1008 புனித அந்தோனியார் ஆலயம், ஏ.ஆர். மங்கலம்

          

புனித பதுவை அந்தோனியார் ஆலயம்

இடம்: ஏ.ஆர் மங்கலம், 623538

மாவட்டம்: இராமநாதபுரம்

மறைமாவட்டம்: சிவகங்கை

மறைவட்டம்: ஆர்.எஸ் மங்கலம்

தொடர்புகொள்ள: 

திரு. பிரதீப்: +91 88838 34982

ஆலய யூடியூப் சேனல்:

https://youtube.com/@st.antonychurch?si=QcgAb4Zn4IwHaNUO

நிலை: பங்குத்தளம்

கிளைப்பங்குகள்: 

1. புனித சூசையப்பர் ஆலயம்,  வெளியக்கோட்டை

2. புனித செபஸ்தியார் ஆலயம், புத்தனேந்தல்

3. தூய அடைக்கல மாதா ஆலயம், மலரி & குலநாத்தி (இரண்டு ஊர்களுக்கும் ஒரே ஆலயம்)

4. தூய ஆரோக்கிய மாதா ஆலயம், அழியாதன் மொழி

5. புனித சுவக்கின் அன்னம்மாள் ஆலயம், வாகைக்குடி

6. புனித அந்தோனியார் ஆலயம், ஆலேந்தல்

7. புனித அந்தோனியார் ஆலயம், குமிழேந்தல்

8. புனித செபஸ்தியார் ஆலயம், மேட்டுகற்களத்தூர்

9. செம்புழங்குடி

10. சூரம்புளி

பங்குத்தந்தை அருட்பணி. X. அன்பரசு, O.Praem

குடும்பங்கள்: 300 (கிளைப் பங்குகள் சேர்த்து)

அன்பியங்கள்: 15 (கிளைப்பங்குகள் சேர்த்து) 

திருவழிபாட்டு நேரங்கள்:

ஞாயிறு திருப்பலி காலை 08:00 மணி

செவ்வாய், வெள்ளி மாலை 07:00 மணி திருப்பலி

திருவிழா: ஜூன் மாதம் 13-ம் தேதி நிறைவு பெறும் வகையில் பத்து நாட்கள்.

மண்ணின் இறையழைத்தல்:

அருட்பணி. சுதாகர், SJ

வழித்தடம்: இராமநாதபுரம் -திருச்சி சாலையில் சனவேலி-யிலிருந்து 3கி.மீ தொலைவில் இவ்வாலயம் அமைந்துள்ளது

Map location: St. Anthony's Church, A.R Mangalam

https://maps.app.goo.gl/Uz3BpAR5GsTqe7uRA

வரலாறு:

A.R. மங்கலம் கிறிஸ்தவர்கள் உருவான வரலாறு:

ஏ.ஆர். மங்கலத்தில் வாழ்ந்த விவசாயக் குடிகளான 5 கிறிஸ்தவ குடும்பத்தினர் முதன்முதலாக 1920-ம் ஆண்டு, ஒரு சிலுவையை அமைத்து வழிபட ஆரம்பித்தனர். கல்லடிதிடல் பங்கை சார்ந்து அன்றைய பங்கு தந்தையின் வழிநடத்தலில் 2-வதாக ஒரு ஆலயம் கூரை கொட்டகையில் அமைக்கப்பட்டது. பின்னர் மீண்டும் 3-வதாக வேறொரு இடத்தில் தென்னங்கீற்றால் ஆன சுமார் 100 நபர்கள் அமரக்கூடிய வகையில், ஒரு ஆலயம் அமைக்கப்பட்டது. 1989-ம் ஆண்டு அந்த சமயத்தில் கொக்கூரணி பங்கை சார்ந்து இருந்தனர்.

அருட்பணி. வின்சென்ட் தனராஜ் அவர்களால் 1990 காலகட்டத்தில், ஆஸ்பெஸ்டாஸ் வேய்ந்த பதுவை புனித அந்தோனியார் ஆலயமானது கட்டி தரப்பட்டது. 

புனித அந்தோனியார் புதுமைகள் சொல்லில் அடங்காதவைகள்.

அதில் ஒரு சில.. மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் நலம் பெற்றனர். தீய ஆவியால் பிடி பட்டவர்கள் பூரண நலம் பெற்றனர். கொடிய நோயினால் அவதிப்பட்டு வந்தவர்கள் நலம் பெற்றனர். வேறொரு இடத்தில் இருந்து திருடப்பட்டு, இவ்வாலயத்தின் வழியாக வந்த மாடுகள் ஆலயத்தின் முன்பாகவே நகர இயலாமல் நின்று விட்டது. அதன் நன்றியாக மாட்டின் உரிமையாளர் கொடிமரம் ஒன்றை அமைத்துக் கொடுத்தனர். இவ்வாறாக இன்று வரை புனித அந்தோனியாரின் புதுமைகள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

இந்த கிராமம் மிகவும் பின் தங்கிய நிலையில் இருந்தது. ஆனால், நம் புனிதரின் புதுமையால் பல முன்னேற்றத்தை கண்டுள்ளது. குறிப்பாக பொருளாதார ரீதியிலும், கல்வியிலும், மக்கள் முன்னேற்றத்தைக் கண்டுள்ளனர். 

பின்னர் கொக்கூரணி பங்கிலிருந்து பிரிந்து, 1996 ஆம் ஆண்டு முதல்

R.S. மங்கலம் பங்கின் கீழ், ஏ.ஆர் மங்கலம் செயல்பட ஆரம்பித்தது.

அன்று R.S. மங்கலம் பங்கு தந்தையாக இருந்த அருட்தந்தை. பிரான்சிஸ் ஜெயபதி அவர்களின் முயற்சியால், A.R. மங்கலத்தை 2011-ம் ஆண்டில் தனியொரு பங்காக அமைத்தார். சிவகங்கை மறைமாவட்ட மேதகு முனைவர் J. சூசை மாணிக்கம் D.D., அவர்களால் திருப்பலி நிறைவேற்றப்பட்டு, முதன்மை குரு பேரருட்தந்தை. ஜோசப் லூர்து ராஜா, இந்திய நார்பர்ட் சபை மடாதிபதி பேரருட்பணி. பென்சாஸ் தாமஸ் O.Praem, பேரருட்பணி. நிக்கோலஸ் அம்புரோஸ், தூய நார்பர்ட் சபை குருக்கள், மறைமாவட்ட குருக்கள், அருட்சகோதரிகள் இறைமக்கள் முன்னிலையில் புதிய தகுதிநிலை பங்காக புனித பதுவை அந்தோனியாரை பாதுகாவலராகக் கொண்டு உருவாக்கப்பட்டது.

அதனோடு R.S. மங்கலம் பங்கிலிருந்து குமிழேந்தல், மேட்டு கற்களத்தூர், வெளிய கோட்டை ஆகிய 3 கிராமங்களும்; காரங்காடு பங்கிலிருந்து வாகைகுடி, ஆலேந்தல், அழியாதன்மொழி ஆகிய 3 கிராமங்களும்; திருவெற்றியூர் பங்கிலிருந்த்து புத்தனேந்தல், குலநாத்தி, மலரி, சூரம்புளி, செம்புழங்குடி ஆகிய 5 கிராமங்களும், A.R. மங்கலம் புதிய பங்கோடு இணைக்கப்பட்டு, தூய நார்பர்ட் சபை (O.Praem) குருக்களிடம் ஆன்மீக வளர்ச்சிக்காக ஒப்படைக்கப்பட்டது.

பங்கின் முதல் பங்கு பொறுப்பாளராக அருட்பணி. A. ஜான் பிரான்சிஸ், O.Praem அவர்கள் ஓராண்டு பணியாற்றி வந்தார். ஓராண்டிற்கு பிறகு, தகுதிநிலை பங்காக இருந்த பங்கு, முழுநிலை பங்காக 26.02.2012 அன்று மேதகு ஆயர் J. சூசை மாணிக்கம் D.D,. அவர்களால் அர்சிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது. முதல் பங்கு பணியாளராக அருட்பணி. A. ஜான் பிரான்சிஸ், O.Praem அவர்கள் தொடர்ந்து பணியாற்றினார். சில ஆண்டுகள் பல்வேறு சூழ்நிலைகள் காரணமாக ஆலயம் அடைபட்டுக் கிடந்தது. ஆலயம் அடைபட்டுக் கிடந்தாலும் விசுவாசம் அடைபடவில்லை. புனித அந்தோனியாரின் மீதிருந்த பக்தி தொடர்ந்து கொண்டே இருந்தது.

பிறகு 2018ம் ஆண்டு மே மாதம் முதல் அருட்பணி. இ. தாமஸ் ஆல்வா எடிசன், O.Praem அவர்கள் பங்கு பொறுப்பாளராக இருந்து பங்கில் ஆன்மீக பணிகளை செய்து வந்தார்.

அதனைத் தொடர்ந்து அருட்பணி. X. அன்பரசு, O.Praem அவர்கள் 15.6.2019 அன்று பொறுப்பு ஏற்றார். இந்நிலையில் மக்களிடையே நிலவிவந்த கருத்து வேறுபாடுகளைக் களைந்து, அனைவரையும் ஒற்றுமையாக வழிநடத்தி செல்கிறார். அதுமட்டுமல்லாமல் ஆன்மீகத்தில் ஈடுபாடு அல்லாதவர்களுக்கு இடையேயும் புனித அந்தோனியார் புதுமைகளை தெளிவாக எடுத்துக் கூறி, அனைவரையும் ஆன்மீகத்தில் ஈடுபாட்டுடன் வழிநடக்க செய்தார். ஏ.ஆர் மங்கலம் இறைமக்கள் கனவிலும் கண்டிராத, இன்னும் பல நூறு ஆண்டுகள் நிலைத்து நிற்க கூடிய புனித அந்தோனியார் ஆலயத்தை அமைத்து தந்துள்ளார்.

புதிய ஆலயம்:

நார்பர்ட் சபை மடாதிபதி மார்க்கஸ் சாம்பியா, O.Praem அவர்களால் 20.03.2023 அன்று புதிய ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. வறட்சியான காலம். தண்ணீருக்கு என்ன செய்யப் போகிறோம் என்று கவலைபட்ட நேரத்தில், ஆலயத்திற்கு அஸ்திவாரம் போட குழி தோண்டிய போது தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனைக் கண்ட மக்கள் ஓடோடி வந்து, புனிதரின் புதுமையைக் கண்டு பூரிப்படைந்தனர். ஏ.ஆர் மங்கலம் இறைமக்களின் கடின உழைப்பு மற்றும் நன்கொடைகளாலும், அருட்பணி. லூர்து ராஜ், O.Praem அவர்களின் நன்கொடையாலும், பங்குதந்தை அருட்பணி. X. அன்பரசு O.Praem அவர்களின் முயற்சியாலும் அழகுற ஆலயம் கட்டிமுடிக்கப்பட்டு, 05.05.2025 அன்று சிவகங்கை மறைமாவட்ட ஆயர் மேதகு L. லூர்து ஆனந்தம் அவர்களால் ஆலயம் அர்ச்சிக்கப்பட்டு, இந்திய நார்பர்ட் சபை தலைவர் அருள் அமல்ராஜ், O.Pream அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

பங்கின் பங்கேற்பு அமைப்புக்கள்:

மரியாயின் சேனை

புனித வின்சென்ட் தே பவுல் சபை

திருவழிபாட்டுக் குழு

பாடகற்குழு

பீடச்சிறார்

சூசையப்பர் சேனை

பங்குப் பேரவை

மறைக்கல்வி மன்றம் 

தொழிலாளர் சங்கம்

கிறிஸ்தவ வாழ்வு சமூகம்

பதுவையார் இளைஞர் பேரவை

நம்புங்கள்.. ஜெபியுங்கள்.. நல்லது நடக்கும்...

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பங்குத்தந்தையின் வழிகாட்டலில், ஆலய பொருளாளர் திரு. பிரதீப் ஜெயசீலன் அவர்கள்.