன). இந்த ஆலயத் திருப்பணிச்சங்கம் 1852 வரை தமது பணியை ஆற்றிவந்தது.
1868ம் ஆண்டிற்கும் 1882ம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில், பரிமேலா (Chevalier) சவரிமுத்து முதலியார் சிறப்பு கவனமெடுத்து இன்னும் முற்றுப்பெறாத நிலையிலிருந்த ஆலய முகப்பு மண்டபங்களையும், இன்னும் கட்டிமுடிக்கப்படாத சுற்றுமதில் பகுதிகளையும் கட்டினார். இந்த சுவர் கட்டுமானப்பணி 1883ல் திரு M. எதிர்மன்னசிங்கம் என்பவரால் கட்டிமுடிக்கப்பட்டது. 1876ம் ஆண்டு ஆயிரம் ரூபாய் செலவில் ஐரோப்பாவிலிருந்து அழகான மார்பிள் நற்கருணைப்பேழை கொண்டு வரப்பட்டது. இக்காலப்பகுதியில் ஆலயப்பீடப்பகுதி மேலும் அலங்கரிக்கப்பட்டது. இதில் சோணவெல் (Chunavel) அடிகளின் பங்களிப்பு முக்கியமானது. பீடத்தின் இரு மருங்கிலும் நற்கருணை நாதரை ஆராதனை செய்யும் பாணியில் அமைந்துள்ள இரு வானதூதர்களின் சுரூபங்கள் இப் பங்களிப்பில் குறிப்பிடத்தக்கவை.
1894ம் ஆண்டு யோண் அலோசியஸ் அடிகள் பேராலயப் பங்குத் தந்தையாகப் பணியாற்றிய போது, ஆலய அபிஷேகத்தின் (அர்ச்சிப்பு) நூற்றாண்டு விழா சிறப்புடன் கொண்டாடப்பட்டது. ஆலயத்தின் அபிஷேக நூற்றாண்டு நிறைவின் போதுதான் முதல் முறையாக, பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப, ஆலயத்தில் இடவசதி போதியளவு இல்லை என்பது உணரப்பட்டது. புதிதாகப் பொறுப்பேற்ற ஆயர் ஜூலன் ஆண்டகையும், பேராலயத் பங்குத்தந்தை யோண் அலோசியஸ் அடிகளாரும், 1894ல் அறிமுகம் செய்த தவக்காலத் தியானத்திற்கு வந்த மக்கள் கூட்டத்தை, ஆலயத்திற்குள் அடக்க முடியவில்லையென அவ்வருடம் மார்ச் 31ல் வெளியான சத்திய வேத பாதுகாவன் பத்திரிகை குறிப்பிட்டது. ஆயர் ஹென்றி ஜூலன் யாழ் ஆயராகப் பணியாற்றிய போது (1893 - 1919) நான்கு மணிகளைக் கொண்ட புது மணித்தொகுதியை, 1901-1904 காலப்பகுதியில் ஐரோப்பாவிலிருந்து வரவழைத்து யாழ் பேராலயத்திற்கு வழங்கினார். இவ்வாறாக ஆலயமணிகள் வட பகுதிக்கு எடுப்பிக்கப்பட்டது இதுவே முதல் முறை. இம்மணிகளுக்கு அவை மந்திரிக்கப்படும் போது, முதல்
நான்கு அமலமரித்தியாகிகள் சபையின் யாழ் ஆயர்களின் பெயர்கள் வைக்கப்பட்டன. Stephana (Semeria), Christopora (Bonjean), Andrea (Melizan), வெறன்றிகா Henrica (Joulain). 1861ம் ஆண்டு அமலமரி தியாகிகளினால் யாழ் பேராலபத்திற்கு வழங்கப்பட்ட இரு மணிகளுள், பெரியது மடுத்திருப்பதிக்கும், சிறியது நல்லூர் பங்கிற்கும் வழக்கப்பட்டன.
புதிய ஆலயம்:
1934 ஆண்டு ஆயர் அல்பிரட் கியோமார் O.M.I யாழ் ஆயராகப் பொறுப்பேற்ற போது, பழைய யாழ் பேராலயம் கட்டப்பட்டு 130 வருடங்கள் நிறைவேறியிருந்தது. ஆலயங்கள். தருமனைகள், பாடசாலைகள், கல்லூரிகள், கன்னியர் மடங்கள், ஆதரவற்றோர் இல்லங்கள் ஆகியவை தேவை ஏற்படும் போது உடனடியாகக் கட்டப்பட வேண்டும். புதுப்பிக்கப்பட வேண்டியவற்றைப் புதுப்பிக்க வேண்டும். விரிவுபடுத்த வேண்டியவற்றை விரிவுபடுத்தவேண்டும் என்று இவர் முனைப்புடன் செயல்பட்டதால், இவர் கட்டிடம் கட்டும் ஆயர் (Building Bishop) என்று அழைக்கப்பட்டார். இவர் ஆயரானதும் புதிய ஆலயங்கள் உட்பட பல கட்டடங்கள் மறைமாவட்டத்தில் பல இடங்களிலும் தேவைக்கேற்ப உருவாகின.
130 ஆண்டுகள் தாண்டிய யாழ் மரியன்னை பேராலயமும், அப்போதைய பெரும் எண்ணிக்கையிலான பங்கு மக்களையும் விசேட (சிறப்பு) வழிபாடுகளில் இன்னும் பெரும் எண்ணிக்கையிலான மக்களையோ உள்ளடக்கப் போதுமானதாக இருக்கவில்லை. கட்டிடமும் பழையதாகி விட்டதால் திருத்தவேலைகள் மற்றும் பராமரிப்பு வேலைகள் பெரும் சுமையாயின. எனவே தொலைநோக்குடன் விசாலமான, பல வருடங்கள் நிலைக்கக்கூடிய ஒரு பேராலயத்தின் தேவையை உர்ந்த ஆயர் புதியதோர் ஆலயத்திற்கு புரட்டாசி மாதம் 8ம் தேதி 1939ம் ஆண்டில் அடித்தளமிட்டார். 1950 ம் ஆண்டு ஆயர் அவர்கள் தமது பணியிலிருந்து ஓய்வு பெற்ற போதும் ஆலயக்கட்டுமானப்பணி நிறைவுபெறவில்லை.
1950 ம் ஆண்டு ஆயர் எமிலியானுஸ் பிள்ளை மறைமாவட்டத்தின் பொறுப்பேற்றார்.
1953ம் ஆண்டில் பழைய பேராலயத்தின் பெரும்பகுதி இடிக்கப்பட்டது. சிலுவை வடிவில் அமையவிருந்த புதிய பேராலயத்தின் நடுப்பகுதி மட்டுமே (Nave) நிறைவேறிய நிலையில் அது புதிய பேராலயமாக இயங்கத் துவங்கியது. பல்வேறு பிரச்சனைகள் குறிப்பாக தனியார் பாடசாலைகளுக்கென பெரியசெலவினங்கள் மற்றும் தொலைதூர இடங்களிலும், குடியேற்றங்களிலும் உள்ள புதிதாக உருவாகிவந்த மறைத்தளங்களில் சுவனம் செலுத்தப்பட வேண்டியிருந்தமையாலும், பேராலயத்தின் எஞ்சிய பெரிய கட்டுமானப்பணி முக்கியமாகக் கருதப்படவில்லை.
புதிய ஆலயம் நிறைவு பெறல்:
ஆயர் தியோகுப்பிள்ளை ஆண்டகை யாழ் மறைமாவட்ட நிர்வாகப்பொறுப்பை ஜனவரி 1973 ஏற்றுக்கொண்டார்.
1975 ஜூன் மாதத்தில், யாழ் பேராலயத்தில் ஒரு முதல் நன்மைத்திருப்பலி இடம்பெற்றது. அப்போது பிள்ளைகள், அவர்களது பெற்றோர் மற்றும் பெரும் எண்ணிக்கையான இறை மக்களால் பேராலயம் நிரம்பி இருந்தது. இடநெருக்கடி காரணமாக சில பிள்ளைகள் மயங்கி விழுந்தனர். இதனை கண்ணுற்ற ஆயர் அவர்கள், முற்றுப்பெறாத பேராலயத்தை கட்டிமுடிப்பதற்கு இனியும் காலம் தாழ்த்த முடியாது. உடனடியாக கட்டுமானப்பணியை தொடர நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பணித்தார்.
துணிச்சலான இப்பெரிய திட்டத்தை நடைமுறைப்படுத்தத் தொடங்கிய போது, எல்லோரும் பெரும் தொகையான பணம் இருந்ததென எண்ணினர். உண்மையில் ஆயரின் கையில் பணம் இருக்கவில்லை. இறைபராமரிப்பில் முழுமையான நம்பிக்கை வைத்து, மக்களின் பூரண ஒத்துழைப்பு இருக்கும் என்ற எதிர்பார்ப்புடன் பணியை தொடங்கினார். கட்டிடப்பணியை மீளத்துவங்க வேண்டுமென்ற எண்ணம் ஆயரின் உள்ளத்தில் தூண்டக்காரணமாயிருந்த, "முதல் நன்மைத் திருப்பலியில் சிறுவர்கள் வழங்கிய காணிக்கையில் சேர்ந்த பணம் கட்டிடநிதியில் முதல் வரவாக வைக்கப்பட்டது."
ஆயரின் நம்பிக்கைக் கனவை நனவாக்கிய பெருமை, பேராலய பங்குத்தந்தையாக பணியாற்றிய செயல் திறனும் வேகமும் கொண்ட அருட்திரு. J.P.E செல்வராஜா அடிகளையே சாரும். உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் இருந்தும் பலர் நிதிவழங்கினர். பேராலயத்தில் பல நிதி சேகரிப்பு நிகழ்ச்சிகளும் ஒழுங்கு செய்யப்பட்டன. அனைத்துலக கத்தோலிக்க திருட்சபையின் பல அமைப்புகள் தாராளமாக உதவின. திருச்சபையின் நற்செய்தி அறிவிப்புப்பணிப் பேராயத்தின் செயலாளர், பேராயர் போனான்ட் பிராங் ஆண்டகையின் முயற்சியால் பெரிய அளவிலான நன்கொடை கிடைத்தது. இவ்வாறு கிடைப்பதற்கு கருதினால்மார்களான பேரருட்திரு சைமன் லூர்துசாமி, ஆஞ்செலோ றொஸ்ஸி ஆகியோர் இந்நாட்களில் யாழ்ப்பாணம் வந்து, நேரடியாகச் கட்டிடப்பணிகளைப் பார்வையிட்டமையும் முக்கிய காரணங்களாகும். யாழ் மறைமாவட்டத்திற்கு நெருக்கமானவரும், குறிப்பாக ஆயர் எமிலியாலூஸ் பிள்ளை ஆண்டகையின் அபிமானியுமான சுவிட்சர்லாந்து மென்சிங்கள் திருச்சிலுவைக் கன்னியரான, அருட்சகோதரி கிளாரா பிரான்சிஸ்காவின் தூண்டுதலால், சுவிட்சர்லாந்து தவக்கால நிதியிலிருந்து, கணிசமான தொகை பேராலயத்தின் கட்டிடப்பணிக்கு வந்து சேர்ந்தது.
ஆலயத்தின் மூல வரைபட வரைபடத்தில் செலவுகளைக் குறைத்து, எளிமையாகவும் சிறந்த ஆலயக்கட்டிடக்கலை மற்றும் வரைபட நிபுணராகிய அருட்திரு A.H. வேதநாயகம் O.M.I சில மாற்றங்களை செய்து, எஞ்சியுள்ள ஆலயப் பகுதிகளைக் கட்டி முடிக்க புதியதொரு வரைபடத்தைத் தயாரித்தார். 1976ல் மீள ஆரம்பிக்கப்பட்ட கட்டிடப்பணி 1982ல் நிறைவு பெற்றது.
1982 ஜூலை 30ம் நாள் நிறைவுபெற்ற புதிய ஆலயம் அபிஷேகம் பண்ணப்பட்டது. இவ்விழாவில் யாழ் ஆயர் தியோகுப்பிள்ளை ஆண்டகையுடன், திருத்தந்தையின் இலங்கை வதிவிடப்பிரதிநிதி பேரருட்திரு நிக்கோலா றொட்டுண்ணோ மற்றும் கண்டி, மன்னார், திருமலை, மட்டுநகர் ஆயர்களும் நற்செய்தி அறிவிப்புப்பணிப் பேராலயச் செயலர் பேரருட்திரு போணன் பிரான்ங்க் அவர்களும், ஏராளமான குருக்களும், துறவியர்களும் இறை மக்களும் கலந்து கொண்டனர். 35,000 சதுர அடி தளப்பரப்பைக் கொண்ட இவ்வாலயம் தற்போது இலங்கையில் மிகவும் விசாலமான, பெரும் எண்ணிக்கையிலான மக்களைக் கொள்ளக்கூடிய ஆலயம் என்னும் சிறப்பைக் கொண்டு விளங்குகிறது.
1983ம் ஆண்டிற்குப்பின் மோசமடைந்து வந்த இனப்பிரச்சினையும், மோதல்களும் யாழ் பேராலயத்தையும் விட்டு வைக்கவில்லை. 1990ல் யாழ்ப்பாணத்தில் ஜூன் மாதத்திலிருந்து அக்டோபர் மாதம் வரை இடம் பெற்ற மோதல்களினால், யாழ் பேராலயம் பலத்த சேதத்திற்குள்ளானது. எனினும் 1991ம் ஆண்டு திருத்த வேலைகள் மேற்கொள்ளப்பட்டன.
1992ம் ஆண்டு நவம்பர் மாதம் தம் 5 ம் தேதி, 12 வருடங்கள் மன்னார் ஆயராக பணியாற்றிய பேரருட்திரு தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகையும், ஓய்வு பெற்ற யாழ் ஆயர் பேரருட் தியோகுப்பிள்ளை ஆண்டகையும், பெருந்திரளான குருக்கள், துறவியர், இறைமக்கள் பேராலயத்தில் ஒன்று கூடி ஒப்புக்கொடுத்த திருப்பலியின் போது, யாழ் மறைமாவட்ட ஆயர் பொறுப்பை தியோகுப்பிள்ளை ஆண்டகை அவர்கள், தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகையிடம் ஒப்படைத்தார்.
நாட்டின் சமாதான முயற்சி செயலிழந்து, மக்கள் பல்வேறு சிரமங்களாலும், தடைகளாலும் அல்லல் பட்டுக்கொண்டிருக்கும் பின்னணியில், இறைவனின் துணையை மேலும் முனைப்புடன் நாடுவதைத் தவிர வேறு வழியில்லையென உணரப்பட்டது. மக்கள் அமைதியில் நற்கருணை நாதரை சந்திக்கவும், வேண்டுதலின் ஈடுபடவும் ஆங்காங்கே சில பங்கு ஆலயங்களில் விசேடமாக நற்கருணை சிற்றாலயங்கள் ஆலயங்கள் ஏற்படுத்தப்பட்டன. எனவே பங்கு மக்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாகவுள்ள பேராலயத்திலும் இத்தேவை உணரப்பட்டது. எனவே ஆயரின் ஆலோசனையுடன், பங்குத்தந்தை அருட்திரு மைக்கல் சவுந்தரநாயகம் அடிகள் இறைமக்கள் சிலருடைய நன்கொடைகளைக் கொண்டு, பேராலயத்தின் திருபண்ட அறையை அண்டியதாக ஒர சிறிய அழகான நற்கருணை ஆலயத்தை அமைத்தார். இவ்வாலயம் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் ஆண்டகையின் பெயர் கொண்ட புனித பெனடிக்ட் விழா (2007 ஜூலை 11ம் நாள்) அன்று ஆயரினால் ஆசீர்வதிக்கப்பட்டு, வழிபாட்டுக்கு திறந்துவிடப்பட்டது. முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டு அபிஷேகம் செய்யப்பட்ட வெள்ளிவிழாவை, யாழ் பேராலயம் கொண்டாடும் போது (2007) நற்கருணை நாதர் ஆலயமும் அதனுள் அமைக்கப்பட்டமை இதற்கு மணி மகுடமாக அமைந்தது நிறைவைத் தருகின்றது எனலாம்.
பங்கின் பங்கேற்பு அமைப்புகள்:
1. புனித வின்சென்ட் தே பவுல் சபை
2. மரியாயின் சேனை (ஆண்கள்/பெண்கள்)
3. குடும்ப இயக்கம்
4. திருஇருதய சபை
5. பிரான்சிஸ்கன் 3ம் சபை
6. முதியோர் அமைப்பு
7. மகளிர் மன்றம்
8. இளையோர் மன்றம்
9. பீடப்பணியாளர்
10. மறைக்கல்வி
11. பாடற்குழாம்
12. பொதுநிலையினர் கழகம்
13. அருட்பணி சபை
14. வழிபாட்டு குழு
15. திருபாலத்துவ சபை.
தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: உதவி பங்குத்தந்தை அருட்பணி. கமல்ராஜ் அவர்கள்.
ஆலய வரலாறு: ஆலய வெள்ளிவிழா மலர்.






